கண்ணன் கோபிநாத்தின் இந்திய ஆட்சிப் பணி பதவிவிலகல் நிறுத்தம் : விதிகள் என்ன கூறுகின்றன? - ஷியாம்லால் யாதவ்

கோபிநாத் 2019-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சி பணியிலிருந்து விலகினார். ஆனால், அரசாங்கம் அவரது பதவிவிலகலை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு அலுவலர் பணியில் இருக்கும் வரை, அவரால் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைய முடியாது.


காஷ்மீர் மக்களுக்கு "கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை" (denial of freedom of expression) எதிர்த்து, 2019-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (Indian Administrative Services (IAS)) விலகிய 2012-ஆம் ஆண்டுத் தொகுதி அதிகாரியான கண்ணன் கோபிநாத், தனது பதவிவிலகலை ஒன்றிய அரசு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தத் தாமதம் காரணமாக, வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் புதன்கிழமையன்று தெரிவித்தார்.


இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் பணிப்பிரிவைக் கட்டுப்படுத்தும் அமைப்பான 'பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு' (Department of Personnel and Training (DoPT)), கோபிநாத்தின் பதவிவிலகல் குறித்த இறுதிப் பரிந்துரை இன்னும் அனுப்பப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், அவரது பதவிவிலகல் விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில்   உள்ளது தெரியவருகிறது. மேலும், பதவிவிலகலை ஏற்றுக்கொள்வதில் இது போன்ற தாமதத்திற்கு முன்னுதாரணம் (precedent) ஏதும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் பதவிவிலகும்போது என்ன நடக்கும்? அத்தகைய பதவிவிலகல்களை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் பொதுவாக எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்? மேலும், எந்தச் சூழல்களில் அரசாங்கத்தால் பதவிவிலகல்வை நிராகரிக்க முடியும்? இது குறித்து விதிகள் என்ன கூறுகின்றன என்பதை இங்கே  பார்ப்போம்.


இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் தொடர்பான விதிகள் என்ன?


 சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோபிநாதன் ஆகஸ்ட் 2019-ல் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விலகினார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; பாலக்காடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அவர் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.


ஆனால், அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்போடும் தொடர்பு வைத்துக்கொள்ளவோ, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்கவோ அல்லது அத்தகைய செயல்பாடுகளுக்கு உதவவோ கூடாது என்று அரசுப் பணி நடத்தை விதிகள் தடை செய்கின்றன. கோபிநாதனின் பணியில் உள்ள அரசு அலுவலர் என்ற நிலை இன்னும் தெளிவில்லாமல் (limbo) உள்ளது.


2014 நவம்பர் 27 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம், 'அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள்' (The All India Services (Conduct) Rules) உடன் சில உட்பிரிவுகளைச் சேர்த்தது. விதி 3(1): "ஒவ்வொரு அரசு ஊழியரும் அனைத்து நேரங்களிலும் அரசியல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும்; மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் நாட்டின் ஜனநாயகத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்  என்று கூறுகிறது

புதன்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி, தற்போதைய சூழலை "முழுமையான அத்துமீறல்" என்று வர்ணித்து அவர் 'X' தளத்தில் ஒரு பதிவை கோபிநாதன் வெளியிட்டார். பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) பொறுப்பு அமைச்சராகப் பிரதமரே உள்ளார்.


கோபிநாதன், எனது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், நான் பதவி விலகி ஜனநாயகச் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான எனது உரிமையைத் தடுப்பது மிகவும் தவறான செயலாகும். இந்த தவறான செயலை நிறுத்திவிட்டு, மெதுவாக செயல்படும் உங்கள் அரசாங்கத்தை எனது பதவிவிலகலை உடனடியாகச் செயலாக்குமாறு அறிவுறுத்துங்கள் என்று கூறினார்.


இந்திய ஆட்சி பணி  அலுவலர்களுக்கான பதவிவிலகல் செயல்முறை என்ன?


இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS), மற்றும் இந்திய வன சேவை (IFS) ஆகிய மூன்றில், இந்தியா சேவைகளில் உள்ள அதிகாரிகளின் பதவிவிலகல், அகில இந்திய சேவைகள், இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள் (Death-cum-Retirement Benefits) விதிகள், 1958-ன் விதி 5(1) மற்றும் 5(1)(A)-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.


ஒரு பணிப்பிரிவு (cadre) என்பது, ஒரு அலுவலருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களின் தொகுப்பு அல்லது யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர் ஓர் அதிகாரி, தனது பதவிவிலகல் கடிதத்தை அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு பணிப்பிரிவிலிருந்து மத்தியப் பணிக்கு (Central Deputation) அனுப்பப்பட்டுள்ள அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையின் செயலாளரிடம் தங்கள் பதவிவிலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், அந்த அமைச்சகம் அல்லது துறை, அதிகாரியின் பதவிவிலகலைத் தங்கள் கருத்துகள் அல்லது பரிந்துரைகளுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட மாநிலப் பணிப்பிரிவிற்கு அனுப்பிவைக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (Arunachal Pradesh-Goa-Mizoram and Union Territories (AGMUT)) பணிப்பிரிவைச் சேர்ந்த அலுவலர்களின் விவகாரங்கள், ஒன்றிய  உள்துறை அமைச்சகத்தால் கையாளப்படுகின்றன. கோபிநாதன் AGMUT பணிப்பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.  


இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பயன்கள் விதிகளின் விதி 5, “பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது நீக்கப்பட்ட அல்லது பணியிலிருந்து விலகிய ஒருவருக்கு எவ்வித ஓய்வுக்காலப் பலன்களும் வழங்கப்படக்கூடாது என்று கூறுகிறது. ஒரு பதவிவிலகல் தெளிவானதாகவும், எந்த விதமான நிபந்தனையும்  இல்லதாதாகவும் இருக்கவேண்டும் என்று DoPT வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.



அடுத்து என்ன நடக்கும்?


முதலில், அந்த அலுவலருக்கு எதிராக ஏதேனும் நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது விசாரணைகள் (ஊழல் தொடர்பானவை போன்றவை) உள்ளனவா என்பதை மாநில அரசு சரிபார்க்கும்.  அதுபோன்ற  சூழலில், அந்த பதவிவிலகல் விண்ணப்பம் வழக்கமாக நிராகரிக்கப்படும்.


பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கண்காணிப்பு நிலை குறித்த விவரங்களை, தனது பரிந்துரையுடன் சேர்த்து, மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. மேலும், மாநில அரசு அந்த பதவிவிலகலை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கிறது.


இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பதவிவிலகலைப் பரிசீலிக்கும் அதிகாரம் பணியாளர் மற்றும் பயிற்சி ' (Department of Personnel and Training (DoPT) அமைச்சரிடம் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதமரே பணியாளர் மற்றும் பயிற்சி துறை பதவிவிலகல் பற்றி முடிவு செய்வார்.


 இந்தியா காவல் பணி அலுவலர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பதவிவிலகலை பரிசீலிக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சரிடம் உள்ளது. அதேவேளையில், இந்திய வனப் பணி அலுவலர்களின் பதவிவிலகலைப் பரிசீலிக்கும் அதிகாரம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை (Minister for Environment, Forest and Climate Change) அமைச்சரிடம் உள்ளது.





இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் பதவிவிலகலை அரசு நிலுவையில் வைக்க முடியுமா?


ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் சமர்ப்பிக்கும் பதவிவிலகலை அரசு ஏற்றுக்கொள்வதற்கு என்று,  எந்தவிதமான காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், 1988 பிப்ரவரி 15 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, பணிபுரிய விருப்பமில்லாத ஒரு அலுவலரைப் பணியில் தக்கவைத்துக்கொள்வது அரசாங்கத்தின் நலனுக்கு ஏற்றதாக இருக்காது என்று குறிப்பிடுகிறது. எனவே, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர, ஒரு அலுவலரின் பதவிவிலகலை ஏற்றுக்கொள்வதே பொதுவான விதியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.


1988-ல் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, "பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உள்ள ஒரு அரசு ஊழியர் தனது பதவிவிலகலைச் சமர்ப்பிக்கும்போது, ​​அந்த அரசு ஊழியருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கையின் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு, அந்த பதவிவிலகலை ஏற்றுக்கொள்வது பொதுநலனுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைத் தகுதிவாய்ந்த அலுவலர்ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


சில நேர்வுகளில், அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் இருந்த காரணத்தினால், அவர்களின் பதவிவிலகல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நேர்வுகளில், ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (Central Vigilance Commission (CVC)) ஒப்புதல் பெறப்படுகிறது.


சிறப்புப் பயிற்சி, உதவித்தொகைகள் அல்லது கல்விக்கான கல்வி உதவித்தொகைகளைப் பெற்றதன் காரணமாக, குறிகுறிப்பிட்ட ஆண்டுகள்  அரசாங்கத்திற்குப் பணியாற்றுவதாக அந்த அதிகாரி ஏதேனும் பிணைப்பத்திரம் (Bond) எழுதி அளித்துள்ளாரா என்பதையும் அரசாங்கம் பரிசீலிக்கிறது.


எடுத்துக்காட்டாக, அரவிந்த் கெஜ்ரிவால் 2006-ஆம் ஆண்டில் இந்திய வருவாய் பணியிலிருந்து (IRS) விலகினார். எனினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 'இந்தியா ஊழலுக்கு எதிராக' (India Against Corruption) இயக்கத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டபோது, ​​ஒரு திட்டத்திற்காக அனுப்பப்பட்ட சமயத்தில் அரசாங்கத்திற்குப் பணிபுரியும் வகையில் அவர் ஒரு பிணைப்பத்திரம் எழுதி அளித்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய வருவாய் பணி விதிமுறைகளை மீறியதாகக் கூறி வருமானவரித் துறை அவருக்கு ஒரு அறிவிக்கையை அனுப்பியதுடன், ரூ.9 லட்சம் அபராதம் விதித்தது.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) சுற்றறிக்கை, "சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டிருந்து, அந்தப்பதவியை நிரப்புவதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்யக் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், அந்த பதவிவிலகலை உடனடியாக ஏற்க்ககூடாது; மாறாக,  அந்தப்பதவியை நிரப்புவதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்பட்ட பின்னரே அந்த பதவிவிலகலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.


கண்ணன் கோபிநாதன் பதவிவிலகல் செய்தபோது என்ன நடந்தது?


கோபிநாதன் ஆகஸ்ட் 2019-ல் தனது பதவிவிலகலைச் சமர்ப்பித்தார். எனினும், செப்டம்பர் 26 அன்று, தாதர் மற்றும் நாகர் ஹவேலி ஒன்றியப் பிரதேசத்தின் மின் மேம்பாட்டுத் துறையில் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டதாக, அவரது 'நிர்வாகப் பணிப் பதிவேடு' (Executive Record Sheet) தெரிவிக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்தியா ஆட்சிப் பணி அலுவர்களின் 'குடிமைப் பணி பட்டியல்' (Civil List) விவரங்களிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.


கோபிநாதன் பதவி விலகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்துவதற்கான குறிப்பாணையை (Memorandum) ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. பின்னர், ஊடகங்களுடன் அனுமதியின்றித் தொடர்புகொண்டது போன்ற குற்றச்சாட்டுகளுடன், நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அவருக்குக் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணம் (Chargesheet) வழங்கப்பட்டது.


மேலும், ஏப்ரல் 2020-ல், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணிக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தும், அவரது பதவிவிலகல் ஏற்கப்படாத நிலையில், அவர் பணிக்குத் திரும்ப மறுத்த காரணத்தினால், அவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188, தொற்றுநோய் சட்டம் (Epidemic Diseases Act) மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளின்கீழ், அவர் அரசு உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


கடந்த காலத்தில் எத்தனை இந்தியா ஆட்சிப் பணி அலுவர்கள் பதவிவிலகல் செய்துள்ளனர்?


UPSC குடிமைப் பணித் தேர்வுகளில், முதன்மைத் தேர்வுகளுக்குப் பதிலாக 'குடிமைப் பணித் திறன் தேர்வு' (Civil Services Aptitude Test (CSAT)) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான 2010 முதல், மொத்தம் 31 இந்தியா ஆட்சிப் பணி அலுவர்கள் தங்கள் பணியிலிருந்து பதவிவிலகல் செய்துள்ளனர் என்றும், இந்த மாதம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடமிருந்து (DoPT) 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் பெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.


2010 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் (UPA ஆட்சியின் போது) 11 இந்தியா ஆட்சிப் பணி அதிகாரிகள் பதவிவிலகல் செய்த நிலையில், 2015 மற்றும் மே 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் (NDA ஆட்சியின்போது) 20 அதிகாரிகள் பதவிவிலகல் செய்துள்ளனர் என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தரவுகள் காட்டுகின்றன.


2019-ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (Arunachal Pradesh-Goa-Mizoram and Union Territories (AGMUT) பிரிவைச் சேர்ந்த மற்றொரு அலுவலரான காஷிஷ் மிட்டல், டெல்லியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பதவிவிலகல் செய்தார். மிட்டல் அதே 2019-ஆம் ஆண்டிலேயே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


2018-ஆம் ஆண்டில், சத்தீஸ்கர் பிரிவைச் சேர்ந்த ஓ.பி. சௌத்ரி பதவிவிலகல் செய்தார். பின்னர், அவர் பாஜக-வில் இணைந்தார்; தற்போது அந்த மாநிலத்தின் நிதியமைச்சராக உள்ளார்.


இவர்களைத் தவிர, 2011-ஆம் ஆண்டில் ஒடிசா பிரிவிலிருந்து விலகித் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கியவரும், பின்னர் பாஜக-வில் இணைந்தவருமான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போன்றோரும் இப்பட்டியலில் அடங்குவர். CSAT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் அதிகமானோர் தொழில்நுட்பப் பின்னணி கொண்டவர்களாகவே (technocrats) இருந்து வருகின்றனர். இவர்களில் பலர், தனியார் துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்காகவோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காகவோ பதவிவிலகல் செய்திருக்கலாம்.


இந்தியா ஆட்சிப் பணி அலுவர்களால் தங்கள் பதவிவிலகலைத் திரும்பப் பெற முடியுமா?


2019-ஆம் ஆண்டில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதவிவிலகல் செய்த ஒரே இந்தியா ஆட்சிப் பணி அலுவலர் கோபிநாதன் மட்டும் அல்ல. 2010-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான ஷா ஃபைசல் என்பவரும், காஷ்மீரில் "அடிக்கடி நிகழும் படுகொலைகளை" சுட்டிக்காட்டி, அதே ஆண்டின் ஜனவரி மாதத்தில் பதவிவிலகல் செய்திருந்தார்.


எனினும், அரசியலில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஃபைசல் தனது பதவிவிலகலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, 2022-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியா ஆட்சிப்பணிக்குத் திரும்பினார்.


திருத்தப்பட்ட இறப்பு மற்றும் ஓய்வு பெறுதல் (DCRB) தொடர்பான நலன்கள் விதிகளின் விதி 5(1A)(i)-ன் படி, "பொது நலனைக் கருத்தில் கொண்டு", ஒரு அலுவலர் தனது பதவிவிலகலைத் திரும்பப் பெற ஒன்றிய அரசு அனுமதி அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


2011-ஆம் ஆண்டில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின்படி, இத்தகைய சூழல்களில் பதவிவிலகல் நடைமுறைக்கு வரும் தேதிக்கும், மீண்டும் பணியில் சேரும் தேதிக்கும் இடைப்பட்ட கால இடைவெளி அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் ஒரு அதிகாரி பதவிவிலகல் செய்திருந்தால், அவர் தனது பதவிவிலகலைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் திருத்தப்பட்ட DCRB விதிகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஃபைசலின் விஷயத்தில் இந்த இரண்டு  விதிகளும் பொருந்தாது. ஏனெனில், அவரது பதவிவிலகல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.


அவரது விஷயத்தில் பொருந்தும் விதி, ஒரு அலுவலர் தனது பதவிவிலகல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அதனை எழுத்துப்பூர்வமாகத் திரும்பப் பெற்றால், அந்த பதவிவிலகல் தானாகவே திரும்பப் பெறப்பட்டதாகக் கருதப்படும்.


ஃபைசல் மீண்டும் அரசுப் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், கோபிநாதனின் விவகாரம் முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்துள்ளது. தனது பதவிவிலகலை ஏற்றுக்கொள்வதில் அரசு காட்டிய காலதாமதத்தை அவர் "துன்புறுத்தல்" (harassment) என்று கூறியுள்ளார்.


Original Link: Kannan Gopinathan’s stalled resignation from the IAS: What the rules say.

Share: