உயிரியல் ஆயுத மாநாடு என்றால் என்ன? அரசு சாரா அமைப்புகளும் உயிரியல் கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனவா?
புதிய உயிரித் தொழில்நுட்பங்கள் உயிரியலை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனால், உயிரியல் காரணிகளை மனிதர்களைக் குறிவைத்துத் தாக்கப் பயன்படுத்த முடியும் என்கின்றனர். எனவே, உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியமாகிறது.
உயிரியல் பாதுகாப்பு என்றால் என்ன?
உயிரியல் பாதுகாப்பு (Biosecurity) என்றால், ஆபத்தான உயிரியல் பொருட்கள் (நோய்க்கிருமிகள், நச்சுக்கள் அல்லது தொழில்நுட்பங்கள்) வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தப்படாமல் தடுப்பதற்கான விதிகளும் நடைமுறைகளும் ஆகும்.
மேலும், ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் ஆய்வகங்களைப் பாதுகாப்பது முதல், யாராவது வேண்டுமென்றே நோயைப் பரப்ப முயன்றால் அதைத் தடுப்பது வரை அனைத்து வழிமுறைகளும் இதில் அடங்கும். இது மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டும் பாதுகாக்கவில்லை; வேளாண் மற்றும் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உயிர் பாதுகாப்பு (biosecurity) என்பது உயிர்காப்பு நெறிமுறைகளிலிருந்து (biosafety) சற்று வேறுபட்டது. உயிர் காப்பு நெறிமுறைகள் என்பது நோய்க்கிருமிகள் (pathogens) தற்செயலாக வெளியேறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளின் தொகுப்பாகும். ஒரு வலுவான உயிர் காப்பு நெறிமுறை உயிர் பாதுகாப்புக்கு உதவியாக அமைகிறது.
சில உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, 1975-ஆம் ஆண்டில் உயிரியல் ஆயுதங்கள் உடன்படிக்கை (Biological Weapons Convention) நடைமுறைக்கு வந்தது. இது பேரழிவு ஏற்படுத்தக்கூடிய உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதையும் பயன்படுத்துவதையும் தடை செய்தது மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் அத்தகைய ஆயுதங்களை அழிக்கவும் கையொப்பமிட்ட நாடுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய முதல் சர்வதேச ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக உயிரியல் ஆயுதங்கள் பயன்பாட்டில் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு உயிரியல் பாதுகாப்பு ஏன் தேவை?
இந்தியாவின் புவியியல் மற்றும் சூழலியல் அமைப்புகள், எல்லை தாண்டிய உயிரியல் அபாயங்களுக்கு அதை ஆளாக்குகின்றன. மேலும், வேளாண் தொழில்களில் இந்தியாவின் அதிகப்படியான சார்புத்தன்மை மற்றும் அதிக மக்கள்தொகை இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன. இந்தியா இதுவரை எந்த உறுதிப்படுத்தப்பட்ட உயிரியல் பாதுகாப்பு தாக்குதலையும் சந்தித்ததில்லை. ஆனாலும், பயங்கரவாதிகள் ஆமணக்கு எண்ணெயிலிருந்து பெறப்படும் நச்சுப் பொருளான ரிசினைப் (Ricin) பயன்படுத்தத் தயாராகி வருவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது, அரசு சார்பற்ற குழுக்கள் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வதைக் காட்டுகிறது. எனவே, வலுவான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல், உயிரித் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மனிதர்களுக்கு உயிரியலின் மீது அதிகக் கட்டுப்பாட்டை அளித்துள்ளது. இது, தீய எண்ணம் கொண்டவர்கள் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
உயிரித் தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology) ஆய்வக ஆராய்ச்சிக்கான பாதுகாப்பு விதிகளை வகுக்கிறது. தேசிய நோய்க் கட்டுப்பாடு மையம் (National Centre for Disease Control) நோய் கண்காணிப்பையும் நோய் பரவல் தடுப்பையும் மேற்கொள்கிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை (Department of Animal Husbandry and Dairying) கால்நடைகளின் உயிரிப் பாதுகாப்பை கண்காணித்து, எல்லை தாண்டிய நோய்களை கட்டுப்படுத்துகிறது. இந்திய தாவர தனிமைப்படுத்தல் அமைப்பு (Plant Quarantine Organisation of India) வேளாண் பொருட்களின் இறக்குமதி-ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துகிறது. இந்தியாவின் உயிரியல் மற்றும் உயிரிப்பாதுகாப்பு அமைப்பு, ஆபத்தான நுண்ணுயிரிகள் மற்றும் மரபணு மாற்ற உயிரினங்களை (GMOs) கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் (1986), உயிரியல் ஆயுதங்களைத் தடுக்கும் பேரழிவு ஆயுதச் சட்டம் (2005) போன்ற சட்டங்களால் ஆதரிக்கப்படுகிறது. மேலும், 1989-ஆம் ஆண்டு உயிரியல் பாதுகாப்பு விதிகள், 2017-ஆண்டில் வெளியான மறு-இணைக்கப்பட்ட மரபணு (Recombinant DNA) ஆராய்ச்சி மற்றும் உயிரிப்பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உயிரியல் பேரிடர் வழிகாட்டுதல்களையும் இந்தியா பின்பற்றுகிறது.
இந்தியா, உயிரியல் ஆயுதங்கள் தடை மாநாடு மற்றும் ஆஸ்திரேலியா குழு போன்ற உயிரியல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
இந்தியாவில் உயிரியல் அபாயங்களைக் குறைப்பது, ஆய்வகக் கட்டுப்பாடு, பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு, வேளாண் பாதுகாப்பு ஆகியவற்றில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஒருங்கிணைந்த தேசிய உயிரியல் பாதுகாப்பு அமைப்பு இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், புதிய உயிரியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தற்போதைய கொள்கைகளையும் சட்டங்களையும் பெரும்பாலும் புதுப்பிக்க வேண்டியுள்ளது என்கின்றனர். இந்தியா தற்போது உலக சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் (Global Health Security Index) 66-வது இடத்தில் உள்ளது, மேலும் உயிரி அச்சுறுத்தல்களை கண்டறிவதற்கான அதன் மதிப்பெண் உயர்ந்துள்ள போதிலும், அச்சுறுத்தல்களுக்கு திறம்பட பதிலளிக்கும் திறனுக்கான மதிப்பெண் குறைந்துள்ளது.
மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
அமெரிக்கா தேசிய உயிரிபாதுகாப்பு உத்தி (National Biodefense Strategy) (2022–2028) என்பதன் கீழ் ஒரு உயிரிபாதுகாப்பு அமைப்பைப் பின்பற்றுகிறது. இது ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் உயிரிதொழில்நுட்ப மேற்பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 2024-ஆம் ஆண்டில், தவறான பயன்பாட்டைத் தடுக்க, மரபணு தொகுப்பு (gene synthesis) நிறுவனங்கள் நோய்க்கிருமி தரவுத்தளங்களுக்கு எதிராக மரபணு தயாரிப்புக்கான கோரிக்கைகள் (DNA orders) பரிசோதிக்க வேண்டும் என்று கோரும் புதிய மத்திய வழிகாட்டுதல் மூலம் இந்த அமைப்பு வலுப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பு (EU Health Security Framework) (2022) மற்றும் ஹொரைசன் ஐரோப்பாவின் (Horizon Europe) இரட்டைப் பயன்பாட்டு ஆராய்ச்சிக் கொள்கைகள் (dual-use research guidelines) மூலம் உயிரிபாதுகாப்பை நிர்வகிக்கிறது. இது உயிரிபாதுகாப்பை அதன் 'ஒரு ஆரோக்கியம்' (One Health) அணுகுமுறையுடன் இணைக்கிறது. சீனாவின் உயிரிப் பாதுகாப்புச் சட்டம் (2021) உயிரித் தொழில்நுட்பத்தையும் மரபணுத் தரவுகளையும் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியமானவையாகக் கருதுகிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் பொருட்களின் பரிமாற்றங்களை மத்திய கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது. ஆஸ்திரேலியாவின் உயிரிபாதுகாப்புச் சட்டம் (Biosecurity Act) (2015) மனித, விலங்கு மற்றும் தாவர ஆரோக்கியம் உட்பட செயற்கை உயிரியலைக் (synthetic biology) உள்ளடக்கிய ஒரு ஒற்றை சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. இங்கிலாந்தின் உயிரியல் பாதுகாப்புக் கொள்கை (Biological Security Strategy) (2023) நோய் கண்காணிப்பு மற்றும் விரைவான பதிலளிப்பை வலியுறுத்துகிறது.
எதிர்காலத்தில் உள்ள அபாயங்கள் என்ன?
போதுமான உயிரியல் பாதுகாப்பு கருவிகள் இல்லாதது மிகப் பெரிய ஆபத்து. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே, பல்வேறு அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய உயிரியல் பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம். அத்தகைய கட்டமைப்பு மூலம் உள்கட்டமைப்பு மற்றும் திறன் இடைவெளிகளை அடையாளம் காண முடியும். நுண்ணுயிர் தடயவியல் போன்ற புதிய உயிரி பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், சமூக ஊடகக் கண்காணிப்பு போன்ற புதிய அணுகுமுறைகளையும் அந்த இடைவெளிகளை நிரப்பப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
சம்பவி நாயக், தக்ஷஷிலா நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் கொள்கைக்கான தலைவராக உள்ளார்.
Original link:
Does India need to upgrade its biosecurity measures?