வேகமான தொழில்மயமாக்கலை வலுவான சமூக நலக் கொள்கை (social welfare) மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கும் ஒரு சமச்சீரான வளர்ச்சி உத்தி, தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக நிலைநிறுத்தியுள்ளது.
பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரம், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் முற்போக்கான திட்டங்களைக் கொண்ட ஆட்சி நிர்வாகத்துடன், தமிழ்நாடு பொருளாதார மேம்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் (inclusive growth) தேசிய அளவில் முன்னணியில் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமான தமிழ்நாடு, தனது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (Gross State Domestic Product (GSDP)) தற்போதைய சூழலில், 2023-24 நிதியாண்டில் ரூ.26.88 லட்சம் கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரித்து, 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும் இது வேகமான வளர்ச்சியாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாநிலம் வலுவான மற்றும் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: அதன் படி, 2021–22ஆம் ஆண்டில்: 15.91% வளர்ச்சி ; 2022–23ஆம் ஆண்டில்: 14.47% வளர்ச்சி; 2023–24ஆம் ஆண்டில்: 13.34% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் உயர் வளர்ச்சி விகிதத்தில் (high growth rates) தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
உண்மையான வளர்ச்சியின் அடிப்படையில், தமிழ்நாடு 2024-25-ஆம் ஆண்டில் 11.2% இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நாட்டிலேயே வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாட்டை மாறியுள்ளது. இது தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 6.5%-ஐ விட அதிகமான வளர்ச்சியாகும்.
பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி
இரண்டாம் நிலைத் துறை, குறிப்பாக உற்பத்தித் துறை, இந்த வலுவான பொருளாதார செயல்திறனுக்கான முக்கிய காரணியாக இருந்து வருகிறது. தமிழ்நாடு ஒரு முக்கிய தொழில்துறை மையமாகத் திகழ்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GSDP) ரூ.1.46 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இது முதன்மை தொழில்துறை மாநிலமான மகாராஷ்டிரா பதிவு செய்த அதிகரிப்பான ரூ.0.71 லட்சம் கோடியை இரண்டு மடங்கு அதிகமான அளவாகும். உற்பத்தித் துறையின் நான்கு ஆண்டு சராசரி உண்மையான வளர்ச்சியில் (2021-22 முதல் 2024-25 வரை) 9.38% என்ற விகிதத்துடன் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும்விட முன்னணியில் உள்ளது.
மாநிலத்தில் 40,121 தொழிற்சாலைகள் உள்ளன மற்றும் 24.75 லட்சம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலார்களுக்கு வேலை வாய்ப்பளித்துள்ளது. இதனால் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small, and Medium Enterprises (MSME)) துறையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. 39 லட்சத்துக்கும் மேற்பட்ட உத்யாம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன், மாநிலம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத் துறையும் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் 15.93 சதவீதமாகவும், 2024-25ஆம் ஆண்டில் 11.56 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சேவைத் துறை, மாநில மொத்த மதிப்பு கூட்டலில் (Gross Value Added (GVA)) 53.6% பங்கு வகிப்பது, 2024-25இல் 11.3% என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை வெளிக்காட்டும் வகையில், ரியல் எஸ்டேட் (12.42%), பொது நிர்வாகம் (14.2%), போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு (11.29%), மற்றும் பிற இதர சேவைகள் (12.49%) உள்ளிட்ட பல துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டு நிலவரப்படி 955 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டுக்கும் ஆதரவளிக்கும் உயர்திறன் பெற்ற தொழிலாளர் வளத்தை உருவாக்குகிறது. ஒழுக்கமான மற்றும் தொழில்நுட்பத் திறமை வாய்ந்த தொழிலாளர் படை கிடைப்பது பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாகியுள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தொழில்துறை மற்றும் ஏற்றுமதி கொள்கைகளால் ஆதரிக்கப்படும் அறிவுசார் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மாநில அரசு ஆராய்ச்சிப் பூங்காக்கள், புத்தாக்க வளர் மையங்கள் (incubation centres) மற்றும் புத்தாக்கக் குழுமங்களில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது.
தமிழ்நாடு தொடர்ந்து மின்னணு, ஜவுளி மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதியில் முதலிடத்திலும், பொறியியல் ஏற்றுமதியில் 2-வது இடத்திலும் உள்ளது. மாநிலத்தின் மொத்த வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2020-21-ஆம் ஆண்டில் ரூ.26.15 பில்லியனில் இருந்து 2024-25-ஆம் ஆண்டில் ரூ.52.07 பில்லியனாக ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு தானூர்திகள் துறைக்கு ஒரு முக்கிய மையமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் இப்போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் வழித்தடத் திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், இத்தகைய விரிவான தொழில்துறை ஒருங்கிணைப்பைக் கொண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 2021-22ஆம் ஆண்டில் 35,139மெகாவாட்டிலிருந்து 2024-25ஆம் ஆண்டில் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
அன்னிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகளாவிய முதலீட்டு நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியாவின் மொத்த FDI பங்கு வரவு 2022-23-ல் $46.03 பில்லியனில் இருந்து 2023-24-ல் $44.42 பில்லியனாகக் குறைந்தாலும், தமிழ்நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டுவரவுகள் $2,169 மில்லியனிலிருந்து $2,436 மில்லியனாகவும், அடுத்த ஆண்டில் $3,681 மில்லியனாகவும் அதிகரித்தன.
இந்தச் செயல்திறன், மாநில அரசின் முனைப்பான முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கையை பிரதிபலிக்கிறது. 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. இது முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கையை குறிக்கிறது. கூடுதலாக, 2024–25-ஆம் ஆண்டில் முதலமைச்சரின் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பயணங்கள், ரூ.23,000 கோடி மதிப்பிலான புதிய தொழில்துறை உறுதிமொழிகளைப் பெற்றுத் தந்தன.
நலத்திட்ட நடவடிக்கைகள்
கல்வி, சுகாதாரம், பெண்கள் அதிகாரம், சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணம் திட்டம், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம், நான் முதல்வன் திட்டம், குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல புதுமையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம், மாநிலம் குறைந்த குழந்தை இறப்பு விகிதத்தை (2023-ல் 1,000 உயிருடன் பிறப்புகளுக்கு 12) அடைந்துள்ளது. குறைந்த பிறப்பு விகிதத்தை (2023-ல் 12) கொண்டுள்ளது. மேலும் பல்பரிமாண வறுமையின் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றை (2022-23-ல் 1.43%) பெற்றுள்ளது. 73.4 ஆண்டுகள் என்ற ஆயுட்காலத்துடன் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தில் (Gross Enrolment Ratio (GER)) 47% உடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சராசரியான 28.4% உடன் ஒப்பிடும்போது மற்றும் பெண்களுக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் 47.3% உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநிலம் ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதலிடத்திலும், கடன்-வைப்பு விகிதத்தில் (120.5%) இரண்டாவது இடத்திலும், மொத்த ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும், 2024-25-ஆம் ஆண்டில் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் (Export Preparedness Index) முதல் இடத்திலும், கடன்-வைப்பு விகிதத்தில் (120.5%) இரண்டாவது இடத்திலும், மொத்த ஏற்றுமதியில் ($52,073.59 மில்லியன்) மூன்றாவது இடத்திலும், தனிநபர் வருமானத்தில் மாநில நிகர உள்நாட்டு உற்பத்தி (ரூ.3.62 லட்சம்) மூன்றாவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், தமிழ்நாட்டின் நலத்திட்டங்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரி (welfare-led growth model), அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வெற்றிகரமாக இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டுகின்றன
நிதித்துறையைப் பொறுத்தவரை, ஒன்றிய அரசின் நிதிப் பரிமாற்றங்களில் சரிவு ஏற்பட்டபோதிலும், மாநிலத்தின் நிதி நிலைமை நிலையாக உள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடன்-மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2021-22ஆம் ஆண்டில் 27 சதவீதத்திலிருந்து 2024-25ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 26 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீடு மற்றும் பெருகிவரும் ஏற்றுமதி ஆகியவை, 2031-ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன. உலகளாவிய வர்த்தக அழுத்தங்கள், மாறும் நாணய மதிப்புகள் மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் குறைந்த ஆதரவு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், தமிழ்நாடு சாதனையை அடைவதற்கான பாதையில் வேகமாக பயணித்து வருகிறது.
கே. ஆர். சண்முகம், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசகர் மற்றும் மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர்.
Original link:
A broad-based development model