H-1B நுழைவுஇசைவு (விசா) முறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஒருவேளை நகரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சமூக மற்றும் ஆராய்ச்சி ஆதரவு அமைப்புகளை மேம்படுத்தினால், அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்கின்றனர். இதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பும் நிபுணர்களை ஈர்க்கவும், அவர்களை அங்கேயே தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
2025-ஆம் ஆண்டில் H-1B நுழைவு இசைவு (விசா) கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, புதிய விண்ணப்பங்களுக்கு ஒருமுறை கட்டணமாக $1,00,000 வசூலிக்கப்பட்டபோது, அது அமெரிக்காவில் உள்ள இளம் இந்தியப் பொறியாளர்களை கவலையடையச் செய்தது மட்டுமல்லாமல், திறமையான தொழிலாளர்கள் அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்கான செலவைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. மேலும், இந்த அதீத கட்டண உயர்வானது, நிறுவனங்களையும் தங்களுக்குத் தேவையான திறமைசாலிகளை எங்கிருந்து பணியமர்த்துவது மற்றும் அவர்களை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்து மீண்டும் யோசிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், இந்தியா தனது உலகளாவிய திறமையாளர்களை 'சுதேசி' சிந்தனையுடன் தாயகத்தில் முதலீடு செய்ய ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் வந்துள்ளன. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் அரசின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ளூர் தனியார் முதலீடு பலவீனமாகவே இருந்ததால் இது சவாலான ஒன்றாக அமைந்தது. சமீபகாலமாக, இந்தியாவிலிருந்து உலகளாவிய திறமைக்கான அணுகல் (Global Access to Talent from India (GATI), மின்னணு புலம்பெயர்வு-2.0 (eMigrate V2.0), வருகை தரும் மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சி ஆசிரியத் திட்டம் (Visiting Advanced Joint Research Faculty Scheme (VAJRA)) மற்றும் இந்தியாவை அறிவோம் திட்டம் (Know India Programme) போன்ற திட்டங்கள் மூலம் வெளிநாட்டுவாழ் இந்தியர்களை மீண்டும் சொந்த நாட்டுடன் இணைக்க அரசு முறையான முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, உலகளவில் நுழைவுஇசைவு (விசா) விதிமுறைகள் நிச்சயமற்றதாக மாறிவரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள வல்லுநர்கள் இந்தியாவுக்குத் திரும்பி இங்கு முதலீடு செய்யவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில அளவிலான அனுபவங்கள்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு விசித்திரமான முரண்பாடு நிலவுகிறது: அவை சிறந்த புத்தாக்கத் தொழில் (Start-Up) நிறுவனங்களுக்கான மையங்களாகத் திகழ்ந்தாலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் குடும்பங்கள் அங்கு வாழ்வது கடினமாக உள்ளது. மகாராஷ்டிரா நாட்டின் மிகப்பெரிய புத்தாக்க தொழில் (Start-Up) நிறுவனங்களுக்கான மண்டலமாகத் திகழ்வதோடு, 2025-ஆம் ஆண்டிற்கான புதிய தொழில்முனைவோர் கொள்கையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வீட்டுவசதி மானியம் இல்லாமை, பள்ளிகளில் இட உத்திரவாதம் மற்றும் வாழ்க்கைத் துணைகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவு குறைவு போன்ற காரணங்களால் குடும்பங்கள் அங்கு குடியேறுவதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது. இது தொழில்துறை செலவுகள் குறைவு என்ற சாதகத்தை மறைத்து, நெரிசலான மற்றும் விலையுயர்ந்த அந்த நகரங்களை வசதிபடைத்தவர்களுக்கான மட்டுமேயான இடமாக மாற்றுகிறது. டெல்லியைப் பொறுத்தவரை, அங்குள்ள அரசு நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் மற்றும் அமைச்சகங்களின் செல்வாக்கு வெளிநாட்டிலிருந்து திரும்புவோரை ஈர்க்கிறது, ஆனால் அதிக வீட்டு வாடகை மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள வலுவான தொடர்புகள் காரணமாக, ஏற்கனவே செல்வாக்கு மிக்கவர்களுக்கே டெல்லி முன்னுரிமை அளிக்கிறது. கர்நாடகா மாநிலம் தனது 'பெங்களூருக்கு அப்பால்' (Beyond Bengaluru) திட்டத்தின் மூலம் மைசூர் மற்றும் மங்களூரு போன்ற நகரங்களில் வளர்ச்சியைப் பரப்ப முயன்றாலும், அங்கு போதிய உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் கல்வி வசதிகள் இல்லாததால் குடும்பங்களுடன் குடியேறுவதற்கு அந்த இடங்கள் இன்னும் தயார் நிலையில் இல்லை என்கின்றனர்.
இந்த இரண்டு ஆய்வு முடிவுகளும் ஒரு பொதுவான கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. முதலாவதாக, மாநில அரசுகள் குடும்பங்களை மீண்டும் குடியேற்றும் கொள்கைகளைவிட, தொழில் காப்பகங்கள் (Incubators), ஆரம்பக்கட்ட நிதியுதவி (Seed funding) மற்றும் உள்கட்டமைப்பு போன்ற நிறுவனரீதியான ஆதரவிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இரண்டாவதாக, அதிக ஊதியம் புலம் பெயர்ந்தவர்களை ஈர்த்தாலும், அவர்கள் நீண்டகாலம் அங்கேயே தங்குவது என்பது சமூகத் தொடர்புகள், வாழ்க்கைத் துணைக்கான வேலைவாய்ப்பு மற்றும் தரமான கல்வி ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இந்தச் சமநிலையின்மை, மாநிலங்கள் நிறுவனங்களை ஈர்க்கப் போட்டியிடுகின்றனவே தவிர, மனிதர்களுக்கான திட்டமிடலைச் செய்வதில்லை என்பதைக் காட்டுகிறது. முறையான இருப்பிடம், கல்வி மற்றும் வாழ்க்கைத் துணைக்கான வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாததே, வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்கள் இந்தியாவை நிரந்தரமான இடமாகக் கருதாமல் ஒரு தற்காலிகத் தங்குமிடமாகப் பார்ப்பதற்குக் காரணமாகிறது.
H-1B விசா கொள்கை மாற்றம்
2024-ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட H-1B நுழைவுஇசைவு (விசா) ஒப்புதல்களில் ஏறக்குறைய 71% இந்தியர்களுக்கு கிடைத்துள்ளதால், இந்தத் திட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது; எனவே, அமெரிக்கக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியா பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கிறது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் (U.S. Citizenship and Immigration Services (USCIS)) தரவுப்படி, 2024-ஆம் நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 3,99,395 H-1B நுழைவுஇசைவு சீட்டுகளில், 71% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த நுழைவுஇசைவு சீட்டுகளைப் பெற்றவர்களில் 46% பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
H-1B நுழைவுஇசைவு (விசா) சீட்டு வைத்திருப்பவர்களின் கல்வித் தகுதி காலப்போக்கில் கணிசமாக மாறியுள்ளது. 2000-ஆம் ஆண்டில் 31%-ஆக இருந்த முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 57%-ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம் இளங்கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 57%-லிருந்து 34%-ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் 2025-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு, அமெரிக்கா முன்மொழிந்துள்ள $1,00,000 பதிவுக் கட்டணத்தில் சில விலக்குகளை அறிவித்துள்ளது, குறிப்பாக அமெரிக்காவிலேயே தங்கிப் படிக்கும் F-1 மாணவர்கள் H-1B நுழைவுஇசைவு சீட்டுக்கு (விசா) மாறும்போது இது குறுகியகால நிம்மதியை அளிக்கிறது, ஆனால் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் புதிய நபர்களை இந்தக் கொள்கை மாற்றம் பாதிக்கிறது. உயர் பதவிகளுக்கான தலைமை நியமன (BDO Executive Search) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிவானி தேசாய் கூறுகையில், ஐவி லீக் (Ivy league) பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் வேலை தேடுவது இந்த ஆண்டு 30% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறார். அதேசமயம், விசா நிச்சயமற்றத் தன்மையால் அமெரிக்காவில் உள்ள மூத்த இந்திய அதிகாரிகளும் தங்களது நீண்டகாலத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres (GCCs)) 1.66 மில்லியன் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், இந்த சூழல் இந்தியாவின் அறிவுசார் வளர்ச்சி வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுத்து, மீண்டும் இந்தியாவிற்கே திரும்புவதற்கு சாதகமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இருப்பினும், திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது இன்னமும் ஒரு சவாலாகவே உள்ளது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) வெறும் 0.64% மட்டுமே என்கின்றனர். இது அமெரிக்கா (3.47%), சீனா (2.41%) மற்றும் இஸ்ரேல் (5.71%) ஆகிய நாடுகளைவிட மிகக் குறைவு ஆகும். இதற்கு முக்கியமாக தனியார் துறையினருக்கான ஊக்கத்தொகை குறைவாக இருப்பதே காரணமாகும். இந்த இடைவெளியானது, பொது நிதியுதவி குறைவாக இருப்பதையும் இந்தியாவின் பெருநிறுவனத் துறையின் கட்டமைப்பையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது.
H-1B நுழைவுஇசைவு (விசா) விவாகரம் தொடர்பான இடையூறுகளைப் பயன்படுத்தி உண்மையான கண்டுபிடிப்பு ஆதாயங்களைப் பெற, இந்தியா தனது தனியார்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், மென்பொருள் தயாரிப்புகள், குறைமின்கடத்திகள் (semiconductors) மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த வேண்டும். இந்திய நகரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து தங்களின் ஆராய்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால், தற்போதைய இந்த நெருக்கடி புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்கின்றனர். இல்லையெனில், அடுத்த தலைமுறை உயர்திறன் கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான வாய்ப்புகளைத் தேடி தொடர்ந்து வெளிநாடுகளுக்கே செல்லும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தீபன்ஷு மோகன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மற்றும் தலைவராகவும் உள்ளார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கௌரவ பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சி உறுப்பினராகவும் இருக்கிறார். கீதாஞ்சலி மல்ஹோத்ரா மற்றும் அதிதி லாசரஸ் ஆகியோர் இக்கட்டுரைக்கு பங்களித்துள்ளனர்.
Original tittle : Attracting talent positioned abroad -Deepanshu Mohan