பல ஆண்டுகளாக, இந்தியா தனது நாட்டு பெண்களின் கல்வித் திறனைக் கொண்டாடி வருகிறது. அவர்கள் பள்ளித் தேர்வுகள், குடிமைப்பணிகள் (Civil Services), மருத்துவ நுழைவுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றனர். இருந்தபோதிலும், நிறுவனங்களின் உயர்மட்டக் குழுக்கள் அல்லது உயர் முடிவெடுக்கும் இடங்களைப் பார்க்கும்போது, அவர்களின் பங்களிப்பு வெகுவாகக் குறைகிறது. பல பெண்களுக்கு, தாய்மை என்பது இந்த அமைதியான வெளியேற்றம் தொடங்கும் ஒரு புள்ளியாக இருக்கிறது என்று விஜய கிஷோர் ரஹத்கர் குறிப்பிடுகிறார்.
முக்கிய அம்சங்கள்:
— ஆறுமாத ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் மகப்பேறு நலச் சட்டம், உலகிலேயே மிகவும் முன்னேற்றகரமான மற்றும் தாராளமான பாதுகாப்புகளில் ஒன்றாகும். இருப்பினும், ஒரு தாயின் உணர்வுப்பூர்வமான சவால்களை எந்தச் சட்டத்தாலும் முழுமையாகத் தீர்த்துவிட முடியாது. பல பெண்கள் வேலைக்குத் திரும்பும்போது குற்ற உணர்வு, பதற்றம் மற்றும் உடல் சோர்வுடனேயே திரும்புகிறார்கள்; அதோடு அவர்கள் வேலையில் முன்பைப் போல நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள் என்ற பார்வையும் பொதுவாக நிலவுகிறது. தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வது சுயநலம் அல்ல என்பதை உணர ஒரு தாய்க்கு வீட்டிலும் ஆதரவு தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், தன் குழந்தையை கவனித்துக் கொள்வது தனது திறமையையோ அல்லது அர்ப்பணிப்பையோ குறைக்காது என்பதை உணர அவருக்குப் பணிபுரியும் இடத்திலும் ஆதரவு தேவைப்படுகிறது.
— சுயதொழில் செய்பவர்களைத் தவிர, மற்ற அனைத்துச் சம்பளம் பெறும் பெண்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்றாலும், அவர்கள் பெறும் ஆதரவின் அளவு பெருமளவில் மாறுபடுகிறது. ஒரு நிரந்தர அரசுப் பணியில் இருக்கும் பெண், மகப்பேறு விடுப்புடன் 730 நாட்கள் வரை குழந்தைப் பராமரிப்பு விடுப்பையும் பெறுகிறார். இதில் முதல் வருடம் முழுச் சம்பளமும், அதற்குப் பிறகு பகுதிச் சம்பளமும் வழங்கப்படுகிறது. இது அவர் தனது பணி வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தெளிவான மற்றும் திட்டமிடப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது.
— சிறு தனியார் நிறுவனங்களில், முதலாளிகள் சட்டத்தைப் பின்பற்றினாலும், அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. பல பெண்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து திரும்பும்போது, அவர்களின் பொறுப்புகள் குறைக்கப்படுவதையும், பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும், தொழில் வளர்ச்சி முடக்கப்படுவதையும் உணர்கிறார்கள். இந்தச் சட்டம் உண்மையாகவே பலன் அளிக்க வேண்டுமானால், நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் லட்சியத்தையும் தாய்மையையும் கண்ணியத்துடன் சமநிலைப்படுத்த முடியும் என்ற கருத்தை பணியிடங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
— புதிய தாய்மார்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருப்பது, நம்பகமான மற்றும் மலிவான குழந்தை பராமரிப்பு வசதி இல்லாததே ஆகும். இருப்பினும், இந்த சவாலில் ஒரு பெரிய வாய்ப்பும் ஒளிந்துள்ளது. இந்தியாவில் திறன் குறைந்த மற்றும் ஓரளவு திறன் கொண்ட பல பெண்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான பயிற்சியும் சான்றிதழும் வழங்கப்பட்டால், அவர்களை ஒரு புதிய, அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்புப் பணியாளர்களாக மாற்ற முடியும். இது பெண்களுக்கு பெருமளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. அனைத்தையும்விட முக்கியமாக, ஒரு பெண் வேலைக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும் மற்றொரு பெண் சுரண்டப்படக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
— சமீப காலங்களில், தம்பதிகள், இரட்டை வருமானம், குழந்தைகள் இல்லை (Dual Income, No Kids (DINK)) என்கிற ஒரு வாழ்க்கை முறையைத் தாங்களாகவே தேர்ந்தெடுப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல பெண்களுக்கு, இந்த முடிவு தங்களது தொழில் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் குறித்த பயத்திலிருந்தும், குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுக்க முழுக்க தங்களுடையது மட்டுமே என்கிற எதிர்பார்ப்பிலிருந்தும் உருவாகிறது. சட்டங்கள் ஊதியத்தையும் வேலைகளையும் பாதுகாக்கலாம், ஆனால் அவற்றால் குடும்ப நடத்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது. குழந்தைகள் மற்றும் வேலை என இரண்டையும் நிர்வகிக்கும்போது, தாங்கள் அதை மிகவும் எளிதாகச் சமாளிப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கப்படும்போது, தாய்மை இன்னும் கடினமாகிறது. குடும்பங்களும் பணியிடங்களும் இந்தப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளாதவரை, பல பெண்கள் அமைதியாகவும் நிரந்தரமாகவும் வேலைவாய்ப்பிலிருந்து வெளியேறுவது தொடரவே செய்யும் என்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?
— கடந்த மே மாதம் 23-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், மூன்றாவது குழந்தை பிறப்பிற்காக அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மகப்பேறு விடுப்பு என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க உரிமைகளின் ஒரு பகுதி என்றும், அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
— இந்த வழக்கு, மகப்பேறு நன்மைகள் சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்துடன் (inclusion) எவ்வளவு நெருங்கிய தொடர்புடையவை என்பதை மீண்டும் காட்டுகிறது. வரலாற்றுரீதியாக, 1880-களில் இருந்தே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு என்பது 'மக்கள்நல அரசு' (welfare state) என்ற கருத்தாக்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இது கொள்கை உருவாக்கத்தில் பெண்களின் அதிகரித்து வரும் செல்வாக்கின் விளைவாக உருவானது மட்டுமல்லாமல், அந்தச் செல்வாக்கு மேலும் வளரவும் வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
— குறைந்துவரும் மக்கள்தொகை மற்றும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலைகளைப் போக்க, பிஸ்மார்க் காலத்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் முதன்முதலில் மகப்பேறுகால நலத்திட்டங்கள் (Maternity benefits) அறிமுகப்படுத்தப்பட்டன. இது அதிகப்படியான பெண்களை அரசு அமைப்பிற்குள்ளும், வேலைவாய்ப்பிற்குள்ளும் கொண்டுவர உதவியதாகக் கூறப்படுகிறது.
Original article : What are the key provisions of the Maternity Benefit Act? -Roshni Yadav