தெளிவு மற்றும் விகிதாசாரத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜன் விஸ்வாஸ் 2.0 திட்டம், இந்திய வணிகங்களை 'நம்பிக்கை சார்ந்த இணக்க கலாச்சாரத்தை' நோக்கி நகர்த்த உதவும் என்று நம்பப்படுகிறது.
ஜன் விஸ்வாஸ் (நிபந்தனைகள் திருத்தச் சட்டம்), 2026 (Jan Vishwas (Amendment of Provisions) Bill, 2026) நிறைவேற்றப்பட்டது. சட்ட அமலாக்கம் மற்றும் ஆதரவு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சரியான சமநிலையை உருவாக்க இந்திய அரசாங்கம் எடுத்துள்ள தெளிவான மற்றும் தொலைநோக்கு முடிவைக் காட்டுகிறது. மேலும், ஒழுங்குமுறை அமைப்பில் 'நம்பிக்கையை' ஒரு முக்கிய அங்கமாக மாற்ற இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சீர்திருத்தமானது, சிறு தவறுகளுக்குக்கூட கடுமையான குற்றவியல் தண்டனைகளை வழங்குவதிலிருந்து விலகி, சட்ட விதிகளைப் பின்பற்றுவதற்கு மிகவும் நியாயமான, கணிக்கக்கூடிய மற்றும் ஆதரவான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது.
சமீபகாலங்களில், வணிகம் தொடர்பான சிறிய அளவிலான குற்றங்களைச் குற்றவியல் நடவடிக்கையிலிருந்து நீக்குவது இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் தெளிவானது: அதாவது, தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்குதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் அச்சத்தின் காரணமாக விதிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தாமாகவே முன்வந்து விதிகளை மதிக்கும் ஒரு ஒழுங்குமுறை கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகும். தொழில்நுட்ப ரீதியான மற்றும் நடைமுறைச் சார்ந்த சிறிய குற்றங்களுக்குக் கூட அதிகப்படியான குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது, தொழிலதிபர்களிடையே ஒருவித பதற்றத்தை உருவாக்கியதோடு, புதிய தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தத் தவறியது. மேலும், இது மிகவும் கடுமையான குற்றங்களைக் கவனிப்பதிலிருந்து நிர்வாக மற்றும் நீதித்துறை வளங்களைத் திசைதிருப்பியதாகவும் கூறப்படுகிறது.
சீர்திருத்தத்திற்கான ஒரு பயணம்
இந்தச் சீர்திருத்தப் பயணம் ஜன் விஸ்வாஸ் (திருத்தச் சட்ட விதிகள்) சட்டம், 2023 (Jan Vishwas Act, 2023) மூலம் தொடங்கியது. இந்தச் சட்டம் 19 அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 மத்தியச் சட்டங்களில் உள்ள 183 விதிகளை மாற்றியமைத்து, சிறிய அளவிலான குற்றங்களுக்கான குற்றவியல் தண்டனைகளை நீக்கியது. தொழில்நுட்பரீதியான அல்லது நடைமுறை சார்ந்த விதிமீறல்களுக்குக் குற்றவியல் தண்டனைகளை வழங்குவதற்குப் பதிலாக, அபராதம் போன்ற அபராத நடவடிக்கைகள் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது வணிக நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் சட்டவிதிகளைப் பின்பற்றுவதில் இருந்த சுமையைக் குறைத்ததுடன், தொழில் செய்வதையும் எளிதாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜன விஸ்வாஸ் 2.0 (2026 மசோதா) இந்தச் சீர்திருத்தத்தை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இது 23 அமைச்சகங்கள் மற்றும் துறைகளின்கீழ் உள்ள 79 மத்தியச் சட்டங்களில் (Central Acts), சுமார் 784 விதிகளில் மாற்றங்களைச் செய்ய முன்மொழிகிறது. இதில் 717 விதிகளை குற்றவியல் நடவடிக்கையிலிருந்து நீக்குவதும் அடங்கும் என்கின்றனர். மேலும், இந்தத் திருத்தமானது, காலாவதியான மற்றும் தேவையற்ற குற்றப் பிரிவுகளை நீக்கி, இந்தியாவின் ஒழுங்குமுறை அமைப்பின் தெளிவு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் என்கின்றனர்.
அரசாங்கம், தொழில் அமைப்புகள், நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே நடைபெற்ற ஆலோசனைகள், சில சிறிய குற்றங்களுக்கு வழங்கப்பட்ட குற்றவியல் தண்டனைகள் மிகவும் கடுமையானவை என்பதைக் கண்டறிய உதவியது. இந்த உரையாடல்கள், விதிமுறைகள் தங்களின் வீரியத்தை இழக்காமல், அதேசமயம் நடைமுறைக்கு ஏற்றதாகவும் வணிகங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளன. வருங்காலத்திலும், மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றி அமைக்க, இதுபோன்ற தொடர்ச்சியான ஆலோசனைகள் மிகவும் அவசியமானதாகிறது.
ஒருமித்த கலந்துரையாடல் செயல்முறை
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)), கொள்கை முடிவெடுப்பவர்களுடன் தொடர்ந்து ஆதாரபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம், இந்தச் சீர்திருத்தத் திட்டங்களை வடிவமைக்க உதவியதாகக் கூறப்படுகிறது. ஆவணங்களைத் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம், விடுபட்ட ஆவணங்கள் அல்லது எழுத்துப் பிழைகள் போன்ற பல சட்டமீறல்கள் மிகச் சிறியவை அல்லது நடைமுறை சார்ந்தவை மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டிய இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII), இவற்றுக்காகக் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தேவையற்றது என்பதைத் தெளிவுபடுத்தியது. இத்தகைய சிறு தவறுகளுக்குக் குற்றவியல் தண்டனைகளை நீக்குவது, சட்ட அமலாக்கத்தை பலவீனப்படுத்தாது என்றும் மாறாக நிறுவனங்கள் சட்டங்களை முறையாகப் பின்பற்றவே உதவும் என்பதை இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றவியல் நடவடிக்கைகளை நீக்குவதுடன் மட்டுமல்லாமல், இன்னும் கூடுதல் மாற்றங்களையும் பரிந்துரைத்துள்ளது. நீதிமன்றம் விதிக்கும் அபராதங்களுக்குப் பதிலாக, நிர்வாக அதிகாரிகளால் கையாளப்படும் ஒழுங்குமுறை அபராதங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) பரிந்துரைத்தது. இத்தகைய நடைமுறை தெளிவான விதிகள், நேர்மை மற்றும் விரைவான தீர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும், இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஜன் விஸ்வாஸ் 2.0 மசோதா, நீண்டகாலமாக இருந்து வரும் இந்தச் சிக்கல்களுக்குச் சிறந்த முறையில் தீர்வுகாணும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஜன் விஷ்வாஸ் 2.0 என்பது ஒழுங்குமுறை சிந்தனையில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. அதாவது, தண்டனை வழங்குவதைவிட நம்பிக்கை, நியாயம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது. தொழில்நுட்பரீதியான அல்லது நடைமுறைச் சார்ந்த விதிமீறல்கள் பெரும்பாலும் தீய எண்ணத்துடன் செய்யப்படுவதில்லை என்பதையும், அவற்றை உரிமையியல் அல்லது நிர்வாக நடைமுறைகள் மூலமாகவே கையாள்வது சிறந்தது என்பதையும் இது அங்கீகரிக்கிறது. அதேவேளையில், பொதுநலன், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அல்லது தேசிய முன்னுரிமைகள் தொடர்பான கடுமையான குற்றங்களுக்கு மட்டும் கடுமையான சட்ட அமலாக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. ஏற்றுமதி, ஜவுளி, சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளை உள்ளடக்கிய இந்தச் சீர்திருத்தங்கள், முதல்முறை செய்யப்படும் தவறுகள் அல்லது சிறிய விதிமீறல்களுக்கு எச்சரிக்கை மற்றும் குறைந்த அபராதம் போன்ற அடுக்குமுறை அமலாக்கத்தை அறிமுகப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள் ஒழுங்குமுறை தொடர்பான நிச்சயமற்ற தன்மையைக் குறைத்து, குறிப்பாக அதிக சுமைகளை எதிர்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் (Micro, Small, and Medium Enterprises (MSMEs)) நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற நெரிசலைக் குறைப்பது
இந்த சீர்திருத்தங்கள் இந்திய நீதித்துறையின் சுமையைப் பெருமளவு குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பல சிறிய நடைமுறைச் சிக்கல்கள் அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகள் தொடர்பானவை ஆகும். இத்தகைய விவகாரங்களை குற்றவியல் நீதிமன்றங்களிலிருந்து வெளியே கொண்டு வருவதன் மூலம், நீதிமன்ற நெரிசலைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்த முடியும் என்கின்றனர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, புதிய முறையின்கீழ் நிலுவையில் உள்ள பல சிறிய வழக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு முடிக்கப்படலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்ட மசோதா, முதல் முறை விதிகளை மீறுபவர்களுக்கு 'மேம்பாட்டு அறிவிப்புகள்' மற்றும் 'விகிதாசார அபராதங்களை' அறிமுகப்படுத்துவதன் மூலம், நம்பிக்கை சார்ந்த ஒழுங்குமுறை முறையை ஊக்குவிக்கிறது. பெரும்பாலான வணிகங்களும் குடிமக்களும் நேர்மையுடனேயே செயல்படுகிறார்கள் என்பதையும், விதிமுறைகள் தெளிவாகவும், கணிக்கக்கூடியதாகவும், நியாயமாகவும் இருக்கும்போது அவர்கள் விதிகளைச் சிறப்பாகப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் இந்த அணுகுமுறை அங்கீகரிக்கிறது.
ஜன் விசுவாஸ் 2.0 திட்டத்தின் வெற்றி, அது எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். நிர்வாகரீதியான முடிவுகளை எடுப்பதற்கு வலுவான அமைப்புகளை உருவாக்குதல், சட்டங்களை முறையாகவும் சீராகவும் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்தல் மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை மிக அவசியமாகிறது. இவை சரியாக அமையும்பட்சத்தில்தான், தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இந்தச் சீர்திருத்தத்தின் முழுப்பலன்களும் சென்றடையும் என்கின்றனர்.
ஜன விஷ்வாஸ் 2.0 திட்டம் நம்பிக்கை, சமநிலை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டமைப்பை நோக்கி நகர்வதன் மூலம், முதலீட்டாளர்களுக்குத் தெளிவான, வெளிப்படையான மற்றும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இறுதியில், சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுவது என்பது தெளிவு, நேர்மை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக 'நம்பிக்கை' ஆகியவற்றின் மூலம் வழிநடத்தப்படும் போதுதான் சிறப்பாக அமையும் என்கிற ஒரு எளிமையான மற்றும் வலிமையான கருத்தை இந்தச் சீர்திருத்தம் வலியுறுத்துகிறது.
சந்திரஜித் பானர்ஜி, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் பொது இயக்குநர் ஆவார்.
Original article : Jan Vishwas 2.0 is all about trust-based compliance. -Chandrajit Banerjee