கோவில் நுழைவு ஆதரவாளர் மற்றும் இந்தி திணிப்புக் கொள்கையின் விமர்சகர்: குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது புதிய சிலையோடு கௌரவிக்கப்பட்டுள்ள சி. ராஜகோபாலாச்சாரியின் வரலாறு. -நிகிதா மோஹ்தா

 "ராஜாஜி என்று அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவராலும் மதிக்கப்பட்டவர். காந்தி இவரைத் தனது 'மனசாட்சியின் பாதுகாவலர்' என்றே அழைத்தார். ஒரு ஆங்கிலேயர் காலத்துச் சிலைக்குப் பதிலாக இவரது சிலையை நிறுவுவது, ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் கலாச்சார தேசியவாதக் கொள்கைக்கு ஏற்றதாக அமைகிறது.


கடந்த திங்கட்கிழமை, பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ராஷ்டிரபதி பவனின் மைய முற்றத்தில் இருந்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் மார்பளவு சிலைக்குப் பதிலாக, ராஜாஜியின் (சி. ராஜகோபாலாச்சாரி) முழு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மாற்றத்தை அறிவித்தபோது, ராஜகோபாலாச்சாரி அவர்கள் அதிகாரத்தை ஒரு பதவியாகப் பார்க்காமல், ஒரு சேவையாகக் கருதியவர்களில் ஒருவர் என்றும் பொது வாழ்க்கையில் அவருடைய ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு மற்றும் சுதந்திரமான சிந்தனை ஆகியவை இன்றும் நமக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளன என்றும் புகழாரம் சூட்டினார்.


விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகால பங்கு


ராஜாஜி அல்லது சி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச்சாரி, டிசம்பர் மாதம் 1878-ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தோரப்பள்ளி கிராமத்தில் ஒரு தமிழ் பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் அவரை 'ராஜன்' என்று அன்புடன் அழைத்தனர். தனது கிராமப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், 1896-ஆம் ஆண்டில் சட்டம் பயில்வதற்காக மெட்ராஸிற்குச் சென்றார்.


அவரது மெட்ராஸ் (சென்னை) வாழ்க்கை அவருக்கு அரசியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியது. 1906-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற அவர், பின்னர் 1907-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சூரத் மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1911-ஆம் ஆண்டில், தனது 32-வது வயதில், சேலம் நகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916-ஆம் ஆண்டில் அன்னி பெசன்ட்டின் தன்னாட்சி இயக்கத்தில் (Home Rule League) இணைந்து சேலத்தில் ஒரு பிரிவை நிறுவினார். பிறகு ஜூன் 1917-ஆம் ஆண்டில், சேலம் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி தனது ‘Rajaji: A Life’ (1997) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


ஜனவரி மாதம் 1919-ஆம் ஆண்டில், சி.ஆர் (ராஜாஜி) சேலம் நகரம் தனது பொது வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லை என்று உணர்ந்ததால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மகாத்மா காந்தி சென்னைக்கு வருகை தந்தபோது, அவரை சி.ஆர் சந்தித்தார்.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் சிஆர் திட்டம் (CR Formula)


மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. ராஜகோபாலாச்சாரி, 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற ரௌலட் சத்தியாக்கிரகத்தை (Rowlatt Satyagraha) ஆதரித்தார். அதற்கு அடுத்த ஆண்டே, தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய அவர், தனது வெற்றிகரமான வழக்கறிஞர் பணியைக் கைவிட்டுவிட்டு முழுமையாக இப்போராட்டத்தில் இறங்கினார். மேலும், தேர்தல்கள், பள்ளிகள், அரசுப் பணிகள் மற்றும் அரசுப் பட்டங்களைப் புறக்கணித்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.


1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், திருச்சியிலிருந்து தஞ்சை கடற்கரையில் உள்ள வேதாரண்யம் வரை நடைபயணமாகச் சென்று உப்பு சத்தியாகிரகத்தின் தென்னிந்தியப் போராட்டத்தை வழிநடத்தினார். பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட அவர், சிறிது காலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால், "நன்னடத்தைக்கான" உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1931-ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட அவர், 1932-ஆம் ஆண்டில் சத்தியாகிரக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


இராஜகோபாலாச்சாரி கருத்து வேறுபாடுகளைக் கண்டு ஒருபோதும் அஞ்சவில்லை. 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது, அவர் காந்தியடிகளுடன் பகிரங்கமாக மாறுபட்டார். "வெறும் காங்கிரஸின் கோஷத்திற்காக மட்டுமே ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துளிக்கூட உண்மையில்லை என்று அவர் கூறினார். மாறாக, இந்தியாவிற்கு விடுதலை கிடைக்க காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இடையே ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்படுவதே "திறவுகோல்" (Golden Key) போன்ற மிகச்சிறந்த வழியாக அமையும் என்று அவர் வாதிட்டார்.


காந்தி ஒற்றுமையை ஒரு உன்னதமான குறிக்கோளாக ஏற்றுக்கொண்டார், ஆனால் ராஜாஜியின் முன்மொழிவு முற்றிலும் இயற்கைக்கு மாறானது என்று அவர் கூறினார்; மேலும், பத்திரிகைகளில் இனி இது குறித்து விவாதங்கள் ஏதும் இருக்காது என்றும் அவர் பின்னர் எழுதினார்.


அடுத்தடுத்த வாரங்களில், சி. ராஜகோபாலாச்சாரி காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்த முன்மொழிவை காந்தியிடம் சமர்ப்பித்தார். இது பின்னநாட்களில் 'ராஜாஜி திட்டம்' (Rajaji formula) என்று அழைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்வதாக காந்தி தெரிவித்தார்.


இந்தத் திட்டத்தின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் பாகிஸ்தான் உருவாக்கம் குறித்த பொதுவாக்கெடுப்பிற்கு ஒப்புக்கொண்டால், அதற்கேற்ப ஒரு தற்காலிக தேசிய அரசாங்கத்தை அமைக்க அகில இந்திய முஸ்லிம் லீக் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆங்கிலேய அரசு அதிகாரத்தை மாற்றிய பிறகு, இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புவியியல்ரீதியாக இணைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவேளை பிரிவினை ஏற்படும் பட்சத்தில், பாதுகாப்பு, வர்த்தகம், தகவல் தொடர்பு மற்றும் இதர முக்கிய விவகாரங்களைப் பாதுகாப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. 


1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மகாத்மா காந்தி தனது பாகிஸ்தான் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக ராஜாஜி முகமது அலி ஜின்னாவிடம் தெரிவித்தார். ஜின்னா அந்த ஆவணத்தைப் பரிசீலித்தபோது, ராஜாஜி ஒரு நேர்மறையான பதிலுக்காகக் காத்திருந்தார், ஆனால் அது கிடைக்கவில்லை. ராஜாஜியின் பாகிஸ்தான் திட்டம் முஸ்லிம் லீக் கோரியதைவிட சிறியதாக இருப்பதையும், அது பொது வாக்கெடுப்பு மற்றும் பிரிவினை ஒப்பந்தத்தைச் சார்ந்திருப்பதையும் ஜின்னா விரைவில் உணர்ந்து கொண்டார். இறுதியில், "உங்களுடைய இந்தத் திட்டம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை" என்று ஜின்னா ராஜாஜியிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.


இந்தி மொழித் திணிப்பு மற்றும் கோவில் நுழைவு ஆகிய விவகாரங்களில் இராசகோபாலாச்சாரியாரின் நிலைப்பாடு


ராஜாஜி இந்தி மொழி தொடர்பான தனது அணுகுமுறையை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்கினார். 1938-ஆம் ஆண்டில் முதலமைச்சராக உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை அறிமுகப்படுத்தியபோது, அது "இலையில் வைக்கப்பட்ட துவையல்" (chutney on a leaf) போன்றது என்று அவர் குறிப்பிட்டார்; அதாவது, மாணவர்கள் அதை சுவைக்கலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம். மார்ச் 1938-ஆம் ஆண்டில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு இந்தியை அவர் கட்டாயமாக்கினாலும், இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறாததற்காக மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படமாட்டார்கள் அல்லது அடுத்த வகுப்பிற்குச் செல்ல தடை விதிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தினார். இவ்வளவு சலுகைகள் இருந்தபோதிலும், இந்தத் திட்டம் சென்னை மாகாணத்தில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது.


பின்னர், குறிப்பாக 1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது, இந்தியை ஒரே ஆட்சிமொழியாக்குவதை அவர் உறுதியாக எதிர்த்தார். வசந்தி சீனிவாசன் தனது (Gandhi’s Conscience Keeper (2009) என்ற புத்தகத்தில், இந்தியை ஒரு ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத மொழி என்றும், அது ஒரு 'ஆக்கிரமிப்பாளரின் மொழி' என்றும் அவர் விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சிமொழியாகத் திறம்படச் செயல்பட்டுவரும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி வரக்கூடாது என்றும் அவர் கருதினார். அவரது எழுத்துக்கள் இந்தி மொழியின்மீது வெறுப்பைக் காட்டவில்லை, மாறாகப் பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மொழியை மக்கள்மீது திணிப்பதையே அவர் எதிர்த்தார் என்று அந்த நூலாசிரியர் விளக்கியுள்ளார்.


சி. ராஜகோபாலாச்சாரி (CR), ஒடுக்கப்பட்ட சாதியினர் கோவிலுக்குள் நுழைவதை தீவிரமாக ஆதரித்தார்; குறிப்பாக ஆகஸ்ட் 1938-ஆம் ஆண்டில் சமூகப் பாகுபாடுகளை நீக்குவதற்காக எம். சி. ராஜா ஒரு மசோதாவைக் கொண்டு வந்தபோது, மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி அதனை முழுமையாக ஆதரித்தார். இந்தச் சட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு, கிணறுகளைப் பயன்படுத்துதல், பொது வசதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேருதல் ஆகியவற்றில் பாகுபாடு காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.


கோவில்களுக்குள் ஒடுக்கப்பட்ட சாதியினர் நுழைவதற்கு பெரும்பாலான வழிபாட்டாளர்கள் சம்மதித்தால், அதற்கு ஆதரவளிப்பதாக ராஜாஜி, எம்.சி. ராஜாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும், பின்னர் அவர் இந்தத் திட்டத்தை மலபார் மாவட்டத்திற்கு மட்டுமே என்று தெரிவித்தார். இந்தித் திணிப்பு விவகாரத்தில் ஏற்கனவே விமர்சனங்களைச் சந்தித்து வந்த ராஜாஜி, பழமைவாதக் குழுக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்த எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று ராஜ்மோகன் காந்தி குறிப்பிடுகிறார். இதனால் ஏமாற்றமடைந்த எம்.சி. ராஜா, தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறினாலும், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே செப்டம்பர் 1938-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மலபார் கோவில் நுழைவு  மசோதாவைத் தொடர்ந்து ஆதரித்தார்.


மதுரையில் ஏற்பட்ட ஒரு முக்கிய வளர்ச்சி சி.ராஜகோபாலாச்சாரியாரை  மேலும் ஒரு படி முன்னோக்கி நகர்த்தியது. புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பெரும்பாலான அறங்காவலர்களும் அர்ச்சகர்களும் ஒடுக்கப்பட்ட சாதியினரை உள்ளே அனுமதிக்க விரும்பினாலும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சினர். ஆனால், அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் எட்டு நாட்களுக்குள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவதாக ராஜகோபாலாச்சாரியார் வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஜூலை மாதம் 8, 1939-ஆம் தேதி, அவரது நண்பர் வைத்தியநாத ஐயர் ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார், அதிகாரிகளும் அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தனர்.


இந்தச் செய்தியை மெட்ராஸில் கேள்விப்பட்ட ராஜாஜி மகிழ்ச்சியடைந்தார் என்றும், அன்றிரவு அவர் உறங்கவே இல்லை என்றும் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மற்றவர்கள் இதற்கு எதிர்மறையாகவே எதிர்வினை ஆற்றினர். குறிப்பாக, கோயிலின் நிர்வாக அதிகாரி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டதோடு, சிலர் கோயில் புனிதப்படுத்தும் சடங்கைச் செய்ய வேண்டும் என்றும் கோரினர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக 'கோவில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டு மசோதா (1939)' (Temple Entry Authorisation and Indemnity Bill (1939)) வரைவு செய்யப்பட்டது, மேலும் அரசின் ஒப்புதலுடன் கோயில்களைத் திறந்த அல்லது திறக்கவிருக்கும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.


அப்போதே தஞ்சாவூரில் உள்ள அனைத்து 90 கோவில்களும் திறக்கப்பட்டுவிட்டன, குற்றாலம் கோவிலும் தனது கதவுகளைத் திறந்திருந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ஒரு பண்டிதர், சாஸ்திரங்கள் கோவில் நுழைவை அனுமதிக்கவில்லை என்று வாதிட்டபோது, அதற்கு ராஜாஜி, சாஸ்திரங்கள் ஒரு எல்லையற்ற கடல் போன்றவை என்றும் அதிலிருந்து முத்துக்களையும் பவளங்களையும் எடுக்க முடியும், அதேசமயம் சேற்றையும் சுறாக்களையும் கூட எடுக்க முடியும் என்று அதற்கு பதிலடி கொடுத்தார்.


ராஜாஜியின் சுதந்திராக் கட்சி


ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் 1950-ஆம் ஆண்டு முதல் 1951-ஆம் ஆண்டு வரை ராஜாஜி உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ஆனால், 1950-களின் நடுப்பகுதியில், காங்கிரஸ் கட்சி அதிகப்படியான அரசு கட்டுப்பாடு மற்றும் அதிகாரக் குவிப்புக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அவர் கருதினார்; இதனால் அக்கட்சியின் ஆதிக்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடுமோ என்று அவர் கவலைப்படத் தொடங்கினார்.


இராஜஜியின் பார்வையில், காங்கிரஸின் அரசு ஆதிக்கப் போக்கை  சரிசெய்யக்கூடிய ஒரு "தடை" போன்று செயல்படும் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். டெல்லியில் ஆளும் கட்சிக்கு உண்மையான ஜனநாயக சமநிலையை ஒரு பழமைவாதக் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என்று அவர் வாதிட்டார். இதன் விளைவாக, ஆகஸ்ட் 1959-ஆம் ஆண்டில் சுதந்திரா கட்சி (Freedom Party) தொடங்கப்பட்டது, இருப்பினும் ராஜாஜி இதனை ஒரு பழமைவாதக் கட்சி என்று அழைப்பதைவிட 'அரசியலமைப்பு சார்ந்த கட்சி' (constitutional party) என்று அழைக்கவே விரும்பினார்.


இந்தக் கட்சி, சுதந்திரத் தொழில்முயற்சிகளுக்கான மன்றம் (1956) மற்றும் அகில இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பு (1958) ஆகியவற்றிலிருந்து உருவானது. இது தடையற்ற பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தபோதிலும், 19-ஆம் நூற்றாண்டின் கட்டுப்பாடற்ற முதலாளித்துவ முறையை (Laissez-faire) நிராகரித்தது. தான் திட்டமிடுதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், சோவியத் பாணியிலான கட்டாயப்படுத்தப்பட்ட திட்டமிடலை மட்டுமே எதிர்ப்பதாகவும் கூறிய ராஜாஜி, அரசுடைமைக்கு பதிலாக ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை ஆதரிப்பதாக விளக்கினார். இக்கட்சி நவீன தாராளமயக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், நேரு உள்ளிட்ட விமர்சகர்கள் இதனை பிரபுக்கள், கோட்டைகள் மற்றும் ஜமீன்தார்களின் மத்திய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் கட்சி என்று விமர்சித்தனர்.


ராஜாஜியின் நீடித்த முக்கியத்துவம்


பாரதிய ஜனதா கட்சி இந்திய நகரங்களில் உள்ள பல ஆங்கிலேயர் ஆட்சி கால அடையாளங்களை விமர்சிப்பதோடு அவற்றின் பெயர்களையும் மாற்றி வருகிறது. அந்த வகையில், அதன் கலாச்சார தேசியவாதக் கொள்கைக்கு ஏற்ப, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த காலனித்துவ காலச் சிலையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக சி. ராஜகோபாலாச்சாரியின் சிலையை நிறுவுவது அமைந்துள்ளது.


பல வழிகளில், ராஜாஜியின் சாதனைகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. 1935-ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்கீழ் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு அவர் சென்னை மாகாணத்தின் பிரதமரானார். பின்னர் 1948-ஆம் ஆண்டில் மவுண்ட்பேட்டன் பிரபுவைத் தொடர்ந்து கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற அவர், இந்தியா குடியரசாவதற்கு முன்பு அந்த உயரிய பதவியை வகித்த ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1952-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய ராஜகோபாலாச்சாரி, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை எளிய முறையில் மறுவடிவம் செய்து தந்ததற்காகவும் இன்றும் போற்றப்படுகிறார்.


நேருவின் சோசலிசக் கொள்கைகளை எதிர்த்தது உட்பட, இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தத்தோடு ஒத்துப்போகக்கூடிய ஒரு பழமைவாத அல்லது நிதானமான அரசியல் தொலைநோக்குப் பார்வையை ராஜாஜி கொண்டிருந்தார் என்கின்றனர். 


மகாத்மா காந்தியால் தனது "மனசாட்சியின் காவலர்" என்று போற்றப்பட்டவரும், ஜவஹர்லால் நேருவின் மதிப்பிற்குரியவருமான ராஜாஜி, 1954-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்றார். பின்னர் 1972-ஆம் ஆண்டில் அவருக்கு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அரசியலில் கொள்கை பிடிப்புடன் கூடிய நெகிழ்வுத்தன்மை சாத்தியமே என்பதற்கு ராஜாஜியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார்.                     

Original tittle :  Proponent of temple entry, critic of Hindi policy: Story of C. Rajagopalachari, with new statue in Rashtrapati Bhavan -Nikita Mohta

Share: