விநியோகச் சங்கிலி மீள்திறன் (Supply Chain Resilience (SCR)) என்பது தனித்தனியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மட்டும் உருவாவதில்லை. இதற்கு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட அணுகுமுறை மிகவும் அவசியமாகிறது.
இந்தியாவின் உற்பத்தித் துறை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் (Global Supply Chains (GSC)) நெருங்கிய தொடர்புடையதாகும். எரிசக்தி, உரங்கள், மின்னணுவியல் மற்றும் இரசாயனங்கள் போன்ற பல துறைகள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையும் பாகங்களையும் பெரிதும் நம்பியுள்ளன. மேற்கு ஆசியாவில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்கள், விநியோகத் தடைகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் எவ்வளவு விரைவாகப் பாதிக்கும் என்பதைக் காட்டுகின்றன. இது ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறது: உலக நாடுகளுடனான சார்புநிலை பல நன்மைகளைத் தந்தாலும், அது பாதிப்புகளையும் அதிகரிக்கிறது. இந்தியா தொடர்ந்து விநியோகச் சங்கிலித் தடைகளை எதிர்கொண்டு வருவதால், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, நீண்டகாலப் பின்னடைவைத் தாங்கும் திறனை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.
எரிசக்தி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல்
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் எரிசக்தி மிகவும் இன்றியமையாதது ஆகும். இது உற்பத்தி, போக்குவரத்து, வேளாண்மை மற்றும் சேவைத் துறைகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% மற்றும் எரிவாயு தேவையில் 50%-க்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது. இதனால், உலகளாவிய அரசியல் மாற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. எரிபொருள் விலை உயர்வு, உற்பத்திச் செலவுகளை அதிகரிப்பதோடு, தளவாடச் செலவுகளையும் (Logistics Expenses) உயர்த்தி, டீசல் மற்றும் உரங்கள் மூலமாக நுகர்வோர் விலையையும் வேகமாக உயர்த்துகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 10 டாலர்கள் உயர்ந்தால், அது நாட்டின் இறக்குமதிச் செலவை 13–14 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கச் செய்யும், பணவீக்கத்தை 30–40 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தும், மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) வளர்ச்சியை 0.2–0.3 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்கின்றனர். எனவே, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பிற்கு எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிறது.
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரைவுபடுத்துவது அவசியமாகும். 2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் (GW) பெட்ரோலியம் அல்லாத எரிசக்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய பயணம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இருப்பினும், எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புத் துறையில் அதிக முதலீடுகள் செய்வது உறுதியான தற்சார்பு நிலையை அடைவதற்கு அவசியமாகும். இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பியிருக்கும் தொழிற்சாலைகளில் கார்பன் உமிழ்வைக் குறைக்க, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission (NGHM)) ஒரு சிறந்த வழியை வழங்குகிறது.
அதே வேளையில், இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை அதிகரித்துவரும் அதேநேரத்தில், நீண்டகால எரிசக்தி பாதுகாப்பிற்காக உள்நாட்டிலேயே எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும். உத்திமுறை சார்ந்த பெட்ரோலிய சேமிப்பு (Strategic Petroleum Reserves (SPR)) வசதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் வலுவான இருப்புக்களை உருவாக்குவது, குறுகியகால விநியோகத் தடைகளை சமாளிக்க இந்தியாவுக்கு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளது, இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல்
இந்தியா தானியங்கள் மற்றும் கடல் சார் உணவுப் பொருட்கள் போன்ற பல வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளபோதிலும், உணவு மதிப்புச் சங்கிலியின் (Food Value Chain (FVC)) சில முக்கியமான பகுதிகள் இன்னும் இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளன. குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றிற்காக இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. ஏனெனில், இவற்றின் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு தடையுமே நாட்டின் பணவீக்கம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தில் நேரடிப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதைச் சரிசெய்ய, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கொள்முதல், விலை ஆதரவு மற்றும் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பயிர் பல்வகைப்படுத்துதல் ஆகியவை அவசியமாகிறது. தற்போது உள்நாட்டு உற்பத்தி தேவையில் 44% மட்டுமே பூர்த்தி செய்வதால், நடைமுறையில் உள்ள எண்ணெய் வித்துக்கள் திட்டங்களை (National Mission on Edible Oils (NMEO)) விரிவாக்குவது இறக்குமதி இடைவெளியைக் குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவசர காலங்களுக்காகப் பருப்பு மற்றும் உண்ணக்கூடிய எண்ணெய்களின் உத்திமுறை (அவசர கால தேவைகளுக்கான) இருப்புக்களை (Strategic Reserves) அரசாங்கம் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும். உரத் துறையைப் பொறுத்தவரை, விநியோகர்களைப் பல்வகைப்படுத்துதல், பாஸ்பேடிக் (Phosphatic) மற்றும் பொட்டாசிக் (Potassic) உரங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உயிரி உரங்களின் பயன்பாட்டைப் பெரிய அளவில் ஊக்குவித்தல் போன்ற சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
உற்பத்தித் துறையில், குறிப்பாக மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் ஆகியவற்றில் ஏற்படும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) இறக்குமதி மட்டும் சுமார் 19% பங்கைக் கொண்டுள்ளது. இந்த இறக்குமதியில், மூலப்பொருட்கள் 34%, இடைநிலை பொருட்கள் 31%, மற்றும் மூலதனப் பொருட்கள் (Capital Goods) 24% உள்ளன. ஆனால், நுகர்வோர் பொருட்கள் 12% மட்டுமே உள்ளன. இந்தியா உற்பத்தியின் இறுதி நிலையில் வலுவாக இருந்தாலும், அதன் ஆரம்ப மற்றும் இடைநிலைத் தேவைகளான மருந்தாக்க மூலப்பொருட்கள் (Active Pharmaceutical Ingredients (APIs)), மின்னணுவியல் மற்றும் தொழில்முறை இடைநிலை பொருட்கள் ஆகியவற்றிற்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வகைப்படுத்துதலின் அவசியம்
மூலப்பொருட்களைப் பொறுத்தவரை, தாமிரம் (Copper), லித்தியம் (Lithium), கோபால்ட் (Cobalt) மற்றும் பிற அரிய மண் தாதுக்கள் (Rare Earth Minerals (REM)) உலகளவில் ஒரு சில நாடுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இது மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்திகளுக்கு மிக அவசியமானவை என்பதால் இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர். இடைநிலைத் தயாரிப்புகளைப் பொறுத்தவரை, இந்தியா பொதுவான மருந்து ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் இருந்தபோதிலும், மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் (API) சுமார் 65–70% சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதேபோல், குறைமின்கடத்திகள் (Semiconductors), காட்சிக் அலகுகள் (Display units) மற்றும் மின்னணு கூறுகளுக்கு இந்தியா, கிழக்காசிய நாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளது. மேம்பட்ட தொழில்முறை இயந்திரங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் குறைவாக இருப்பது, இந்தியாவின் உற்பத்திப் போட்டித்திறனைக் குறைப்பதோடு மற்ற நாடுகளின் மீதான சார்பையும் அதிகரிக்கிறது. இத்தகைய உள்ளீடுகளை எளிதில் மாற்ற முடியாது என்பதால், இவற்றின் விநியோகத்தில் ஏற்படும் சிறு தடைகூட ஒட்டுமொத்த உற்பத்தியையும் நிறுத்திவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
இடைநிலை உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதே தற்போதைய நோக்கமாக இருக்கவேண்டும். தற்போதைய கொள்கைகள் பெரும்பாலும் பொருட்களின் இறுதி ஒருங்கிணைப்புக்கு மட்டுமே ஆதரவளிக்கின்றன. ஆனால் அடுத்த கட்டமாக மருந்து மூலப்பொருட்கள் (Active Pharmaceutical Ingredients (API)) மற்றும் குறைமின்கடத்திகள் உள்ளிட்ட முழுமையான உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நீண்டகால விநியோக ஒப்பந்தங்கள் மற்றும் ராஜதந்திரரீதியிலான கூட்டணி மூலம் இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், தொழில்துறை செயல்முறைகளை மேம்படுத்துவது இறக்குமதி மீதான சார்பைக் குறைக்க உதவும் என்றும் நேரடி மாற்றும் தொழில்நுட்பங்கள், மாற்றுப் பொருட்கள் மற்றும் திறமையான உற்பத்தி முறைகளைத் தொழில்துறையினர் பின்பற்ற ஊக்குவிப்பதன் மூலம், விநியோகச் சங்கிலியில் உள்ள கட்டமைப்புரீதியான அபாயங்களைப் படிப்படியாகக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
விநியோகச் சங்கிலி மீள்தன்மை என்பது தனித்தனியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் மட்டும் உருவாவதில்லை. இதற்கு அரசாங்கம், தொழில்துறை மற்றும் உலகளாவிய கூட்டமைப்பு நாடுகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்கு அணுகுமுறை அவசியமாகிறது.
அனந்த் கோயங்கா, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஆவார்.
Original Link: How to secure India’s supply chains?.