பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் விரைவான நீதியை எவ்வாறு முன்னிலைப்படுத்துகின்றன? -ஃபர்கான் கமர், சமீர் அகமது கான்

 புதிய விதிகளில் உள்ள தெளிவற்ற தன்மையைப் பயன்படுத்தி, விளிம்புநிலை பிரிவினர் உயர்சாதியினருக்கு எதிராக இந்த ஒழுங்குமுறையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், இந்த ஒழுங்குமுறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


உயர்கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) கொண்டு வந்த 2026-ஆம் ஆண்டு விதிமுறைகளுக்கு எதிராகப் பொதுப் பிரிவைச் சேர்ந்த சில மாணவர்களும், ஒரு சாதுக்கள் அமைப்பும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், இந்த விதிமுறைகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் கூறி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.


விதிமுறைகள் தெளிவாக இல்லாத காரணத்தினால், விளிம்புநிலை மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி மேல்சாதியயினருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர். இது சமூகத்தில் நிலவும் ஆழமான அவநம்பிக்கையையும் பாதுகாப்பற்ற உணர்வையுமே காட்டுகிறது. அதாவது, ஒரு பிரிவினருக்கு நீதி கிடைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றொரு பிரிவினருக்கு அநீதியாக முடிந்துவிடுமோ என்ற கவலையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


விரைவான நீதியால் ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கை


இந்த ஒழுங்குமுறை ஒரு நிதர்சனமான உண்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, பாலினம் மற்றும் மதம் சார்ந்த பாகுபாடுகள் அரிதானதாகவோ அல்லது எப்போதோ ஒருமுறை நடப்பதாகவோ இல்லை, மாறாக இத்தகைய சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. மேலும், புகார்களைத் தீர்க்கும் முறைகள் மிகவும் மந்தமாகவும், ஒருதலைப்பட்சமாகவும், சில நேரங்களில் வெறும் பெயரளவுக்காகவும் மட்டுமே செயல்படுவதால், விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படும்  சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தப் புதிய ஒழுங்குமுறையை கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட இத்தகைய தலையீடு அவசியம் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், நீதி வழங்குவதில் வேகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தவறான பாதையாக அமையக்கூடும் என்பதே அவர்களின் கவலையாக உள்ளது. குறிப்பாக அடுக்குமுறை படிநிலைகள், மறைமுக அதிகார அமைப்புகள் மற்றும் சமமற்ற செயல்திறன் கொண்ட நிறுவனங்களில், வேகம் மற்றும் நீதிக்கு இடையிலான தொடர்பு மிகவும் சிக்கலானதாகப் பார்க்கப்படுகிறது. நீதி கிடைப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அது தன் அர்த்தத்தை இழந்துவிடும்; அதே சமயம், அது மிக விரைவாக வழங்கப்பட்டால், சரியான தீர்ப்பு வழங்கும் தன்மையை முழுமையாக இழக்க நேரிடும் என்கின்றனர். 


2026-ஆம் ஆண்டு விதிமுறைகள் உடனடி நடவடிக்கை, கடுமையான பொறுப்புணர்வு மற்றும் மௌனம் அல்லது செயலற்றத் தன்மைக்கான பின்விளைவுகளை வலியுறுத்துகின்றன. புகார்கள் உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், குழுக்கள் விரைவாகக் கூட வேண்டும் மற்றும் விசாரணைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும்; வேகமும் நீதியும் இயற்கையாகவே ஒன்றையொன்று ஆதரிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அணுகுமுறை அமைந்துள்ளது. இருப்பினும், அவசரம் என்பது தெளிவான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் திணிக்கப்படும்போது, விரைவான முடிவுகள் ஆழமான சிந்தனையை முடக்கிவிடும் என்பதை உலகெங்கிலும் உள்ள நீதி அமைப்புகள் காட்டுகின்றன. தெளிவான பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி அவசரத்தன்மை திணிக்கப்படும்போது, ஆழமான சிந்தனைக்குப் பதிலாகத் அவசர முடிவுகள் எடுக்கப்படும் சூழல் உருவாகிறது. முறையான நடைமுறைகள் இல்லாத நிலையில், கடுமையான காலக்கெடுவும் மத்திய கண்காணிப்பும் பயத்தை ஏற்படுத்துகின்றன. புகார்கள் மிக விரைவாகவும் அநீதியாகவும் கையாளப்பட்டால், தங்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம் குறித்து நிறுவனங்கள் கவலை கொள்கின்றன. புதிய விதிமுறையானது, முறையான ஆய்வு மற்றும் நடைமுறை நடவடிக்கைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை கல்வி நிறுவனத்தின் தாமதமாகவே கருதுகிறது. விரைவான நடவடிக்கையை உறுதி செய்வதற்காக, அங்கீகாரத்தை ரத்து செய்தல் மற்றும் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பறித்தல் போன்ற கடுமையான விளைவுகளைக் காட்டி இது கல்வி நிறுவனங்களை அச்சுறுத்துகிறது. இருப்பினும், இந்த மாற்றம் நியாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது அதன் நோக்கத்தை மட்டும் பொறுத்தது அல்ல, மாறாக அந்த அமலாக்க அமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அமையும் என்கின்றனர். 


தெளிவற்ற நடைமுறை


2010-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சந்தித்த அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது. வளாகங்களில் நடக்கும் முறையற்ற செயல்கள்மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தினால், பல கல்வி நிறுவனங்கள் வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தன. ஆனால், தெளிவற்ற ஆதாரங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க போதிய உரிமைகள் வழங்கப்படாமை மற்றும் விசாரணை முடிவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது போன்ற காரணங்களைக் சுட்டிக்காட்டி நீதிமன்றங்கள் பின்னாளில் அந்த நடவடிக்கைகளை நிராகரித்தன. இந்த எதிர்ப்பு பாதுகாப்பான சூழல் தேவையில்லை என்பதற்காக அல்ல, மாறாக அந்த விசாரணை முறை மிகவும் பலவீனமாக இருந்ததாலேயே உருவானது.


விரைவாகவும் ஆனால் தெளிவின்றியும் வழங்கப்படும் நீதி நம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்கின்றனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகள் அதிகாரத்தைப் பிரித்து வைத்துள்ள விதம் இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. அந்த விதிமுறைகள் குற்றங்களையோ அல்லது அவற்றுக்கான தண்டனைகளையோ தெளிவாக வரையறுக்கவில்லை. விசாரணைகள் ‘உள்நிலை சமத்துவக் குழுக்களால்’ (Internal Equity Committees) மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தண்டனைகளோ ஏற்கனவே உள்ள நிறுவன அல்லது ஒழுங்குமுறை விதிகளின்கீழ் வழங்கப்படுகின்றன. அங்கீகாரம் அல்லது நிதி உதவியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினால், பல்கலைக்கழகங்கள் ஒரு வழக்கின் தன்மையை நிதானமாக ஆராய்வதற்குப் பதிலாக, விரைவான நடவடிக்கையை வெளிப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தக்கூடும் என்கின்றனர். இந்தச் சூழல் ஒருவித அச்ச உணர்வை உருவாக்குகிறது. ஒழுங்குமுறை அமைப்புகளைப் பொறுத்தவரை, அச்சம் என்பது ஒருபோதும் நீதியை நிலைநாட்ட உதவாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


சலுகைகளை வழங்குதல்


இந்த நிலையில், சட்டப்பூர்வமான வடிவமைப்புகள் சமூக எதார்த்தத்துடன் மோத வேண்டிய சூழல் உருவாகிறது. ஒரு பாதிப்பைப் பதிவு செய்வதும், அதை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொழியில் வெளிப்படுத்துவதும், விசாரணைக் குழுக்களைக் கையாள்வதும் அனைவருக்கும் சமமானதாக இருப்பதில்லை. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையினர் தங்களின் அன்றாடப் பிரச்சனைகளை நிர்வாகம் அங்கீகரிக்கக்கூடிய புகார்களாக மாற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதே சமயம், நிறுவனக் கலாச்சாரத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்—சில சமயம் இடஒதுக்கீடு பெற்ற பிரிவினருக்குள்ளேயே இருக்கும் ஆதிக்கக் குழுக்கள்—இந்த நடைமுறைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு அமைதியான முரண்பாட்டை உருவாக்குகிறது: விளிம்புநிலை மக்களின் குரல்களைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, இறுதியில் நிறுவன நடைமுறைகளில் அதிகப் பரிச்சயமும் வசதியும் கொண்டவர்களுக்கே சாதகமாக முடிகிறது. இந்த அழுத்தங்கள் வகுப்பறைகளிலும் எதிரொலிக்கின்றன. முறையான வழிமுறைகள் இன்றி கல்விசார் முடிவுகள் ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உள்ளாக்கப்படும்போது, ஆசிரியர்கள் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க நினைக்கிறார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களைக் மென்மையாக்குகிறார்கள், கடினமான உரையாடல்களைத் தவிர்க்கிறார்கள், மற்றும் மதிப்பீடுகளைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறார்கள். காலப்போக்கில், நிறுவனங்கள் இந்தச் சிக்கல்களைக் கையாள மாற்று வழிகளைக் கண்டறிகின்றன. குழுக்கள் அதிகரிக்கின்றன, காகிதப் பணிகள் (paperwork) வளர்கின்றன, மேலும் விதிகளுக்குக் கீழ்ப்படிதல் என்பது வெறும் பெயரளவுச் செயலாக மாறுகிறது. அறிஞர்கள் இதை "இணக்க நாடகம்" (compliance theatre) என்று அழைக்கிறார்கள். அதாவது நிறுவனங்கள் அவற்றின் அடிப்படை அதிகார படிநிலைகளை மாற்றாமல், தங்களைச் சீர்திருத்திக் கொண்டது போலப் போலித் தோற்றத்தை ஏற்படுத்துவதையே இது குறிக்கிறது.



பல்கலைக்கழகங்களில் நீதி என்பது ஏதோ ஒரு நிகழ்விற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றுவது மட்டும் கிடையாது என்றும் அது நீண்ட மற்றும் சவால்கள் நிறைந்த ஒரு உரையாடலாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். அதில் வேகம் தேவைப்படும் அதே வேளையில், துல்லியம், பொறுமை மற்றும் தவறை மறுபரிசீலனை செய்யும் மனப்பக்குவமும் அவசியமாகிறது.  இந்தச் சமநிலை இல்லையென்றால், நாம் எதிர்பார்க்கும் சமூகநீதி என்பது மெல்ல மெல்ல மறைந்து காணமால் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


Original article : How UGC rules prioritise quick justice? -Furqan Qamar, Sameer Ahmad Khan

Share: