CMS, COP-15 மற்றும் புலம்பெயரும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு. -குஷ்பூ குமாரி

பிரேசிலில் புலம்பெயரும் வன விலங்கினங்கள் மீதான மாநாட்டின் 15-வது கூட்டம் (15th Meeting of the Conference of the Parties to the Convention on Migratory Species (COP15)) நடைபெற்று வரும் வேளையில், புலம்பெயரும் வன விலங்கினங்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றி ஆராய்வோம். உலகின் புலம்பெயரும் வன விலங்கினங்களின் நிலை குறித்த 2026 இடைக்கால அறிக்கை (2026 Interim Report) கூறுவது என்ன?


பிரேசில் நாட்டின் காம்போ கிராண்டே (Campo Grande) நகரில், புலம்பெயர் வன விலங்கினங்கள் பாதுகாப்பு உடன்படிக்கையின் (Convention on Conservation of Migratory Species of Wild Animals (CMS)) 15-வது மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, மார்ச் மாதம் 29-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "இயற்கையை இணைத்து உயிரை நிலைநாட்டுதல்" (Connecting Nature to sustain life) என்பதாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. புலம்பெயரும் வன விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை (CMS) என்பது 1979-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்கீழ் (United Nations Environment Programme (UNEP)) கையெழுத்திடப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான உலகளாவிய ஒப்பந்தமாகும். நாடுகளின் எல்லைகளைத் தாண்டிப் பயணம் செய்யும் விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இன்றுவரை, 133 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இவை சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம் இந்த புலம்பெயரும் விலங்கினங்களைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன.


2. இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) வரையறையின்படி, ஒரு புலம்பெயரும் உயிரினம் (Migratory Species) என்பது ஒரு வனவிலங்கினத்தின் (அல்லது அதன் ஒரு பிரிவு) முழு விலங்கினங்களின் எண்ணிக்கை அல்லது புவியியல்ரீதியாக பிரிக்கப்பட்ட ஒரு பகுதியைக் குறிக்கும். இதில் கணிசமான எண்ணிக்கையிலான விலங்கினங்கள், வழக்கமாகவும் கணிக்கக்கூடிய வகையிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்டு எல்லைகளைக் கடந்து செல்கின்றன.


3. உறுப்பு நாடுகளின் மாநாடு (Conference of the Parties) என்பது இந்த ஒப்பந்தத்தின் (Convention) மிக முக்கியமான முடிவெடுக்கும் அமைப்பாகும். நிதிநிலைத் திட்டத்தை நிர்ணயிக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான முன்னுரிமைகளை முடிவு செய்யவும் இந்த மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின்போது, ஒப்பந்தத்தின் இணைப்புகளில்  புதிய விலங்கினங்களைச் சேர்ப்பதா அல்லது ஏற்கனவே உள்ளவற்றைப் புதுப்பிப்பதா என்பதை உறுப்பினர்கள் தீர்மானிக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு தரப்பு நாடு, அறிவியல் கூட்டமைப்பு மற்றும் இந்த ஒப்பந்தத்தின்கீழ் உள்ள உடன்படிக்கைகள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளையும் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.


4. புலம்பெயரும் விலங்கினங்கள் பாதுகாப்பு உடன்படிக்கையில் இரண்டு இணைப்புகள் உள்ளன. ஒரு புலம்பெயரும் விலங்கினங்கள் இந்த இரண்டு இணைப்புகளிலும் பட்டியலிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


* இணைப்புப் பட்டியல்-I என்பது அழிந்து வரும் நிலையில் உள்ளதாகக் கருதப்படும் புலம்பெயர்ந்த வன விலங்கினங்களுக்கான பட்டியலாகும்.  புலம்பெயரும் வனவிலங்கு பாதுகாப்பு ஒப்பந்த (CMS) விதிகளின்படி, "அழிந்துவரும் நிலை" என்பது ஒரு இனம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் அதன் எண்ணிக்கை, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலின் அளவுகோல்களின்படி 'வனப்பகுதியில் அழிந்துவிட்டவை', 'மிகவும் அபாயகட்டத்திலுள்ளவை' அல்லது 'அழியும் நிலையிலுள்ளவை' என வகைப்படுத்தப்பட்ட இனம் அல்லது குறிப்பிட்ட பிராந்திய அளவில் உள்ள விலங்கினங்களின் தொகையைக் குறிக்கும். இணைப்புப் பட்டியல் I-ல் இடம்பெறுவது, ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி சர்வதேச அளவில் அந்த விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பெரும் துணையாக அமைகிறது.


* இணைப்புப் பட்டியல்-II என்பது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள புலம்பெயரும் இனங்களுக்கானதாகும். இவற்றைப் பாதுகாப்பதற்கும் மேலாண்மை செய்வதற்கும் சர்வதேச ஒப்பந்தங்கள் அவசியமாகும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின்  (IUCN ) சிவப்புப் பட்டியலில் 'காடுகளில் அழிந்துவிட்டவை', 'மிகவும் அழியும் நிலையிலுள்ளவை', 'அழியும் நிலையிலுள்ளவை', 'பாதிக்கப்படக்கூடியவை', அல்லது 'அச்சுறுத்தலுக்கு அருகிலுள்ளவை' என வகைப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படத் தகுதியுடையவையாக வரையறுக்கப்பட்டுள்ளன.


இந்தியா மற்றும் புலம்பெயர் வன விலங்கினங்கள் பாதுகாப்பு மாநாடு


இந்தியா முதன்முறையாக 2020-ஆம் ஆண்டில் புலம்பெயர் வன விலங்கினங்களின் பாதுகாப்பு மாநாட்டை (CMS COP) நடத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றது. இந்த 13-வது மாநாட்டின் மையக்கருத்து என்னவென்றால், "புலம்பெயர் இனங்கள் இந்த உலகத்தை ஒன்றிணைக்கின்றன, நாம் அனைவரும் சேர்ந்து அவற்றை வரவேற்போம்!" என்பதாகும்.


4. இணைப்புப் பட்டியல் I-ல் ( Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora / CITES) மொத்தம் 188 இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன: இதில் 28 நிலப்பாலூட்டிகள், 23 நீர்வாழ் பாலூட்டிகள், 103 பறவைகள், 8 ஊர்வன மற்றும் 26 மீன் இனங்கள் ஆகும். இந்த வன விலங்கினங்கள் வாழும் நாடுகள், அவற்றை வேட்டையாடுவதையோ அல்லது பிடிப்பதையோ தடை செய்தல், அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல் மற்றும் இடப்பெயர்வு சார்ந்த சிக்கல்களைக் களைதல் ஆகியவற்றின் மூலம் அந்த வன விலங்கினங்களைக் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


5. இந்தியாவில், அழிந்துவரும் புலம்பெயர்ந்த இனங்களுக்கான சர்வதேச உடன்படிக்கையின்படி, கானமயில் (Great Indian Bustard), ஆசிய யானை (Asian Elephant), வங்காளப் புல்வெளிக்கோழி (Bengal Florican), சைபீரியக் கொக்கு (Siberian Crane), ஹாக்ஸ்பில் கடல் ஆமை (Hawksbill Sea Turtle), ஆலிவ் ரிட்லி ஆமை (Olive Ridley turtle) மற்றும் தோணி ஆமை (Leatherback Sea Turtle) ஆகிய வன விலங்கினங்கள் அதன் இணைப்புப் பட்டியல்-1-ல் பட்டியலிடப்பட்டுள்ளன.

புலம்பெயரும் வன விலங்கினங்கள் குறித்த இடைக்கால அறிக்கை


6. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, புலம்பெயர் வன விலங்கினங்கள் பாதுகாப்பு உடன்படிக்கை ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, புலம்பெயரும் வன விலங்கினங்களின் முக்கியமான வாழ்விடங்களையும், அவை பயணிக்கும் பாதைகளையும் கண்டறிந்து பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள புதிய போக்குகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் (Samarkand) நகரில் நடைபெற்ற 14-வது மாநாட்டில் வெளியிடப்பட்ட, புலம்பெயர் இனங்கள் குறித்த முதலாவது விரிவான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையின் தற்போதைய நிலையை இந்த அறிக்கை புதுப்பிக்கிறது.


7. புலம்பெயரும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பாதுகாக்கப்படும் இனங்களில் 49% இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், 24% இனங்கள் தற்போது அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.


8. உலகளாவிய புலம்பெயரும் வன விலங்கினங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 1,189 இனங்களில், 582 இடம்பெயரும் வன விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இதில் பல வகையான பறவைகள், வில்தெபீஸ்ட் (Wildebeest) மற்றும் லாமா (Llama) போன்ற குளம்புள்ள விலங்குகள், நன்னீர் மீன்கள் மற்றும் சுறாக்கள், திருக்கை மீன்கள் (Rays) மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் வன விலங்கினங்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


9. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சமீபத்திய பட்டியலின்படி, ஒப்பந்தத்தின்கீழ் உள்ள 26 உயிரினங்கள் அழியும் அபாயக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இதில் 18 வகையான புலம்பெயர் கடற்கரை பறவைகளும் (Migratory Shorebirds) அடங்கும். இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பல புலம்பெயர் கடற்கரை பறவைகளின் எண்ணிக்கை நீண்டகாலமாகத் தொடர்ந்து குறைந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுறாக்கள் (Sharks) மற்றும் திருக்கை மீன்கள் (Rays) அழியும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. அதேநேரத்தில், தெற்காசியாவில் பிணந்தின்னிக் கழுகுகளின் (Vulture) எண்ணிக்கை மெதுவாக மேம்பட்டு வருவது ஒரு நம்பிக்கையான செய்தியாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


10. இந்த அறிக்கையின்படி, மிக அதிக வீரியம் கொண்ட பறவைக் காய்ச்சல்  (Highly Pathogenic Avian Influenza (H5N1)) எனப்படும் அபாயகரமான வைரஸ், வழக்கத்திற்கு மாறாகப் பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பாலூட்டிகளிடையே பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது பல நாடுகளிலும் கண்டங்களிலும் உள்ள எண்ணற்ற வன விலங்கினங்களின் இறப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


புலம்பெயரும் வனவிலங்கினங்களின் பாதுகாப்பிற்கான உடன்படிக்கை பட்டியலில் உள்ள வன விலங்கினங்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்டுள்ள சிகப்புப் பட்டியலில் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


புலம்பெயரும் வனவிலங்கு இனங்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையின்கீழ் உள்ள வன விலங்கினங்களில், 'பாதிப்பிற்குள்ளாகக்கூடியவை' (Vu) என்ற நிலையிலிருந்து, 'அழிந்து வரும் நிலையில் உள்ளவை' (EN) மற்றும் 'மிகவும் அழியும் நிலையில் உள்ளவை' (CR) என மறுவகைப்படுத்தப்பட்ட வன விலங்கினங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

(அறிவியல் பெயர்)

பொதுவான பெயர்

CMS

இணைப்புப் பட்டியல் 

IUCN-ல் மாற்றம் 

சிவப்புப் பட்டியல் வகை

( எண்ணிக்கை போக்கு)

தற்போதைய IUCN சிவப்புப் பட்டியல் வகைக்கான காரணங்களின் சுருக்கம் மற்றும் முக்கிய அச்சுறுத்தல்கள்

பறவை: (Anser cygnoid)

அன்னப் பறவை 

I/II


VU (↓) → EN (↓)


பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள்; வாழ்விட இழப்பு, இடையூறுகள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் தொடர்ந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள்.

பறவை: (Asarcornis scutulata) 

வெள்ளை இறக்கை வாத்து 

II


EN (↓) → CR (↓)



வாழிட இழப்பு, இடையூறுகள் மற்றும் வேட்டை காரணமாக இந்த இனத்தின் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அநேகமாக 80 சதவீதத்திற்கும் (>80%) மேல் இருக்கலாம்; தற்போது இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், ஆங்காங்கே சிதறியும் காணப்படுகின்றன.

பறவை: (Hirundo atrocaerulea)

நீலத் தகைவிலான்

I/II

VU (↓) → EN (↓)

குறைந்த எண்ணிக்கையிலான,  அருகி வரும் உயிரினங்களின் எண்ணிக்கை, வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பறவை: (Otis tarda)

பெரிய கானமயில்

I/II


VU (↓) → EN (↓)



பெரும்பாலான இனங்கள் வாழும் பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது; இதற்கு வாழிடங்கள் மாற்றப்படுவது, உள்கட்டமைப்பு பாதிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் சட்டவிரோதமாகக் கைப்பற்றுதல் போன்றவை முக்கியக் காரணங்களாகும்.

மீன்: (Anoxypristis cuspidata)

குறுகிய வாள்மீன்

I/II

EN (↓) → CR (↓)

உலகளவில் இந்த இனத்தின் எண்ணிக்கை 80%-க்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. அதீத சுரண்டல்  மற்றும் வாழ்விடச் சீரழிவு  காரணமாக, இவை வாழும் நிலப்பரப்பும் பெருமளவில் சுருங்கிவிட்டது.


ஆதாரம்: உலகின் புலம்பெயர்ந்த வன விலங்கினங்களின் நிலை: இடைக்கால அறிக்கை (2026)


Original Link: CMS, COP15 and Migratory Species Conservation.


Share: