பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும், அது உச்சநீதிமன்றத்திலிருந்தே வந்தாலும் கூட கவனமாக ஆராய வேண்டும்.
எந்தவொரு ஜனநாயகத்திற்கும் பேச்சு சுதந்திரம் மிக முக்கியமானது. பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் பொதுவாக அரசு அல்லது சட்டமன்றத்திடமிருந்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், ரன்வீர் அல்லாபாடியா vs இந்திய ஒன்றியம் உள்ளிட்ட வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள், பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து நீதிமன்றத்திலிருந்தும் வரலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு, இணையதள உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் போதாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடுநிலையான, தன்னாட்சி கொண்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும், அரசு வரைவு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள சட்டங்களும் விதிமுறைகளும்
இந்தியாவில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் பல வகையான பேச்சுகளை ஒழுங்குபடுத்துகின்றன. ஆபாச உள்ளடக்கத்தை தண்டிப்பதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் பாரதிய குற்றவியல் சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) பிரிவுகள் 294, 295, 296 ஆகியவை உள்ளன. இணையம் தொடர்பான குற்றங்களுக்கு: பிரிவு 66: ஹேக்கிங் போன்ற கணினிக் குற்றங்களைத் தடுக்கிறது. பிரிவு 66E: மற்றவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிடுவதைத் தடுக்கிறது. பிரிவு 66F: இணையப் பயங்கரவாதத்தைத் தண்டிக்கிறது. மேலும், 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகள் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) இணையதளங்களுக்கு விதிகளை வகுத்துள்ளன, ஆனால் அவை மிகக் கடுமையானவை என்று விமர்சனம் உள்ளது.
இந்த விதிகளுக்கு ஏற்கனவே ஒன்றிய அரசின் மேற்பார்வை அமைப்பு உள்ளது. இது முன்கூட்டியே உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதியையும் (prior restraint) கொண்டுள்ளது. உதாரணமாக, விதிகளின் பிற்சேர்க்கையில் உள்ள பிரிவு II(c)-ன்படி, எந்தவொரு இன அல்லது மதக் குழுவின் செயல்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் அல்லது கருத்துகள் பற்றி பதிப்பாளர்கள் “தகுந்த எச்சரிக்கை மற்றும் விவேகத்துடன்” செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த விதிகள் இருந்தாலும், பேச்சு சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் எந்த முயற்சியையும் — குறிப்பாக நீதிமன்றம் அதை முன்மொழிந்தாலும் — மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
முக்கிய கவலை வழக்கின் வகை தொடர்பானது. ஆபாசமான அல்லது தகாதப் பதிவுகளை இணையதளங்களில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அவர்கள் தங்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரியிருந்தனர். இந்த வழக்கின் நோக்கம் இணையதளப் பதிவுகளை முறைமைப்படுத்துவதாக இல்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு நடந்த முந்தைய விசாரணையில், “நமது சமூகத்தின் அறியப்பட்ட தார்மீக தரங்களுக்கு
எதிரான” ஒளிபரப்பைத் தடுக்க என்ன ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தேவை என்பதை ஆராய்வதற்காக வழக்கின் நோக்கத்தை விரிவுபடுத்துவதாக நீதிமன்றம் கூறியது. இந்த விரிவாக்கம் ஆரம்பத்தில் சிக்கலான ஒன்று என்றும் உள்ளடக்கம் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது பொதுவாக சட்டமன்றத்தின் பணி என்று தெரிவித்துள்ளது. “அதிகாரப் பிரிவினைக்கான கோட்பாட்டை மதிக்க வேண்டும்; நீதிமன்றங்கள் எவ்வளவு விரும்பினாலும் தீர்க்க முடியாத பல சிக்கல்கள் நாட்டில் உள்ளன என்பதை உணர வேண்டும்.” என்று 2008-ஆம் ஆண்டு காமன் காஸ் vs இந்திய ஒன்றியம் வழக்கில், நீதிமன்றம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் இந்தப் பணியை ஏற்கும்போது, இணைய ஊடக ஒழுங்குமுறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்ட இயல்பான நிறுவன வரம்புகளால் அது கட்டுப்படுத்தப்படுகிறது. அதே வரம்புகளால் நீதிமன்றத்தின் விதிமுறை முயற்சிகளும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது சிக்கல், கட்டுப்பாடு மற்றும் சட்டவிரோதத் தடை ஆகியவற்றுக்கிடையிலான நுண்ணிய வேறுபாட்டைச் சார்ந்தது என்கின்றனர். சஹாரா இந்தியா வணிகநில விற்பனை கூட்டமைப்பு லிட். மற்றும் பிறர் vs இந்திய பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு வாரியம் (2012) (Sahara India Real Estate Corp. Ltd.& Ors. vs Securities & Exch. Board Of India & Anr., (2012)) வழக்கில், ஊடக உள்ளடக்கக் கட்டுப்பாடு தேவையா என்பதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விரிவாக ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பிலுள்ள ஒரு கட்டமைப்பு
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 19(2), நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநில பாதுகாப்பு, பொது ஒழுங்கு, மானநஷ்டம் போன்றவற்றை பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடிய காரணங்களாகப் பட்டியலிடுகிறது. 2023-ஆம் ஆண்டு கௌஷல் கிஷோர் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு தெளிவாகத் தீர்ப்பளித்தது: சட்டப்பிரிவு 19(2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வேறு எந்தக் கட்டுப்பாடுகளையும் பேச்சு சுதந்திரத்தின்மீது விதிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியல் முழுமையானது என்றும் மற்ற அடிப்படை உரிமைகளை மேற்கோள் காட்டியோ அல்லது உரிமைகளுக்கு இடையே முரண்பாடு
உள்ளது என்று கூறியோ கூடுதல் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முந்தைய வழக்குகளில் நீதிமன்றம் பரந்த அளவிலான தடைகளை விதிப்பதைத் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் vs இந்திய யூனியன் (2018) வழக்கில், ஒரு வழக்கறிஞர் திரைப்படத்திற்குமுன் பொறுப்புத் தவிர்ப்பு அறிவிப்பு (disclaimer) சேர்க்க வேண்டுமென பரிந்துரைத்தபோது, நீதிமன்றம் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவை நீதிமன்றம் எடுக்கக் கூடாது; தணிக்கை வாரியம்தான் எடுக்க வேண்டும். அதுவும் திரைப்படத் தயாரிப்பாளர் அல்லது இயக்குநரிடம் கேட்ட பிறகே தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அரசியலமைப்பின் நடுவராகச் செயல்பட்டு, சட்டங்கள் அரசியலமைப்புக்கு உகந்தவையா என்பதைத் தீர்மானிக்கிறது. அரசியலமைப்புச் சபை விவாதங்களின்போது, பண்டிட் தாக்கூர் தாஸ் பார்கவா அவர்கள், குடிமக்களின் சுதந்திரத்தின்மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாயமானவையா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் உச்சநீதிமன்றத்திடமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கொள்கை அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 19-ல் பிரதிபலிக்கிறது. எனவே, அரசியலமைப்பின்படி, நீதிமன்றங்கள் சட்டங்களை மட்டும் உருவாக்காமல், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியமானவையா, நியாயமானவையா என்பதையும் ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வழக்கு
நீதிமன்றத்திடம் உணர்ச்சிகரமான ஒரு துறையில் மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரக் கோருவது, முன்தணிக்கை அல்லது சட்டரீதியான ஊடகத் தடை உத்தரவுகளுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது. பெரும்பாலான முக்கிய ஜனநாயக நாடுகள் இதற்கு எதிர்மாறாக, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை அகற்றுவதிலும், அகற்ற உத்தரவுகளை மீறுபவர்களுக்குத் தண்டனை விதிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (2022) உள்ளடக்கத்தை நீக்குவதற்கான நடைமுறைகளை வகுத்துள்ளது. ஜெர்மனியின் இணையதள ஒழுங்குமுறை அமலாக்கச் சட்டம் (2017) பேச்சுச் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், பாதிப்புகளை ஏற்படுத்தும் உள்ளடக்கத்துக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் இணைய பாதுகாப்புச் சட்டம் (2023) பாதிப்புகளை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் மீறல்களுக்கு அபராதம் விதிக்கிறது. ஆஸ்திரேலியாவின் இணைய பாதுகாப்புச் சட்டம் (2021) விதிகளை மீறுபவர்களுக்குத் தண்டனை விதிக்கிறது.
இதற்கு நேர் எதிராக, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள், கண்காணிப்பு மற்றும் முன்தணிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால் எதிர்பாராதவிதமாக, சில ஜனநாயக நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இதே முறையைப் பின்பற்றுகின்றன. டேவிட் லாண்டோ மற்றும் ரோசாலிண்ட் டிக்சன் சொன்னது போல: “சர்வாதிகார ஆட்சிக்கு செல்ல விரும்புபவர்கள் சிலசமயம் நீதிமன்றங்களைக் கைப்பற்றி, ஜனநாயகத்தை அழிக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றை தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள்.”
நீதிமன்றம் இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை மீண்டும் மீண்டும் கோரும்போது, அதற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்போது, அது குடிமக்களின் சுதந்திரம் குறித்து தீவிரமான கவலைகளை எழுப்புகிறது. எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தணிக்கைக்கு ஆளானபோது பொருத்தமாகச் சொன்னது போல, "பேச்சு சுதந்திரம் தான் எல்லாம்; அதுவே வாழ்க்கை."
காளீஸ்வரம் ராஜ், இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர். துளசி கே. ராஜ்,இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர்.
Original link:
Courts must protect, not regulate free speech