இணைப்பை ஏற்படுத்துதல் : இந்தியாவின் சூரியஒளி மின்உற்பத்தி மற்றும் மின்கலச் சேமிப்பு குறித்து . . .

 சூரிய மின்சக்தி உற்பத்திக்கு ஏற்ப மின்கலச் சேமிப்புத் திறனும் அதிகரிக்கப்பட வேண்டும்.


ஏப்ரல்  மாதம் 25-ஆம் தேதியன்று, இந்தியாவின் மின்சாரத் தேவை 256.1 ஜிகாவாட் என்ற புதிய சாதனை அளவை எட்டியது. இதில், சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்கள் (Solar plants) பிற்பகல் நேரத்தில் தேவைப்பட்ட மின்சாரத் தேவையில் 21.5 சதவீதத்தை பூர்த்தி செய்தன. இது ஒரு வரலாறு காணாத உயர்வாகக் கருதப்படுகிறது. மேலும், சூரியஒளி கிடைக்கும் நேரங்களில், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின்உற்பத்தி அளவானது கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. இது ஒரு சாதனை என்றாலும், முழு நாளின் கணக்கைப் பார்க்கும்போது நிலைமை சற்று சவாலாகவே உள்ளது. ஒரு நாள் முழுவதற்குமான கணக்கீட்டில், சூரியஒளியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவின் பங்களிப்பு வெறும் 10.8% மட்டுமே ஆகும். அதிலும் சூரிய மறைவிற்குப் பிறகு மாலைநேரத் தேவையில் சூரியஒளியில் இருந்து பெறப்படும்  மின்சார உற்பத்தியானது வெறும் 0.1% மட்டுமே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் நிறுவப்பட்ட மின்உற்பத்தித் திறனில் சூரியஒளியில் இருந்து பெறப்படும் மின்சார உற்பத்தி அளவின் பங்கு, 2022-ஆம் ஆண்டில் சுமார் 15%-ஆக இருந்தது. அது 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய 28%-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் உச்சபட்ச மின்தேவை நிலவிய நாளில், சூரியஒளியில் இருந்து பெறப்படும் மின்சார உற்பத்தியானது சுமார் 5.6% மட்டுமே இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 10.8%-ஆக மட்டுமே அதிகரித்தது. சூரிய மின் தகடுகளோ (solar panels), நிலமோ அல்லது அரசாங்கத்தின் லட்சிய இலக்கோ முதன்மையான பிரச்சனை அல்ல என்றும் சூரியஒளி மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு மின்சாரத்தைச் சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய 'மின்கலச் சேமிப்பு அமைப்புகளின்' (battery storage systems) பற்றாக்குறையே இதில் உள்ள முதன்மை தடையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மையில், மின்கலச் சேமிப்பு வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், அதிக அளவு சூரியஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சில மாநிலங்கள், குறிப்பிட்ட நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றன. இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்பில் (power grid) ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025-ஆம் ஆண்டில், மே மாதத்தின் பிற்பகுதிக்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் இந்தியா 2.3 டெராவாட் (TWh) சூரியஒளியில் இருந்து பெறப்படும் மின்சார உற்பத்தி அளவைக் குறைக்க வேண்டியிருந்தது. இது சராசரி மாதாந்திர சூரியஆற்றல் மின்சார உற்பத்தியில் 18%-க்குச் சமமாகும். இதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 0.9 டெராவாட் (TWh) அளவிலான ஆற்றல் வீணடிக்கப்பட்டது. மின்சாரம் பயன்படுத்தப்படாவிட்டாலும், அதைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டியுள்ளதால், இது பொதுமக்களின் வரிப்பணத்திற்கே சுமையாக முடிகிறது. இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு, இப்பிரச்சனையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை இயல்பைவிடக் குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதிக வெப்பமும் வறட்சியும் நிறைந்த கோடைக்காலம், பகல்நேர மின்சாரத் தேவையை அதிகரிக்கும்  என்றும் இத்தகைய இக்கட்டான சூழலில், சூரியஆற்றல் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த மின்கலச் சேமிப்பு திறன் வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது.


மின்கலன் சேமிப்பு தொடர்பான பொருளாதார நிலவரம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மெகாவாட்டிற்கு மாதத்திற்கு சுமார் ₹2.21 லட்சமாக இருந்த, இரண்டு மணிநேர மின்கலச் சேமிப்புக்கான கட்டணம், அந்த ஆண்டின் இறுதிக்குள் ₹1.48 லட்சமாகக் குறைந்துள்ளன. ஆனால், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில்தான் சவால் உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 0.7 ஜிகாவாட் (GW) மின்கலச் சேமிப்பு அமைப்பு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. மேலும், டிசம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 2 ஜிகாவாட் (GW) மின்கலச் சேமிப்பு அமைப்பானது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இப்போது திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதில் கவனம் செலுத்துவதைக் குறைத்து, திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, புதிய சூரியசக்தி ஏலங்களின்போது அத்துடனேயே மின்கலச் சேமிப்பு நிலையத்தையும் அமைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், குறைந்த கட்டணத்தில் ஒப்பந்தம் எடுக்கப்பட்ட திட்டங்கள் எதிர்கொள்ளும் நிதிநெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஏனெனில், சேமிப்பு வசதி இல்லாத சூரிய மின்சக்தி என்பது முழுமையாக எந்தவிதப் பலனையும் அளிக்காது என்பதையும் சுட்டிகாட்டுகின்றனர் .


Original article : ​Building bridges: On India’s solar generation, battery storage.

Share: