உலகெங்கிலும் உள்ள நாடுகள்மீது டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, அமெரிக்க அதிபர் எவ்வாறு பதிலளித்தார்? பரஸ்பர வரிகள் (reciprocal tariffs) நீக்கப்படுமா? அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு 50% வரி ஏன் தொடர்கிறது?
தற்போதய செய்தி :
பிப்ரவரி மாதம் இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகளுக்கு முக்கியமான மாதமாக இருந்தது. இரு நாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்தன. அதேசமயம், அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகளை ரத்து செய்தது. மேலும், இந்தியாவின் பேச்சுவார்த்தைக் குழு வாஷிங்டனுக்கான தனது பயணத்தை காலவரையின்றி ஒத்திவைத்தது. அதே நேரத்தில், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அவர்களை புதுடெல்லியில் சந்தித்தார். இவை அனைத்தும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க வரிகளுக்கு என்ன நடக்கும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
அமெரிக்க உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி, இந்தியா உட்பட பிற நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்தார். இந்த சட்டத்தின்கீழ், அறிமுகப்படுதபட்ட வரிகளை பிப்ரவரி 20 அன்று அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்தச் சட்டங்களின்கீழ் வரிகளை விதிக்கும் முன் அமெரிக்க அதிபருக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. பெரும்பாலான நாடுகளுக்கு, 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து டிரம்ப் விதித்த 'பரஸ்பர வரிகளை' நீக்குவது இதில் அடங்கும். பிப்ரவரி 6-ஆம் தேதி, ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது விதித்த 25% அபராத வரிகளை டிரம்ப் நீக்கினார். இது இந்தியாவின் மொத்த வரியை 50%-லிருந்து 25%-ஆகக் குறைத்தது. இரு நாடுகளும், மீதமுள்ள 25% பரஸ்பர வரிகள் இடைக்கால ஒப்பந்தத்தின்கீழ் 18%-ஆகக் குறைக்கப்படும் என்று கூட்டு அறிக்கையின் மூலம் தெரிவித்தன. இருப்பினும், அமெரிக்கா அவ்வாறு செய்வதற்கு முன்பு, உச்சநீதிமன்ற வரிகளை ரத்து செய்தது.
டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினை என்ன?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக வலைதள பதிவுகள் மற்றும் உரைகளில் கடுமையாக விமர்சித்தார். மேலும், மற்ற சட்டங்களைப் பயன்படுத்தி பிற நாடுகளின் மீது மீண்டும் வரி (tariff) விதிக்க முயன்றார். தற்போதைய நிலவரப்படி, ஜனவரி 24 முதல் 150 நாட்களுக்கு அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிரம்ப் இதை அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 15% வரம்பாக உயர்த்துவதாகக் கூறியுள்ளார். அவ்வாறு இன்னும் அவர் செய்யவில்லை. கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா விதித்துள்ள பல வரிகள் நடைமுறையில் உள்ளன. இதில் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு 50% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், $800-க்கு குறைவான மதிப்புள்ள பொருட்களுக்கு நாடு சார்ந்த வரியும் (country-specific tariffs) விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் எஃகு மற்றும் அலுமினியம் கணிசமான பகுதியை உருவாக்குவதாலும், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மின்வணிகத் தளங்களைப் பயன்படுத்தி $800-க்கும் குறைவான விலையுள்ள பொருட்களுக்கு வரி விலக்கு பெற்றன.
இந்தியாவில் இருந்து மானிய விலையில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்க சூரிய மின்சக்தி நிறுவனங்களைப் பாதிக்கின்றன என்ற அமெரிக்கவின் ஆரம்ப கட்ட ஆய்வை தொடர்ந்து, பிப்ரவரி 24 அன்று அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி தொகுதிகளுக்கு (solar modules) 126% வரியை விதித்தது.
மற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படும் தாக்கம் என்ன?
அமெரிக்காவுடன் ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை வெளிப்படையாகக் கூறியது. "சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (International Emergency Economic Powers Act (IEEPA)) குறித்து அளித்த சமீபத்திய தீர்ப்புக்கு பிறகு, அமெரிக்கா எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை முழுமையாக விளக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (European Commission) தனது அறிக்கையில் கூறியது. மேலும், “இப்போது நிலவும் சூழ்நிலை, இரு தரப்பும் ஒப்புக்கொண்டபடி ‘நியாயமான, சமநிலையான, இருதரப்புக்கும் பயனளிக்கும்’ வர்த்தகம் மற்றும் முதலீட்டை முன்னேற்ற உதவியாக இல்லை” என்றும் தெரிவித்தது. இது ஆகஸ்ட் 2025-ல் வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம்–அமெரிக்கா கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜப்பான் அதிகாரிகளும் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்தனர். ஜப்பான் அதிகாரிகளும் இந்த ஒப்பந்தம் குறித்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அவர்களது கூறுப்படி, ஜப்பான்–அமெரிக்கா ஒப்பந்தம் முக்கியமாக கார்வரிகள் (automobile tariffs) மீது கவனம் செலுத்தியதால், உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதற்கு பாதிப்பு வரவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய ஆர்வமாக இல்லை.
ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்க வேண்டும் என்றும், ஆஸ்திரேலிய பொருட்களை அமெரிக்காவிற்குள் வரி இல்லாத இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஏனெனில், ஆஸ்திரேலியா அமெரிக்கப் பொருட்களின் வரி இல்லாத இறக்குமதியை அனுமதிப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது.
இந்தியா எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது?
பல்வேறு நேர்காணல்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில், கோயல் இடைக்கால ஒப்பந்தம் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் முறையாக கையெழுத்திடப்படும் என்றும், ஏப்ரல் தொடக்கத்தில் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறியிருந்தார். இருப்பினும், இந்த அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பே வெளியிடப்பட்டன. இந்தத் தீர்ப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்ற நாடுகள் மற்றும் குழுக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளுடன் ஒப்ப்பீட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. “நாங்கள் நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் வரி தீர்ப்பை கவனித்துள்ளோம், அது தொடர்பாக டிரம்ப் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றியுள்ளார். அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடபட்ருந்தது.
மார்ச் மாத நடுப்பகுதியில் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வகையில், அதன் வரையறைகளை இறுதி செய்வதற்காக இந்தியக் குழு பிப்ரவரி 23-25 தேதிகளில் வாஷிங்டனில் இருக்க திட்டமிட்டது. அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த ஒப்பந்தம் பற்றி குறிப்பிடவில்லை என்றாலும், "சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு தரப்பினருக்கும் நேரம் கிடைத்தபிறகு, இந்திய தலைமை பேச்சுவார்த்தையாளர் மற்றும் குழுவின் முன்மொழியப்பட்ட பயணம் திட்டமிடப்படும் என்று இரு தரப்பினரும் கருதுகின்றனர் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கப் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், கோயல் பிப்ரவரி 26 அன்று புது டெல்லயில் லுட்னிக் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இருவரையும் வரவேற்றார். இது ஒரு "பயனுள்ள" சந்திப்பாக மாறியது என்று கோயலின் வார்த்தைகளில் தெரிந்தது. பேச்சுவார்த்தையாளர்களின் அதிகாரப்பூர்வ கூட்டத்திற்கான புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நேரத்தில், இந்தியாவைவிட ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு முக்கியமானது. ஏனெனில், ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரே இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீதான அதன் வரிகளைக் குறைக்க முடியும். அதே நேரத்தில், ரஷிய எண்ணெய் இறக்குமதி மற்றும் மேலும் அமெரிக்க பொருட்களை வாங்குவது போன்ற பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்கா வரி அச்சுறுத்தல் (tariff threat) தற்போதைக்கு நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா?
வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து, டிரம்ப் நிர்வாகம் ‘எதுவும் மாறவில்லை’ என்று தெளிவாகக் கூறியுள்ளது. டிரம்ப் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் செய்த நாடுகளை, அவற்றை மதிக்குமாறும் “விளையாடாதீர்கள்” என்றும் எச்சரித்துள்ளார். “இல்லையெனில் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும். “இந்த அபத்தமான உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் ‘விளையாட’ விரும்பும் எந்த நாடும், குறிப்பாக பல ஆண்டுகளாகவும் தசாப்தங்களாகவும் அமெரிக்காவை ‘ஏமாற்றி’ வந்துள்ள நாடுகள், அவர்கள் சமீபத்தில் ஒப்புக்கொண்டதை விட அதிக வரி மற்றும் அதைவிட மோசமானவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் Truth சமுக வலைத்தளப் பதிவில் கூறினார். அதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்: “ஜனாதிபதியாக, வரிகளுக்கு காங்கிரஸ் ஒப்புதல் பெறுவதற்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை. அது பல வடிவங்களில் நீண்டகாலத்திற்கு முன்பே பெறப்பட்டுவிட்டது! அவை இப்போது இந்த அபத்தமான மற்றும் மோசமாக உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன!”
அமெரிக்காவின் பார்வையில் இருந்து எதுவும் மாறவில்லை என்றும், மற்ற நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது என்றும் லுட்னிக் பேசினார். உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் வரிகள் தொடரும் என்று ஒரு வருடமாக அமெரிக்க வர்த்தக நட்பு நாடுகளிகளிடம் கூறி வருவதாக லுட்னிக் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டார். அதிபரின் கொள்கை தொடரும் என்றும் அவர் கூறினார். இது போன்ற காரணிகளால் தான் நீதிமன்ற வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தங்கள் நியாயமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்றும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
Original article : Where does the India-U.S. trade deal stand? -T C A Sharad Raghavan