முக்கிய அம்சங்கள் :
புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத் தொடரில், நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV), யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற பிரபலமான இணைய ஒளிபரப்பு சேவைகளின் (online streaming services) சந்தாக் கட்டண மாற்றங்களும் சேர்க்கப்படும். இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டை விரிவாகப் புதுப்பிப்பதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, இது இந்தத் தளங்களின் பரவலான பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
ஸ்ட்ரீமிங் சந்தாக் கட்டணங்கள் இந்தியா முழுவதும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதால், ஒரே ஒரு அகில இந்தியக் குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராகப் பயன்படுத்தப்படும்.
இந்தியாவின் மிக முக்கியமான பேரியல் பொருளாதாரக் குறியீடான நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத்தின் நவீனமயமாக்கலானது, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) மேற்கொள்ளப்படும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் பெரிய அளவிலான சீரமைப்பின் ஒரு பகுதியாகும்.
2023-24-ஆம் ஆண்டின் குடும்ப நுகர்வுச் செலவின ஆய்வின் (Household Consumption Expenditure Survey (HCES)) நுகர்வு முறைகளின் முடிவுகளின் அடிப்படையில், விலைகளுக்கான அடிப்படை ஆண்டாக 2024-ஐக் கொண்ட புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத் தொடரின் முதல் அறிக்கையானது, ஜனவரி மாதத்திற்கான தரவுகளுடன் பிப்ரவரி 12 அன்று வெளியிடப்படும். அதன்பிறகு, பிப்ரவரி 27 அன்று, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடர் 2022-23-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டும், முக்கிய விரிவான வழிமுறை மாற்றங்களுடனும் அக்டோபர்-டிசம்பர் 2025-ம் ஆண்டுக்கான தரவுகளுடனும், 2025-26-ஆம் ஆண்டுக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டுடனும் வெளியிடப்படும். பின்னர், மே மாதத்தில், திருத்தப்பட்ட தொழில்துறை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production), 2022-23-ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்டு வெளியிடப்படும்.
2011-12-ஆம் ஆண்டு நுகர்வோர் செலவின ஆய்வின் அடிப்படையில் 299 பொருட்களிலிருந்து தற்போது, புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியல் 358-ஆக பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் சில்லறைப் பணவீக்கத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் மற்ற சில புதிய பொருட்கள் மற்றும் சேவைகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு, மின்காந்த அடுப்புகள், அலங்கார விளக்குகள், ஓவியங்கள், தெளிப்பான்கள், மசாஜ் கருவிகள், டேப்லெட்டுகள், பென்-டிரைவ்கள் மற்றும் வெளிப்புற ஹார்ட் டிஸ்க்குகள், செல்லப்பிராணிகள் மற்றும் செல்லப்பிராணிப் பொருட்கள், சிகை நிறமிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்கள் ஆகியவை அடங்கும். அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 0.25% என்ற சாதனை குறைந்த அளவிற்குச் சரிந்திருந்தாலும், டிசம்பரில் அது 1.33%-ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட செய்தியின்படி, புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியல், ஒட்டுமொத்தமாக, 2011-12-ஆம் ஆண்டு பட்டியலைவிட சேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. உணவு மற்றும் பானங்களின் பங்கு 45.86%-லிருந்து 36.75%-ஆகக் குறைந்துள்ளது. இது ஜெர்மானிய புள்ளியியல் நிபுணரும் பொருளாதார வல்லுநருமான எர்ன்ஸ்ட் ஏங்கெல் என்பவரின் பெயரால் அழைக்கப்படும் ஏங்கெல் விதியுடன் (Engel’s Law) ஒத்துப்போகிறது. ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும்போது, அது உணவுக்காகச் செலவிடும் பங்கு குறைகிறது என்று அந்த விதி கூறுகிறது.
புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் சேர்க்கப்பட்டதைத் தவிர, ஒலி மற்றும் ஒளிப் பதிவுகள், டேப் ரெக்கார்டர்கள் மற்றும் விசிடிகள் போன்ற பயன்படுத்தப்படாத சில பொருட்கள் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா? :
நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு பணவீக்க விகிதங்கள், ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் மொத்த விலைக் குறியீடு (wholesale price index (WPI)) அடிப்படையிலான பணவீக்க விகிதம் மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index (CPI)) அடிப்படையிலான பணவீக்க விகிதம் ஆகும்.
முதலாவது மொத்த விலை பணவீக்க விகிதம் (WPI) என்றும், இரண்டாவது சில்லறை விலை பணவீக்க விகிதம் (retail inflation rate) என்றும் அழைக்கப்படுகிறது. மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஆகிய இரண்டும் விலைக் குறியீடுகள் ஆகும். இதன் பொருள், இவை பொருட்கள் மற்றும் சேவைகளின் இரண்டு வெவ்வேறு பட்டியலில் அடங்கும். இந்த இரண்டு வகையான நுகர்வோருக்கும் எது பொருத்தமானது என்பதன் அடிப்படையில், அரசாங்கம் வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வெவ்வேறு பங்குகளை ஒதுக்குகிறது.
நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தாலும் (MoSPI), மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கத் தரவுகள் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையாலும் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தொகுக்கப்படுகின்றன.