மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதா, 2026 (Central Armed Police Forces (General Administration) Bill, 2026), சேவை விதிகளை வலுப்படுத்துவதோடு, இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளின் பணிமாற்ற நியமன (Deputation) கொள்கையைத் தெளிவுபடுத்துகிறது.
மார்ச் மாதம் 25-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, மத்திய ஆயுதக் காவல் படைகளில் (Central Armed Police Forces (CAPF)) பணிபுரியும் குரூப்-ஏ பொதுப் பணி அதிகாரிகள் (Group A General Duty Officers (GAGDO)) மற்றும் இதர அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை முறைப்படுத்துவதற்காக, ஒன்றிய அரசு மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதா, 2026-ஐ மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி, காவல்துறைத் தலைவர் (Inspector General (IGI) பதவிகளில் 50 சதவீதமும், கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General (ADG)) பதவிகளில் குறைந்தது 67 சதவீதமும், மற்றும் அனைத்து சிறப்புத் தலைமை இயக்குநர் (Special Director General (SDG)) மற்றும் தலைமை இயக்குநர் (Director General - DG) பதவிகளும் இந்தியக் காவல் பணியில் (IPS) இருந்தே பணிமாற்றம் (Deputation) மூலம் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கும் பொருந்தும்.
இதன் அடிப்படையில், துணை ஆய்வாளர் (Deputy Inspector General (DIG)) மற்றும் அதற்குக் கீழுள்ள பதவிகளுக்கான பனிமாற்ற (Deputation) நியமனங்கள் தற்போதைய விதிகளின்படியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பிரிவு 'ஏ' அதிகாரிகள் (GAGDO) பெற்று வரும் நிதிச் சலுகைகளுக்கும் இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கிறது. இந்தச் சட்டம் இந்தியாவின் ஐந்து மத்திய ஆயுதக் காவல் படைகளான (Central Armed Police Forces (CAPF)) மத்திய இருப்புக்காவல் படை (Central Reserve Police Force (CRPF)), எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police (ITBP)) மற்றும் சசஸ்த்ர சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்கின்றனர். மத்திய ஆயுதக் காவல் படைகளில் இந்தியக் காவல்பணி அதிகாரிகளின் நீண்டகாலப் பங்களிப்பை முறைப்படி அங்கீகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்றாலும், மே மாதம் 2025-ஆம் ஆண்டில் சஞ்சய் பிரகாஷ் வழக்கில் (Sanjay Prakash case (May 2025)) உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மாற்றியமைக்கும் முயற்சியாகவே இந்தச் சட்டமசோதா பார்க்கப்படுகிறது.
நீதிமன்றம் முக்கியமாக இரண்டு விவகாரங்களில் தீர்ப்பளித்தது: குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவையில் உள்ள பதவி உயர்வு நடைமுறைகளை முடிப்பது மற்றும் சேவை விதிகளை மறுஆய்வு செய்வது, அத்துடன் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) பணிமாற்ற இடங்களை இரண்டு ஆண்டுகளுக்குள் மூத்த நிர்வாக நிலை (Senior Administrative Grade (SAG)) வரை படிப்படியாகக் குறைப்பது ஆகியவையாகும். எனவே, மத்திய ஆயுதக் காவல் படைகளை (CAPF) ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குரூப் 'ஏ' சேவையாக (Organised Group ‘A’ Services (OGAS)) அங்கீகரிப்பது என்பது, இந்தப் படைகளில் இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளின் பணிமாற்ற நியமனத்தை அனுமதிப்பதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
மாநில அரசுகள் மற்றும் மாநிலக் காவல் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது போன்ற மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) பணியமர்த்தலில் உள்ள பல்வேறு சிக்கல்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் படைகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைச் சீராகப் பராமரிக்க, ஒவ்வொரு மத்திய ஆயுதக் காவல் படையிலும் (CAPF) இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளை நியமிப்பது முக்கியம் என்று நீதிமன்றம் கூறியது. இது அந்தப் படைகளின் சேவை விதிகளின்படி எடுக்கப்பட்ட கொள்கை முடிவைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்தப் படைகளுக்கு யார் தலைமை தாங்க வேண்டும் என்ற விவகாரம் ஒருபோதும் சர்ச்சைக்குள்ளாக்கப்படவில்லை என்றும் மேலும், மனுதாரர்கள் பணியில் சேர்ந்த பிறகு அவர்களின் சேவை நிபந்தனைகள் மோசமடைந்துவிட்டதாக எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருங்கிணைக்கும் இணைப்பு
மாநிலங்களில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட செயல்பாட்டுப் பதவிகளில் கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General (ADG)) அல்லது சிறப்புத் தலைமை இயக்குநர் (Special Director General (SDG)) அந்தஸ்துள்ள அதிகாரிகளே பணியாற்றுகின்றனர். எனவே, மாநிலப் படைகளுடன் சுமுகமான உறவைப் பேண, மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) உயர்மட்டப் பதவிகளில் இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளை நியமிப்பது அவசியமானதாகும். இவர்களின் தேர்வு முறை, பயிற்சி மற்றும் கள அனுபவம் ஆகியவை மாநிலப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதில் ஒரு விரிந்த பார்வையையும் கூடுதல் திறனையும் வழங்குகின்றன. இந்தியக் காவல் பணி அதிகாரிகளைப் காவல் படைகளுக்குள் திணிப்பதாக விமர்சிப்பவர்கள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இந்தியக் காவல் பணி அதிகாரிகள் இருக்க வேண்டும் என்ற சர்தார் படேலின் (Sardar Patel) தொலைநோக்குப் பார்வையைத் தவறவிடுகிறார்கள். பல ஆண்டுகளாக இந்த அதிகாரிகள் தங்களின் அரசியலமைப்புரீதியிலான கடமையைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)), 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளில் சேர்ப்பதற்கான விதிகளில் மாற்றம் செய்துள்ளது; இதன்படி, அவர்கள் மத்திய அரசில் காவல்துறைத் தலைவராக (IGl) பதவி உயர்வு பெறுவதற்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மத்தியப் பணிகளில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியக் காவல் பணி அதிகாரிகளை மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police (SP)) அல்லது துணை காவல்துறைத் தலைவராக (Deputy Inspector General (DIG)) நியமிப்பதன் மூலம், அந்தந்தப் படைப்பிரிவு அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
பதவி உயர்வு அல்லது பணியிடமாற்ற அடிப்படையில் வழங்கப்படும் பணியிடங்களைக் குறைப்பது தொடர்பாக, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறையின் அதிகார வரம்பிற்குள் மட்டுமே வரக்கூடிய ஒரு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரிகளைப் பணி இடமாற்றம் செய்வது ஒரு கொள்கை முடிவு என்பதையும், மத்திய ஆயுதப் காவல் படைகளில் (CAPF) அவர்களின் பங்கு முக்கியமானது என்று ஒன்றிய அரசு கருதுவதையும் நீதிமன்றம் அங்கீகரித்த போதிலும், அந்தப் பணியிடங்களைக் குறைக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது ஒரு தவறான முடிவாகக் கருதப்படுகிறது.
நீதித்துறையின் பங்கு
சட்டத்தை விளக்குவதே நீதிமன்றத்தின் கடமையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. சில பகுதிகளில் உள்ள இடைவெளிகளை நீதிமன்றங்கள் நிரப்பலாமே தவிர, புதிய கூறுகளைச் சேர்ப்பதன் மூலம் கொள்கை உருவாக்கம் தொடர்பான பணிகளில் அவை ஈடுபடக்கூடாது. மற்றொரு விருப்பம் சிறந்தது என்று கருதுவதற்காக மட்டுமே ஒரு மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக நீதிமன்றம் செயல்பட முடியாது. மேலும், அரசாங்கக் கொள்கைகளின் புத்திசாலித்தனம் அல்லது பயன் குறித்து நீதிமன்றங்கள் பொதுவாக ஆய்வு செய்ய முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். ஆனால், அக்கொள்கைகள் சட்டத்தையோ அல்லது இந்திய அரசியலமைப்பையோ மீறினாலோ, அல்லது அவை தன்னிச்சையானவை, பகுத்தறிவற்றவை அல்லது அதிகார துஷ்பிரயோகம் என்று தெரிந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கஜுலா தசரத ராம ராவ் vs ஆந்திரப் பிரதேச மாநிலம் (Gazula Dasaratha Rama Rao vs State of Andhra Pradesh - 1960) வழக்கில், அரசியலமைப்பின்கீழ் உள்ள பணி விதிகள் குடிமக்களுக்கு எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் வழங்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவை, ஒன்றிய அல்லது மாநில அரசுகளின்கீழ் குடிமைப் பணிகளில் நியமிக்கப்பட்டவர்களின் ஆட்சேர்ப்பு, பணி நிலைமைகள் மற்றும் பதவிக்காலம் ஆகியவற்றை மட்டுமே கையாளுகின்றன. அதேபோல், இந்திய முன்னாள் ராணுவத்தினர் இயக்கம் vs இந்திய ஒன்றியம் (Indian Ex-Servicemen Movement vs Union of India) வழக்கில், 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' (One Rank One Pension (OROP)) கொள்கையில் அரசியலமைப்புரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) சேவை நிலைமைகளைத் தொடர்ச்சியான பணியாளர் சேர்க்கை மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் பதவி உயர்வு மறுஆய்வுகள் மூலம் மேம்படுத்த முடியும் என்றும் இப்படைகளில் இந்தியக் காவல் பணி (Indian Police Service - IPS) அதிகாரிகளை பணிமாற்ற முறை மூலம் அமர்த்துவது என்பது நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்ட ஒரு கொள்கை சார்ந்த விஷயமாகவும் கருதப்படுகிறது. இதனை முறையாகச் சட்டப்பூர்வமாகத் தொகுப்பதன் மூலம் வருங்காலத்தில் இது தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் அல்லது தவறான புரிதல்கள் உருவாவதைத் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆர். கே. விஜ், முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.
Original Link: A Bill that secures IPS officers’ role in deputation.