அரசியலமைப்புப் பதவிகளில் இருப்பவர்களுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவோ அல்லது உருவாக்கவோ உச்சநீதிமன்றம் தயங்குவது, அரசியலமைப்பு நெறிமுறைகளைப் (constitutional morality) பாதிக்கும்.
16வது குடியரசுத் தலைவர் பரிந்துரை மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சம அளவில் விமர்சிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது. இந்தத் தீர்ப்பின் விளைவுகள் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. முக்கியப் பிரச்சினை உயர் அரசியலமைப்பு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு காலக்கெடுவை நிர்ணயிப்பது பற்றியது. தீர்ப்பில் உள்ள பகுத்தறிவு எழுதப்பட்ட அரசியலமைப்பு மொழிக்கு நீதித்துறை மரியாதை செலுத்துவதைக் குறிக்கிறது என்றாலும், அது இறுதி நீதித்துறை செயல்பாட்டைக் கைவிடுவதாகவும் தோன்றுகிறது. இன்றைய உலகத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை விளக்கும் அதன் முக்கியப் பங்கைத் தவிர்ப்பதாகவும் தெரிகிறது. சட்டங்களையும் அரசாங்க நடவடிக்கைகளையும் மறுஆய்வு செய்ய மிகவும் வலுவான அதிகாரங்களைக் கொண்ட ஒரு நீதிமன்றத்திற்கு இந்த எச்சரிக்கையான அணுகுமுறை ஒரு நல்ல அறிகுறி அல்ல.
இந்திய குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் மற்றும் அவைகளின் சபாநாயகர்கள் போன்ற பல்வேறு அதிகாரிகளால் செயல்படுத்த திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சபாநாயகர்களின் விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: பிற கடமைகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கட்சித் தாவலை தீர்மானிக்க ஒரு அரை-நீதித்துறை தீர்ப்பாயத்தின் (quasi-judicial tribunal) பங்கைச் செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த அதிகாரம் அரசியலமைப்பின் 10வது அட்டவணையின்கீழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சித் தாவுதல் நடவடிக்கைகளை (defection proceedings) முடிப்பதற்கு எந்த காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை.
ஒரு முரண்பாடு
இது அரசியலமைப்பு முரண்பாடுக்கு (constitutional anomaly) வழிவகுக்கிறது. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டாலும், கட்சித் தாவல் மனுவை (defection petition)முடிவு செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படாதது, கோட்பாட்டளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலம், கட்சித் தாவல் என்ற தவறைச் செய்ததற்கான சட்டப்பூர்வ விளைவை உறுப்பினர் எதிர்கொள்ளாமலேயே காலாவதியாகிவிடும் என்பதாகும்.
சமீபகாலமாக, இந்த முரண்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கத்திற்கே முரணானது.
இதேபோல், சட்டமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் ஆளுநர்களின் நடவடிக்கைகள் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளன. இது நிச்சயமாக அரசியலமைப்பின் நோக்கமாகவோ அல்லது ஆளுநர் செயல்பாடுகளை வழங்குவதில் அதன் வரைவாளர்களின் நோக்கமாகவோ இருந்திருக்க முடியாது. இங்குள்ள கேள்வி, மசோதாக்களை மறுபரிசீலனை செய்வதற்காக அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்ப ஆளுநர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது கேள்வி அல்ல. மாறாக, ஆளுநர்கள் உரியமுறையில் நிறைவேற்றப்பட்ட சட்டமியற்றும் நடவடிக்கைகளை, காலவரம்பைப் பற்றிக் கவலைப்படாமல் கிடப்பில் போட்டு, அதன் மூலம் சட்டப்படி இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை நடைமுறையில் செல்லாததாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில் 'முடியாது' என்பதே. சட்டமியற்றும் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை, அவை அதிகார வரம்பை மீறியவை என்று கண்டறியப்பட்டால், அவற்றை ரத்துசெய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பில் உள்ள முரண்பாடு
முரண்பாடாக, குடியரசுத் தலைவர் பரிந்துரை மீதான நீதிமன்றத்தின் முடிவு, முக்கிய அதிகாரிகளுக்குக் காலக்கெடு நிர்ணயிக்கக் கூடாது என்பதை ஆதரிக்கிறது. அரசியலமைப்பின் 200வது பிரிவு காலக்கெடுவைப் பற்றிக் குறிப்பிடாததால், எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படக் கூடாது என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது. இது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களைத் தடுத்து நிறுத்தும் ஆளுநர்களின் நடவடிக்கைகளை நடைமுறையில் உறுதிப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது. இது, நீதித்துறை மறுஆய்வு அதிகாரங்களை ஆளுநர்களிடம் விட்டுக்கொடுப்பதை விடவும் மேலானது. அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நோக்கங்களை அடைவதற்காக, அரசியலமைப்புச் சட்டமே எவ்வாறு முறியடிக்கப்படலாம் என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்ளத் தவறுகிறது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம் அரசியலமைப்பின் தார்மீக நெறிமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், அரசியலமைப்பில் உள்ள குறைபாடுகளை விளக்கியிருக்க வேண்டும்.
1948-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அதில், அரசியலமைப்பின் உணர்வையும் விழுமியங்களையும் பின்பற்றுவதான அரசியலமைப்பு நெறிமுறை என்ற கருத்து, நாட்டின் அடித்தளத்தில் இடம்பெற்று, மக்களிடையே பரவ வேண்டும் என்று விரும்பினார். சமீபகாலமாக, இந்த யோசனை நீதிமன்றத் தீர்ப்புகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவது மற்றும் பால்புதுமையினர் (LGBTQIA+) உரிமைகள் தொடர்பான வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க முற்போக்கான தீர்ப்புகள், அரசியலமைப்புச் சட்ட உரையை பொது நேர்மையுணர்வுக்கு (public conscience) ஏற்ற முறையில் விளக்குவதற்காக இந்தக் கருத்தை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளன.
ஒரு சுட்டிக்காட்டி
டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கான தனது அழைப்புடன், எதிர்கால நீதிமன்றங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார். ஒரு நாடு ஆளப்படும் விதம் அதன் அரசியலமைப்புடன் நெருக்கமாகப் இணைந்துள்ளது என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் செயல்பாட்டு முறையை மாற்றுவதன் மூலமே அரசியலமைப்பைத் தவறாகப் பயன்படுத்த முடியும் என்று அவர் எச்சரித்தார். உதாரணமாக, சபாநாயகர்கள் கட்சித் தாவல்கள் குறித்துத் தீர்ப்பளிக்காமல் இருப்பதும், ஆளுநர்கள் சட்டமன்றத்தின் பதவிக்காலத்திற்குப் பிறகும் மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் இருப்பதும், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கான மிகச் சிறந்த உதாரணங்களாகும்.
அரசியலமைப்பில் எவ்வளவு விவரங்களைச் சேர்க்க முடியும் என்ற கேள்வி டாக்டர் அம்பேத்கரின் மனதில் ஒரு கவலை இருந்தது. ஏனெனில், ஆவணத்திலிருந்து நிர்வாக விதிகளைச் சட்டமியற்றுபவர்களின் கையில் விடுவது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதினார். இருப்பினும், எதிர்காலத் தலைமுறையினரும் நீதிமன்றங்களும் அரசியலமைப்பின் முக்கியக் கொள்கைகளைப் பாதுகாத்து, அவற்றைப் பத்திரமாகப் பேணிப் பாதுகாப்பார்கள் என்று அவர் நம்பினார்.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அரசியலமைப்புப் பதவிகளில் இருப்பவர்களுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவோ அல்லது உருவாக்கவோ நீதிமன்றம் தயங்குவது, சுய-தோல்விக்கு வழிவகுக்கும் விளைவுகளையே ஏற்படுத்தும். இத்தகைய பின்விளைவுகள், அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையே சிதைத்துவிடும் வாய்ப்புள்ளது. மேலும், டாக்டர் அம்பேத்கர் முன்னோக்கு பார்வையின்படி, அரசியலமைப்பு நெறிமுறைகளின் கோட்பாடுகள், நம்மிடையே இன்னும் போதுமான அளவு பரவவில்லை என்பதற்கான ஒரு சரியான நினைவூட்டலாகவும் இது அமைகிறது.
மனுராஜ் சண்முகசுந்தரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர் ஆவார்.
Original link:
A verdict that is an abdication of judicial function