இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85%-க்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் நிலையில், புவிசார் அரசியல் சார்ந்த தாக்கங்கள் இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் வெளிப்படுத்தியுள்ளது. மாறாக, பலதரப்பட்ட எரிசக்தி சந்தையில், இந்தியாவின் பலம் முழுமையான சுயசார்பில் இல்லை, மாறாக பல்வேறு மாற்று வாய்ப்புகளைப் பெற்றிருப்பதில்தான் உள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள், உலகளாவிய அரசியல் அதிர்வுகள் எவ்வளவு வேகமாக இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் குறிப்பிட்டதாவது, தற்போதைய புவிசார் பொருளாதார நெருக்கடியானது 1973, 1979 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒருங்கிணைந்த பாதிப்புகளைவிடவும் கடுமையானது என்று விவரித்துள்ளார்.
மோதலின்போது, சுமார் 120 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, பிரென்ட் கச்சா எண்ணெயின் (Brent crude oil) விலை ஒரு பீப்பாய்க்கு (barrel) 109.03 டாலராக உயர்ந்தது. இது உள்நாட்டு அளவில், எரிசக்தி விநியோகச் சங்கிலிகளில் காணப்பட்ட இடையூறுகளின் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதாரம் 2026-ஆம் நிதியாண்டில் 7.4%-ஆக இருந்த வளர்ச்சியிலிருந்து 2027-ஆம் நிதியாண்டில் 6.5%-ஆகக் குறையும் என்றும், பணவீக்கம் 2.3%-லிருந்து 4.4%-ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எரிசக்திப் பாதுகாப்பை இனி மிகக் குறைந்த விலையில் எரிபொருளை வாங்குவது என்று மட்டும் வரையறுக்க முடியாது. அது இப்போது விநியோகத் தடைகளைத் தாங்கும் திறன், எரிபொருள் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாப்பது ஆகியவற்றையே சார்ந்துள்ளது.
பழைய எரிசக்தி சந்தை முறையின் வீழ்ச்சி
ரஷ்யா-உக்ரைன் போர், ஏற்கனவே நிலவி வந்த எரிசக்தி சந்தை முறைக்கு விடுக்கப்பட்ட முதல் முக்கிய எச்சரிக்கையாக அமைந்தது. அது, எரிசக்தி மூலத்தை மட்டுமே அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்துகளை அந்தப் போர் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஐரோப்பா ஒரு காலத்தில், தனது எரிவாயு இறக்குமதியில் 45% ரஷ்யாவைச் சார்ந்திருந்தது. 2025-ஆம் ஆண்டளவில், அது 12%-ஆகக் குறைந்தது. ஐரோப்பா இதற்குப் பதிலளிக்கும் விதமாக, வெறும் செயல்திறன் மேம்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, எதிர்கால அபாயங்களிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தியது. 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளின் எரிவாயு நுகர்வு 20% குறைந்தது. அதேநேரத்தில், எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (liquified natural gas (LNG)) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த இறக்குமதி 18 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சராசரி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) முனையங்களின் பயன்பாடு 52%-ஆக மட்டுமே இருந்தபோதிலும், ஐரோப்பா உபரித் திறனைப் பாதுகாப்பிற்கான விலையாக ஏற்றுக்கொண்டது.
உக்ரைன் போர், குழாய் வழி எரிவாயு விநியோகத்தைச் சார்ந்து இருப்பதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தியது என்றால், மேற்கு ஆசியப் போர் கடல் வழிப் போக்குவரத்தைச் சார்ந்து இருப்பதில் உள்ள சிக்கல்களை நிரூபித்தது.
உலகின் கச்சா எண்ணெயில் சுமார் 25% கொண்டு செல்லப்படும் வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய சந்தைகளில் விலையின் மீதான தாக்கங்களை விரைவாகப் பரப்பும் ஒரு மிக முக்கியமான நெருக்கடி நிலையாக மீண்டும் உருவெடுத்துள்ளது.
மற்ற நாடுகள் வெவ்வேறு வழிகளில் தங்களை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன
சீனா, ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 25 மில்லியன் மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) உறுதி செய்துள்ளது. தென் கொரியா ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள கடல்வழிப் பாதைகள் வழியாகக் கொண்டுவரக்கூடிய 273 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைப் பாதுகாத்து வைத்துள்ளது. அதேவேளையில், ஜப்பான் 254 நாட்களுக்கான நுகர்வுத் தேவையாக 470 மில்லியன் பீப்பாய்களை இருப்பு வைத்துள்ளது.
கூடுதல் உற்பத்தித் திறன் காரணமாக, வளைகுடாப் பகுதி ஏற்றுமதியாளர்கள் விலையை நிர்ணயிக்கும் திறனில் பெரும்பகுதியை மீண்டும் பெற்றுள்ளனர். சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)), 2026-ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் தேவை சராசரியாக ஒரு நாளைக்கு 80 கிலோபீல் (kb/d) சுருங்கும் என்று கணித்துள்ளது. இதில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 236 கிலோபீல் (kb/d) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 254 கிலோபீல் (kb/d) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) அல்லாத நாடுகளின் தேவை ஒரு நாளைக்கு 152 கிலோபீல் (kb/d) அதிகரிக்கும். இத்தகைய மந்தமான சந்தை சூழலில், இந்தியாவின் எண்ணெய் தேவை வளர்ச்சி என்பது சந்தைப் போட்டியில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா தனது செயல்பாட்டுச் சுதந்திரத்தை விரிவுபடுத்த எவ்வாறு வியூகம் வகுத்தது?
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகளில் ஏற்படும் இடையூறுகளுக்கான சாத்தியமான அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் உடனடியானது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85%-க்கும் மேலானவற்றை இறக்குமதி செய்கிறது. மேலும், அதன் இறக்குமதிகளில் ஏறக்குறைய 45% 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகவே செல்கிறது.
பல ஆண்டுகளாக, இந்தியா, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயையே பெரிதும் சார்ந்திருந்துள்ளது. இருப்பினும், எண்ணெய் இறக்குமதி செய்யும் பல முக்கிய நாடுகளைவிட, தொடர்ச்சியாக ஏற்பட்ட தாக்கங்களை இந்தியா சிறப்பாகவே சமாளித்துள்ளது. இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடாகத் திகழ்கிறது.
பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பின் (OPEC) கணிப்பின்படி, இந்தியாவின் எண்ணெய் நுகர்வு 2025-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5.74 மில்லியன் பீப்பாய்களாகவும் (mb/d) மற்றும் 2026-ஆம் ஆண்டில் 5.99 mb/d ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சீனாவின் கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 80 kb-ஆக இருக்கும் நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு சுமார் 130 கிலோபீல் (kb) அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கணித்துள்ளது.
சீனாவின் எண்ணெய் தேவை குறைந்து வரும் சூழலில், உலக அளவில் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து வரும் ஒரு சில முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2022-ஆம் ஆண்டிற்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா வெறும் 2% மட்டுமே வழங்கியது. இருப்பினும், 2024-25-ஆம் நிதியாண்டில், சுமார் 36%-ஆக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட இடையூறுகள் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் வரத்து மேலும் அதிகரித்தது.
தற்போது, இந்தியாவின் இறக்குமதிப் பட்டியலில் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் அடங்கியுள்ளன. அதே வேளையில், புவியியல் ரீதியாகப் பல நாடுகளிலிருந்தும் இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. சிதறிக்கிடக்கும் இன்றைய எரிசக்தி சந்தையில், இந்தியாவின் பலம் என்பது தன்னிறைவு நிலைய அடைவதில் மட்டும் இல்லை. மாறாக, பல்வேறு நாடுகளிடமிருந்து எரிசக்தித் தேவையைப் பெறுவதற்கான மாற்று வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பதிலேயே உள்ளது.
உத்தி ரீதியிலான ஆதாயங்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியிலான அபாயங்கள்
இந்தியா அடுத்தடுத்த தாக்கங்களை நன்கு சமாளித்துள்ளது. முதலாவதாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பது மிக அதிகமாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டில் இது 89.4%-ஐ எட்டியது. இந்தக் காலகட்டத்தில், இந்தியா உள்நாட்டில் 28.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை மட்டுமே உற்பத்தி செய்தது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள், சரக்குக் கட்டணங்கள் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து கவலையளிப்பதாக உள்ளன.
இரண்டாவதாக, புவியியல் அமைப்பு இன்னும் வியூகங்களைக் கட்டுப்படுத்துகிறது. 2026-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாக வளைகுடா கடல் வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. மேலும், 'ஆபரேஷன் சங்கல்ப்' (Operation Sankalp) நடவடிக்கையின்கீழ், 97,000 மெட்ரிக் டன் மொத்த சரக்கை ஏற்றிச் சென்ற இந்திய எரிவாயு கப்பல்களுக்குக் கடற்படைப் பாதுகாப்பு தேவைப்பட்டது. எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தினாலும், கடல்வழியில் உள்ள குறுகிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை கடந்து செல்வதைத் தவிர்க்க முடியாது.
மூன்றாவதாக, எரிசக்தி மாற்றம் புதிய பாதிப்புகளை உருவாக்குகிறது. சூரிய ஆற்றல், மின்கலங்கள், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் விரிவாக்கம் காலப்போக்கில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கக்கூடும். இருப்பினும், எதிர்காலத்தில் லித்தியம், கோபால்ட், நிக்கல், தாமிரம் மற்றும் அரியவகை கனிமங்கள் மீதான இந்தியாவின் சார்புநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னோக்கிச் செல்லும் வழி
முக்கிய கனிமங்களுக்கான இந்தியாவின் சார்புநிலையானது, மற்ற நாடுகளில், குறிப்பாக சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அரியவகை கனிம உற்பத்தியில் 91%-க்கும் அதிகமான கட்டுப்பாட்டை சீனா கொண்டுள்ளது. ஆனால், இந்தியா 2035-ஆம் ஆண்டிற்குத் தேவைப்படும் மின்கலன் தரத்திலான கனிமங்களில் 5%-க்கும் குறைவாகவே உள்நாட்டில் சுத்திகரிப்பு செய்கிறது. கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை இந்தியா திறம்படக் கையாண்டாலும், இத்தகைய தற்காலிக நெகிழ்வுத்தன்மை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பைத் தந்துவிடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, இந்தியா தனது நீண்டகால உத்திமுறை சார்ந்த எண்ணெய் இருப்புக்களை அதிகரிப்பது போக்குவரத்தில் எண்ணெய் சார்ந்த பயன்பாட்டைக் குறைப்பது, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையான கேள்வியானது, இனி நெருக்கடிகளின்போது இந்தியாவால் விநியோகஸ்தர்களை மாற்ற முடியுமா என்பதல்ல. மாறாக, அத்தகைய நெருக்கடிகள் ஏற்படும் போது அதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை நம்மால் குறைக்க முடியுமா என்பதே முக்கியமான கேள்வியாகும்.
தீபான்ஷு மோகன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் டீன் ஆவார். அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் வருகைப் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரும் கல்விசார் ஆய்வாளராகவும் உள்ளார்.
ஸ்ரீசோனியா சுப்ரமணியம் இந்தக் கட்டுரைக்கு பங்களித்துள்ளார். ஸ்ரீசோனியா மற்றும் அதிதி லாசரஸ் இருவரும் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வுகளுக்கான மையத்தில் (CNES) ஆராய்ச்சி ஆய்வாளர்களாக உள்ளனர்.
Original article : India’s energy security amid conflicts. -Deepanshu Mohan