இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சுகாதார அமைப்புக்கு (accessible healthcare system) புதுப்பிக்கப்பட்ட (refurbished) மருத்துவ கருவிகளின் நன்மைகள் யாவை? -ரோஷினி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இந்திய உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு, விதிமுறைகள் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தடைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health and Family Welfare (MoHFW)) மேற்பார்வையில், மருத்துவ சாதன விதிகளின்கீழ் (Medical Devices Rules) ஒரு தெளிவான மற்றும் வலுவான கொள்கை இந்தியாவுக்குத் தேவை என்று சர்வதேச மருத்துவ சாதன அமைப்புகள் கூறுகின்றன.


— பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி, ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள மருந்தகத் துறை மாநிலங்களவையில் ஒரு தகவலைத் தெரிவித்தது. அதன்படி, "புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகளை முறைப்படுத்துவதற்கான கொள்கை" (Policy on regulation of refurbished medical devices) குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் (MoHFW) ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குழுவானது புதுப்பிக்கப்பட்ட கருவிகளின் வரம்புகளை வரையறுக்கும் என்றும் அவற்றின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் எஞ்சியிருக்கும் ஆயுட்காலம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கும் என்றும் பயன்படுத்த முடியாத பழைய கருவிகளை கழிவுகளாக அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் என்பன போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 


—  புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகள் (Refurbished medical equipment) என்பது, பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் அமைப்புகளை மீண்டும் அவற்றின் செயல்பாட்டு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுபவை ஆகும். இவற்றில் பெரும்பாலானவை விலையுயர்ந்த மற்றும் அதிக முதலீடு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் ஆகும். இவற்றின் அமைப்பைப் பொறுத்து, இவை பல கோடி ரூபாய் வரை விலை கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


— இதில் அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் ஸ்கேனிங் இயந்திரங்களான CT ஸ்கேனர்கள் (Computed Tomography Scanners), MRI ஸ்கேன் (Magnetic Resonance Imaging) இயந்திரங்கள், PET-CT (Positron Emission Tomography - Computed Tomography) அமைப்புகள், நவீன எண்டோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி கருவிகள் மற்றும் ரோபோ வழிகாட்டுதல் முறைகள் (robotic navigation systems) ஆகியவை அடங்கும்.


— ஒரு புதிய 1.5T MRI இயந்திரத்தின் (காந்தப்புல வலிமையை அளவிட 'டெஸ்லா' (Tesla) என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது) விலை சுமார் ₹4–8 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கும் என்கின்றனர். ஆனால், புதுப்பிக்கப்பட்ட இயந்திரங்கள் பொதுவாக ₹1–3.5 கோடி வரை கிடைக்கும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் (Tier-2 & Tier-3), மாவட்ட மையங்கள் மற்றும் சிறிய நோய் கண்டறியும் நிலையங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இது போன்ற அதிக விலை பெரும் சுமையாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கருவிகள் ஆரம்ப முதலீட்டுச் செலவைக் குறைக்கின்றன, இதன் மூலம் உள்ளூர் பகுதிகளில் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் கிடைப்பதோடு, குறைந்த செலவில் பரவலாக்கப்பட்ட மருத்துவச் சேவையையும் வழங்க முடிகிறது.


— இந்தியாவின் மருத்துவக் கருவிகள் தயாரிப்புத் துறை வளர்ச்சியடைந்து வந்தாலும், அதிநவீன இமேஜிங் (Imaging) மற்றும் சிறப்புத் தொழில்நுட்பங்களுக்காக நாடு இன்னும் இறக்குமதியையே நம்பியுள்ளது. இதற்கு அவற்றின் தொழில்நுட்ப சிக்கல், மேம்பட்ட உணர்கருவிகள் (Detectors), துல்லியமான பாகங்களின் தேவை மற்றும் உலகளவில் வலுவான உற்பத்தி மையங்கள் வெளிநாடுகளில் இருப்பதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


— மருத்துவக் கருவிகள் விதிகள், 2017-ன்கீழ் (Medical Devices Rules, 2017), புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கென இந்தியாவில் தனியான ஒழுங்குமுறை வழிமுறை ஏதுமில்லை என்கின்றனர். 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கருவிகள் படிப்படியாக முறைப்படுத்தப்படத் தொடங்கின. பின்னர் 2020-ஆம் ஆண்டில், அனைத்து சாதனங்களும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ் (Drugs and Cosmetics Act)  'மருந்துகள்' என அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாடு விரிவடைந்த போதிலும், புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கென ஒரு குறிப்பிட்ட வழிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


— தற்போது, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) உள்ள ஒரு நிபுணர் குழு வழங்கும் 'தடை இல்லா சான்றிதழ்' (NOC) மூலம் மட்டுமே இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒன்றிய சுகாதார  மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் (MoHFW) சுகாதார சேவைகள் இயக்குநரகம் தயாரித்துள்ள பட்டியலின் அடிப்படையில், 38 வகையான உயர்தர மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய இந்த நிபுணர் குழு ஒப்புதல் அளிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 


— பயன்படுத்தப்பட்ட மருத்துவ சாதனங்களின் இறக்குமதி முக்கியமாக 'அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்த இயக்கம்) விதிகள், 2016'-ன்கீழ் (Hazardous and Other Wastes (Management and Transboundary Movement) Rules, 2016) நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு முன்பு, தீவிர சிகிச்சைக்குப் பயன்படும் பழைய கருவிகளை இறக்குமதி செய்யத் தடை இருந்தது. ஆனால், டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட உயர்தர மற்றும் அதிக மதிப்புள்ள பழைய மருத்துவ சாதனங்களை கடுமையான நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


— நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து (MoEFCC) பெறப்படும் முன் அனுமதி, பராமரிப்பு மற்றும் தர உறுதி அறிக்கைகளை சமர்ப்பித்தல், அனுமதி ஆவணங்கள், ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (Central Drugs Standard Control Organisation (CDSCO)) பெறப்படும் தொழில்நுட்பத் தகவல்கள், மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடமிருந்து (Directorate General of Foreign Trade (DGFT)) பெறப்படும் இறக்குமதி அனுமதி ஆகியவை அடங்கும். 


— பயன்படுத்தப்பட்ட (Used), புதுப்பிக்கப்பட்ட (Refurbished), சீரமைக்கப்பட்ட (Reconditioned) அல்லது மறுஉற்பத்தி செய்யப்பட்ட (Remanufactured) மருத்துவக் கருவிகளைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுவதற்கான சட்டப்பூர்வ வரையறை இந்தியாவில் இல்லை. இதனால் அவற்றை வகைப்படுத்துவதிலும், உரிமம் பெறுவதிலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் குழப்பம் ஏற்படுகிறது.


— மருத்துவக் கருவிகள் விதிகளின்கீழ் (Medical Devices Rules) தெளிவான ஒழுங்குமுறை வழிமுறை இல்லாததையே இந்த விவாதம் மையமாகக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகள் இருக்க வேண்டுமா என்பது இப்போது கேள்வியல்ல, அவை எவ்வாறு முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. 


— மற்றொரு முக்கியப் பிரச்சினை, தொழில் கொள்கைக்கும் (Industrial Policy) சுகாதார சேவை கிடைப்பதற்கும் இடையிலான சமநிலை ஆகும். இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காவிட்டால் அது உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். அதேவேளையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மேம்பட்ட நோய் கண்டறியும் வசதிகளை விரிவுபடுத்துவதற்குப் புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகள் மிகவும் அவசியமாகிறது.


Original article : What are the advantages of refurbished medical equipment for the accessible healthcare system in India? -Roshni Yadav

Share: