மாற்றுத்திறனாளிகளின் சார்ந்து வாழும் நிலையை எதிர்த்துப் போராடுதல் -அன்ஷு சலுஜா

 நிறுவன ரீதியிலான அர்ப்பணிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு, அதனுடன் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இணைந்தால், அனைவருக்குமான சமமான அணுகல் என்ற இலக்கை அடைவதற்குச் சிறந்த உத்தரவாதத்தை வழங்க முடியும் என்கின்றனர்.


மாற்றுத்திறனாளிகளின் உரிமை ஆர்வலர்களும் அறிஞர்களும் நீண்டகாலமாகவே நேரடி மற்றும் டிஜிட்டல் தளங்களும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஒருவருடைய உடல்திறன் அல்லது நிலைமை எதுவாக இருந்தாலும், இந்த இடங்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். கட்டிடங்கள், சந்தைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் முறையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அதேபோல், இணையதளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கப்படும்போதே, அவை பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் Job Access With Speech (JAWS) மற்றும் NonVisual Desktop Access (NVDA) போன்ற 'திரை வாசிப்பு மென்பொருட்களுக்கு' (Screen Readers) இணக்கமாக வடிவமைக்கப்பட வேண்டும். இந்த அணுகல்தன்மை என்பது வடிவமைப்பின் ஆரம்பக்கட்டத்திலேயே ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


அனைவருக்கும் ஏற்ற இடவசதி வடிவமைப்பு போன்ற கருத்துக்கள் தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளன. இந்த முறையானது, பல்வேறு உடல்திறன் கொண்டவர்களுக்கும் ஏற்ற வகையில் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் விவாதங்கள் மற்றும் பிரச்சாரங்களில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே தற்போதைய முக்கிய நோக்கமாக உள்ளது. இதில் அவர்களுக்குத் தேவையான ஆதரவான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உதவி உபகரணங்களை (Assistive Tools) உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் நலன் சார்ந்தவை என்பதோடு, உடல் குறைபாடுகளால் ஏற்படும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலை மற்றும் தடைகளுக்கு இவை நடைமுறை தீர்வுகளாகவும் முன்வைக்கப்படுகின்றன.


இடைவெளியைக் குறைத்தல்


மேற்கத்திய நாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இதற்காக அவர்கள் தடையற்ற உள்கட்டமைப்புகளையும் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களையும் உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இல்லாமலும், சற்று குறைவாகவும் உள்ளன. குறிப்பாக, விமான நிலையங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் சாய்வுப்பாதைகள் (Ramps), மின்தூக்கிகள் (Elevators) மற்றும் ஊன்றுகோலைக் கொண்டு உணரக்கூடிய தடத்திலான பாதைகள் (Tactile paths) போன்ற வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் தங்களின் நூலக வளங்களையும் இணையதளங்களையும் திரையில் உள்ளவற்றை வாசித்துக் காட்டும் மென்பொருட்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.


கடந்த சில ஆண்டுகளில், தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. உதாரணமாக, ஒரு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிறுத்தப்படும்போது, ரயிலுக்கும் நடைமேடைக்கும் (Platform) இடையே உள்ள இடைவெளியை இணைக்க ஒரு பலகை தானாகவே வெளியே நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், பரபரப்பான சாலைகளில் பேருந்துகளோ அல்லது டிராம்களோ (Trams - ஒரு வகை சாலை ரயில்) நிறுத்தப்படும்போது, ஒரு பட்டனை அழுத்தினால் போதும், சாய்வுத்தளங்கள் (Ramps) மெதுவாகக் கீழே இறங்குகின்றன. ஜெர்மன் நகரங்களில், போக்குவரத்து சிக்னல்கள் விளக்குகளின் நிறமாற்றத்தால் மட்டுமல்லாமல், கடிகாரம் டிக்-டிக் என சத்தம் போடுவது போன்ற ஒலிகள் மூலமும் அறிவிக்கப்படுகின்றன. இது கண்பார்வை அற்றவர்கள் எப்போது நிற்க வேண்டும் அல்லது எப்போது நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர்.


எனது இந்த ஐரோப்பிய நாடுகளுக்கான பயணங்கள் முக்கியமாக கல்வி சார்ந்த நோக்கங்களுக்காக அமைந்தன. இதனால் நான் பல பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் (Archives) மற்றும் அது போன்ற இடங்களுக்குச் சென்றேன். இத்தகைய இடங்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலர்களால் முதன்முதலில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சூழலுக்காகக் குரல் கொடுப்பதால், இந்த நிறுவனங்கள் அணுகல்தன்மை வசதிகளை (Accessibility features) முன்கூட்டியே செயல்படுத்துகின்றன. இருப்பினும், இவ்வளவு வசதிகள் இருந்தபோதிலும், உடல் குறைபாடு உடையவர்கள் தங்களது அன்றாடப் பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்வதை அந்த நிறுவனங்களில் நான் அரிதாகவே பார்த்தேன். இதற்குக் காரணம் என்ன? முறையான உள்கட்டமைப்பும் வளங்களும் இருந்தபோதிலும், அவர்கள் ஏன் பெரும்பாலும் அங்கிருந்து விலகியோ இருந்தார்கள்?


இந்தக் கவனிக்கத்தக்க குறைபாடு என்னைச் சிந்திக்க வைத்தது. நான் ஆழ்ந்து யோசித்தபோது, ஒரு கசப்பான உண்மையை உணர்ந்தேன்: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ள வளர்ந்த நாடுகளிலேயே, அங்கு வழங்கப்படும் வசதிகளுக்கும் உண்மையான தேவைகளுக்கும் இடையே இன்னும் பெரிய இடைவெளி உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், இந்தியா இந்தப் பாதையில் இன்னும் கடக்கவேண்டிய தூரம் மிக அதிகமாகவே உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது மிகவும் அவசியமானது என்றாலும், அவர்களின் அச்சத்தைப் போக்கவோ அல்லது அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கவோ அதுவே போதுமானதாக இருக்காது என்கின்றனர். அவர்களின் அச்சங்கள் உண்மையானவை மற்றும் அவை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். உதாரணமாக, ஒரு பேருந்து அல்லது டிராம் வண்டியில் உள்ள சாய்தளம் (Ramp) கீழே இறங்காவிட்டால் என்னவாகும்? ஒரு போக்குவரத்துச் சிக்னலில் உள்ள ஒலிக்குறியீடு திடீரென வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? அல்லது ஒரு திரைவாசிப்பு மென்பொருளால் ஒரு இணையதளத்தையோ அல்லது கைப்பேசி செயலியையோ வாசிக்க முடியாமல் போனால் என்ன செய்வது? இத்தகைய சூழல்கள் தங்களை யாராலும் காப்பாற்ற முடியாத நிலையில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தை அவர்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. இது அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், உடல்ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


எனவே, தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பது அல்லது மனித உதவியை முழுமையாகத் தவிர்ப்பது என்பது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சரியான வழியாக இருக்காது என்கின்றனர். மனித ஆதரவு என்பது இன்றும் மிக அவசியமான ஒன்றாகவே உள்ளது. இருப்பினும், இத்தகைய உதவிகள் பெரும்பாலும் தெளிவான ஊக்கத்தொகையோ அல்லது முறையான அமைப்புகளோ இல்லாமல், வெறும் கருணை மற்றும் இரக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. உடல்நலத்துடன் இருப்பவர்கள் உதவி செய்வது என்பது, பொதுவாக அவர்களின் தனிப்பட்ட மனசாட்சி மற்றும் நல்லெண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது. இது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடக்கூடியது. இதன் விளைவாக, கருணையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பது எப்போதும் பயனுள்ள ஆதரவாக அமையாது என்றும் சில நேரங்களில், உதவி பெறுபவர்களைச் சுமையாகக் கருதும் நிலையும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற தொடர்ச்சியான அச்சம், அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. இக்கட்டான நேரங்களில் சரியான நேரத்தில் பயனுள்ள உதவி கிடைக்குமா என்பதற்குப் பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு சுயமரியாதையற்ற உணர்வையும் உருவாக்குகிறது. தங்களுக்குத் தேவையான உதவி உரியநேரத்தில் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை, அவர்களின் மனதிற்குப் பெரும் சுமையாக அமைந்துவிடுகிறது.


தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த தீர்வுகள் மனிதர்களின் ஈடுபாடு இல்லாமல் மட்டும் இருந்தால், அவை அணுகல்தன்மை இடைவெளியை முழுமையாக நிரப்பிவிட முடியாது என்கின்றனர். அவை முக்கியமான கருவிகள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மனித உதவியை அவைகளால் முற்றிலும் ஈடு செய்ய முடியாது. முக்கியமாக, இந்த உதவியானது ஒரு தனிநபரின் கருணையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இவை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடக்கூடியவை ஆகும். மாறாக, மாற்றுத்திறனாளிகளுக்கான இத்தகைய உதவிகளை ஒரு தொழில்முறை சார்ந்த, ஊதியத்துடன் கூடிய சேவையாக முறைப்படுத்தலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.


மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நேரம், உழைப்பு மற்றும் வளங்களை முறையாகவும் திட்டமிட்டபடியும் முதலீடு செய்வது - அதாவது நிறுவனங்களின் அர்ப்பணிப்பு, நிதி உதவி, முறையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றுடன் செயல்படுவது - உண்மையான மற்றும் நடைமுறைரீதியான அணுகல்தன்மையை மிகவும் திறம்பட உறுதி செய்யும் என்கின்றனர். இத்தகைய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காகச் செலவிடப்படும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்ட முதலீடாகவே அமையும் என்பதையும் குறிப்பிடுகின்றனர். மற்றொரு முக்கியமான அணுகுமுறை என்னவென்றால், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியைத் தர்மமாகவோ அல்லது கருணையாகவோ கருதாமல், அதை ஒரு கட்டணத்துடன் கூடிய தொழில்முறைச் சேவையாக மாற்றுவது ஆகும். ஒட்டுமொத்தமாக, இத்தகைய அணுகுமுறைகள் உடல் குறைபாடு உடையவர்களுக்குச் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்வதுடன், அன்றாடம் பொது இடங்களிலும் சமூகத்திலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணராத வகையில் பாதுகாக்க உதவும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


அன்ஷு சலுஜா, போபாலில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ளார்.


Original article : Combating disability-borne dependence. -Anshu Saluja

Share: