இந்தியாவின் கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசித் திட்டம் குறித்து…

 தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.


உலகளவில் தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துவரும் வேளையில், 14 வயது சிறுமிகளுக்கான நாடு தழுவிய கருப்பை வாய் புற்றுநோய் (Human Papillomavirus (HPV)) தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தும் இந்தியாவின் முடிவு அறிவியலுக்கு வலுசேர்க்கிறது. தடுப்பூசிகளைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்காவில் தற்போது காணலாம். அங்கு 26 மாநிலங்களில் தட்டம்மை (Measles) நோய் பரவி வருகிறது. இந்த கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி குறிப்பிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மட்டுமே, பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் வழங்கப்படும். மேலும், தடுப்பூசிக்கு பிந்தைய ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதைக் கண்காணித்து நிர்வகிக்கத் தயாராக உள்ள தகுதியான சுகாதாரக் குழுவினரின் ஆதரவும் இதற்கு இருக்கும். உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி, ஒரு தவணை (Single-dose) தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்படும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளில் ஏறக்குறைய அனைத்தும், அதிக ஆபத்துள்ள கருப்பை வாய் புற்றுநோய் வகைகளால் ஏற்படும் நீண்டகாலத் தொற்றினால் உண்டாகின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக வகை 16 மற்றும் 18 ஆகியவை இந்தியாவில் 80%-க்கும் அதிகமான கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன. கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பெருமளவு தடுக்க முடியும் என்றும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவாகச் சிகிச்சை அளித்தால் இதைக் குணப்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒற்றைத் தவணை கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முறையைப் பின்பற்றி வருகின்றன. தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டபிறகு, கருப்பை வாய் புற்றுநோய் தொற்று, புற்றுநோய்க்கு முந்தைய நிலைகள் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளதாகப் பல நாடுகள் தெரிவித்துள்ளன. தடுப்பூசி மூலம் மிகவும் திறம்படத் தடுக்கக்கூடிய ஒரு சில புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோயும் ஒன்றாக க் கூறப்படுகிறது. 


இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer) ஒரு மிகப்பெரிய சுகாதாரப் பாதிப்பாக உள்ளது, எனவே இது தொடர்பான முடிவு ஒரு முக்கியமான உயிர்காக்கும் நடவடிக்கையாகும். உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation (WHO)) மண்டலங்களில், தென்கிழக்கு ஆசிய மண்டலம் (South-East Asia Region (SEARO)) கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவின் பங்கு 65 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் வகைகளில், கருப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும். 2022-ஆம் ஆண்டில், சுமார் 1,27,526 புதிய பாதிப்புகளும், 79,906 இறப்புகளும் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நோயைக் கண்டறியும் பரிசோதனை நிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 30-49 வயதுடைய பெண்களில் 1.9% பேர் மட்டுமே பரிசோதனை செய்துகொள்கின்றனர். இருப்பினும், இந்தியாவில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி சோதனையின் அனுபவம் காரணமாக சில சிக்கல்கள் நீடிக்கின்றன. 2009-10 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ஏழு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த இறப்புகள் தடுப்பூசியுடன் தொடர்பில்லாதவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (Indian Council of Medical Research (ICMR)) விசாரணை கூறியது, ஆனால் சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும், தடுப்பூசிக்குப் பிந்தைய பாதகமான விளைவுகளை சரியாகக் கண்டறிந்து விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, தடுப்பூசிகளைச் சரியான வெப்பநிலையில் சேமிக்க ஒரு வலுவான குளிர்சாதனக் கட்டமைப்பை (Cold Chain) உறுதிசெய்ய வேண்டும் என்றும் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.  மேலும், நாடு முழுவதும் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கவனமாகக் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


Original tittle :  A jab well done: On India’s Human Papillomavirus vaccination programme

Share: