மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய கடலோர மாநிலங்களில் பிரத்யேகமான 'அரிய வகை கனிம வழித்தடங்களை' (Rare Earth Corridors) அமைக்க முன்மொழிந்துள்ளார். வெப்பப் பிணைப்பு செய்யப்பட்ட அரிய பூமி நிரந்தர காந்தங்களின் (Sintered Rare Earth Permanent Magnets - REPM) தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தோடு இந்த முன்மொழிவு ஒத்துப்போவதாக அவர் தெரிவித்தார். எனவே, இந்த அரிய பூமி நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets (REPM)) என்றால் என்ன மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. வெப்பப் பிணைப்பு செய்யப்பட்ட அரிய பூமி நிரந்தர காந்த (Sintered Rare Earth Permanent Magnets) தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு மொத்தம் 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கானது, போட்டி ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விற்பனையோடு இணைந்த ஊக்கத்தொகையாக ₹6,450 கோடியும், ஒருங்கிணைந்த அரிய பூமி நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets (REPM)) உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான மூலதன மானியமாக ₹750 கோடியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் சுயசார்புத் தன்மையை வலுப்படுத்துவதையும், அரிய பூமி நிரந்தர காந்தங்களுக்கான (REPM) சர்வதேச சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக மாற்றுவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்தகைய காந்தங்களுக்காக இந்தியா சீனாவையே பெரிதும் நம்பியுள்ளது. 2024–25-ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியா 53,000 டன்களுக்கும் அதிகமான அரிய பூமி நிரந்தர காந்தங்களை இறக்குமதி செய்தது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. இந்த காந்தங்களுக்கான இந்தியாவின் தேவை 2030-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. இந்தத் திட்டம் வெப்பப் பிணைப்பு செய்யப்பட்ட அரிய பூமி நிரந்தர காந்த (Sintered Rare Earth Permanent Magnets) தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, வணிக ரீதியாக மிகவும் வலிமையானதாகவும், பரவலாகப் பயன்படுத்தப்படக்கூடியதாகவும் இருக்கும் 'நியோடைமியம்-இரும்பு-போரான்' (neodymium-iron-boron (NdFeB)) காந்தங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
5. இந்தக் காந்தங்கள் வலிமையான காந்தத்தன்மையை (Magnetism) பெறுவதற்காக நியோடைமியம் (neodymium (Nd)) மற்றும் பிரசோடைமியம் (praseodymium (Pr)) போன்ற லேசான அரிய வகை தனிமங்களுடன், இரும்பு (iron (Fe)) மற்றும் போரான் (boron (B)) ஆகியவற்றைச் சேர்த்து உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக வெப்பநிலையிலும் காந்தத்தன்மை குறைந்துவிடாமல் இருப்பதற்காக, டிஸ்ப்ரோசியம் (dysprosium (Dy)) மற்றும் டெர்பியம் (terbium (Tb)) போன்ற கனமான அரிய வகை தனிமங்கள் இதனுடன் சேர்க்கப்படுகின்றன.
6. இந்தக் காந்தங்களைத் தயாரிப்பதில் பல நிலைகள் உள்ளன. அவை, சுரங்கம் தோண்டுதல், தாதுக்களைத் தூய்மைப்படுத்துதல், பதப்படுத்துதல், பிரித்தெடுத்தல், அவற்றை அரிய வகை புவி ஆக்சைடுகளாக (Rare Earth Oxide) மாற்றுதல், பின்னர் அந்த ஆக்சைடுகளை உலோகமாகவும், உலோகத்தை உலோகக் கலவையாகவும் (Alloy) மாற்றி, இறுதியில் காந்தங்களாகத் தயாரித்தல் ஆகியவை இதில் அடங்கும் என்கின்றனர். அரிய வகை புவி ஆக்சைடை உலோகமாக மாற்றுதல், உலோகத்தை உலோகக் கலவையாக மாற்றுதல் மற்றும் அந்த உலோகக் கலவையிலிருந்து அரிய பூமி நிரந்தர காந்தங்களைத் (REPM) தயாரித்தல் போன்ற கடைசி மூன்று நிலைகளை மட்டும் செய்யக்கூடிய ஒருங்கிணைந்த அரிய பூமி நிரந்தர காந்த (REPM) உற்பத்தி நிலையங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.
7. அதிநவீன மின்சார வாகனங்கள் (Electric vehicles), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், மின்னணுவியல், விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற பல தொழில்நுட்பங்களுக்கு இந்த அதீத சக்தி வாய்ந்த அரிய பூமி நிரந்தர காந்தங்கள் (REPM) மிகவும் அவசியமானவை. இருப்பினும், இவற்றின் உற்பத்தி ஒரு சில நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளது. குறிப்பாக, இந்த காந்தங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களைப் பதப்படுத்துவதிலும், உற்பத்தியிலும் சீனா மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
அரிய மண் தாதுக்களில் தற்சார்புக்கான மற்ற நடவடிக்கைகள்
1. இந்தியா தனது கனிமத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தை (National Critical Mineral Mission (NCMM)) கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. 2024-25-ஆம் ஆண்டு முதல் 2030-31-ஆம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்டுகளுக்குச் செயல்படவுள்ள இத்திட்டத்திற்காக ₹16,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய கனிமங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கனிமங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நவீனத் தொழில்நுட்பம், புதிய விதிமுறைகள் மற்றும் நிதி வசதி ஆகியவற்றின் மூலம் கனிம ஆய்வு, அகழ்வாராய்ச்சி, சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி ஆகிய ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் வலுப்படுத்த இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
2. வெளிநாடுகளில் உள்ள முக்கியமான கனிம வளங்களைக் கண்டறிவதற்காக, இந்தியா, கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (Khanij Bidesh India Limited (KABIL)) என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. அர்ஜென்டினாவின் 'கடமார்க்கா' (Catamarca) மாகாணத்தைச் சேர்ந்த அரசு நிறுவனமான 'காமியன்' (Camyen) உடன் கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, அர்ஜென்டினாவில் உள்ள ஐந்து லித்தியம் உப்புநீர் தொகுதிகளில் (Lithium Brine Blocks) கனிம ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
3. 2023-ஆம் ஆண்டில், 30 தாதுக்களை 'மிக முக்கியமானவை' என இந்தியா வகைப்படுத்தியது. அதே ஆண்டில், அரசு 'சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், (Mines and Minerals (Development and Regulation) Act, 1957,) 1957'-இல் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் லித்தியம் (Lithium), கோபால்ட் (Cobalt) மற்றும் அரிய பூமி தனிமங்கள் (Rare earth elements) போன்ற முக்கியமான தாதுக்களை ஏலம் விடும் தனி அதிகாரத்தை ஒன்றிய அரசு பெற்றது. அதிலிருந்து, நாடு முழுவதும் இதுவரை 34 முக்கியமான தாது சுரங்கப் பகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன.
அரிய வகை பூமி தனிமங்கள் என்றால் என்ன?
1. அரிய வகை பூமி தனிமங்கள் (Rare Earth Elements - REEs), 'அரிய பூமி உலோகங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இவை 17 வேதியியல் தனிமங்களின் ஒரு தொகுதியாகும். இதில் 15 லேந்தனைடுகள் (Lanthanides) மற்றும் அவற்றுடன் ஸ்காண்டியம் (Scandium), இட்ரியம் (Yttrium) ஆகியவையும் அடங்கும். இவை ஒரே தாதுப் படிவுகளில் காணப்படுவதோடு, ஒரே மாதிரியான வேதியியல் பண்புகளையும் கொண்டுள்ளன. இந்தத் தனிமங்கள் 'இலகுவான அரிய பூமி தனிமங்கள்' (Light rare earth elements (LREEs)) மற்றும் 'கனமான அரிய பூமி தனிமங்கள்' (Heavy rare earth elements (HREEs)) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
2. சீரியம் (cerium (Ce)), டிஸ்ப்ரோசியம் (dysprosium (Dy)), எர்பியம் (erbium (Er)), யூரோப்பியம் (europium (Eu)), கடோலினியம் (gadolinium (Gd)), ஹோல்மியம் (holmium (Ho)), லந்தனம் (lanthanum (La)), லுடீட்டியம் (lutetium (Lu)), நியோடைமியம் (neodymium (Nd)), பிரசோடைமியம் (praseodymium (Pr)), புரோமித்தியம் (promethium (Pm)), சமாரியம் (samarium (Sm)), ஸ்காண்டியம் (scandium (Sc)), டெர்பியம் (terbium (Tb)), தூலியம் (thulium (Tm)), இட்டர்பியம் (ytterbium (Yb)) மற்றும் இட்ரியம் (yttrium (Y)) ஆகிய 17 தனிமங்கள், அரிய பூமி தனிமங்கள் (Rare Earth Elements) என வகைப்படுத்தப்படுகிறன.
3. இந்தியாவில் லந்தனம் (lanthanum), சீரியம் (cerium), நியோடைமியம் (neodymium), பிரசோடைமியம் (praseodymium) மற்றும் சமாரியம் (samarium) போன்ற சில வகை அரிய பூமி தனிமங்கள் (Rare Earth Elements (REEs)) உள்ளன. இருப்பினும், டிஸ்ப்ரோசியம் (dysprosium), டெர்பியம் (terbium) மற்றும் யூரோப்பியம் (europium) போன்ற கனரக அரிய மண் தனிமங்கள் இந்தியாவில் பிரித்தெடுக்கக்கூடிய அளவில் இல்லை என்றும் இதன் காரணமாக, உலகின் 70 சதவீத அரிய மண் தனிமங்களை உற்பத்தி செய்யும் சீனா போன்ற நாடுகளை இந்தியா சார்ந்திருக்க வேண்டி நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.