கல்வித்துறையில் நிலவும் கருத்துச் சுதந்திரக் கட்டுப்பாடு, மாறுபட்ட கருத்துகளுக்கான இடமின்மை ஆகியவை இந்தியாவில் ஜனநாயகத்தின் கடுமையான வீழ்ச்சியை உணர்த்துகின்றன.
‘Varieties of Democracy (V-Dem)’ நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியா இன்னும் ஒரு "தேர்தல் சர்வாதிகாரம்" (electoral autocracy) என வகைப்படுத்தப்பட்டு, உலகளாவிய தரவரிசையில் கீழ்பாதியிலேயே உள்ளது. ஜனநாயக சுதந்திரங்களில், குறிப்பாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவற்றில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்தியாவை "மிக மோசமான சர்வாதிகார நாடுகளின்" (worst autocratizers) பட்டியலில் இடம்பெறச் செய்கிறது. இது, பொறுப்புணர்வு மற்றும் பன்முகத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும் அரசு நிறுவனங்கள் மற்றும் நெறிமுறைகள் படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருவதைக் குறிப்பதால், இந்தியாவின் மீதான அதிகரித்து வரும் சர்வதேச ஆய்வுகளுக்கும் வழிவகுத்துள்ளது.
‘Scholars at Risk’ வெளியிட்டுள்ள ‘Free to Think 2024’ அறிக்கை, இந்தியாவை "முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட" கல்விச் சுதந்திரம் கொண்ட நாடாக வகைப்படுத்துகிறது. அதிகரித்து வரும் அரசியல் தலையீடு மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான அழுத்தம் ஆகியவற்றால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, பாடத்திட்ட மாற்றங்கள், வரையறுக்கப்பட்ட கல்விசார் ஆய்வுகள் மற்றும் அறிவுசார் மாற்றுக்கருத்துகளுக்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் உயர்கல்விக்குள் ஒரு இந்து தேசியவாத செயல்திட்டத்தை திட்டமிட்டுத் திணிக்கப்படுவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த வகைப்பாடானது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல. இது, ‘V-Dem’ முதல் ‘Freedom House’ வரையிலான உலகளாவிய குறியீடுகளால் ஆவணப்படுத்தப்பட்ட, ஜனநாயக வீழ்ச்சியின் ஒரு பெரிய வடிவத்துடன் பொருந்துகிறது. ஒரு காலத்தில் விமர்சன ரீதியான சிந்தனைகளுக்கும் பன்முகத்தன்மை கொண்ட விவாதங்களுக்கும் களங்களாகப் போற்றப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு, இதன் மூலம் தெரியவரும் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக உள்ளது. இது கற்பிப்பதற்கும், கற்பதற்கும், கேள்வி எழுப்புவதற்குமான சுதந்திரத்திற்கும் இனி எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதாகும்.
குறைந்துவரும் கல்விச் சுதந்திரம், ஜனநாயகத்தையே எவ்வாறு பலவீனப்படுத்துகிறது என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. ஒரு ஆரோக்கியமான மற்றும் செயல்படும் ஜனநாயகம் என்பது தேர்தல்கள், வாக்குரிமைகள் மற்றும் சட்டங்களைவிட அதிகமானவற்றைச் சார்ந்துள்ளது. அதற்கு ஒரு வலுவான சமூக அமைப்பு, சான்றுகள் அடிப்படையிலான தகவல்களுக்கான தடையற்ற அணுகல் மற்றும் உண்மையான பொது விவாதத்திற்கான களம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில், குறிப்பாக கல்வித்துறையில் இத்தகைய அம்சங்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சுதந்திரங்கள், கல்வித்துறையில் மிகவும் வெளிப்படையாக, நேரடி அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஆய்வையும் விவாதத்தையும் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிதி நெருக்கடிகள் (funding cuts), அரசின் ஒழுங்குமுறை அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் சுய-தணிக்கை ஆகியவற்றை எதிர்கொண்டு, அவற்றின் தன்னாட்சியைப் பலவீனப்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் கல்வி நிறுவன மசோதாவானது (Viksit Bharat Shiksha Adhishthan Bill), கல்வி சுதந்திரத்தை விட அதிகாரத்தை மையப்படுத்துவதற்கும் இணக்கமான போக்கிற்குமே முன்னுரிமை அளிக்கிறது. இது மேலும் குறையும்போது, விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் சமூகத்தின் திறனும் குறைகின்றன.
கவலையளிக்கும் ஒரு போக்கு
‘The Wire’ இதழின் அறிக்கைப்படி, 2014 முதல் 2026-ஆம் ஆண்டுக்கு இடையில் தங்களின் கருத்துக்கள் அல்லது அரசியல் நிலைப்பாடுகளுக்காக 62 கல்வியாளர்கள் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். பேராசிரியர்களை "அரசு ஊழியர்கள்" என வரையறுக்கும் சேவை விதிகளைப் பயன்படுத்தி, வளாகங்களில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. ‘Nature’ இதழில் (ஏப்ரல் 2024), யாமினி ஐயர், தொடர்ச்சியான சீர்குலைந்த நிகழ்வுகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கைதுகள், மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கான நுழைவு அனுமதி தடைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல் போன்ற தொடர்ச்சியான இடையூறுகளை 'இந்திய கல்வி சுதந்திர அமைப்பு' (India Academic Freedom Network) ஆவணப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
1960-களின் தொடக்கத்தில் இந்தியக் குடியுரிமை பெற்று, இந்தியாவில் பணிபுரிந்தபோது அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.பி.எஸ். ஹால்டேனுடனான வேறுபாடு வியக்கத்தக்கது. கல்வித்துறையில் இன்று மாற்றுக்கருத்துகளுக்கான இடம் எவ்வளவு சுருங்கிவிட்டது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. 2024-26-ஆம் ஆண்டு வரையிலான தரவுகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்களை இலக்காகக் கொண்டு, கல்விச் சுதந்திரத்தின் மீது ஒரு பரந்த தாக்குதல் நடத்தப்படுவதைக் காட்டுகின்றன. அரசியல் அழுத்தம், நிறுவனத் தோல்விகள் மற்றும் சமூகப் பாகுபாடுகளால் தூண்டப்படும் இந்தப் போக்குகள், சில தலைப்புகள் வரம்பு மீறியவையாகக் கருதப்படுகின்றன. சில குரல்கள் ஆபத்தானவை என்றும், அறிவுத் தேடலானது அரசியல் நலன்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன.
ஒரு சீரான மற்றும் கவலையளிக்கும் போக்கு வெளிப்படுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. மேற்பார்வை மற்றும் நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட உள்ளகப் புகார்க் குழுக்கள் (Internal complaints committees), உண்மையான பொறுப்புணர்வைவிட வழக்கமான இணக்கத்திற்காகவே அதிகம் இயங்குகின்றன என்றும், அவை "அலங்காரமானவை" (ornamental) என்றும் விமர்சகர்களால் விவரிக்கப்படுகின்றன. மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்புகளே, மௌனம் அல்லது செயலற்ற தன்மையால் குற்றங்களுக்குத் துணை போகும்போது, அந்த அச்சமூட்டும் விளைவு மேலும் வலுவாகிறது. நம்பிக்கை சிதைகிறது, அச்சம் வேரூன்றுகிறது. மேலும் அதிகாரம் மட்டுமே பாதுகாக்கப்படும், அந்த அதிகாரத்தை எதிர்க்கும் குரல்களுக்குப் புகலிடம் கிடைக்காது என்ற தெளிவான செய்தி தெளிவாகிறது. சுதந்திரமான தேடலை ஊக்குவிக்க வேண்டிய அந்தச் சுவர்களுக்குள்ளேயே குரல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது.
கவலையளிக்கும் ஒரு சிதைவு
இந்த நடவடிக்கைகள், தலைவர்களைக் கேள்வி கேட்டுப் பொறுப்பேற்கச் செய்யும் பொதுச் சமூகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் திறனைக் குறைக்கின்றன. இது இந்திய ஜனநாயகத்திற்கு அவசியமான அறிவுத்துறையின் அடிப்படையையே சிதைக்கிறது. வன்முறை தண்டிக்கப்படாமல் போகும்போதும், சாதி மற்றும் மதப் பாகுபாடுகள் எதிர்க்கப்படுவதற்குப் பதிலாகப் பின்பற்றப்படும்போதும், பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படும்போதும், மாறுபட்ட கருத்து குற்றமாக்கப்படும்போதும், சொல்லப்படும் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது. அறிவைத் தேடுவது அதிகாரத்தில் இருப்பவர்களை சீர்குலைக்கக் கூடாது.
சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights (ICCPR)) முதல் விருப்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதில், அரசியல் உரிமைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பிரதிபலிக்கிறது. 1979-ஆம் ஆண்டு முதல் சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (ICCPR) ஓர் உறுப்பினராக இருந்தபோதிலும், அது ஐ.நா.வின் புகார் அளிக்கும் வழிமுறையை ஏற்கவில்லை. இதன் பொருள், உரிமை மீறல்களுக்காக உள்நாட்டு சட்டரீதியான தீர்வுகளைப் பயன்படுத்திய பிறகு, சர்வதேச அளவில் முறையிட்டுத் தீர்வு காண முடியாது என்பதாகும்.
இந்த முரண்பாடு வியக்கத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் 14, 19 மற்றும் 21 ஆகிய அரசியலமைப்பு விதிகள் மூலம், சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (ICCPR) உள்ள அதே உரிமைகளில் பலவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய உச்சநீதிமன்றம், அடிப்படை உரிமைகளை விளக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச மனித உரிமைகள் நெறிமுறைகளை அடிக்கடி பயன்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு வழிமுறை, உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை வழங்கத் தவறும் போது, இந்தியக் குடிமக்கள் அந்த நீதிமன்றங்களுக்கு அப்பால் நீதியை நாட வழிவகுக்கும். இந்த வசதி இருந்தால், குறிப்பாக அதிகப்படியான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் விளிம்புநிலை மக்கள், உள்நாட்டு நீதிமன்றங்கள் கைவிடும்போது சர்வதேச அளவில் நீதியைப் பெற முடியும்.
ஜனவரி 7, 2026 அன்று 'The Leaflet' இதழில் வெளியான, ரவி நாயரின் “உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் வழக்கு: சாத்தியக்கூறுகளுக்குள் ஒரு சர்வதேசப் பிரச்சாரம்” (The Umar Khalid and Sharjeel Imam case: An international campaign within the realm of possibility) என்ற தலைப்பிலான ஆழ்ந்த கட்டுரையில் இந்தப் பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இளம் கல்வி அறிஞர்களான உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம், கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருந்து வருகின்றனர். ஜனவரி மாதம் 6-ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றம் அவர்களின் பிணை (Bail) மனுவை நிராகரித்ததுடன், ஓராண்டுக்கு பிணை கோரி விண்ணப்பிக்கவும் தடை விதித்தது. இது பல சட்ட வல்லுநர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இர்பான் மெஹ்ராஜ் போன்ற பத்திரிகையாளர்களும், தற்போது விடுதலையாகியுள்ள சோனம் வாங்சுக் போன்ற மனிதநேயவாதிகளும், ஜாமீன் பெறுவதற்குக் கூட நீண்ட சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் தொடர்ந்து பரோலையோ அல்லது கடும் நிபந்தனைகளுக்குட்பட்ட பிணையிலோ விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாடு மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. ஒருபுறம், நீதி, கண்ணியம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான குரல் ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. மறுபுறம், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சமச்சீரற்ற தன்மையில்தான், யாருடைய சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன, யாருடை சுதந்திரம் அமைதியாகக் கைவிடப்படுகின்றன என்ற கவலையளிக்கும் உண்மை இந்தச் சமமற்ற நிலையில்தான் அடங்கியுள்ளது.
ஒருமைப்படுத்துவதன் விளைவு
தன்னைத்தானே ‘ஜனநாயகத்தின் தாய்’ (Mother of Democracy) என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர், சிந்தனைச் சுதந்திரத்திற்குப் பதிலாக சிந்தனையில் ஒரே மாதிரியான தன்மையை ஏன் விரும்புகிறார்? மரபுசார் சிந்தனைகளுக்கு சவால் விடுத்து, புதிய கருத்துக்களை உருவாக்க உழைப்பவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் எப்போதுமே புகலிடமாக இருந்து வருகின்றன.
இது பல்கலைக்கழக வாழ்க்கையில் உள்ள ஒரு குறை அல்ல. இது அதன் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாகும். பெரும்பான்மையினரின் கருத்தைக் கேள்விக்குட்படுத்துவதாக இருந்தாலும் கூட, இத்தகைய விவாதங்கள் தான் ஜனநாயகத்தைப் புதுப்பிக்கின்றன.
வரலாறு பல கடுமையான எச்சரிக்கைகளை அளிக்கிறது. சர்வாதிகாரம் என்பது எப்போதும் வியத்தகு நிகழ்வுகளுடன் திடீரென வருவதில்லை. பெரும்பாலும், அது ஜனநாயகங்களுக்கு உள்ளிருந்தே மெதுவாகவும், அமைதியாகவும், இறுதியில் அது யாரை மௌனமாக்கப் போகிறதோ அவர்களின் சம்மதத்துடனும் வெளிப்படுகிறது. சர்வாதிகாரம் என்பது அமைப்பில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் உருவாவதில்லை. மாறாக, அது பொதுமக்களை மெதுவாகப் பழக்கப்படுத்துவதன் மூலம் உருவாகிறது. இது, செயற்கையாகப் பாதிக்கப்பட்ட நிலையை உருவாக்குதல், அச்சத்தைப் பரப்புதல், மற்றும் ஒரு காலத்தில் வலுவாகவும் நிரந்தரமாகவும் தோன்றிய ஜனநாயக நெறிமுறைகளைப் படிப்படியாக பலவீனப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமே நிகழ்கிறது. இந்தச் செயல்பாட்டில், குடிமக்களும் நிறுவனங்களும் தங்களது சொந்த சுதந்திரத்தையே சிதைப்பதற்குத் துணையாக மாறிவிடுகிறார்கள் மேலும், அகற்றப்படும் உரிமைகளும் பாதுகாப்புகளும், உண்மையில் தாங்கள் எப்போதுமே இயல்பாகக் கருதிய ஜனநாயகத்தின் அடித்தளங்களாக இருந்தன என்பதை அவர்கள் உணருவதே இல்லை.
கல்விச் சுதந்திரக் குறியீட்டில் (Academic Freedom Index) ஆவணப்படுத்தப்பட்டுள்ள வீழ்ச்சி என்பது ஒரு கருத்தியல் அளவுகோல் அல்ல. அது இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தையே அளவிடும் ஒரு அளவுகோலாகும். அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் மௌனமாக்கப்படும்போதும், மாற்றுக்கருத்துகள் குற்றமாக்கப்படும்போதும், கல்வி நிறுவனங்கள் அரசியல் நலன்களால் ஆக்கிரமிக்கப்படும் போதும், ஜனநாயகப் பொறுப்புணர்வு நிலைத்திருக்கும் அடித்தளமானது, ஒவ்வொரு கல்லாக, ஒவ்வொரு வழக்காக, ஒவ்வொரு மௌனத்தின் வழியாகவும் அது சிதைக்கப்படுகிறது.
புள்ளிவிவரங்கள் ஒரு நிலவரத்தைக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், உண்மையான நிலவரமானது நமது கல்வி வளாகங்களில் உருவாகி வருகிறது. இங்கு, ஒரு காலத்தில் தேடல் மிகுந்த கேள்விகளை எழுப்பிய குரல்கள் இப்போது மெல்லிய ஓசைகளாகச் சுருங்கிவிட்டன. நமது நீதிமன்றங்களில், நீதியானது அதிகாரத்தால் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பேசத் துணிந்தவர்களின் மௌனத்திலும் அந்த உண்மை வெளிப்படுகிறது. அந்த மௌனம் நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அரசு இயந்திரம் அதிகப்படியான நடைமுறைகள், தண்டனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டதாக மாறிவருகிறது.
நிறுவனங்கள் இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லுமா அல்லது தங்களின் உண்மையான நோக்கத்தை மீட்டெடுக்குமா என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது. சமூகத்தைப் பொறுத்தவரை, விமர்சன சிந்தனைக்கு இடமளிக்கும், அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் மற்றும் நீதி, நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளில் இளைஞர்கள் அர்த்தமுள்ள வகையில் ஈடுபட உதவும் தளங்களை நாம் பாதுகாப்போமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
சி.பி. ராஜேந்திரன் ஒரு புவியியலாளர் மற்றும் அறிவியல், அரசியல், சுற்றுச்சூழல், மற்றும் கல்வி குறித்த ஒரு தொடர்பாளர் ஆவார்.
Original article : Silencing academia, weakening democratic space. -C. P. Rajendran