இந்தியாவில் மெட்டா மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் ஏன் நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கையை எதிர்கொள்கின்றன? -ஜான் சேவியர்

 பயனர்களின் தரவுகளைப் பகிர்வதைக் கட்டாயமாக்கினால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று மெட்டா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டாயப்படுத்தி தகவல்களைப் பெறும் நடைமுறையைத் தொடர்ந்தால், இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டியதுதான் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த், மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.


வாட்ஸ்அப்பின் (WhatsApp) தாய் நிறுவனமான மெட்டா (Meta), பல ஆண்டுகளாகப் பயனர்களின் தரவுகளைத் தனது செய்திச் சேவையின் மூலம் கிடைக்கும் ஒரு பயனுள்ளத் தகவலாகவே கருதி வந்தது. விளம்பர ரீதியிலான தொழிலை மேம்படுத்த அந்தத் தரவுகளைச் சேகரித்தும் பயன்படுத்தியும் வந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, இந்திய உச்ச நீதிமன்றம் இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை முன்வைத்தது, அதாவது, இந்தத் தரவு சேகரிப்பு முறையை 'திருட்டுக்கு' ஒப்பானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையான இந்தியாவில், இணையப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு வழக்கு விசாரணையில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தது. ஒரு நிறுவனம் சந்தையில் ஏகபோக உரிமையுடன் (Monopoly) ஆதிக்கம் செலுத்தும்போது, பயனர் அளிக்கும் 'சம்மதம்' என்பது உண்மையான விருப்பத்துடன் கூடிய ஒன்றாக இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கள் தனியுரிமை சார்ந்த கவலைகளைத் தாண்டி, மெட்டா நிறுவனத்தின் வணிக மாதிரிக்கே சவாலாக அமைந்துள்ளன. ஒரு தளம் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும்போது, பயனர்கள் தங்கள் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் உண்மையிலேயே சுதந்திரமான முடிவைத்தான் பயனர்கள் எடுக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.



இந்த மோதல் எப்போது, எங்கே தொடங்கியது?


இந்தச் சிக்கல் 2021-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையில் (Privacy Policy), 'ஒப்புக்கொண்டால் பயன்படுத்துங்கள், இல்லையெனில் வெளியேறுங்கள்' என்ற ரீதியில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ்அப் தனது தாய் நிறுவனமான மெட்டாவுடன் அதிகப்படியான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. பயனர்களின் குறுஞ்செய்திகள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ்அப் கூறினாலும், இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) இதை வேறுவிதமாக அணுகியது. அதாவது, வாட்ஸ்அப் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக இந்தியப் போட்டி ஆணையம் (CCI) கருதியது. இந்திய மக்கள் வாட்ஸ்அப்பை ஒரு பொதுவான டிஜிட்டல் தளமாகப் பயன்படுத்துவதால், அவர்களால் அவ்வளவு எளிதாக அதிலிருந்து விலகிவிட முடியாது என்று இந்தியப் போட்டி ஆணையம் (CCI) வாதிட்டது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி ($25 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டது. பல லட்சம் கோடி மதிப்புள்ள அந்த நிறுவனத்திற்கு இது சிறிய தொகையாக இருந்தாலும், அரசாங்கத்தின் ஒரு முக்கியமான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. 


மெட்டா நிறுவனம் இந்த முடிவை எதிர்த்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (National Company Law Appellate Tribunal (NCLAT)) மேல்முறையீடு செய்தது. இந்தத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு ஒரு நுணுக்கமான, அதே சமயம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. மெட்டா நிறுவனம் தனது சந்தை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக 'இந்தியப் போட்டி ஆணையம்' (CCI) கூறியதை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது (NCLAT) உறுதி செய்தது. இருப்பினும், மெட்டா மீதான அந்த ஒழுங்குமுறை நடவடிக்கையின் மீதான தண்டனையை கணிசமாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. 


மெட்டா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்பட்டாலும், ஒரு முக்கியமான உத்தரவை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) நீக்கியுள்ளது. அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விளம்பரத் தேவைகளுக்காகத் தனது மற்ற நிறுவனங்களுடன் (Instagram, WhatsApp போன்றவை) பயனர் தகவல்களை மெட்டா நிறுவனம் பகிர்ந்து கொள்வதைத் தடுக்கும் அந்தத் தடையை இப்போது நீக்கியுள்ளது.


தீர்ப்பாயத்தின் விளக்கமானது, நிறுவனங்கள் பொதுவாக எப்படிச் செயல்படுகின்றன என்ற வழக்கமான பார்வையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. பயனர்கள் தங்கள் சம்மதத்தை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்ட போதிலும், ஒரு தாய் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் இடையே தரவுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு சாதாரண நடைமுறைதான் என்று அந்தத் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.


மெட்டா (Meta) நிறுவனத்தின் செயலிகளுக்கு இடையிலான தரவுப் பகிர்வுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிப்பது மிகவும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும் என்றும், அது தொழில்நுட்ப ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் என்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) தெரிவித்தது. மேலும், 2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP) Act, 2023) சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதால், தரவு தனியுரிமை தொடர்பான சிக்கல்களைக் கடுமையான அபராதங்கள் மூலம் கையாளுவதைவிட, நடைமுறைக்கு வரவிருக்கும் அந்தப் புதிய சட்டத்தின்கீழ் கையாளுவதையே தீர்ப்பாயம்  விரும்புவதாகக் கூறப்படுகிறது. 


மெட்டா (Meta) நிறுவனம் ஏன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது?


அபராதம் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) தீர்ப்பால் அதிருப்தி அடைந்த மெட்டா (Meta) நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும், நீதிமன்றம் இதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள விரும்பவில்லை. மெட்டா நிறுவன வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி காந்த் கூறியதாவது, இந்தியாவில் வாட்ஸ்அப்பைத் தவிர்க்க நினைப்பது 'நாட்டையே தவிர்ப்பதற்குச் சமம்' என்று தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள போட்டி ஒழுங்குமுறை ஆணையங்கள் (Competition regulators) எதிர்கொள்ளும் 'இணைப்பு விளைவு' (Network Effect) எனும் சிக்கலைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.


மிகவும் முக்கியமான ஒரு கருத்தை நீதியரசர் ஜோய்மால்யா பாக்சி முன்வைத்தார். அவர் இந்த விவாதத்தை 'தனியுரிமை' (Privacy) என்பதிலிருந்து 'மதிப்பு' (Value) என்ற இடத்திற்கு நகர்த்தினார். இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection (DPDP) Act, 2023), முக்கியமாக ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒருவரது தரவுகளிலிருந்து கிடைக்கும் பொருளாதார லாபத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது பற்றி இந்தச் சட்டம் எதுவும் கூறவில்லை என்று நீதியரசர் பாக்சி சுட்டிக்காட்டினார். உதாரணமாக, ஒரு கிராமப்புற இந்தியரின் பழக்கவழக்கங்கள் குறித்த தரவுகளைப் பயன்படுத்தி 'மெட்டா' (Meta) நிறுவனம் விளம்பரங்களை விற்பனை செய்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் யாருக்குப் பங்கு உண்டு? என்று வணிக ரீதியிலான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தரவுகளின் மீதான முக்கியக் கேள்வியை எழுப்பியுள்ளார். 


தரவுகளை ஒரு சொத்தாகக் கருதும் இந்த அணுகுமுறை, இந்தியாவை அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற போக்கைவிட, ஐரோப்பிய ஒன்றியத்தின் 'டிஜிட்டல் சேவை சட்டத்திற்கு' (Digital Services Act) மிக நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. இந்த வழக்கில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (Ministry of Electronics and Information Technology (MeitY)) ஈடுபடுத்தியதன் மூலம், நீதிமன்றம் அரசாங்கத்தை ஒரு படி மேலே சிந்திக்கத் தூண்டியுள்ளது. அதாவது, தரவுகளை வெறும் தனிநபர் ரகசியமாக மட்டும் பார்க்காமல், குடிமக்களின் டிஜிட்டல் தரவுகளுக்கு இருக்கும் பொருளாதார மதிப்பிற்கு வலுவான 'இறையாண்ம பாதுகாப்பு' (Sovereign protection) தேவையா என்பதைப் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.


அடுத்த நடவடிக்கை என்ன?


இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் வெறும் 'நுகர்வோர்' மட்டுமல்ல, அவர்களே ஒரு 'விற்பனைப் பொருள்' என அரசுத் தலைமை வழக்கறிஞர் கூறிய கருத்து, 'இலவச இணையம்' என்ற கோட்பாட்டின் மீது அதிகரித்து வரும் அதிருப்தியைக் காட்டுகிறது. உதாரணமாக, ஒருவர் மருத்துவரிடம் மருந்துகளைப் பற்றிப் பேசிவிட்டு, அடுத்த கணமே அது தொடர்பான விளம்பரத்தைப் பார்க்கும்போது, நீதிமன்றம் அதை ஒரு 'புத்திசாலித்தனமான தொழில்நுட்பமாகப்' பார்க்கவில்லை; மாறாக, அது தனிமனிதச் சுதந்திரத்தில் அல்லது தனியுரிமையில்  தலையிடும் ஒரு செயலாகவே கருதுகிறது.


மெட்டா (Meta) நிறுவனம் தனது பாதுகாப்பிற்காக, மிக கவனமாக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முன்வைக்கிறது. இருப்பினும், 'ஒரு வீட்டு வேலை செய்யும் தொழிலாளியால் இதுபோன்ற கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியுமா? என்ற தலைமை நீதிபதியின் எளிமையான கேள்வி ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது. டிஜிட்டல் அறிவு (Digital Literacy) வெவ்வேறு நிலைகளில் உள்ள ஒரு நாட்டில், ஒரு நிறுவனம் தனது விதிகளை வெளிப்படையாக அறிவிப்பதாலேயே, அது அனைவருக்கும் புரியும்படி இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். 


நீதிமன்றம் தற்போது மெட்டா நிறுவனத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது: தனிநபர் தரவுகளை (Personal Data) பகிர்வதை நிறுத்துவதாக மெட்டா உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில், கடுமையான நிபந்தனைகளின்கீழ் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி இதற்கான இடைக்கால உத்தரவுகள் வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் செய்தி மிகத்தெளிவாக உள்ளது. இந்தியாவின் நூறு கோடி 'அமைதியான நுகர்வோர்கள்' (silent consumers) இனிமேலும் மெட்டாவின் லாபத்திற்காக மூலப்பொருட்களாகப் பயன்படத் தயாராக இல்லை என்று இந்திய நீதித்துறை நம்புகிறது. 'கண்ணியமான திருட்டு' (Decent theft) எனப்படும் காலம் ஒருவேளை முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




Share: