இந்தியாவில் உள்ள இமயமலைப் பகுதிகளில் ஓக் மரம் அதிக சமூக மற்றும் சூழலியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஓக் மரம் மண், நீர், மற்றும் பூர்வீகத் தாவரங்கள், விலங்கினங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உள்ளூர் சமூகங்களுக்கு ஓர் உயிர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
ஏப்ரல் 1 அன்று, முசோரியில் நகராட்சி மன்றம் கட்டுமானப் பணிகளுக்காக ஓக் மரங்களை வெட்டுவதற்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
ஒரு பொதுநல மனுவில், மரங்களை வெட்டுவதற்கு நகராட்சிக்கு வனத்துறை தடையில்லாச் சான்றிதழ் (no-objection certificate (NOC)) வழங்கியதா என்பதை உறுதி செய்வதற்காக, முசோரி கோட்ட வன அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை மனுவை மனுதாரர் மேற்கோள் காட்டியிருந்தார். அதற்கு வனத்துறை, தடையில்லாச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை என்று பதிலளித்திருந்தது.
உணவகங்கள் போன்ற அருகிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான காரணங்களுக்காக இந்தக் கட்டுமானம் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மரங்கள் எப்படிப்பட்டவை, அவை இந்தப்பகுதியின் சூழலியலுக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?
சமூக மற்றும் சூழலியல் முக்கியத்துவம்
ஓக் மரம் குவெர்கஸ் (Quercus - கருவாலி/தக்கை மரம்) என்ற இனத்தையும் ஃபேகேசி (Fagaceae) குடும்பத்தையும் சேர்ந்ததாகும். இது இந்திய இமயமலைப் பகுதிகளில் சமூக மற்றும் சுற்றுச்சூழல்ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்தப் பகுதிகளில், கடல் மட்டத்திலிருந்து 800 முதல் 3,000 மீட்டர் உயரத்திற்கு இடையில் 35 வகையான ஓக் மரங்கள் உள்ளன. மேற்கு இமயமலையில் ஐந்து வகையான ஓக் மரங்கள் உள்ளன. இந்த இனங்கள் மண், நீர், பூர்வீகத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாத்தல் போன்ற எண்ணற்ற சூழல் மண்டல சேவைகளை வழங்குவதோடு, உள்ளூர் சமூகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. உத்தரகாண்டில் காணப்படும் ஓக் மரங்கள் பாஞ்ச் ஓக், மோரு ஓக், கர்சு ஓக், ரியாஞ்ச் ஓக் மற்றும் ஃபாலியாத் ஓக் ஆகும். ஓக் காடுகள் நீர்ப்பிடிப்பு பகுதிகளை (watershed protection) பாதுகாக்க உதவுகின்றன. ஓக் காடுகள், நீரூற்றுகள் மீண்டும் நிரம்புவதை ஊக்குவிப்பதன் மூலம் நீர்நிலைப் பாதுகாப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஓக் காடுகள் பலவகையான உயிரினங்களின் உயிர்வாழ்விற்கு தேவையான ஆதரவளிக்கின்றன. மரங்கள் லைக்கன்கள், பிரையோஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள் இவை மூன்றும் பாசி போன்ற தாவரங்கள் ஆகும். ஆர்கிட் மலர்கள் மற்றும் பிற மலர்த் தாவரங்களை தாங்குகின்றன. இதன்மூலம் பல அடுக்குகளைக் கொண்ட சிறிய வாழ்விடங்கள் (microhabitats) உருவாகின்றன.
கார்னெல் பறவையியல் ஆய்வகத்தின் eBird தளத்திலிருந்து பெறப்பட்ட பறவை தரவுகள், ஓக் மரங்கள் நிறைந்த இமயமலை மாவட்டங்கள் முழுவதும் அதிக இன பன்முகத்தன்மை இருப்பதைக் காட்டுகின்றன: டெஹ்ரி கார்வாலில் 440 இனங்கள், ருத்ரபிரயாகில் 391, அல்மோராவில் 491, பாகேஷ்வரில் 311, சமோலியில் 383 மற்றும் சம்பாவத்தில் 366 இனங்கள் காணப்படுகின்றன. பூச்சிகளும் அதே அளவில் காணப்படுகின்றன: ராணிச்சௌரியில் (Tehri Garhwal) 2022-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாஞ்ச் ஓக் காடுகளில் மட்டும் 24 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருந்துள்ளன.
இந்தச் சூழல் மண்டலங்கள் பலவகையான விலங்குகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகின்றன. நீலப்பறவைகள், இமயமலைக் குரங்குகள், சிவப்புநிற பெரிய பறக்கும் அணில்கள், மற்றும் ஆசியக் கருங்கரடிகள் போன்ற பறவைகளும் பாலூட்டிகளும் ஓக் மர இலைகளையும் கொட்டைகளையும் உட்கொள்கின்றன. அவை பற்றாக்குறைக் காலங்களுக்காக அவற்றைச் சேமித்து வைக்கின்றன. இந்தக் காடுகளில் நத்தைகள், சிலந்திகள், மரவட்டைகள், பூச்சிகள் மற்றும் பாக்டீரியா, பூஞ்சைகள், பாசிகள் உள்ளிட்ட எண்ணற்ற நுண்ணுயிரிகளும் நிறைந்துள்ளன. இதனால் ஓக் காடுகள் அனைத்து நிலைகளிலும் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியப் பகுதிகளாகத் திகழ்கின்றன.
ஓக் மரங்களின் சீரழிவு மற்றும் அதன் தாக்கம்
2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, "இமயமலையில் ஓக் காடுகள் அழிவு: பன்முகத்தன்மை, கார்பன் பங்கு மற்றும் மீண்டும் உருவாக்கம் மீதான தாக்கங்கள்" என்ற தலைப்பிலான ஆய்வு, Trees, Forests and People இதழில் வெளியாகியுள்ளது. ஆய்வின்படி, இந்திய இமயமலைப் பகுதிகளில் உள்ள ஓக் காடுகள் ஆண்டுக்கு 0.36 சதுர கிலோமீட்டர் வீதத்தில் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், இந்த சேதம் இயற்கை பேரழிவுகளாலும், மனிதச் செயல்பாடுகளாலும் வளர்ச்சி தொடர்பான பணிகள் ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில், தொடர்ச்சியான பேரழிவு என்பது, மக்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மேய்ச்சல், கிளைகளை வெட்டுதல், மேற்பரப்பு எரிப்பு மற்றும் குப்பைகளை அகற்றுதல் போன்ற வடிவங்களில் வன உயிர்ப்பொருளின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அகற்றுவதாகும். இருப்பினும், இந்த செயல்முறை ஆண்டுதோறும் அனைத்து காலகட்டங்களிலும் தொடர்கிறது. தொடர்ச்சியான வனச் சீர்குலைவில் உள்ள சிக்கல், மனிதர்களின் தாக்குதல் ஒருபோதும் நிற்காததால், தாவரங்களோ அல்லது சூழல் மண்டலமோ போதுமான அளவு மீண்டு வருவதற்குத் தேவையான கால அவகாசம் கிடைப்பதில்லை என்று ஆய்வு குறிப்பிட்டது.
வனங்களின் அடர் விதானம் (மரக்கிளை மூடிய பகுதி) (canopy cover) குறையும்போது, அது ஒரு தாவர இனத்தின் விதை உற்பத்தியையும் நேரடியாகப் பாதிக்கிறது. மேலும், அடிமரத் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சியை பாதிக்கிறது. மேலும், அதிகமாக கிளை வெட்டுதல், மேய்ச்சல் மற்றும் எரிபொருள், தீவன நுகர்வு ஆகியவற்றின் காரணமாகப் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
உத்தரகாண்டில், உள்ளூர் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள காடுகளில் இருந்து ஓக் மரங்களை விறகாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்துகின்றனர். மேற்கூறிய ஆய்வு நடைபெற்ற பகுதியில், ஓக் மர இனங்கள் தொடர்ந்து எரிவதாலும், வெப்பத்தை உற்பத்தி செய்வதாலும் மிகவும் விரும்பப்படும் எரிபொருள் இனங்களாக இருப்பதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 கிலோ (கிலோ/மனிதன்/நாள்) விறகு சேகரிப்பு இருந்தது. கால்நடைத் தீவன சேகரிப்பின் அளவு ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 15 முதல் 22 கிலோ வரை இருந்தது.
2018ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் ஃபாரெஸ்ட்ரி ஸ்டூடென்ட்ஸ் அசோசியேஷனுக்காக அனுராதா தாகூர் எழுதிய கட்டுரையின்படி, தாவரங்கள் மீண்டும் வளர்வதில் தோல்வி ஏற்படுவதற்கான மற்றொரு முக்கிய காரணம் காட்டுத்தீ ஆகும். மேலும், ஓக் காடுகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு தாவரங்களின் தாக்கத்தால் வேகமாக மாறி வருகின்றன. உதாரணமாக, Eupatorium adenophorum, Lantana camara போன்றவை மற்றும் Chir pine போன்ற மரங்கள் ஆகும். இவற்றில் முதல் வகை தாவரங்கள் உள்ளூர் தாவரங்களுடன் போட்டியிட்டு அவற்றை மாற்றி, வனத்தின் அமைப்பை மாற்றுகின்றன மற்றும் உயிரியல் பல்வகைகளை குறைக்கின்றன. அதேசமயம், ஓக் காடுகள் பைன் மரங்களால் மாற்றப்படுவது பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது.
மேலும், சிர் பைன் மரங்கள் மிகவும் எளிதில் எரியும் தன்மை கொண்டவை. இதனால் காட்டுத்தீ நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. ஓக் மரங்கள் தீப்பற்றும்போது, அவற்றின் தண்டுகள் சேதமடைந்து நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு ஆளாகின்றன. இதனால் மரங்கள் பலவீனமடைந்து, காற்றால் விழுதல் மற்றும் உடைதல் போன்ற சூழல்களை எதிர்கொள்கின்றன.
Original article : Uttarakhand HC stays felling of oak trees in Mussoorie: Why these matter for Himalayan ecology. -Aiswarya Raj