இந்தியப் பொருளாதார ஆய்வு அறிக்கை (2025-26), முதலீடுகளுக்குத் தயாராக உள்ள மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதை உறுதிப்படுத்துகிறது.
இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை (2025–26), இந்தியாவின் வலுவான பொருளாதார அடித்தளத்தையும், உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்ளும் திறனையும் எடுத்துக் காட்டுகிறது. அதே வேளையில், பல்வேறு வளர்ச்சிப் புள்ளிவிவரங்களில் தமிழ்நாட்டின் சிறப்பான செயல்பாட்டிற்கு இந்த அறிக்கை தனி அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில், 2024–25-ஆம் ஆண்டில் 11.19% உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாகவும், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பாளராகவும் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாகத் திகழ்வது இரண்டாம் நிலைத் துறை (Secondary sector) ஆகும்; இது 13.43% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறை 14.74% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரியான 4.5%-ஐவிட மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-22-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரை), சராசரி உற்பத்தித் துறை வளர்ச்சியில் தமிழ்நாடு 9.38% பெற்று அனைத்து மாநிலங்களிலும் முதலிடத்தில் உள்ளது. இதே காலத்தில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) 8.63% வளர்ச்சியடைந்தது. 2025–26-ஆம் நிதியாண்டில் (டிசம்பர் மாதம் வரை), மாநிலத்தின் பணவீக்கம் 2.45% ஆகக் குறைந்தது. மேலும், தமிழ்நாட்டின் சரக்கு ஏற்றுமதி 2020–21-ஆம் ஆண்டில் $26.15 பில்லியனாக இருந்தது, 2024–25-ஆம் ஆண்டில் $52.07 பில்லியனாக உயர்ந்து ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாநிலத்தின் வலுவான உலகளாவிய போட்டித்தன்மையையும், பன்முகப்படுத்தப்பட்ட தொழில்கட்டமைப்பையும் காட்டுகிறது.
தமிழ்நாடு, முதலீடுகளுக்குத் தயாராக இருக்கும் மாநிலம் என்றும், தொழில் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் மாநிலம் என்றும் இந்த ஆய்வறிக்கை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு, தொகுப்பு அடிப்படையிலான வளர்ச்சி, திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் நிலையான தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் வலிமையைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், நகர்ப்புற மேம்பாடு, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விவசாயம் மற்றும் சேவைத் துறைகளில் மாநிலம் அடைந்துள்ள சாதனைகளையும் இது முன்னிலைப்படுத்துகிறது.
தொழில்துறை பன்முகத்தன்மை
ஜவுளி மற்றும் தோல் துறைகளில் தனக்கிருக்கும் பலத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான தொழில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் சிறந்த தொழில் கொள்கைக்கு உதாரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வாகன உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் மையம் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி (Electronics) மையம் ஆகியவற்றை பொருளாதார ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் சிமெண்ட் தொழிலில் சுமார் 85% தமிழ்நாட்டிற்குள்ளேயே குவிந்துள்ளது. மேலும், மருத்துவ உபகரணப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தின்கீழ், ₹100 கோடி நிதி உதவியைப் பெறுவதற்கான இறுதி அனுமதியைப் பெற்ற மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
இந்தியாவின் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு 15% பங்களிப்பை அளிப்பதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவின் பிற மாநிலங்களைவிட மிக அதிகமாகும். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா (தலா 13%) மற்றும் உத்தரப்பிரதேசம் (8%) ஆகிய மாநிலங்களைவிடவும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மாநிலத்தின் வலுவான உள்கட்டமைப்பு, திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கொள்கைகளால் இயங்கும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைகளே இந்த வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
2024-ஆம் ஆண்டிற்கான தொழில் சீர்திருத்த நடவடிக்கை திட்டத்தின்கீழ் (Business Reforms Action Plan (BRAP)), ஒற்றைச் சாளர அனுமதி (Single-window clearance), டிஜிட்டல் ஒப்புதல்கள் மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சூரிய மின்சக்தி பூங்காக்கள், மாவட்ட அளவிலான கார்பன் குறைப்பு திட்டங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்புத் திட்டங்களையும் மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. இத்தகைய முயற்சிகள் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதுடன், தொழில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் உதவுகின்றன.
மாசுக்கட்டுப்பாடு மற்றும் பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து
தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பைக் கண்காணிப்பதிலும், குறிப்பாகத் தோல் பதனிடும் மற்றும் ஜவுளித் தொழில் கூட்டமைப்புகளுக்கான பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஆதரவு அளிப்பதிலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கியப் பங்கை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. இந்தியாவின் 'பசுமை ஹைட்ரஜன்' (Green Hydrogen) துறையில் தமிழ்நாடு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் மூன்று மையங்களில் ஒன்றாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மேலும், சென்னை-வேலூர்-விழுப்புரம்-செங்கல்பட்டு வழித்தடமானது 'பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்புக்கான' (Regional Rapid Transit System) ஒரு சாத்தியமான பாதையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் காலநிலை அபாயங்களைக் கையாள்வதற்காகத் தொடங்கப்பட்ட 'கடல்சார் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரத் திட்டம்' (Blue Economy Project) குறித்து இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. கடலோர பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கடல் மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் திட்ட மேலாண்மையை வலுப்படுத்துதல் எனப் பலமுனை அணுகுமுறைகளை இத்திட்டம் கொண்டுள்ளது. இதில், 'பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் கிராமங்கள்' (Climate Resilient Villages) என்ற முயற்சி, அடிமட்ட அளவில் பருவநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் சேவைத் துறை உற்பத்தியில் ஏறக்குறைய 40 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன என்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தகவல் தொழில்நுட்பம் (IT), நிதி மற்றும் தொழில்முறை சேவைகள் போன்ற அதிக உற்பத்தித் திறன் கொண்ட துறைகளே இதற்கு முக்கிய காரணமாகும். இவை பெரும்பாலும் நகரமயமாக்கப்பட்ட தென்னிந்திய மாநிலங்களிலேயே குவிந்துள்ளன.
குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் போலவே, நிலக்கடலை உற்பத்தியில் தமிழ்நாடும் ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகள், ஆண்டுக்கு பலமுறை சாகுபடி செய்தல் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான அரசின் சீரான கொள்கை ஆதரவு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாகும். இது தவிர, தோட்டக்கலைத் துறையில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற சிறப்பான சாதனையாக, வாழைப்பழச் சாகுபடியில் தமிழ்நாடு அடைந்துள்ள வெற்றியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் கல்வி அறிவு
நகர்ப்புற வளர்ச்சியைப் பொறுத்தவரை, சென்னையை உலகின் மிகப்பெரிய நகர்ப்புறக் கூட்டமைப்புகளில் (Urban Agglomerations) ஒன்றாகவும், சீரான வளர்ச்சி மற்றும் ஒழுக்கமான குடிமைப் பண்பிற்கு ஒரு முன்மாதிரியாகவும் இந்த ஆய்வு விவரிக்கிறது. சென்னையின் 'பெருநகர வாகன நிறுத்துமிடக் கொள்கை 2025' (Metropolitan Area Parking Policy 2025) நாடு தழுவிய அளவில் ஒரு சிறந்த நடைமுறையாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 'இந்தியா டுடே' நடத்திய ஆய்வில், குடிமைப் பண்பில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கட்டிட விதிகளில் தளர்வு மற்றும் வளர்ச்சி சார்ந்த விதிமுறைகளை எளிமைப்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகத் திகழ்கிறது.
உயர்கல்வித் துறையில், 2024-ஆம் ஆண்டிற்கான 'தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில்' (National Institutional Ranking Framework (NIRF)), முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இது மற்ற அனைத்து மாநிலங்களையும்விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். அதேபோல், உழைக்கும் பெண்களின் விடுதிக் கழகம் (தோழி விடுதிகள்), பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தேசிய அளவில் ஒரு முன்னுதாரணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் தொடங்கப்பட்ட 'திறன் மேம்பாட்டு சான்றுறுதி திட்டம்' (Skill Voucher Scheme), பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைப்பதே தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பதை இந்தப் பொருளாதார ஆய்வு உறுதிப்படுத்துகிறது. தொழில்வளர்ச்சியானது உற்பத்தி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தை உயர்த்தியுள்ளது. அதேவேளையில் கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் மாநிலத்தின் சிறந்த செயல்பாடு, இந்தியாவின் '2047 தொலைநோக்குத் திட்டத்திற்கு' (Vision 2047) முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.
கே.ஆர். சண்முகம், தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக உள்ளார்.