2026-27 கல்வி ஆண்டிலிருந்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு இந்திய மொழிகளைத் தவிர மூன்றாவதாக ஒரு மொழியை அறிமுகப்படுத்தவுள்ளது; இது தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (National Curriculum Framework for School Education (NCFSE)) 2023 ஆகிய அமைப்புகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஆங்கிலம் ஒரு "அந்நிய" மொழியாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP), மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மொழிகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
— ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும் பள்ளிகளில், இரண்டு இந்திய மொழிகளுடன் சேர்த்து, அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு "அந்நிய" மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்கும் என்று ஒரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
— ஆறாம் வகுப்பில் பிரஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டால், மாணவர்கள் அதனுடன் சேர்த்து இரண்டு இந்திய மொழிகளையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
— இது பிற்காலங்களில் 10-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்குவதற்கு வழிவகுக்கிறது. ஏனெனில், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளிலும் மாணவர்கள் மூன்று மொழிகளையும் தொடர்ந்து கற்க வேண்டும் என்று தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) பரிந்துரைப்பதாகக் கூறப்படுகிறது.
— 2031-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு மொழிகளுக்குப் பதிலாக, மாணவர்கள் மூன்றாவது ஒரு மொழிக்கும் சேர்த்துத் தேர்வு எழுத வேண்டும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
— இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் பருவத்தில், மாணவர்கள் மூன்றாவது மொழியில் எந்த அளவிலானத் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) தெளிவுபடுத்தியுள்ளதால், அந்தப் பரிந்துரைகளுக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
— அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் இதற்கான விரிவான தகவல்களும் பாடத்திட்டப் பொருட்களும் (learning material) விரைவில் வாரியத்தால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 2026-27 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாவது மொழியாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி மற்றும் வங்காளம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் பாடப் புத்தகங்களை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)) தயாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
— மாணவர்களின் இடைநிலைக் கல்வியின் போது (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்படுவதாகவும், அந்த மொழியில் அடிப்படையான தகவல் தொடர்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்குப் போதுமான கால அவகாசம் தேவை என்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) குறிப்பிடுகிறது.
— மொழிவழிக் கல்வி மாணவர்களைத் தங்கள் நாட்டின் வேர்களுடன் பிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அது தனிநபர்கள் தங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூகத்துடன் இணைய வழிவகை செய்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தியா சிறந்த இலக்கிய வளங்களைக் கொண்ட ஏராளமான மொழிகளைக் கொண்ட ஒரு செழுமையான மொழிப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். எனவே, கூடுதல் இரண்டு மொழிகளைக் கற்பது, மாணவர்கள் பன்மொழிப் புலமை பெறவும், 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் தத்துவத்தைப் போற்றவும் உதவுவதோடு, ஒரு வலுவான தேசிய அடையாளத்தை உருவாக்கவும் துணையாக இருக்கும் என்றும் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) குறிப்பிடுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
— 1968-ஆம் ஆண்டில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு தேசியக் கல்விக் கொள்கையை (NEP) அறிமுகப்படுத்தியது, இது மும்மொழித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்தத் திட்டம் இந்தி-ஆங்கிலம் அடிப்படையிலான ஒரு மாதிரியாக அமைந்திருந்தது. இதன்படி, இந்தி பேசும் மாநிலங்கள் ஒரு தென்னிந்திய மொழியையும், இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது பிராந்திய மொழியை மூன்றாவது மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
— அப்போதிருந்து, மும்மொழித் திட்டம் ஒரு விவாதத்திற்குரிய முக்கியப் பொருளாகவே இருந்து வருகிறது. 1968-ஆம் ஆண்டில், தமிழ்நாடு இந்தக் கொள்கையை எதிர்த்ததோடு, இன்றுவரை தனது சொந்த இருமொழித் திட்டத்தையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
— தேசிய கல்விச் கொள்கை (NEP) என்பது பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்குகிறது என்றும் இது கட்டாயமானது அல்ல என்றும் கூறப்படுகிறது. கல்வி என்பது 'பொதுப் பட்டியலில்' (Concurrent list) உள்ள ஒரு துறை என்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரு தரப்புமே இது தொடர்பாகச் சட்டங்களை இயற்ற முடியும் என்கின்றனர். தற்போதைய அரசு இந்தப் புதியக் கல்விக் கொள்கையை 2040-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Original article : What is the significance of the three-language formula in the education system? -Khushboo Kumari, Roshni Yadav