மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) மற்றும் வாக்காளர் பதிவு சிறப்பு தீவிரதிருத்தம் ஆகிய இரண்டிலும் உள்ள தொழில்நுட்பத் திட்டங்களுக்கு இடையே ஒரு கவலைக்குரிய ஒற்றுமை உள்ளது. சிலரை விலக்கிவிடும் உள்ளமைக்கப்பட்ட விதிகள் இரண்டு திட்டங்களிலும் உள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) நடத்தப்படும் சிறப்பு தீவிர திருத்தப் திருத்தத்தின் (SIR) இரண்டாம் கட்டம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. இந்தப் பயிற்சி ஏறக்குறைய 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கும்.
1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 19, ஒரு தொகுதியில் வழக்கமாக வசித்துவரும் எந்த ஒரு நபரும் (ordinarily resident in a constituency) வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று கூறுகிறது. 1999ஆம் ஆண்டில், கவுகாத்தி உயர் நீதிமன்றம், "வழக்கமாக வசிப்பவர்" (ordinarily [a] resident) என்பது, அங்குத் தொடர்ந்து வசிப்பவர் மற்றும் அவர் நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று விளக்கியது. மேலும், ஒரு வசித்துவரும் குடியிருப்பாளர் என்பவர், எந்தவொரு 'பகுத்தறிவுள்ள மனிதரும் அவரை அந்த மாநிலத்தின் குடியிருப்பாளராக ஏற்றுக்கொள்வார்' என்ற வகையில் இருப்பார் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி, அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, இந்தியத் தேர்தல் ஆணையமும் நீதித்துறையும் அனுமானிக்கப்பட்ட குடியுரிமை (presumed citizenship) என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு வயது வந்தவரும் தானாகவே தகுதியான வாக்காளராகக் கருதப்பட்டார்.
தற்போதைய வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை குறித்த இத்தகைய இயல்பான கருத்தாக்கத்திலிருந்து தலைகீழாக மாறுகிறது. முந்தைய தேர்தல்களில் வாக்களித்திருந்தாலும், ஒவ்வொரு வாக்காளரும் இப்போது தங்கள் பெயர்களையும் ஆவணங்களையும் 2002-2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து பொறுப்பை மக்களிடம் மாற்றுவது, பலர் தங்களின் வாக்களிக்கும் உரிமையை இழக்க வழிவகுக்கும். பெண்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் இல்லம் இல்லாத மக்கள் இந்த நடவடிக்கையின் காரணமாக அதிக பாதிப்புகளை சந்திக்க உள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்களின் விளையாட்டு புத்தகம் (Technocratic playbook)
இத்தகைய கட்டமைப்பு, மத்திய அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் பயன்படுத்தப்படும் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளைப் போலவே தெரிகிறது. இது பெருமளவிலான புறக்கணிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்த அணுகுமுறை எளிமையானது: தகுதி இருப்பதை நிரூபிக்கும் பொறுப்பை அரசாங்கம் மக்களிடமே மாற்றுவது, சீரற்ற நெறிமுறைகளுடன் அதிகாரிகளுக்குக் கடுமையான இலக்குகளை வழங்குவது, குறுகியகாலத்தில் 100% இலக்கை அடைய அதிகாரிகளை ஒழுங்குபடுத்துவது, மக்கள் இணைந்து செயல்படாவிட்டால் அவர்களின் உரிமைகளைப் பறிப்போம் என்று அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பது, பின்னர் மக்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் இரட்டைப் பதிவுகளை நீக்கிவிட்டதாகக் கூறி செயல்திறன் அதிகரிப்பைக் காட்டுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் பல பிற நலத்திட்டங்களிலும் இது போன்று நடந்திருக்கிறது.
ஊரகப் பகுதியில் வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கு முன்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு அமைப்பு மூலம் ஊதியம் வழங்கப்பட்டது. அதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், அவற்றை வட்டார அலுவலக ஊழியர்களால் உள்ளூரிலேயே சரிசெய்ய முடிந்தது. 2022ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை (Aadhaar-based payment system (ABPS)) பயன்படுத்துவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. இதன் பொருள் தொழிலாளர்கள் தங்கள் MGNREGA வேலை அட்டைகளை தங்கள் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதாகும். இந்தச் சிக்கல்களைச் சரிசெய்யாமல் இருந்தால், தொழிலாளர்கள் தங்கள் வேலை செய்யும் உரிமையை இழந்துவிடுவார்கள். தொழிலாளர்களின் ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளைக் கையாள்வதற்கான விதிகள் தெளிவாக இல்லை. சில அதிகாரிகளுக்கு அதிகப்படியான வேலை இருந்தது, மற்றவர்களோ தங்கள் ஆவணப் பிழைகளைச் சரிசெய்யும் பொறுப்பைத் தொழிலாளர்களிடமே ஒப்படைத்தனர். பல தொழிலாளர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. மேலும், சிலர் காலக்கெடுவின்போது தங்கள் கிராமங்களில் இல்லை. அரசாங்கத்தின் 100% ஆதார் இணைப்பு இலக்கை விரைவாக அடைவதற்காக, பல அதிகாரிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGA) தரவுத்தளத்திலிருந்து தொழிலாளர்களை நீக்கத் தொடங்கினர். 2022 முதல் 2024 வரை நீக்கப்பட்ட சுமார் 298,000 பேரில், மூன்றில் இரண்டு பங்கினர் 'வேலை செய்ய விரும்பாதவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால் நீக்கப்பட்டனர். சட்டத்தின்படி, இது சட்டத்தை மீறும் செயலாகும்.
வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) உள்ள தர்க்கம் இதைத் தாண்டியும் செல்கிறது. 2002-2005-ஆம் ஆண்டுகளின் பழைய வாக்காளர் பட்டியல்களைக் கணினிகளால் எளிதில் படிக்க முடியாது. எனவே, தற்போதைய விவரங்களுக்கும் அந்தப் பழைய பட்டியல்களுக்கும் இடையே உள்ள சிறிய வேறுபாடுகள்கூட எச்சரிக்கைகளை ஏற்படுத்தலாம் அல்லது பட்டியலிலிருந்து நீக்கத்திற்கு வழிவகுக்கும். 2021-ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு தொழிலாளர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (National Mobile Monitoring System (NMMS)) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. ஒருபுறம், இது பல தொழிலாளர்கள் பணிக்கு வருவதைத் தடுத்தது. மறுபுறம், இது ஊழல் நடப்பதற்குப் புதிய வழிகளை உருவாக்கியது. இந்தச் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இந்தச் செயலியை நீக்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்ற (Electronic Know Your Customer (e-KYC)) செயல்முறையை முடிக்க வேண்டும் என்ற மற்றொரு டிஜிட்டல் படிநிலையை அரசாங்கம் சேர்த்தது. கடுமையான இலக்குகள் மற்றும் காலக்கெடு காரணமாக, இடமாற்றம் அல்லது செயலி மற்றும் ஆவணச் சிக்கல்களால் பணிக்கு வராத தொழிலாளர்களைக் பற்றி தெரிந்து கொள்வதற்கு அதிகாரிகளுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. இதன் விளைவாக, நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்காக, ஒரே மாதத்தில் ஏறக்குறைய 27 லட்சம் தொழிலாளர்கள் பதிவேடுகளிலிருந்து நீக்கப்பட்டனர்.
அரசியலமைப்பு நெறிமுறை (Constitutional morality)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் வாக்காளர் பதிவு சிறப்பு தீவிரதிருத்ததில் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையேயான ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை என்னவென்றால், அவை இரண்டுமே மக்களை விலக்கி வைப்பதற்கான உள்ளமைக்கப்பட்ட வழிகளை உருவாக்குகின்றன. நல்ல எண்ணம் கொண்ட அதிகாரிகள்கூட, தரவுத்தளங்கள் மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்தும்படி அழுத்தத்திற்கு அளக்கப்படுகிறார்கள். இந்த மன அழுத்தத்தால் சிலர் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிகாரிகள் வேலையை எவ்வளவு விரைவாக முடிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்படுவதால், மக்களைப் புறக்கணிப்பது நல்ல முடிவுகளைக் காட்டுவதற்கான ஒரு சுலபமான வழியாகிவிடுகிறது. பிரச்சனைகள் கவனிக்கப்படும்போது, பாதிப்பு ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும். உதாரணமாக, மில்லியன் கணக்கானோர் ஏற்கனவே தங்கள் உரிமைகளை இழந்த நீண்டகாலத்திற்குப் பிறகு, தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ விதிகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டது. மேலும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்குக் குறை தீர்க்கும் வழிமுறைகள் அணுக முடியாதவையாக உள்ளன. ஏனெனில், அதற்கு பெரும்பாலான மக்களிடம் இல்லாத சில வழிமுறைகளும் வளங்களும் தேவைப்படுகின்றன.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியலமைப்பு நெறிமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்கான ஒரு விளக்கம் என்னவென்றால், நிறுவனங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். அதாவது உள்ளடக்கம் விதிமுறையாகவும், விலக்கு விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஆனால், குடிமகன்-அரசு உறவைத் தலைகீழாக மாற்றி, மக்கள் மீது கடுமையான ஆவணங்களின் பொறுப்பை சுமத்துவதன் மூலம், தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு நெறிமுறையில் சமரசம் செய்கிறது. இதன் விளைவாக, மக்கள் தங்கள் உரிமைகளை இழக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், இன்னும் காலம் கடந்துவிடவில்லை — சமூகத் தணிக்கைகள் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision (SIR)) முறைக்கு மாற்றாக அமையலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
சக்ரதர் புத்தர், சின்மயா ஊரக மேம்பாட்டு அமைப்பிற்குள் (Chinmaya Organization for Rural Development (CORD)) உள்ள ஒரு மையமான லிப்டெக் இந்தியாவுடன் பணிபுரிகிறார்; ராஜேந்திரன் நாராயணன் பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார் மற்றும் லிப்டெக் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Original link:
SIR and the annihilation of rights