ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிப்ரவரிமாதம் 17-ம் தேதியான இன்று 'பாரத்-விஸ்டார்' (Bharat-VISTAAR) என்ற புதிய செயலியைத் தொடங்கி வைக்கிறார். உழவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பல மொழிகளில் உடனுக்குடன் வழங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு கருவி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தனது ஒன்பதாவது தொடர்ச்சியான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, நிர்மலா சீத்தாராமன் 'பாரத்-விஸ்தார்' (Bharat-VISTAAR) என்ற பன்மொழி செயற்கை நுண்ணறிவு கருவியைத் தொடங்க உள்ளதாகக் கூறினார். இது அரசு ஏற்கனவே வைத்துள்ள AgriStack இணையதளங்களையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (Indian Council of Agricultural Research (ICAR)) சாகுபடி முறைகளையும் ஒன்றிணைத்துச் செயல்படும் என்று கூறப்படுகிறது. உழவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, உழவர்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவுவது, ஒவ்வொரு உழவர்க்கும் ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகிறது.
அடுத்த நிதியாண்டிற்காக (2026–27), பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) திட்டத்திற்கு நிதி அமைச்சர் ₹150 கோடி ஒதுக்கியுள்ளார்.
பாரத்-விஸ்தார் என்றால் என்ன?
பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பன்மொழிக் கருவியாகும். இது இந்திய உழவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியிலேயே மொபைல் போன்கள் அல்லது சாதாரண அழைப்புகள் மூலம் தகவல்களை வழங்குகிறது. பயிர் திட்டமிடல், சாகுபடி முறைகள், பூச்சிக் கட்டுப்பாடு, வானிலை நிலவரம், சந்தை விலைகள், அரசுத் திட்டங்கள், அதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் குறைகளைத் தீர்ப்பது போன்றவற்றுக்கு இது உதவுகிறது. உழவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் டிஜிட்டல் நுழைவாயிலாக இது செயல்படுகிறது.
இது விவசாயத்திற்கான ஒரு டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) திட்டமாகும். இது ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நம்பகமான தகவல்களை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உழவர்களுக்குத் தேவையான தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது.
அது ஏன் தேவைப்பட்டது?
தற்போது, அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன. உழவர்கள் தாங்கள் அந்தத் திட்டங்களுக்குத் தகுதியானவர்களா என்பதைத் தெரிந்துகொள்வதிலும், விண்ணப்பிப்பதிலும், பலன்களைக் கண்காணிப்பதிலும் அல்லது தங்கள் புகார்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண்பதிலும் பெரும்பாலும் சிரமப்படுகிறார்கள். வானிலை, சந்தை நிலவரம், காப்பீடு மற்றும் மண் வளம் குறித்த விவரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, இந்தத் தகவல்களைச் சேகரிக்க உழவர்கள் பல அலுவலகங்களுக்கும் இணையதளங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே, தேவையான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது.
வேளாண்மை அமைச்சக அதிகாரிகளின் தகவல்படி, "பாரத் விஸ்தார்" (Bharat Vistaar) மூலம் உழவர்கள் இனி பல்வேறு அலுவலகங்களையோ, இணையதளங்களையோ, செயலிகளையோ அல்லது இடைத்தரகர்களையோ சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இது உழவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அவர்களின் சொந்த மொழியிலேயே, குறுஞ்செய்தி மற்றும் குரல் வழி உரையாடல் மூலம் வழங்கும் ஒரே இடமாக அமைகிறது.
உழவர்கள் அதை எவ்வாறு அணுகலாம்?
உழவர்கள் 155261 என்ற பிரத்யேக எண்ணிற்கு எந்தவொரு சாதாரண போனிலிருந்தும் அழைத்து, "பாரதி" (Bharati) என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரிடம் பேசுவதன் மூலம் பாரத்-விஸ்தார் சேவையைப் பயன்படுத்தலாம். அவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) இதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது செயலி போலவே செயல்படும் இணையதளத்தையும் பயன்படுத்தலாம். இந்த செயலியின் இணைப்பானது விவசாய அமைச்சகத்தின் இணையதளங்களிலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) போன்ற செயலிகளிலும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அழைப்பது மட்டுமின்றி, உழவர்கள் இந்த உதவியாளருடன் சாட் (Chat) மூலமாகவும் உரையாட முடியும் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?
அதிகாரிகளின் கூற்றுப்படி, உழவர்கள் தொடக்கத்தில் 10 முக்கிய ஒன்றிய அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறலாம். அவை, PM-KISAN: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (உழவர்கள் உதவித்தொகை திட்டம்), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PM Fasal Bima Yojana), மண் வள அட்டை (Soil Health Card), மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் (Modified Interest Subvention Scheme), வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (Sub-Mission on Agricultural Mechanization, சொட்டு நீர் பாசனத் திட்டம் (Per Drop More Crop), PM Krishi Sinchayee Yojana: பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம், PM Annadata Aay Sanrakshan Abhiyan: பிரதம மந்திரி அன்னதாதா வருமான பாதுகாப்புத் திட்டம் (PM-AASHA), வேளாண் உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund, உழவர்களுக்கான கடன் அட்டை (Kisan Credit Card) ஆகியனவாகும்.
உழவர்கள் தங்களின் பயன் நிலையை சரிபார்க்கவும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-KISAN) தொடர்பான புகார்களைப் பதிவு செய்து அவற்றைக் கண்காணிக்கவும் முடியும். மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (ICAR) நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஆலோசனைகளையும் அவர்கள் பெறலாம். உழவர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள், உடனுக்குடனான வானிலை தகவல்கள், மண்டிகால சந்தை விலைகள் மற்றும் வானிலைக்கு ஏற்ற விவசாய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களும் மே மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், உழவர்கள் தங்களின் தகுதியைச் சரிபார்க்கவும், விண்ணப்பிக்கவும், பயன்களைக் கண்காணிக்கவும் மற்றும் புகார்களைத் தெரிவிக்கவும் ஒரே இடத்தில் வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) எந்தெந்த மொழிகளில் செயல்படும்?
பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) அறிமுகம் செய்யப்படும்போது, அதன் ‘டெக்ஸ்ட் சாட்பாட்’ (Text Chatbot) ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் செயல்படும் என்று கூறப்படுகிறது. ‘பாரதி’ (Bharati) என்ற குரல் வழி இயங்கும் செயற்கை நுண்ணறிவு உதவியாளரும் தொடக்கத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மகாராஷ்டிர உழவர்கள் வசுதா (மராத்தி) மூலமாகவும், குஜராத் உழவர்கள் அமுல் AI-ன் சர்லாபென் (குஜராத்தி) மூலமாகவும், பீகார் உழவர்கள் இந்தி மொழியில் உள்ள பீகார் கிருஷி செயலி (Bihar Krishi App) மூலமாகவும் 'பாரத்-விஸ்தார்' சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மூன்று மாதங்களுக்குள், பாரத்-விஸ்தார் சேவை தமிழ், வங்காளம், அஸாமி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கிடைக்கும். அத்துடன் அந்தந்த மாநில அரசுத் திட்டங்களும் இதனுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மாநிலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் படிப்படியாக சேர்க்கப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆங்கிலம், இந்தி மற்றும் 9 மாநில மொழிகள் என மொத்தம் 11 மொழிகளில் இந்தச் சேவை முழுமையாகக் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Original article : Bharat-VISTAAR, offering farmers crop support in their languages -Harikishan Sharma