இந்தியர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? ஆரோக்கியமற்றவர்களாக இருப்பது எவ்வளவு எளிதானது மற்றும் மலிவானது? -சௌமியா சுவாமிநாதன்


உணவு நிறுவனங்கள் இந்திய இரசனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் (Indian tastes and lifestyles) பொருந்தக்கூடிய மலிவு விலையில், கலாச்சாரரீதியாக பொருத்தமான, ஆரோக்கியமான தயாரிப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு முழு சமூக ஈடுபாடும் தேவை.


இந்தியா 1970-களில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து, இன்று உலகின் முன்னணி உணவு ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இருப்பினும், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) சமீபத்திய ஐந்தாண்டு கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான அதன் பயணம் முழுமையடையவில்லை. வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) 2022-23, உணவு, நுகர்பொருட்கள் மற்றும் நீடித்த பொருட்களுக்கான மாதாந்திர தனிநபர் செலவு (monthly per capita expenditure (MPCE)) பற்றிய தகவல்களை வழங்குகிறது. கடந்த 23 ஆண்டுகளில் அவ்வப்போது சேகரிக்கப்பட்ட இது, மக்கள் உணவுக்காக எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பது பற்றிய தெளிவான நுண்ணறிவுகளை இது வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, உணவு செலவினங்கள் உண்மையான அடிப்படையில் உயர்ந்துள்ளன. பால், முட்டை மற்றும் இறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் போன்ற புரத மூலங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில், தானியங்களுக்கான செலவுகள் குறைந்துள்ளன. ஏனெனில் சமீபத்திய சான்றுகள் சராசரி உணவில் பாதிக்கும் மேற்பட்டவை இன்னும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.


தானியங்களுக்கான குறைந்த செலவு நுகர்வுக்கான பொருளாதாரக் கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்றாலும், உட்கொள்ளப்படும் அளவுகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-இந்திய நீரிழிவு நோய் (Indian Council of Medical Research-India Diabetes (ICMR-INDIAB)) உணவுமுறை ஆய்வு, இந்திய உணவுகளில் மொத்த ஆற்றலில் 62 சதவீதம் குறைந்த தரம் வாய்ந்த கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து (சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சர்க்கரை) வருகிறது என்பதைக் காட்டுகிறது. இது உடல் பருமன் (மற்றும் பிற வளர்சிதை மாற்ற நோய்கள்) தொற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த இருபதாண்டுகளாக தனிநபர் வருமானம் அதிவேக அதிகரிப்பைக் காட்டியுள்ள நிலையில், உண்மையான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 1999 உடன் ஒப்பிடும்போது தானியங்களுக்கான செலவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. சராசரியாக, இந்தியர்கள் இப்போது பால் பொருட்கள் உட்பட விலங்கு மூல உணவுகளுக்குச் (animal-sourced foods) செய்ததைவிட ரூ.40 அதிகமாகச் செலவிடுகிறார்கள். இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு, மக்கள் தோராயமாக இரண்டு மடங்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள். இதனால், தானியங்களிலிருந்து பலதரப்பட்ட உணவுகளுக்குச் செலவுகளை நகர்த்தியுள்ளது.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) தானிய நுகர்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், கிராமப்புற மக்களில் முதல் 5 சதவீதம் பேர் உணவுக்காக கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள். அதேநேரத்தில், நகர்ப்புற மக்களில் முதல் 5 சதவீதம் பேர் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள். நகர்ப்புற நுகர்வோர் தரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறது. இது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களையும் எளிய தானியங்களிலிருந்து விலகிச் செல்வதையும் பிரதிபலிக்கிறது.


குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட (processed) அல்லது தொகுக்கப்பட்ட உணவுகளுக்கான (packaged foods) செலவு கடுமையான உயர்வைக் காட்டுகிறது. 1999 முதல் கிராமப்புறங்களில் 353 சதவீதமும் நகர்ப்புறங்களில் 222 சதவீதமும் அதிகரித்துள்ளது. வேலை-வாழ்க்கை சமநிலை (work-life balance) மற்றும் பெண்களின் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளைச் சார்ந்திருக்கும் வீட்டில் சமைத்த உணவுகளின் கிடைக்கும் தன்மை குறைவதால், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகளுக்கான நுகர்வோர் விருப்பத்தேர்வுகள் மாறி வருவதை இந்த அதிகரிப்பு காட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான விலை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கப்பட்டதன் மூலம் தங்களின் கருத்துகணிப்பு ஆதரிக்கப்படுகிறது. இது ஒரு ஆடம்பர நுகர்வுப் பொருளிலிருந்து ஒரு தேவைக்கு மாறுவதைக் குறிக்கிறது.


இந்தியாவில் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல முக்கிய உடல்நலக் குறைபாடுகளுக்கு, இந்த மாற்றப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என்று நாங்கள் கூறுகிறோம். உலகளாவிய நோய் சுமை-2023-ன் (Global Burden of Disease) படி, இந்தியாவில் தொற்று அல்லாத நோய்கள் (non-communicable diseases (NCD)) அதிவேகமாக அதிகரித்துள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையிலான ஆயுட்கால இழப்பு (years of life lost (YLL)) மோசமான உணவு முறைகளால் ஏற்படுகிறது. தற்போதைய உணவுப் போக்குகள் தொடர்ந்தால், இந்தியா ஆபத்தான உடல்நல அபாயங்களை எதிர்கொள்கிறது. இந்தியாவில் மொத்த நோய் சுமையில் 57 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் ஏற்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) சுட்டிக்காட்டியுள்ளது. உணவு தொடர்பான உடல்நல அபாயங்கள் மற்றும் எடைப் பிரச்சினைகள் 2020 மற்றும் 2050-க்கு இடையில் ஆயுட்கால இழப்பை (YLL) 50 மில்லியனிலிருந்து 72 மில்லியனாக உயர்த்தும் என்று இந்திய உணவு முறை பொருளாதார ஆணையத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த அதிகரிப்பு தொற்று அல்லாத நோய்களின் (NCD) சுமை அதிகரிப்பிலிருந்து வருகிறது. புற்றுநோய்களின் எண்ணிக்கைகள் (148 சதவீதம்), டைப்-2 நீரிழிவு நோய் (229 சதவீதம்) மற்றும் சுவாச நோய்கள் (40 சதவீதம்) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பணக்காரர்களாக மாறலாம். ஆனால், அவசியம் ஆரோக்கியமானதாக இருக்காது. உலகளவில் எட்டுப் பேரில் ஒருவர் தற்போது உடல் பருமனுடன் வாழ்கிறார் என்பதை உலக உடல் பருமன் அட்லஸ்-2025 (World Obesity Atlas) காட்டுகிறது.


ஆய்வுகள் உடற்பருமன் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கு இடையே நேரடித் தொடர்பு இருப்பதை காட்டுகின்றன. இது உயர்வான கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) பரிந்துரைத்த ஆரோக்கியமான உணவு அளவுகளுடன் HCES நுகர்வு அளவுகளை ஒப்பிடும்போது, அனைத்து பத்திலொரு பிரிவுகளிலும் (deciles) மற்றும் கிராமப்புற/நகர்ப்புற துறைகளிலும் தானியங்களிலிருந்து வர வேண்டிய ஆற்றல் தேவை (நாளொன்றுக்கு எத்தனை கிராம் எனும் அடிப்படையில்) போதுமான அளவு பூர்த்தி செய்யப்படுவதாகத் தெரிகிறது, ஆனால் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் நுகர்வில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை உள்ளது. காய்கறி நுகர்வு வருமானம் அதிகரித்தாலும், நாளொன்றுக்கு 400 கிராம் என்ற இலக்கை எட்டுவதில் இன்னும் பெரிய இடைவெளி உள்ளது. சராசரியாக, பரிந்துரைக்கப்பட்ட 70 கிராம்/நாளை ஒப்பிடுகையில் புரத உட்கொள்ளல் சுமார் 20 சதவீதம் (14 கிராம்/நாள்) குறைவாக உள்ளது; இந்தப் பற்றாக்குறை ஏழ்மையான முதல் பத்தாம் பிரிவில் சுமார் 26 கிராம்/நாள் வரையிலும், பணக்காரர்களான பத்தில் ஒரு கடைசிப் பிரிவில் (decile) சுமார் 5 கிராம்/நாள் வரையிலும் இருப்பதாகக் காணப்படுகிறது.


நிலையான உணவுகள் குறித்த உலகளாவிய உரையாடல்கள் விலங்கு சார்ந்த உணவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றன. அவை தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகரிப்பதையும் ஊக்குவிக்கின்றன. இந்த மாற்றம் உணவு உற்பத்தியின் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது 2050-ம் ஆண்டுக்குள் மீத்தேன் வெளியேற்றத்தை 36 சதவீதமும், நைட்ரஸ் ஆக்சைடை 35 சதவீதமும் குறைக்கலாம். அதேநேரத்தில், உணவு விலைகளை 24 சதவீதம் வரையிலும், வீட்டு உணவு செலவினங்களை 23 சதவீதம் வரையிலும் குறைக்கலாம்.


இருப்பினும்கூட, ஆதாரங்களுக்கும், செயலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க கடினமான உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும். இந்தியர்கள் சாப்பிடுவதிலிருந்து மட்டும் நெருக்கடி வருவதில்லை. இது ஆரோக்கியமற்ற தேர்வுகளை எளிதாகவும் மலிவாகவும் மாற்றும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து வருகிறது. நுகர்வு முறைகளை மாற்றுவது பல முனைகளில் தைரியமான, ஒருங்கிணைந்த தலையீடுகளைக் கோருகிறது. மிகை-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ultra-processed foods) மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான உத்திரீதியிலான வரிவிதிப்பு போன்ற நிதி நடவடிக்கைகள், நுகர்வோர் தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய அதிகாரம் அளிக்கும் பொட்டலத்தின் முன்புற அடையாள சீட்டு (Front-of-package labels (FOPL)) உடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், விநியோகப் பக்கத்தை மாற்றாமல் ஒழுங்குமுறை மட்டும் வெற்றிபெற முடியாது. போட்டி விலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பயிரிட சிறு விவசாயிகளுக்கு இலக்குக்கான ஆதரவு, பயிற்சி, வளங்கள் மற்றும் சந்தை இணைப்புகள் தேவை. மீளுருவாக்கம் செய்யும் விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தி, ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை வளர்ப்பதற்காக விவசாயிகளுக்கு வெகுமதி அளிக்க தீங்கு விளைவிக்கும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான மானியங்கள் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டும். குறைந்த கிளைசெமிக் (glycemic), அதிக புரத அரிசி, அதிக மகசூல் தரும் தினை, பருப்பு வகைகள் ஆகியவற்றின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் அளவிடுதல் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்வது சமமாக முக்கியமானது. கிராமப்புறங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான குளிர்பதன சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் வசதிகளை விரிவுபடுத்துதல். புரதத்தின் பயன்படுத்தப்படாத மூலங்கள் (குறிப்பாக நீர்வாழ் மற்றும் கடல் மூலங்களிலிருந்து) ஆராயப்பட்டு கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.

உணவு நிறுவனங்கள் இந்திய இரசனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் பொருந்தக்கூடிய மலிவு விலையில், கலாச்சாரரீதியாக பொருத்தமான, ஆரோக்கியமான தயாரிப்புகளில் முதலீடு செய்யவேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவை. அரசாங்கம், தொழில், விவசாயிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது எளிதாகும் வகையில் அவர்கள் உணவுமுறையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.


சுவாமிநாதன் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் WHO-வின் முன்னாள் தலைமை விஞ்ஞானி. சிங் IFPRI-யில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர். சுப்பிரமணியம் ஐஐஎம் அகமதாபாத்தில் உள்ள வேளாண் மேலாண்மை மையத்தில் ஆராய்ச்சி மாணவர் ஆவார்.

Original link:

What Indians eat, and how being unhealthy is easier and cheaper?


Share: