இந்தியாவில் பாதுகாப்பான பாட்டில் குடிநீர் என்ற கட்டுக்கதையை அம்பலப்படுத்துதல் -ரோஹன் சிங், வெங்கடேஷ் தத்

 கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.


இன்றைய இந்தியாவில், பாட்டில் குடிநீர் என்பது எப்போதாவது பயன்படுத்தும் ஒரு வசதி என்ற நிலையிலிருந்து மாறி, தற்பொழுது ஒரு தினசரி தேவையாக உருவெடுத்துள்ளது. இரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவகங்களில் பாட்டில்யில் அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged drinking water) மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், மக்கள், நகராட்சி வழங்கும் குடிநீர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறைந்ததும், நெகிழி பாட்டில்யில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புவதுமே ஆகும்.


இருப்பினும், இந்திய ஆய்வுகள் உட்பட சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன. நெகிழி பாட்டில் குடிநீர் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், பொதுவாக பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளிடமிருந்து பாதுகாப்பானதாகவும் இருந்தாலும், தற்போதைய பாதிப்புகள் அவற்றையும் தாண்டிச் செல்கின்றன. நெகிழி பாட்டில்களிலிருந்து வெளியேறக்கூடிய நுண்ணிய நெகிழித் துகள்கள் மற்றும் சிறிய அளவிலான வேதிப்பொருட்கள் போன்ற மறைமுக ஆபத்துகள் குறித்தும், அவை மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்தும் நிபுணர்கள் இப்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.


நுண்ணிய நெகிழித் துகள்கள்  (Microplastics) ஒரு முக்கிய மாசுபடுத்தி


நுண்ணிய நெகிழித் துகள்கள் (Microplastics) என்பது ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுள்ள சிறிய நெகிழித் துண்டுகள் ஆகும். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், மனிதர்கள் இத்தகைய துகள்களால் நேரடியாகப் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சோதிக்கப்பட்ட அனைத்து பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் நுண்ணிய நெகிழி துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது; இதில் ஒரு லிட்டருக்கு 72 முதல் 212 துகள்கள் வரை இருந்தன. குறிப்பாக, தேசிய அளவிலான முன்னணி நிறுவனங்களைவிட உள்ளூர் பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் தயாரிப்புகளில் அதிகப்படியான துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது, இது குடிநீர் பாட்டில்களில் அடைக்கப்படும் முறையிலும் தரக்கட்டுப்பாட்டிலும் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது.


மும்பை மற்றும் ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும், சோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் நுண்ணிய நெகிழி துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமன்றி, விநியோகச் சங்கிலி முழுவதுமே இந்த மாசு பரவியுள்ளதைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த முடிவுகள் பாட்டில் குடிநீரில் நுண்ணிய நெகிழித் துகள்கள் கலந்திருப்பது என்பது மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமான பிரச்சனையல்ல, இந்தியாவிலும் இது ஒரு வளர்ந்துவரும் பெரும் பிரச்சனை என்பதை உறுதிப்படுத்துகின்றன.


நுண்ணிய நெகிழித் துகள்களை (microplastics) உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த துகள்கள் நச்சுத்தன்மை வாய்ந்த சேர்க்கைப் பொருட்கள் மற்றும் மாசுக்களை சுமந்து செல்லும் தன்மைக் கொண்டவை. தற்போது வெளிவரும் புதிய ஆய்வுகள், மிகச்சிறிய துகள்கள் உடலின் உயிரியல் தடுப்புகளைக் கடந்து செல்லக்கூடும் என்று கூறுவது பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. குறிப்பாக, தற்போதைய முறைகளால் கண்டறிய முடியாத அளவிற்கும், நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டும் இருக்கும் மிக மிக நுண்ணிய 'நுண் நெகிழித் துகளால்' (nanoplastics) இந்தப் பிரச்சனை இன்னும் மோசமடைவதாகவும் கூறப்படுகிறது. 


இது ஒரு ஒழுங்குமுறை இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது: பாட்டில் குடிநீர் போன்ற அன்றாட ஆதாரங்கள் மூலம் நுண்மாசுகள் உடலில் கலப்பது பற்றி அதிகளவில் தகவல்கள் வெளிவந்தாலும், தற்போதைய பாதுகாப்புத் தரநிலைகள் இன்னும் கண்ணுக்குத் தெரியும் அல்லது குறுகியகால பாதிப்புகளை ஏற்படுத்தும் மாசுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதனால், ஏற்படக்கூடிய நீண்டகால அபாயங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது


பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் நெகிழி கொள்கலன்களில் இருந்து ரசாயனங்கள் கசியும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இந்திய விநியோகச் சங்கிலிகளில் பொதுவாகக் காணப்படுவது போல, தண்ணீர் பாட்டில்கள் அதிக வெப்பத்தில் வைக்கப்படும்போதோ அல்லது நீண்டகாலத்திற்கு சேமிக்கப்படும்போதோ, அவற்றில் உள்ள ஆன்டிமனி (antimony) மற்றும் பித்தலேட்ஸ் (phthalates) போன்ற வேதிப்பொருள் சேர்க்கைகள் தண்ணீருக்குள் ஊடுருவி விடக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்கள் நேரடி சூரிய ஒளியில் இருக்கும்போது, குறிப்பாக அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படும்போதோ, சேமித்து வைக்கப்படும்போதோ அல்லது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும்போதோ, அவற்றில் உள்ள ரசாயனங்கள் திரவத்தில் கலக்கக்கூடும் என்கின்றனர். அதிகப்படியான வெப்பம் மற்றும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் இந்த ரசாயனக் கசிவுச் செயல்பாட்டை மேலும் வேகப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 

கண்டறியப்பட்ட ரசாயனங்கள் தற்போதைய விதிமுறைகளின் எல்லைக்குள் இருந்தாலும், வழக்கமான சோதனைகள் ஒரு குறிப்பிட்ட பொருளை குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆய்வு செய்கின்றன; ஆனால், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பலவிதமான உணவு சேர்க்கை பொருட்கள் (additives) மற்றும் நுண்ணிய நெகிழித் துகள்கள் (microplastics) ஒன்றாக கலந்துள்ளன. இத்தகைய பலதரப்பட்ட பொருட்கள் நீண்டகாலத்திற்கு உடலில் ஏற்படுத்தும் கூட்டுத் தாக்கத்தை தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகக் கருத்தில் கொள்ளாததால், மக்களின் அன்றாட நுகர்வு முறைக்கும் அரசாங்கத்தின் கண்காணிப்புக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். 


விதிமுறைகள் பின்தங்கியுள்ளன


இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் முக்கியமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (Food Safety and Standards Authority of India (FSSAI)) முறைப்படுத்தப்படுகிறது. கட்டாய இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards (BIS)) சான்றிதழ் நீக்கப்பட்ட பிறகு, உரிமம் வழங்குதல், சோதனை செய்தல் மற்றும் விதிமுறை இணக்கங்களை கவனிக்கும் பொறுப்பை இந்த அமைப்பே ஏற்றுள்ளது. இந்த முறை அடிப்படை தரநிலைகளை மேம்படுத்தியிருந்தாலும், இதில் சில குறைபாடுகள் உள்ளன; குறிப்பாக, நுண்ணிய நெகிழித் துகள்கள் (microplastics) குறித்த சோதனைகளுக்கோ அல்லது அவற்றுக்கான வரம்புகளை நிர்ணயிப்பதற்கோ தற்போதைய விதிகள் கட்டாயப்படுத்தவில்லை, மேலும், நடைமுறை வாழ்க்கை சேமிப்பு நிலைகளில் நெகிழியிலிருந்து வெளியேறும் இரசாயனங்களால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்தும் இந்த விதிகள் தெளிவுபடுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. 


கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பாட்டில் குடிநீர் மாதிரிகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவோ அல்லது தரமற்றதாகவோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விதிமுறைகளின் குறைபாடுகளைவிட, அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள பலவீனங்களையே காட்டுகிறது. ஆயிரக்கணக்கான சிறிய குடிநீர் உற்பத்தி நிலையங்களைக் கொண்ட ஒரு சிதறியத் தொழில்துறையாக இருப்பதும், அவற்றில் பல மிகக் குறைந்த கண்காணிப்புடன் இயங்குவதும், ஏற்கனவே தட்டுப்பாட்டில் உள்ள நிலத்தடி நீரையே அவை பெரிதும் நம்பியிருப்பதும் இந்தப் பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.


பாட்டில் குடிநீரால் ஏற்படும் சுகாதார அபாயங்களை அதன் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியா ஏற்கனவே ஒரு பெரிய நெகிழி கழிவுப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் டன் நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. நிலப்பரப்புகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் நெகிழி சிதைவடையும் போது, அவை நுண்-நெகிழித் துகள்களாக மாறி மீண்டும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களுக்குள் நுழைகின்றன, இறுதியில் இது பாட்டில் குடிநீர் விநியோகத்தையே மாசுபடுத்துகிறது. சுற்றுச்சூழல் சேதம் மற்றும் சுகாதார அபாயங்களுக்கு இடையே உள்ள இந்தத் தொடர்பு, பாட்டில் குடிநீரை வெறும் நுகர்வோர் வசதிக்கான விஷயமாக மட்டும் பார்க்க முடியாது என்பதைக் காட்டுகிறது.



பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி


அவசர காலங்கள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாத இடங்களில் பாட்டில் குடிநீர் இன்றும் அத்தியாவசியமான ஒன்றாகவே உள்ளது. எனவே இதன் உண்மையான பிரச்சனை அதைத் தடை செய்வது அல்ல, மாறாக அதை அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருப்பதும், அதன் தரத்தைக் கண்மூடித்தனமாக நம்புவதும்தான் என்று கூறுகின்றனர். 


இதற்கிடையில், தண்ணீரில் உள்ள நுண்துகள்களை அகற்றும் வடிகட்டிகளைப் பயன்படுத்துவது, நீண்டநேரம் வெப்பத்தில் பாட்டில் தண்ணீரைச் சேமித்து வைப்பதைத் தவிர்ப்பது மற்றும் பொது குடிநீர் விநியோக நிலையங்கள் அல்லது மீண்டும் நிரப்பும் இடங்களின் வசதியை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் இதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 


நகராட்சி குடிநீர் வழங்கலை மேம்படுத்துதல், நீரின் தரம் குறித்த தரவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுதல், குறைந்த விலையில் வீட்டு உபயோக நீர் சுத்திகரிப்பு கருவிகள் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்தல் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள், கண்காணிக்கப்படும் மற்றும் பொறுப்புணர்வோடு செயல்படும் பொது குடிநீர் அமைப்புகளின்மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர். 


உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) மற்றும் இந்தியத் தர நிர்ணயப் பணியகம் (Bureau of Indian Standards (BIS)) ஆகியவற்றின் தற்போதைய விதிகளில் இடம்பெறாத நுண்ணிய நெகிழித் துகள்கள் மற்றும் நெகிழி சார்ந்த இதர அசுத்தங்களை அவ்வப்போது பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய விதிமுறைகளைப் புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும்.


தீங்கு விளைவிப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு, அதற்கான அறிவியல் ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அந்தப் பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது இப்போது கேள்வியல்ல; மாறாக, கொள்கை வகுப்பாளர்களும் ஒழுங்குமுறை அதிகாரிகளும் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதனை நேர்மையாக அளவிட்டு, அதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் தற்போதைய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. 


ரோகன் சிங், ஒரு சுதந்திரமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் ஆவார். மேலும் வெங்கடேஷ் தத்தா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.


Original tittle :  Unpackaging the myth of safe bottled water in India -Rohan Singh,Venkatesh Dutt

Share: