இந்தியாவின் வறுமை மற்றும் வளமை சுழற்சியை ஆய்வு செய்தல். -நிதி கைக்கர், வாணி எஸ். குல்கர்னி, ராகவ் கைஹா

 2014-25 காலப்பகுதியில் வருமான நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வானது, மக்கள் கணிசமான அளவில் உயர் நிலைக்கு முன்னேறியுள்ளதையும் அதே சமயம் சரிவுகளையும் சந்தித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இத்தகைய அதிரடி மாற்றங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். 


சார்லஸ் டிக்கன்ஸ் தனது ‘A Tale of Two Cities’ எனும் நாவலில், "அது ஒரு பொற்காலம்; அதே சமயம் அது ஒரு துயரகாலம்," என்று எழுதியுள்ளார். இந்த வரிகள் கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன. மக்கள்தொகையின் பல்வேறு பிரிவினரிடையே நிலவும் வருமான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்  (Income mobility) இங்கு ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக 2014-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வருமான நிலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. வறுமைக்குள் தள்ளப்படுபவர்கள் அவமானம், பசி, நோய் மற்றும் அதிகப்படியான குழந்தை இறப்பு விகிதங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு நேர்மாறாக, வருமானத்தில் முன்னேற்றம் அடைந்த செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை ஆடம்பர வாழ்க்கை முறை, வீட்டு மனை முதலீடுகள், புதிய வணிக முயற்சிகள் மற்றும் அதிக ஆபத்துள்ள சூதாட்டங்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். எனவே, வறுமை மற்றும் செல்வத்திற்குள் ஏற்படும் இந்த மாற்றங்களைப் படிப்பது அவசியமானது. வறுமை மற்றும் சமத்துவமின்மை அளவீடுகளால் மட்டும் கண்டறிய முடியாத வருமானப் பகிர்வு மாற்றங்களை இந்த இடப்பெயர்வு மாற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. அதற்குப் பதிலாக, 2014-25-ஆம் ஆண்டு காலகட்டத்தின் வருமான இடப்பெயர்வை ஆய்வு செய்வது, வருமானப் பகிர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆழமான புரிதலை வழங்குகிறது. 



குடும்பங்களின் வாழ்வாதார நிலை


குடும்பங்கள் ஒவ்வோர் ஆண்டும் அவர்களின் 2014-ஆம் ஆண்டின் தனிநபர் வருமான வரிசையின் அடிப்படையில் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: மேல் நிலையில் உள்ள 10%, அதற்கு அடுத்ததாக உள்ள 40%, மற்றும் கீழ் நிலையில் உள்ள 50%. வருமான நகர்வு (Income mobility) என்பது, ஒரு குடும்பம் 2014-ஆம் ஆண்டில் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இந்த குழுக்களுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. அதாவது ஒரு குடும்பம் கீழ் நிலைக்குச் செல்வது, அதே நிலையில் நீடிப்பது அல்லது உயர்ந்த நிலைக்கு முன்னேறுவது ஆகியவற்றை இது குறிக்கிறது.


தேர்தல்கள் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக, 2014 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம், பொதுத்தேர்தல் ஆண்டுகளை மையமாகக் கொண்டு 2014–19 மற்றும் 2019–24 என இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) நுகர்வோர் குடும்பக் கணக்கெடுப்பிலிருந்து, பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட தனிநபர் வருமானத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்ட குடும்பங்களைக் கொண்டு ஒரு சீரான ஆய்வுத் தொகுப்பு உருவாக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தேசிய அளவில், பொருளாதார நிலையில் பின்னோக்கிச் செல்லும் குடும்பங்களின் விகிதம் 2015-ஆம் ஆண்டில் 14%-ஆக இருந்தது, 2025-ஆம் ஆண்டில் 26.8%-ஆக உயர்ந்து ஏறத்தாழ இரண்டு மடங்காகியுள்ளது. அதே நேரத்தில், ஒரே வருமானப் பிரிவில் நீடிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 70%-க்கும் மேலிருந்து பாதியாகக் குறைந்துள்ளது. முன்னேற்றமடையும் குடும்பங்களின் விகிதம் 14.1%-லிருந்து 23.5%-ஆக உயர்ந்தாலும், இந்த வளர்ச்சி மிகவும் நிதானமானது மற்றும் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே உள்ளது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், 2025-ஆம் ஆண்டிற்குள் நான்கில் ஒரு குடும்பம் 2014-ஆம் ஆண்டைவிட மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், அதிகரித்துவரும் பாதிப்புகளையும் சமமற்ற முன்னேற்றத்தையுமே வெளிப்படுத்துகின்றன.


குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் இந்த நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளன. 2025-ஆம் ஆண்டிற்குள், கிட்டத்தட்ட 29% கிராமப்புறக் குடும்பங்கள் 2014-ஆம் ஆண்டைவிட மோசமான நிலையில் உள்ளன. மேலும், பாதிக்கும் குறைவான குடும்பங்களே தங்களின் பழைய வருமானக் குழுவில் நீடிக்கின்றன. தொடக்க ஆண்டுகளில் சில குடும்பங்கள் பொருளாதாரரீதியாக முன்னேறினாலும், கீழ்நோக்கிய வீழ்ச்சி மிகவும் வலுவாக உள்ளது. இந்த மிகப்பெரிய சரிவு 2014–19 ஆகிய காலகட்டத்தில் நிகழ்ந்தாலும், அதற்குப் பிறகும் அந்தப் பாதிப்புகள் மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது.


நகர்ப்புறங்களில் நிலைமை சற்றே சிறப்பாக இருந்தாலும், ஒட்டுமொத்த சூழல் கவலைக்குரியதாகவே உள்ளது. கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் வேகமாகவும், அதே சமயம் பொருளாதார வீழ்ச்சி மெதுவாகவும் நிகழ்கிறது. இருப்பினும், நகரங்களிலும் மக்கள் தங்களின் தற்போதைய நிலையை இழந்து கீழ்நிலைக்குச் செல்வது அதிகரித்தே வருகிறது.


இந்த ஒப்பீடானது, பொருளாதாரரீதியாக இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே குவிந்துள்ளதைக் காட்டுகிறது; அதேசமயம் கிராமப்புறக் குடும்பங்கள் பொருளாதார நிலையற்றத் தன்மையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சமமான பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் கிடைப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதையே ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது நாட்டில் சமத்துவமின்மை படிப்படியாகக் குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு நேர்மாறாக அமைந்துள்ளது.


சாதி முறைகள்


சாதிரீதியிலான போக்குகள் வெளிப்படையாகவும் அதேசமயம் கவலையளிப்பதாகவும் உள்ளன. 2014-ஆம் ஆண்டிலிருந்து அனைத்து சமூகப் பிரிவினரிடையே வாழ்க்கைத்தரம் கீழ்நோக்கிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBC)) மற்றும் பட்டியலின (Scheduled Caste (SC)) குடும்பங்களிடையே இது மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டிற்குள், இந்த ஒவ்வொரு பிரிவிலும் சுமார் கால் பகுதி அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் 2014-ஆம் ஆண்டில் இருந்ததைவிட மோசமான நிலையில் உள்ளன. பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடைவது ஓரளவு மேம்பட்டிருந்தாலும், பட்டியலின சமூகத்தினரைப் பொறுத்தவரை இந்த முன்னேற்றம் இக்காலம் முழுவதும் மிகவும் குறைவாகவும் சீரற்றதாகவுமே இருந்து வருகிறது.


பட்டியலின (SC) குடும்பங்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனை என்பது ஏதோ திடீர் வீழ்ச்சி பற்றியது அல்ல என்றும் மாறாக, அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதையே காட்டுகிறது. அவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் கீழ்நோக்கிச் சென்ற மிகப்பெரிய மாற்றம் 2014–19 ஆகிய காலகட்டத்தில் நிகழ்ந்தது, அதே சமயம் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் மேல்நோக்கி முன்னேறும் வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது, நாட்டில் சமத்துவமின்மை குறைந்து வருவதாகவும், வாய்ப்புகள் பெருகி வருவதாகவும் ஆளும் கட்சியும் பிரதமரும் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் வாதங்களுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.


அதே நேரத்தில், சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சி தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது; குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் சில உயர் சாதியினரிடையே செல்வாக்கை அதிகரித்து, பாரம்பரிய சாதி அதிகாரக் கட்டமைப்புகளை மாற்றியமைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வு இந்தியாவின் நீண்டகால சாதிரீதியான பின்னடைவைப் பிரதிபலிக்கிறது. இதில் வேலைவாய்ப்புப் பிரிவினை, சொத்துக்கள் மற்றும் கல்வியில் சமமற்ற வாய்ப்புகள், மற்றும் ஆழமாக வேரூன்றிய சமூகப் பாகுபாடு போன்றவை இன்றும் மக்களின் பொருளாதார நிலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. 


பட்டியலினப் பழங்குடியினர் (Scheduled Tribes) இடையில் மற்ற பிரிவினரைவிட பொருளாதாரரீதியான வீழ்ச்சி குறைவாக இருப்பதோடு, சில குறிப்பிட்ட காலங்களில் அவர்களின் முன்னேற்றம் வலுவாகவும் உள்ளது. இதற்கு அரசின் நலத்திட்டங்களும் பிராந்திய வளர்ச்சியும் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால், வருமான உயர்வு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் சாதி என்பது இன்னும் ஒரு பெரிய தடையாகவே நீடிக்கிறது என்பதே ஆகும். மேலும் அனைவருக்கும் சமமான பொருளாதார முன்னேற்றம் என்ற இலக்கு இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்பதே கசப்பான உண்மை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 


2014-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், அனைத்து மதப் பிரிவினரிடையேயும் சமூக-பொருளாதார நிலையில் கீழ்நோக்கிய வீழ்ச்சி அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்து மற்றும் முஸ்லிம் குடும்பங்களிடையே காலப்போக்கில் இந்த வீழ்ச்சி மிகத்தீவிரமாக உள்ளது. சீக்கிய மற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், பல ஆண்டுகளில் அவர்களின் கீழ்நோக்கிய வீழ்ச்சியைவிட மேல்நோக்கிய உயர்வு அதிகமாகவே இருந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்து மற்றும் முஸ்லிம் குடும்பங்களின் வளர்ச்சி மெதுவாகவும், 2025-ஆம் ஆண்டிற்குள் ஒரு சீரற்ற நிலையையுமே காட்டியுள்ளது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே தேர்தல் காலங்களில் கீழ்நோக்கிய வீழ்ச்சி பெருமளவில் அதிகரிப்பதையும், முன்னேற்றம் மிகக் குறைவாக இருப்பதையும் காண முடிகிறது. குறிப்பாக, முஸ்லிம்களின் முன்னேற்றமானது இந்துக்களைவிட பலவீனமாகவே உள்ளது. பாகுபாடு போன்ற காரணிகள் முஸ்லிம்களின் கீழ்நோக்கிய வீழ்ச்சியைவிட அவர்களின் மேல்நோக்கிய உயர்வை அதிகம் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் ஆரம்ப ஆண்டுகளில் வலுவான முன்னேற்றத்தைக் காட்டினாலும், கணக்கீட்டு ஆண்டுகளின் இரண்டாம் பாதியில் அந்த வேகம் சற்று குறைந்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. 


ஆழமாக வேரூன்றிய சமத்துவமின்மை


சமூகத்தில் மக்கள் பொருளாதாரரீதியாகக் கீழ்நிலைக்குச் செல்வது அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஒரு மாவட்ட அளவில் நிலவும் வருமான சமமின்மை (income inequality), அங்கிருக்கும் குடும்பங்கள் பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் அடைவதற்குப் பதிலாகக் கீழ்நோக்கிய வீழ்ச்சி நிலை ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பது விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகிறது. எளிமையாகச் சொன்னால், சமமற்ற வருமானப் பகிர்வு கொண்ட பகுதிகளில் வாழும் குடும்பங்கள், முன்னேற்றமடைவதைவிடப் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது ஒருவரின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் பதிலாக, சமூகத்தில் உள்ள பொருளாதாரப் பிரிவினைகளை இன்னும் ஆழமாக்குவதாகவே தோன்றுகிறது. இக்கண்டுபிடிப்புகள் தற்போதைய சமூகப் பாகுபாடுகளையும் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, வரலாற்றுரீதியாகப் பின்தங்கிய சாதிப் பிரிவினர் மற்றும் முஸ்லிம் குடும்பங்களிடையே சமூக-பொருளாதார முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு நேர்மாறாக, கல்வி அறிவு, நகர்ப்புறங்களில் வசிப்பது மற்றும் பெரிய குடும்பங்களாக இருப்பது போன்றவை ஒருவரின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சமூகத்தில் வேரூன்றிப்போயுள்ள இந்த ஏற்றத்தாழ்வுகளே, யார் முன்னேற வேண்டும் என்பதையும் யார் பின்தங்கிவிட வேண்டும் என்பதையும் இன்றும் தீர்மானிக்கின்றன.


2019-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பொதுத் தேர்தலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதால் அது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த அரசாங்கம் கடுமையான கொரோனா பெருந்தொற்று காலத்தை எதிர்கொண்டது. இது மிகப்பெரிய மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது. அந்த இக்கட்டான சூழலை அரசாங்கம் சரியாகக் கையாளாததால், பெருந்தொற்று முடிந்த பின்னரும் அதன் பாதிப்புகள் நீண்டகாலத்திற்குத் தொடர்ந்தன.


விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறையை மீட்டெடுக்க ஒரு ஒத்திசைவான உத்தி இல்லாமல் இந்துத்துவாவை பொறுப்பற்ற முறையில் பின்பற்றுவது, ஓபிசிக்கள் மற்றும் எஸ்சிக்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட சில பிரிவுகளிடையே மீள்தன்மை - அவர்களின் வறுமையில் இறங்குவதை மெதுவாக்க உதவியது. எனவே, ஒருவேளை துன்பங்களை எதிர்கொள்ளும் மீள்தன்மையும் முக்கியமானது.


வேளாண்மை உள்ளிட்ட முறைசாராத் துறையை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டம் ஏதுமின்றி, தீவிரமான இந்துத்துவக் கொள்கையில் கவனம் செலுத்தியது வருமான வளர்ச்சியில் மந்தநிலையை ஏற்படுத்தியது. இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பட்டியலினத்தவர் (SC) மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சில பிரிவினரின் மனஉறுதி மற்றும் மீள்திறன், அவர்கள் வறுமையில் மிக மோசமாக வீழ்வதைத் தடுக்க உதவியது. கடினமான காலங்களில் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரும் இந்தத் திறன், ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.


அதிகப்படியான குடும்பங்கள் முன்னேற்றத்தைக் காணாமல் சரிவைச் சந்திக்கும் ஒரு பொருளாதாரத்தில், சமூக அமைதியை நீண்டகாலத்திற்குத் தக்கவைக்க முடியாது என்பதே மிகப்பெரிய கவலையாக உள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக ஒருவரது வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் குறையும்போது, மக்களின் நம்பிக்கை ஏமாற்றமாக மாறுகிறது. எனவே, அரசாங்கத்தின் கொள்கைகள் வெறும் பொருளாதார வளர்ச்சி எண்களை (GDP) மட்டும் காட்டாமல், பொது சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாகுபாடுகளைக் களைவது என்பது வெறும் நலத்திட்ட உதவி மட்டுமல்ல என்றும் அது மக்கள் மீண்டும் முன்னேறுவதற்கும், பொருளாதார வளர்ச்சியின்மீது அவர்கள் நம்பிக்கை கொள்வதற்கும் மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


நிதிக் கெய்கர், டெல்லி பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். வாணி எஸ். குல்கர்னி, பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி இணைப்பாளராக உள்ளார் மற்றும் ராகவ் கைஹா, அதே பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை முதுமை ஆராய்ச்சி மையத்தில் கௌரவ விரிவுரையாளராக உள்ளார்.


Original article :Analysing India’s cycle of deprivation and affluence -Nidhi Kaicker,Vani S. Kulkarni, Raghav Gaiha

Share: