பாதுகாப்புத் துறைக்கான மூலதனச் செலவினத்தை அரசாங்கம் ஏன் அதிகரித்துள்ளது? -அனுஷ்கா சக்சேனா

 புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையில், அவசர கால இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2026–27 நிதியாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ₹7,84,678 கோடி என்ற சாதனை அளவிலான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அதிகப்படியான நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதையும், 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


பல ஆண்டுகளாக, இந்தியாவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு என்பது 'துப்பாக்கியா அல்லது வெண்ணெயா' (Guns vs Butter) என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அதாவது, ராணுவ வீரர்களுக்கான செலவுகளுக்கும் (சம்பளம், ஓய்வூதியம்), நவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் இடையே எதை தேர்ந்தெடுப்பது என்ற சமநிலை தேவைப்பட்டது. இருப்பினும், 2026-27 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் இது ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது. 2027-ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு ஒதுக்கீடு ₹8 லட்சம் கோடியை நெருங்குவதால், நவீனமயமாகி வரும் ராணுவத்தின் தேவைகளையும், வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இது உதவும் என்று கூறப்படுகிறது.  


மூலதனச் செலவு


பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வலுவாக உள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு மதிப்பீட்டில், பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்தச் செலவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் ₹7,84,678 கோடியை எட்டியுள்ளது. இது அரசின் மொத்தச் செலவில் 14.7% ஆகும். கடந்த 2025-26-ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான 14.8%-ஐவிட இது சற்றே குறைவாக இருந்தாலும், 2020-21-ஆம் ஆண்டு மற்றும் 2021-22-ஆம் ஆண்டு காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது ஒரு நிலையான தன்மையைக் காட்டுகிறது (அப்போது இது 13.2% ஆகக் குறைந்திருந்தது). ஒன்றிய அரசின் மொத்தச் செலவில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை 14-15% என்ற அளவில் தொடர்ந்து பராமரிக்க முடிந்தால், நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்கும் அழுத்தங்களிலிருந்து தேசியப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். 


பாதுகாப்புத் துறைத் திட்டமிடுபவர்களைப் பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் ஒரு முக்கியப் பிரச்சினை, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வருவாய் செலவினங்கள் ஆகும். குறிப்பாகச் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் இதில் அடங்கும். ஏனெனில், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும், போர் பீரங்கிகள், கப்பல்கள் அல்லது விமானங்கள் போன்ற பெரிய ரகத் தளவாடங்களை வாங்குவதற்கும் பயன்படுவது 'மூலதனச் செலவு'  ஆகும். எனவே, ஒரு பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் (Defence Budget), வருவாய் செலவினமும் மூலதனச் செலவினமும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்படுத்துதல் மற்றும் பல்வகைப்படுத்துதல்


2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை மதிப்பீட்டில் (Budget Estimates (BE)), பாதுகாப்புத் துறையின் மொத்த நிதியில் 27.9% மூலதனச் செலவினத்திற்காக (புதிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்காக) ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் இருந்த 24.9% மற்றும் 2019-20-ஆம் ஆண்டில் இருந்த 24.5% ஆகியவற்றைவிட கணிசமான உயர்வாகக் கருதப்படுகிறது. ரூபாய் மதிப்பில் பார்த்தால், இந்த நிதியாண்டில் இதற்காக ₹2,19,306 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் ஒதுக்கீடான ₹1,80,000 கோடியைவிட சுமார் ₹40,000 கோடி அதிகமாகும். குறிப்பாக, கடந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டு (Revised Estimates (RE)) நிலையில் கூடுதல் நிதி கோரப்பட்டது. நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட இறுதிச் செலவு குறைவாக இருக்கும் என்ற பழைய நிலையை மாற்றி, இப்போது பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி தேவைப்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது (வரைபடம் 2-ஐப் பார்க்கவும்).



இருப்பினும், இந்த எண்கள் ஏன் இவ்வளவு முக்கியமானவை என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள, மூலதனச் செலவு (Capex) பயன்பாடு மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் (Geopolitical) முன்னேற்றங்கள் தொடர்பான மூன்று முக்கிய காரணிகளைப் பார்ப்பது அவசியமாகிறது.


முதலாவதாக, 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான மத்திய நிதிநிலை அறிக்கை இதுவாகும். அந்த மோதலின் தாக்கம், பாதுகாப்புத்துறைக்குக் கோரப்பட்டுள்ள கூடுதல் நிதியில் தெளிவாகத் தெரிகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு நாள் தீவிர வான்வழித் தாக்குதல்கள், நம்மிடம் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் (precision-guided munitions (PGMs)) மற்றும் 'லோயிட்டரிங்' (Loitering) ரகத் தற்கொலை ட்ரோன்களின் பற்றாக்குறையை உணர்த்தின. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருமுனைகளில் ஒரே நேரத்தில் போர் ஏற்படுவதற்கான சூழலை இந்தியா எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், இது மிகவும் முக்கியமானது. எனவே, மூலதனச் செலவினத்தில் செய்யப்பட்டுள்ள 21.8% உயர்வு என்பது, எதிர்காலத் தயாரிப்புக்காக மட்டுமல்லாமல், மே மாதம் 2025-ஆம் ஆண்டு ஏற்பட்ட  மோதலில் தீர்ந்துபோன ஆயுத இருப்பை  மீண்டும் நிரப்புவதற்காகவும் இருக்கலாம்.


இரண்டாவதாக,  நிதி ஒதுக்கீட்டு செலவினங்களைப் பார்க்கும்போது, கல்வான் (Galwan incident) மோதலுக்குப் பிறகு தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட 'அவசரக்கால கொள்முதல்' (Emergency Procurement (EP)) முறை, இப்போது ஒரு நிரந்தர அமைப்பாக மாறிவிட்டதைக் காட்டுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' காலத்தின்போது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்களை விரைவாக வாங்கப் பயன்படுத்தப்பட்ட 'ஃபாஸ்ட் டிராக்' (Fast-track) முறை, இனி முக்கியமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்கான பொதுவான நடைமுறையாக மாறக்கூடும் என்பதை இந்த நிதி ஒதுக்கீடு உணர்த்துகிறது.


மூன்றாவதாக, முக்கிய நிதிப் புள்ளிவிவரங்கள் பல நேரங்களில் 'ஒப்புக்கொள்ளப்பட்ட பொறுப்புகளை' (committed liabilities) கவனிக்கத் தவறிவிடுகின்றன. அதாவது, கடந்த காலங்களில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களுக்காக வரும் நிதியாண்டில் கட்டாயமாகச் செலுத்த வேண்டிய தொகையாகும். கடந்த காலங்களில், மூலதனச் செலவினத்தின் (Capex) பெரும் பகுதி S-400 ஏவுகணைகள், ரஃபேல் விமானங்கள் அல்லது ஆகாஷ் ஏவுகணைகளுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டது. இதனால் புதிய ஒப்பந்தங்களுக்கு மிகக் குறைந்த நிதியே எஞ்சியது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி இந்தத் தட்டுப்பாட்டைப் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், புதிய நடுத்தர ரக போர் விமானங்கள் (Advanced Medium Light Aircraft (AMCA)) அல்லது 'Project 75I' நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமானால், 2026-27-ஆம் நிதியாண்டில் அந்த ஒப்பந்த மதிப்பில் குறைந்தது 10 முதல் 15 சதவீதத் தொகையை அரசாங்கம் முன்பணமாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


கூட்டுப் புள்ளிவிவரங்கள்


இறுதியாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்தச் செலவினங்களை ஆய்வு செய்யும் போது, 2020-ஆம் நிதியாண்டில் 26 சதவீதமாக இருந்த ஓய்வூதியத்தின் பங்கு, 2027 நிதியாண்டில் 21.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், சம்பளத்திற்கான செலவும் 30 சதவீதத்திலிருந்து 22.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 


ஓய்வூதியத்திற்கான மொத்தத் தொகை இன்னும் அதிகமாகவே இருந்தாலும், மொத்த நிதி ஒதுக்கீட்டு தொகையில் அதன் விகிதம் குறைந்து வருகிறது. இது 'அக்னிபாத்' (Agnipath) திட்டத்தின் ஆரம்பநிலை முடிவாகவும், வருவாய் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் அரசின் திட்டமிட்ட கொள்கையாகவும் இருக்கலாம். மூலதனச் செலவினங்களுக்காக (புதிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க) ₹2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இனி அந்தப் பொறுப்பு உள்நாட்டுத் தொழில்துறையின் கைக்கு மாறுகிறது. ‘சுயசார்பு இந்தியா’  (Aatmanirbhar Bharat) திட்டத்தின்கீழ், மூலதனக் கொள்முதல் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 75 சதவீதம் உள்நாட்டுத் தொழில்துறைக்காகவே அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


இதிலுள்ள முக்கிய சவால் 'உள்வாங்கிக் கொள்ளும் திறன்' (Absorption capacity) ஆகும். அதாவது, பாதுகாப்புத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களாலும் மற்றும் தனியார் நிறுவனங்களாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பொருட்களை விநியோகிக்க முடியுமா? பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் கீழ் உள்ள இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்தவற்றை கொள்முதல் செய்யும் ('Buy Indian- ((Indigenously Designed, Developed, and Manufactured)) IDDM)'   வழிமுறை முக்கியமானதாயகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய அவசர காலத் தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போது, பொருட்களைத் தயாரித்து வழங்கும் காலக்கெடுவில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


இந்த அதிகப்படியான நிதி ஒதுக்கீடு, இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தித் தளத்தின் (Defence industrial base) முதிர்ச்சியின் மீது அரசு கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. அதே நேரத்தில், நிறுவனங்களின் செயல்பாடுகளும் இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


அனுஷ்கா சக்சேனா, தக்ஷஷிலா நிறுவனத்தில் (Takshashila Institution) பணியாளர் ஆராய்ச்சி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.




Share: