இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைச் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒருங்கிணைப்பதன் வழியாக, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா (Deendayal Antyodaya Yojana) - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவோர் ஆர்வத்தையும், அவர்களின் அரசியல் அதிகாரத்தையும் மேம்படுத்தி வருகிறது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY-NRLM)), இந்தியக் கிராமப்புறங்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 கோடி குடும்பங்கள், 91 லட்சம் சுயஉதவிக் குழுக்களாக (Self-Help Groups (SHGs)) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவை மேலும் 5.35 லட்சம் கிராம அளவிலான அமைப்புகளோடும், 33,558 வாழ்வாதாரக் கூட்டமைப்புகளோடும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சுயஉதவிக் குழுக்கள் இதுவரை வங்கிகள் மூலம் ₹11 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனுதவியைப் பெற்றுள்ளன. மிக முக்கியமாக, இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு, வராக்கடன் அளவை வெறும் 1.7% என்ற மிகக்குறைந்த அளவில் பராமரித்து வருகின்றன.
ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டும் 'லட்சாதிபதி திதி'களின் (Lakhpati Didis) எண்ணிக்கை — அதாவது சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை — தற்போது இரண்டு கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குழு அளவிலான கூட்டமைப்புகளை (CLF) வலுப்படுத்துதல் குறித்து
பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுடன், இந்தத் திட்டம் பெண்களின் அரசியல் மேம்பாட்டிற்கும் உதவியுள்ளது. பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல மாநில அரசுகள் நிபந்தனையற்ற நேரடிப் பணப் பரிமாற்ற (Direct Benefit Transfer (DBT)) திட்டங்களில் இப்போது கவனம் செலுத்தி வருகின்றன. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தின் 'லாட்லி லக்ஷ்மி யோஜனா' (Ladli Laxmi Yojana), ஜார்க்கண்டின் 'மையா சம்மன் யோஜனா' (Maiya Samman Yojana) மற்றும் மகாராஷ்டிராவின் 'லாட்கி பாஹின் யோஜனா' (Ladki Bahin Yojana) ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அண்மையில் பீகாரில் முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் (Mukhyamantri Mahila Rozgar Yojana), ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்குத் தலா ₹10,000 வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னெடுப்புகள், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY-NRLM)), திட்டத்தின் அடுத்த கட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்துவதுடன், அவர்களிடையே தொழில்முனைவோர் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM) அடுத்த நிதியாண்டு சுழற்சிக்காக (2026-27-ஆம் ஆண்டு முதல் 2030-31-ஆம் ஆண்டு வரை) மறுஆய்வு செய்யப்பட உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த முக்கியமான திட்டத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான உத்திகளைத் திட்டமிட இதுவே சரியான தருணம் என்கின்றனர். இந்தத் திட்டத்தின் தொடக்கப்புள்ளியாக குழு அளவிலான கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். இவை வட்டார அளவிற்கும் கீழ் செயல்படும் அமைப்புகளாகக் கருதப்படுகிறது. மேலும், இவை சுயஉதவிக்குழு (SHG) கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்குகின்றன. இந்த கூட்டமைப்புகள் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட அமைப்புகள் என்பதால், திட்டத்தின் பல செயல்பாடுகள் இவை மூலமே செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இக்கூட்டமைப்புகள் அரசு அதிகாரிகளை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பதாகக் கவலைகள் எழுந்துள்ளன. இது அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கிறது. எனவே, திட்டத்தின் ஆரம்பகால நோக்கத்திற்கு ஏற்ப, இந்தக் கூட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் புத்துயிர் அளிப்பதும் மிக முக்கியமான முன்னுரிமையாக இருக்க வேண்டும். அரசுத் தலையீடுகள் இன்றி, சமூகமே முழுமையாக உரிமையெடுத்து நடத்தும் நிறுவனங்களாக இவை செயல்பட வேண்டும். இதற்காக கேரளாவின் 'குடும்பஸ்ரீ' (Kudumbashree) மற்றும் பீகாரின் 'ஜீவிகா' (Jeevika) போன்ற வெற்றிகரமான மாதிரிகளை மற்ற மாநிலங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்றொரு முக்கியமான சிக்கல் என்னவென்றால், குழு அளவிலான கூட்டமைப்புகளிடம் (Cluster Level Federation (CLFs)) பெருமளவு நிதி பயன்படுத்தப்படாமல் தேங்கிக் கிடப்பதே ஆகும். இது அந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் அதற்கான வட்டி எனச் சேர்த்து, இதுவரை சுமார் ₹56.69 லட்சம் கோடி சமூக அமைப்புகளுக்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முறையாகக் கணக்கிட வேண்டியது அவசியமாகிறது. இதற்குச் சட்டப்படியான தணிக்கைகளுடன், சமூகத் தணிக்கைகள் மூலமாகச் சமூகமே கண்காணிக்கும் வலுவான முறையையும் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இறுதியாக, குழு அளவிலான கூட்டமைப்புகள் (CLFs - Cluster Level Federations) தங்கள் சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். உறுப்பினர்களின் மாறுபட்ட பின்னணிகள் மற்றும் அவர்கள் செய்யும் பல்வேறு தொழில்களைக் கருத்தில் கொள்ளும்போது, அனைவருக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதம் மற்றும் கடன் காலத்தை நிர்ணயிப்பது சரியாக இருக்காது. இந்த விதிமுறைகளை அந்தந்த குழுக்களே முடிவு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். நிதியை மிகவும் கவனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்த அமைப்புகளால் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் மற்றும் பல பணிகளைத் தொடர்ந்து செய்யத் தேவையான வருவாயையும் ஈட்டமுடியும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
மேலும், சுயஉதவிக் குழுக்கள் (SHGs) வங்கிகளிடமிருந்து பெருமளவு கடன்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், இந்தக் குழு-வங்கி இணைப்புத் திட்டத்தின்கீழ் கிடைக்கும் சிறிய கடன் தொகைகள் பல உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிப்பதில்லை. அவர்களின் தொழில்கள் நிலைபெற்று வளரும்போது, அதை விரிவுபடுத்த அவர்களுக்குப் பெரிய அளவிலான கடன் உதவி தேவைப்படுகிறது. இதற்காக, அவர்கள் தனிநபர் கடன் திட்டங்களுக்கு மாற வேண்டியுள்ளது. ஆனால், இதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால், சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட 'கடன் வரலாறு' (Credit History) இல்லாததே ஆகும். எனவே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் சிபில் (CIBIL) மதிப்பெண்களை உருவாக்குவதற்கு வலுவான முயற்சிகள் தேவைப்படுகின்றன. கூடுதலாக, சுயஉதவிக் குழுக்களுக்கு உதவுவது போலவே, தனிநபர் வங்கி கடன்களுக்கும் அவற்றின் மறுசெலுத்தலுக்கும் 'குழு அளவிலான கூட்டமைப்புகள்' (CLFs) தீவிரமாக ஆதரவளிக்கும் வகையில் ஒரு மாதிரி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இது தனிநபர்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்கின்றனர்.
ஒருங்கிணைப்புக்கான தேவை
கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் விரிவடைந்து வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, நமது திட்டங்கள் வெறும் 'கடன் வழங்குவதோடு' (Debt-based financing) நின்றுவிடாமல், பங்கு முதலீடு (Equity), துணிகர மூலதனம் (Venture capital) மற்றும் ஒருங்கிணைந்த நிதி (Blended finance) போன்ற புதிய முதலீட்டு முறைகளைக் கையாள வேண்டும். தனிநபர் தொழில்முனைவோருக்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank of India (SIDBI), பிற நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company (NBFCs)) மற்றும் நவீன-வங்கிகளுடன் (Neo-banks) இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, கிராமப்புற பெண் தொழில்முனைவோரின் தேவைகள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவை என்பதால், அவர்களுக்கென்றே பிரத்யேகமான நிதித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY-NRLM)) பல்வேறு துணைத் திட்டங்கள் மூலம் சுயஉதவிக் குழு (SHG) உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இவை பெரும்பாலும் தனித்தனியாகச் செயல்படுவதால், அவற்றின் முழுமையான பலன் கிடைப்பதில்லை. உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு கிராமத்தையும் உறுப்பினரையும் சென்றடைய இந்தத் திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. எனவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் யூனியன் பிரதேசத்திற்கும் ஆண்டு வாழ்வாதாரச் செயல் திட்டங்கள் (Annual livelihood action plans) தயாரிக்கப்பட வேண்டும். 'கிராம செழுமை மற்றும் மீள்திறன் திட்டம்' (Village Prosperity and Resilience Plan (VPRP)) மூலம் திரட்டப்படும் தரவுகள், அடிமட்டத்திலிருந்து திட்டங்களை வகுக்க கீழ்மட்டத்திலிருந்து திட்டமிடும் முறையானது பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவை வலுப்படுத்த, குழு அளவிலான கூட்டமைப்புகளை அனைத்து வாழ்வாதாரச் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வணிக மையங்களாக மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பல அரசுத் துறைகள் கிராமப்புறப் பயனாளிகளுக்காக வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவோர் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், உணவுப் பதப்படுத்துதல், மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் ஆகிய துறைகளின் திட்டங்களில், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihoods Mission (NRLM)) இணைந்து செயல்பட்டது நல்ல பலனைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இத்தகைய ஒருங்கிணைப்பு பெரும்பாலும் தனிப்பட்ட அதிகாரிகளின் ஆர்வத்தைச் சார்ந்தே அமைகிறது. இதனால், அவர்களின் பணிமாறுதல் ஏற்படும் சூழலில் அந்தப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, நிதி ஆயோக்கில் (National Institution for Transforming India (NITI) Aayog) ஒரு நிரந்தர 'ஒருங்கிணைப்புப் பிரிவை' உருவாக்குவது, இந்தத் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்தவும், வளங்களைச் சரியாகப் பயன்படுத்தவும், மற்றும் ஒரே மாதிரியான திட்டங்கள் மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் உள்ள முக்கிய சவால், அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான சரியான சந்தைப்படுத்துதல் வசதி இல்லாததே ஆகும். தேசிய அளவிலான திட்டங்களில் (National Mission), சந்தைப்படுத்துதலுக்காகவே ஒரு தனிப்பிரிவை உருவாக்குவதன் மூலம் இதற்கு நேரடியாகத் தீர்வுகாண முடியும். இந்தப் பிரிவு, பல்வேறு பொருட்களுக்கான பேக்கேஜிங் (Packaging), வணிக அடையாளமாக்கல் (Branding), தரம், வடிவமைப்பு, விலை நிர்ணயம் மற்றும் விநியோக மேலாண்மை (Logistics) ஆகியவற்றை நிர்வகிக்க வேண்டும். குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கான விநியோக மையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அளவிலான கூட்டமைப்புகளை (Cluster Level Federations) மேம்படுத்தலாம். மேலும், தனியார் சந்தை முகவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும், சுயஉதவிக் குழுப் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும் மாநில/யூனியன் பிரதேச அளவில் சுதந்திரமான மற்றும் தொழில்முறை சந்தைப்படுத்துதல் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
சமூக அடிப்படையிலான அமைப்புகளின்மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. எனவே, அவர்களுக்கு வழிகாட்டவும் ஆதரவு அளிக்கவும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போதுமான நிபுணர்களை நியமிக்க வேண்டும். அதே வேளையில், இந்த அமைப்புகள் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் இருப்பதையும், ஒவ்வொன்றும் அதற்கேற்ற வேகத்தில் முன்னேறுவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், கிராமப்புற பெண்களின் முன்னேற்றம் நிச்சயமாக அடுத்த நிலைக்குச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சரண்ஜித் சிங், ஓய்வு பெற்ற இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரி ஆவார்.