மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் ஒப்பற்ற பங்களிப்பை நாம் ஏன் மறக்கக் கூடாது? – இர்பானுல்லா ஃபாரூக்கி

 இந்த ஆண்டு ஜோதிராவ் பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்க ஆண்டாக அமைவதால், இந்தியாவில் சமூக மாற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து நாம் மேலும் அறிந்துகொள்வோம். அத்துடன், அவரது கொள்கைகளின்படி வாழவும் கற்றுக்கொள்வோம்.


அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற ஒரு அனுபவத்தை, தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு தேடலுக்கான முன்னுரையாக மாற்றுபவர்கள் மிகச் சிலரே. பிராமணர் சமுகத்தை சாராத நபர் என்பதால் வாரணாசியில் உணவு மறுக்கப்பட்ட பெரியார் ஈ.வெ. ராமசாமியையும்; 'தீண்டத்தகாதவர்' என்பதால் தனது பள்ளி வளாகத்தில் தண்ணீர்க் குழாயைத் தொட அனுமதிக்கப்படாத பி.ஆர். அம்பேத்கரையும்; வெள்ளையர் அல்லாதவர் என்பதால் தென்னாப்பிரிக்காவில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மகாத்மா காந்தியையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.


இந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சமமாகக் கருதுவது பொருத்தமாக இல்லாவிட்டாலும், அவற்றை ஒன்றாக இணைக்கும் முக்கிய அம்சம், இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை ஒரு முக்கியத் தீர்மானமாகவும், மாற்றத்தை உண்டாக்கும் செயலாகவும் மாற்றிக்கொண்டார்கள்.

மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் வாழ்க்கை இன்னொரு சிறந்த உதாரணமாகும். 21 வயதில், ஒரு பிராமண நண்பரின் திருமண விழாவில் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் சூத்திர சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டார். ஆனால், அந்த அவமானம் ஒரு 'மகாத்மாவை' உருவாக்கும் பணியை இன்னும் வேகப்படுத்தும் என்று அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.


இந்த ஆண்டு பூலேவின் 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வேளையில், இந்த சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், சாதியத்தின் தீவிர விமர்சகர் மற்றும் பெண்கள் கல்வியின் முன்னோடியான அவரது வாழ்க்கையையும் பணிகளையும் மீண்டும் நினைவு கூர்வோம்.


ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சமூக ஒழுங்கிற்கு எதிரான எதிர்ப்பு


ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே, 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி, மகாராஷ்டிராவின் சதாராவில், 'மாலி' (தோட்டக்காரர்) சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். முதலில் 'கோர்ஹே' என்று அழைக்கப்பட்ட  இந்தக் குடும்பம்,  ஆண் உறுப்பினர்கள் பூ வியாபாரிகளான பிறகு 'பூலே' என்று அறியப்பட்டது. இந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் பிரதம மந்திரிகளுக்குச் (Peshwa) சேவை செய்தனர். அவர்கள் இந்தக் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய நிலத்தையும் ஒரு தோட்டத்தையும் பரிசாக வழங்கினர்.


சமூகத்தில் பிராமணர்கள் அனுபவித்து வந்த கட்டமைப்பு ரீதியான சலுகைகளை, பூலே மிக விரைவிலேயே புரிந்து கொண்டார். அவர்கள் முக்கிய நிர்வாகப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தினர், வரிச் சலுகைகளை அனுபவித்தனர், சலுகை பெற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர். மேலும், சட்டத்தின்கீழ்  மென்மையான அணுகுமுறையைப் பெற்றனர்.


இந்த ஆதிக்கம் ஆழமாக நிறுவனமயமாக்கப்பட்டிருந்தது என்று பூலே உறுதியாக நம்பினார். அதிக சமஸ்கிருதமயமாக்கப்பட்ட "ஜோதிராவ்" (Jyotirao) என்ற பெயருக்குப் பதிலாக, "ஜோடிராவ்" (Jotirao) என்ற பெயரை அவர் விரும்பியது கூட, பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பைக் காட்டுகிறது.


சமூக அடையாளங்களின் குறுக்கீடு குறித்த கவனத்தை அவர் எவ்வாறு ஈர்த்தார்?


சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் அன்றாடம் அனுபவித்த அநீதியான மற்றும் மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சூழலைக் கண்டு ஜோதிராவ் பூலே மிகுந்த வேதனை அடைந்தார். இத்தகைய அநீதிகள் சமூகத்தில் இயல்பான ஒன்றாகக் கருதப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சாதியக் கட்டமைப்பைக் கொண்ட சமூகத்தில் பெண்கள் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள்) அடிமைப்படுத்தப்படுவதைத் தடுக்க மிகவும் தீவிரமான மற்றும் வலுவான தலையீடு அவசியம் என்பதை உணர்ந்தார்.


தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளும் பெண்களும் எவ்வாறு   ஒதுக்கப்பட்டனர் என்பதை பூலே மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இதன் மூலம், பெண்ணிய ஆய்வாளர் கிம்பர்லி கிரென்ஷா ‘Intersectionality’ (பல அடுக்கு ஒடுக்குமுறைகள் ஒன்றிணைதல்) என்ற கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பே, அந்த நுட்பமான சமூகப் பிரச்சனையை மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.


`அதே நேரத்தில், பண்டிதா ரமாபாயின் பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட 'The High-Caste Hindu Woman’ (1887) என்ற நூல், இந்து சமூக அமைப்பின் தார்மீக அடித்தளங்களை உலுக்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, உயர்சாதிப் பெண்கள் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் உரிமையற்ற நிலைகளையும் பூலே துணிச்சலுடன் எதிர்த்துக் கேள்வி எழுப்பினார்.


சீர்திருத்தவாதத் தலையீடுகள் 


19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, இந்தியாவில் சமூகச் சீர்திருத்தங்களுக்கான ஒரு காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ராஜா ராம்மோகன் ராய், கேசப் சந்திர சென், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற முக்கியத் தலைவர்கள், சதி, குழந்தை திருமணம், பலதார மணம் மற்றும் விதவை மறுமணத்திற்கான கட்டுப்பாடுகள் போன்ற நடைமுறைகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். 'பாரம்பரியம்' மற்றும் மதம் என்ற பெயரில் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருந்த இத்தகைய அடக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளைக் கேள்விக்குட்படுத்துவதில்  அவர்கள் முக்கிய பங்காற்றினார்.


வங்கத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அதே வேளையில், அதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு சீர்திருத்த அலை பம்பாய் மாகாணத்திலும் வீசியது. ஜோதிராவ் பூலே தனது காலத்தின் சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாச்சார அமைப்புகளைப் புரிந்துகொள்ள முயன்றபோது, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே அங்கு செயல்பாட்டில் இருந்தன.

ஆனால், இந்தச் சீர்திருத்த இயக்கங்கள் பெரும்பாலும் உயர்சாதி ஆண்களால் வழிநடத்தப்பட்டதால்,  தினசரி சமூக வாழ்வில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்று பூலே கருதினார். அவரது பார்வையில், அவர்கள் நீதி மற்றும் சமத்துவம் பற்றிப் பேசினாலும், அநீதிக்கும் பாகுபாட்டிற்கும் உள்ளாக்கப்படுவது என்றால் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக அவர்கள் உணரவில்லை. எனவே, பூலே சமூகக் கட்டமைப்பின் வேரிலேயே மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். அதற்காக அவர் தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டார்.


பெண்களின் கல்விக்கான ஆதரவுப் பிரச்சாரம்


பழமைவாத மற்றும் மரபுசார்ந்த இந்து பாரம்பரியவாதிகளின் கோட்டையாக விளங்கிய புனேவில், 1848-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்காக பூலே ஒரு பள்ளியைத் தொடங்கியபோது, ​​அவருடைய சீர்திருத்தப் பயணம் தொடங்கியது. அவருடைய மனைவி சாவித்திரிபாய் பூலே, ஒரு தோழராக அவருடன் இணைந்து பணியாற்றினார். இந்த முயற்சிக்குச் சமூகத்திடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. ஆனால், பூலேவின் தந்தை தங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வார் என்பதை அந்தத் தம்பதியினர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.


நிதி நெருக்கடி காரணமாக முதல் பள்ளி சிறிது காலம் மூடப்பட்டபோதிலும், பூலே 1851-ஆம் ஆண்டு முதல் 1859-ஆம் ஆண்டு வரை பெண்களுக்காக  மூன்று பள்ளிகளை நிறுவினார். காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.


அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பல சீர்திருத்தவாதிகளைப் போலல்லாமல், பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அவர்கள் சிறந்த துணையாகவோ, அதிக விழிப்புணர்வுள்ள தாயாகவோ அல்லது திறமையான நிர்வாகியாகவோ மாறுவார்கள் என்ற காரணத்திற்காகப் பூலே பெண் கல்வியை ஆதரிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, கல்வியின்  முக்கிய நோக்கம் விழிப்புணர்வையும், பகுத்தறியும் சிந்தனைத் தெளிவையும் உருவாக்குவதே ஆகும்.



பூலேவின் பள்ளிகளில் ஒன்றில் பயின்ற மாணவியான முக்தாபாய் சால்வேயின் படைப்புகளில் இந்தப் பார்வை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தனது பள்ளிப் படிப்பின் ஒரு பகுதியாக அவர் எழுதிய 'மங் மகாராச்சியா துக்கவிசாய்' (மங் மற்றும் மகர் சமூகத்தினரின் துயரங்கள் குறித்து) என்ற கட்டுரை, ஒரு  முக்கிய பெண்ணிய விமர்சனப் படைப்பாக அமைந்தது.


கல்வியானது மேல்தட்டு மக்களிடமிருந்து மெல்ல கீழ்நோக்கிப் பரவும் என்ற 19-ஆம் நூற்றாண்டின் பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூலே சமூகத்தின் விளிம்புநிலை மக்களை நேரடியாகச் சென்றடைந்தார். அக்டோபர் மாதம் 1882-ஆம் ஆண்டில் ஹண்டர் ஆணையத்தின்முன் (Hunter Commission) ஆஜரானபோது, ​​படித்த உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே கல்வியைப் பரப்புவார்கள் என்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அனுமானத்தை அவர் கேள்விக்குள்ளாக்கினார். தாழ்த்தப்பட்ட சாதிக் குழுக்களுக்குக் கல்வி கற்பிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று பூலே  வாதிட்டார்.


கல்வியைத் தாண்டியும், மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதாரத் திருமணத்திற்கு எதிராக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது தீர்க்கதரிசனமான சிந்தனைக்குச் சான்றாக விதவைகளுக்கான கருக்கலைப்பு எதிர்ப்பு மையங்களை (Anti-abortion centres) அமைத்தார். பூலேயும் அவரது பணியாளர்களும் விதவைகள் பாதுகாப்பாகப் பிரசவிப்பதற்கும், அவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பான இடங்களை வழங்கினர்.


முக்கியமான படைப்புகள்


கல்வி மற்றும் சமூக நீதித் துறையில் சிறந்த பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், ஜோதிராவ் பூலே பொதுமக்களுக்கான அறிவுசார் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரது எழுத்துக்கள் கீழ்சாதியினர் சுரண்டப்படுவதை மிக விரிவாக எடுத்துரைத்தன. 'திருதிய ரத்னா' (1855), 'குலாம்கிரி' (1873), 'ஷேத்கர்யாச்சா அசூத்' (1883) மற்றும் 'சர்வஜனிக் சத்ய தர்ம புஸ்தக்' (அவர் மறைவுக்குப் பின் 1891-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது) ஆகியவை அவரது முக்கியமான படைப்புகளாகும். பூலே, ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். அவரது கவிதைகள் பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள் குறித்துக் கருத்து தெரிவிக்கும் விதமாக அமைந்திருந்தன.


பூலேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘குலாம்கிரி’, பிராமண ஆதிக்கத்தின் மீது ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது. உரையாடல் வடிவில் எழுதப்பட்ட இந்தநூல், பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின் ஒழுக்கமற்ற அடித்தளங்களைச் சுட்டிக்காட்டுகிறது. சமூகத்தில் நிலவும் படிநிலை அமைப்பானது, சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கும், 'தூய்மையற்ற சாதிகள்' என்று கருதப்படுபவர்களை ஒரு கண்ணியமற்ற மற்றும் சமூக ரீதியாக மதிப்பற்ற நிலைக்குத் தள்ளுவதற்கும், மத மற்றும் சமூக நெறிமுறைகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று பூலே வாதிடுகிறார்.


'குலாம்கிரி' நூலை வெளியிட்ட பிறகு, பூலே தனது சக ஊழியர்களைக் கூட்டி சத்யசோதக் சமாஜத்தை (Satyashodhak Samaj - உண்மை தேடுவோர் சங்கம்) உருவாக்கினார். சூத்திரர்களையும் தீண்டத்தகாதவர்களையும் சுரண்டல் நிறைந்த சாதிப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிப்பதே அந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளாகக் கருதப்பட வேண்டும் என்றும், அந்தக் கடவுளை எந்தவிதமான இடைத்தரகரும் இன்றி வழிபட வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியது.


பூலேயின் தொலைநோக்குப் பார்வையின் நிலைத்து நிற்கும் மரபு


பூலேவின் மரபைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அவரது  முக்கியத்துவத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்கின்றனர். பல சீர்திருத்தவாதிகளைப்  போலல்லாமல், பூலே தாம் போதித்த நெறிகளைத் தாமே வாழ்ந்து காட்டினார். புகழ்பெற்ற சீர்திருத்தவாதிகளில் ஒருவர், தனது தந்தையின் மனம் புண்படும் என்பதால், தனது விதவைச் சகோதரிக்கு மறுமணம் செய்துவைக்க இயலவில்லை என்று குறிப்பிட்டபோது, ​​பூலே அவரிடம், "அப்படியென்றால், சீர்திருத்தவாதி என்று உன்னை நீயே கூறிக் கொள்ளாதே" என்று கூறியதாக, தர்க்கதீர்த்த லட்சுமணசாஸ்திரி ஜோஷி எழுதிய புலேவின் வாழ்க்கை வரலாற்றில் இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.


புலேவின் வாழ்க்கை மற்றும் படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால், உயர்ந்த தார்மீகக் கொள்கைகளின்படி வாழும் ஒரு வாழ்க்கையின் நிகரற்ற ஆற்றலைத்தான். இந்த ஆண்டு அவரது 200-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிப்பதால், இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம், மேலும் அவருடைய கொள்கைகளின்படி வாழக் கற்றுக்கொள்வோம்.


Original article : Why we must not forget the peerless legacy of Mahatma Jyotirao Phule. -Irfanullah Farooqi

Share: