தொழில்நுட்பம் கைவசம் உள்ளது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கூடுதல் செலவு கட்டுப்படியாகக்கூடியது, மேலும் சந்தையும் தயாராக இருக்கிறது.
2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் வாயு உமிழ்வே இல்லாத (Net-Zero) நிலையை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த லட்சியத்தின் வெற்றி, இந்தியா எவ்வளவு வேகமாக ‘பசுமை எஃகு’ (Green Steel) உற்பத்தியையும் அதன் பயன்பாட்டையும் அதிகரிக்கப் போகிறது என்பதில்தான் உள்ளது. ஏனெனில், இந்தியாவில் தொழிற்சாலைகள் மூலம் வெளியேறும் கார்பன் வாயுவில் எஃகுத் தொழில் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. எதிர்காலத்தை உருவாக்க நாம் பயன்படுத்தும் பொருட்கள் வளர்ச்சிக்குத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, சுற்றுச்சூழலைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்கின்றனர்.
இதைக் கையாள்வதற்காக, எஃகு அமைச்சகம் (Ministry of Steel) தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட 14 பணிக்குழுக்களை அமைத்தது. எஃகுத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவதே இக்குழுக்களின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைத்து மாற்றுக் வழிகளையும் ஆராய்ந்து, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட எஃகு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான ஒரு திட்டவரைவை உருவாக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், பல உறுப்பினர்கள் ஒரு முக்கியமான தடையைச் சுட்டிக்காட்டினர்: அதுதான் "கிரீன் பிரீமியம்" (Green Premium) அதாவது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத 'பசுமை எஃகு' (Green Steel) தயாரிப்பதற்கு, உற்பத்தியாளர்களுக்குத் தொடக்கத்தில் மிக அதிகச் செலவு ஏற்படுவதைக் கண்டறிந்தனர். இந்த இடைவெளியைக் குறைக்க, ஆரம்ப ஆண்டுகளில் உற்பத்தியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி உதவி தேவைப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Service Tax (GST)) முறைப்படுத்துவதும், குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்குவதும் அவர்கள் இந்த மாற்றத்தைச் சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால், அதிக விலை கொண்ட பசுமை எஃகுக்கான தேவையை அதிகரிக்க, அரசு கொள்முதல் முறையைப் பயன்படுத்துவது ஒரு நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது?
கையாளக்கூடிய வளர்ச்சி
உற்பத்தியாளருக்கு ஏற்படும் கூடுதல் செலவையும், அரசு கொள்முதலில் ஏற்படும் உண்மையான சுமையையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பது அவசியம். எங்களது ஆய்வின்படி, பசுமை எஃகு (Green Steel) அதிக விலை கொண்டதாக இருந்தாலும், பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் அதன் தாக்கம் மிகவும் குறைவுதான் என்கின்றனர். இந்தியாவில் பொதுத்துறை மூலதனச் செலவில் பெரும் பகுதியை வகிக்கும் பெரிய திட்டங்களில், எஃகு பயன்பாடு சுமார் 18 சதவீதம் மட்டுமே
ஆகும். பசுமை எஃகு 30 சதவீத கூடுதல் விலையாக இருந்து, அது பொது உள்கட்டமைப்புத் திட்டங்களில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டாலும், மொத்த திட்டச் செலவு சுமார் 5.5 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்றும் அனைத்துத் திட்டங்களும் உடனடியாகப் பசுமை எஃகு பயன்பாடுக்கு மாறப்போவதில்லை என்பதால், சுமார் 20 சதவீதம் கூடுதல் விலையில் இதைப் பயன்படுத்தினால், நெடுஞ்சாலைகள் போன்ற பொதுப்பணித் திட்டங்களின் நிதிஒதுக்கீடு வெறும் 1.1 சதவீதம் மட்டுமே உயர வாய்ப்புள்ளது என்பன இதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
தேசியப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பார்க்கும்போது, இந்த உயர்வு சமாளிக்கக்கூடிய ஒன்றுதான் என்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கார்பன் எல்லைச் சரிசெய்தல் பொறிமுறை’ (Carbon Border Adjustment Mechanism (CBAM)) மற்றும் நிலையற்ற கற்கரியாக்க நிலக்கரி (Coking coal) இறக்குமதி விலைகளால் இந்தியா அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. இந்தியா ஆண்டுதோறும் 5 கோடி டன்னுக்கும் அதிகமான கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதனால் ஏற்படும் விலை மாற்றங்கள் நமது வர்த்தகத்தையும் தொழில்துறையையும் எளிதில் பாதிக்கின்றன. பசுமை எஃகு (Green steel) உற்பத்திக்கு மாறுவது, கார்பன் வரிகளைத் தவிர்க்கவும், எரிபொருள் விலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய முன்னுதாரணங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. ஜப்பானின் பசுமை கொள்முதல் கட்டமைப்பு (Green purchasing framework), கொள்முதல் விதிகளுடன் நிதிச்சலுகைகளையும் இணைக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது; அப்போதுதான் தொழில்துறையினரால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்கின்றனர். கலிபோர்னியாவின் 'பை கிளீன்' (Buy Clean) மாதிரி, கடுமையான கார்பன் தரநிலைகளும், சரிபார்க்கப்பட்ட வெளிப்பாடுகளும் எவ்வாறு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி பாதிப்புகளைக் குறைக்கின்றன என்பதை விளக்குகிறது. இந்த உதாரணங்களின் அடிப்படையில், இந்தியா 'பசுமை எஃகு வகைப்பாட்டை' (Green Steel Taxonomy) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3, 4 மற்றும் 5 நட்சத்திர மதிப்பீட்டு முறை உள்ளது. இது எஃகு உற்பத்தியின்போது வெளியேறும் கார்பன் அளவைப் பொறுத்து தரம் பிரித்து, சந்தை நிலைகளில் அந்தத் தயாரிப்புக்கு ஒரு தெளிவான 'கார்பன் வெளியேற்ற அளவு' குறித்த (Carbon label) நெறிமுறைகளையும் வழங்குகிறது.
இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்த பிறகு, அரசு கொள்முதலில் 'பசுமை எஃகு' (Green Steel) பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், பசுமை எஃகுக்கான கூடுதல் விலை (Green Premium) மற்றும் அதன் தரத்தை உறுதி செய்வது எப்படி என்பது குறித்த கவலைகளால், நிதி அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் இறுதி ஒப்புதலுக்காக தற்போது இந்தத் திட்டம் காத்திருக்கிறது.
முன்னோக்கி செல்லும் வழி
இந்தத் தாமதத்திற்கு மிக முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை ஆகும். ஒரு கொள்முதல் அதிகாரி, சான்றிதழ் பெற்ற ‘பசுமை’ (Green) TMT கம்பிக்கும் சாதாரண கம்பிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இன்று எளிதாகக் கண்டறிய முடிவதில்லை என்கின்றனர். இதற்குத் தீர்வாக, தற்போது பயன்பாட்டில் உள்ள 'மேக் இன் இந்தியா' (Made in India) குறியீடு முறையையும், இந்தியத் தர மதிப்பீதட்டு அமைப்பின் (QCI) அங்கீகாரத்தையும் பயன்படுத்தலாம் என்கின்றனர். இதனுடன் 'கிரீன் ஸ்டார்' (Green Star) தரவரிசையையும் இணைப்பதன் மூலம், அந்தப் பொருளின் சுற்றுச்சூழல் தரம் மற்றும் கார்பன் அளவுகளை அதிகாரிகள் உடனடியாகச் சரிபார்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
நிர்வாகம் தொடர்பான மற்ற சிக்கல்களைக் குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் மூலம் சரிசெய்ய முடியும் என்கின்றனர். கொள்முதல் விதிகள் என்பது ஆரம்பக்கட்ட குறைந்த விலையைத் தேர்ந்தெடுப்பதாக மட்டும் இருக்கக்கூடாது என்றும் மாறாக, நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார நலன் உள்ளிட்ட பணத்திற்கான ஒட்டுமொத்த மதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், பொதுப்பணி மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘விலைப்பட்டியலில்’ சான்றளிக்கப்பட்ட குறைந்த கார்பன் கொண்ட எஃகு (low-carbon steel) தெளிவாகச் சேர்க்கப்பட வேண்டும். தற்போது, கார்பன் செறிவு ஒரு தர அளவுகோலாக அங்கீகரிக்கப்படாததால், ‘பசுமை எஃகு’ என்பது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்படுகிறது. இதனை ஒரு தரமான அளவுகோலாக மாற்றினால், அதிகாரிகள் எவ்வித நிர்வாகச் சிக்கலுமின்றி நிலையானப் பொருட்களை வாங்கமுடியும் என்கின்றனர். மேலும், கொள்முதல் அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும், மாநிலங்களுடன் இணைந்து பசுமை பொதுக் கொள்முதல் அவசியத்தை ஊக்குவிப்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்களும் (Production Linked Incentive schemes (PLI)) மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களும், அரசு கொள்முதல் ஏலங்களுடன் இணைக்கப்பட வேண்டும். பசுமை எஃகு (green steel) உற்பத்திக்கு அரசு மானியம் வழங்கினால், அந்த எஃகை வாங்கும் முக்கிய வாடிக்கையாளராகவும் அரசே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இது தனிப்பட்ட நிறுவனங்களின் லாப நோக்கத்தை பொதுநலனுடன் ஒன்றிணைக்கும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
3-ஸ்டார் தரநிர்ணயத்தை ஒரு நடைமுறைத் தொடக்கமாகக் கொள்ளலாம்; ஆனால், கொள்முதல் கொள்கையானது படிப்படியாக 4 மற்றும் 5-ஸ்டார் தரநிலை எஃகு உற்பத்திக்கு மாற வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டும். 2030-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தத் தரநிலைகளை இன்னும் கடுமையாக்கும் ஒரு திட்டவரைவை, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட உயர்தர எஃகு உற்பத்தியில் முதலீடு செய்யத் தொழில்துறையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது: அதற்கான தொழில்நுட்பம் இப்போது கைவசம் உள்ளது, பசுமைத் திட்டங்களுக்கு மாறும் கூடுதல் செலவும் கட்டுப்படியாகக்கூடியதே, சந்தையும் அதற்கெனத் தயாராக இருக்கிறது. இதற்கு ஒரு நடைமுறை தீர்வாக, இந்திய இரயில்வே போன்ற ஒன்றிய கொள்முதல் அமைப்புகள் மூலம் குறிப்பிட்ட சில முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. பெரிய அளவிலான கொள்முதல் நடவடிக்கைகள், 'பசுமை எஃகு' (Green Steel) தயாரிப்பிற்கான ஒரு சிறந்த சோதனைக்களமாக அமையும் என்கின்றனர். இப்போது, இந்தியாவின் எஃகு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒன்றிணைந்து, நாட்டின் காலநிலை இலக்குகளை நிதி மற்றும் கொள்முதல் முடிவுகளோடு இணைத்துச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது
நாகேந்திர நாத் சின்ஹா, மேனாள் செயலாளர், எஃகு அமைச்சகம்; அல்ஃபஹத் சொரத்தியா, கொள்கை ஆய்வாளர்.
Original article : Transitioning to green steel -Nagendra Nath Sinha, Alfahad Sorathia