2027-ஆம் நிதியாண்டிற்கான நிதிப்பற்றாக்குறை இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3%-ஆகக் குறைக்க வேண்டுமானால், அடுத்த ஆண்டில் நாட்டின் பெயரளவு வளர்ச்சி (Nominal Growth) 13-14%-ஆக இருக்க வேண்டும். இது தற்போதைய நிதிநிலைத் திட்டத்தில் கணிக்கப்பட்டுள்ள 10% வளர்ச்சியைவிட அதிகமாகும்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) வெளியிட்டுள்ள புதிய திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகள், இந்தியப் பொருளாதாரம் குறித்த நமது பார்வையில் சில முக்கியமான மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2023–24-ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, முன்பு கணிக்கப்பட்டதைவிட இப்போது குறைவாக உள்ளது. அதாவது பழைய புள்ளிவிவரங்களின்படி 9.2% ஆக இருந்த வளர்ச்சி, புதிய கணக்கீட்டின்படி 7.2%-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், அடுத்த நிதியாண்டிற்கான பெயரளவு வளர்ச்சி 13-14%-ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நிதிநிலைத் திட்டத்தில் கணிக்கப்பட்ட 10% என்ற இலக்கைவிட அதிகம் என்கின்றனர்.
இருப்பினும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ரூபாய் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் மாற்றமே ஆகும். எனவே, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையினால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்ள நாம் அந்த ரூபாய் மதிப்பையே கவனிக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால், இந்தியப் புள்ளியியல் அமைச்சகம் இதற்கு முன்பு கணக்கிட்டிருந்ததைவிட, இந்தியப் பொருளாதாரம் ஓரளவிற்குச் சிறியதாகவே இருக்கிறது.
2022-23 ஆம் ஆண்டை விலைகளுக்கான அடிப்படை ஆண்டாகக் கொண்டு வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவர வரிசை, 2025-26 மற்றும் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3% முதல் 4% வரை குறைத்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவு ஆதாரங்கள் மற்றும் கணக்கீட்டு முறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த மதிப்புக் குறைப்பிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், புதிய புள்ளிவிவர முறையின்கீழ் பொருளாதாரத்தின் அளவு முந்தைய கணக்கீடுகளைவிடச் சற்றே குறைவாகக் காட்டப்படுகிறது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) செயலாளர் சவுரப் கார்க் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், பொதுவாக தரவுத்தளங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படும்போதுதான் புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் இந்தத் தரவுத்தளங்கள் மேம்படுத்தப்படும்போது, அவற்றில் செய்யப்படும் திருத்தங்கள் — அவை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும் — படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்பதைக் குறிப்பிட்டார். சமீபகாலமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைக் கவனித்தால் இது தெளிவாகத் தெரியும்; அங்கு தரவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பெரும்பாலும் 2% முதல் 4% வரை அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீடுகளில் செய்யப்படும் மாற்றங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. உதாரணமாக, 2024-ஆம் ஆண்டில் நைஜீரியா உலகின் 58-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது. ஆனால், ஜூலை 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 'மறுஅடிப்படை கணக்கீடு' (Rebasing exercise) மூலம், அதன் அடிப்படை ஆண்டு 2010-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக, 2024-ஆம் ஆண்டிற்கான நைஜீரியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் மதிப்பு 243 பில்லியன் டாலராக மாற்றியமைக்கப்பட்டது. இது முந்தைய மதிப்பைவிட சுமார் 50 பில்லியன் டாலர் அல்லது 30% அதிகம் என்கின்றனர்.
நைஜீரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒரு குறிப்பிட்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டபோது, அதன் மதிப்பு அதிரடியாக உயர்ந்தது இது முதல் முறையல்ல. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அடிப்படை ஆண்டை 1990-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுக்கு மாற்றியபோது, 2014-ஆம் ஆண்டில் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 89% உயர்ந்து 510 பில்லியன் டாலராக உயர்ந்தது; இதன் மூலம் நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் நைஜீரியப் பணமான 'நைரா' (naira), அமெரிக்க டாலருக்கு நிகரான தனது மதிப்பில் முறையே 49% மற்றும் 41% என பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நாணய மதிப்பிழப்பு காரணமாக, அமெரிக்க டாலர் கணக்கீட்டில் அந்நாட்டின் பொருளாதாரம் கணிசமாகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் அனுபவம் ஓரளவுக்கு இதேபோலத்தான் இருந்திருக்கிறது.
நிதி ஒருங்கிணைப்பு
பொருளாதாரத்தின் அளவில் ஏற்படும் மாற்றம், தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.
பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 2025–26-ஆம் நிதியாண்டிற்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.4%-ஆகக் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கணக்கீடு பழைய புள்ளிவிவரத் தொடரின்கீழ் ஜனவரி மாதம் வெளியான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. தற்போது புதிய புள்ளிவிவரத் தொடரின்கீழ் வெள்ளிக்கிழமை வெளியான இரண்டாவது மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (Nominal GDP) 3.3% குறைக்கப்பட்டு ₹345 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய குறைக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் பயன்படுத்தினால், 2025–26-ஆம் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை சற்று உயர்ந்து 4.5%-ஆக மாறுகிறது. இதேபோல் முந்தைய ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புகளும் கீழ்நோக்கி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், நிதிப்பற்றாக்குறை விகிதங்கள் 2022–23-ஆம் நிதியாண்டுக்கு 6.5%-லிருந்து 6.7%-ஆகவும், 2023–24-ஆம் நிதியாண்டுக்கு 5.5%-லிருந்து 5.7%-ஆகவும், 2024–25-ஆம் நிதியாண்டுக்கு 4.8%-லிருந்து 4.9%-ஆகவும் அதிகரித்துள்ளன.
அரசு தற்போது பின்பற்றி வரும் நிதிக் கொள்கைப் பாதையில் (fiscal trajectory) இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீட்டுத் திருத்தங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார். அதே வேளையில், இந்தத் திருத்தங்கள் குறித்த விவரங்களையும் அவர் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2026-27-ஆம் நிதியாண்டிற்கான நிலைமை சற்று சிக்கலானதாகவே உள்ளது. இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.3%-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது ரூபாய் மதிப்பில் 16.96 லட்சம் கோடி ஆகும். அரசாங்கம் தனது பற்றாக்குறையை இதே ரூபாய் மதிப்பில் நிலைநிறுத்தினாலும், அந்த 4.3% இலக்கை அடைய வேண்டுமானால் அடுத்த ஆண்டு நாட்டின் பெயரளவு வளர்ச்சி 13–14%-ஆக இருக்க வேண்டும் என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' கணித்துள்ளது. இது நிதிநிலைத் திட்ட அறிக்கையில் கணிக்கப்பட்ட 10% வளர்ச்சியைவிட அதிகம் என்கின்றனர். பாரத ஸ்டேட் வங்கியின் முதலீட்டு வங்கி பிரிவின் கூற்றுப்படி, ஒருவேளை 2026-27-ஆம் நிதியாண்டில் உண்மையான வளர்ச்சி பொருளாதார தலைமை ஆலோசகரின் திருத்தப்பட்ட கணிப்பான 7–7.4%-ஐ எட்டினாலும்கூட, இந்த இலக்கை அடைவது கடினம் என்கின்றனர். எனவே, அரசாங்கம் தனது நிதி இலக்குகளை அடைய கடன் வாங்கும் திட்டங்களில் தெளிவான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று வெங்கடேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய நிதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 'கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கும்' (debt-to-GDP ratio) இதே நடைமுறை பொருந்தும் என்கின்றனர். பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌம்ய காந்தி கோஷ் கணித்துள்ளபடி, மத்திய அரசின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 2025-26 நிதியாண்டில் 56.2%-லிருந்து 58.1%-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27-ஆம் நிதியாண்டில் நாட்டின் பெயரளவுப் பொருளாதாரம் 10% அளவிற்கு வளர்ச்சியடைந்தாலும், கடன்-உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 57.5% என்ற அளவிலயே இருக்கும் என்று கணக்கீடுகள் காட்டுகின்றன. இது நிதிநிலைத் திட்டத்தில் மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்த 55.6% என்ற இலக்கைவிட அதிகமாகும்.
$4 டிரில்லியன் பொருளாதாரம்
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகும். அந்தப் பயணத்தின் ஒரு முக்கியக் கட்டமாக, இந்தியாவின் பொருளாதாரத்தை 4 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டியுள்ளது. ஆனால், புதிய புள்ளிவிவர வரிசையின்படி பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருவது, இந்த இலக்கை எட்டுவதை மேலும் சவாலானதாக மாற்றுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.98-ஆக இருந்த நிலையில், 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 டிரில்லியன் டாலராக இருந்தது. இதே மாற்று விகிதம் 2026–27-லும் நீடித்து, நிதிநிலைத் திட்டத்தில் கணிக்கப்பட்டபடி பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 10% வளர்ச்சி அடைந்தால், அடுத்த ஆண்டே இந்தியப் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எளிதாகக் கடந்துவிடும் என்று நாகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் அது ரூபாயின் பணமாற்று மதிப்பையும் பெருமளவில் சார்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக, நைஜீரியா நாட்டின் பொருளாதாரத்தில் நடந்தது போல, ஒரு நாட்டின் நாணயம் பலவீனமடைந்தால், அமெரிக்க டாலர் மதிப்பில் அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்துவது கடினம் என்கின்றனர். இந்திய ரூபாயின் மதிப்பு 2025–26-ஆம் நிதியாண்டில் கடுமையாக சரிந்திருந்தாலும், புதிய வர்த்தக ஒப்பந்தங்களால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தால், அடுத்த நிதியாண்டில் நிலைமை மேம்பட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Original article : New GDP series makes meeting fiscal targets, $4-trillion economy aim more difficult. -Siddharth Upasani