தமிழ்நாடு சுகாதாரத் துறையில் முன்னிலையில் இருந்தாலும், தற்போது புதிய வகை சவால்களை எதிர்கொண்டு வருகிறது. -ரம்யா கண்ணன்

 தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அடைந்துள்ள வெற்றிகளுக்கான முக்கிய காரணம், அதன் வலுவான பொது சுகாதாரக் கட்டமைப்பாகும். அதாவது, மாநிலம் முழுவதும் பரவலாகவும் நேர்த்தியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஒருங்கிணைந்த வலைப்பின்னலே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.


வரலாற்றுரீதியாகவும், நடைமுறை அனுபவங்களின் அடிப்படையிலும் இந்தியாவின் சுகாதாரத் துறையில் மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக வளர்ச்சி தரவரிசையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் தரமான மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளும் தமிழ்நாட்டில்  உள்ளது. இதனுடன், பல்வேறு தரம் மற்றும் கட்டண முறைகளில் செயல்படும் மிகப்பெரிய தனியார் மருத்துவக் கட்டமைப்பும் இணைந்து செயல்படுவதால், தமிழகத்தின் சுகாதாரக் குறியீடுகள் தேசிய சராசரியைவிடப் பல மடங்கு மேம்பட்டும், பல நேரங்களில் அதைவிட மிக உயர்வாகவும் காணப்படுகின்றன.


இந்தச் சுகாதாரத் தரவுகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின்படி (Health Management Information System (HMIS)), தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate (IMR)) 2020-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 13-ஆக இருந்தது, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 8.2-ஆகக் குறைந்துள்ளது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 (National Family Health Survey-5 - NFHS-5) தரவுகளின்படி, ஒரு ஆண்டில் 1,000 பேருக்கு நிகழும் நேரடிப் பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கக்கூடிய மாநிலத்தின் தோராயமான பிறப்பு விகிதம் (Crude Birth Rate) 14.2 ஆகும். இது தேசிய அளவிலான 19.7-ஐ விடக் குறைவாகும். அத்துடன், மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்று நிலையைவிட மிகக் குறைவாக, தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 1.4–1.5 ஆக உள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாடு மக்கள் தொகை மாற்றத்தின் தொடக்க நிலையில் இருக்கும் ஒரு முதிர்ந்த சமூகம் என்பதைக் காட்டினாலும், வருங்காலத்தில் இது சில சவால்களை உருவாக்கக்கூடும் என்கின்றனர். மேலும், தேசிய அளவிலான 94.5% என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் 100% பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


2021–2023-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் (Maternal Mortality Rate (MMR)) குறித்த சிறப்பு அறிக்கையின்படி, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் (தலா 30 இறப்புகள்) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, 1,00,000 பிறப்புகளுக்கு 35 மகப்பேறு இறப்புகள் என்ற கணக்கில் தமிழ்நாடு தற்போது இரண்டாவது மிகக்குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. தேசிய குடும்பநல ஆய்வின் (National Family Health Survey (NFHS-5)) தரவுகளின்படி, தமிழ்நாட்டின் பிறந்த குழந்தை இறப்பு விகிதமானது (Neonatal Mortality Rate) 2005-ஆம் ஆண்டில் 26.2-ஆக இருந்து, 2018-ஆம் ஆண்டில் 10-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், கருவிலேயே இறந்து பிறக்கும் குழந்தைகளின் விகிதமும் (Stillbirth rate) 2018-ஆம் ஆண்டில் 4-ஆகக் குறைந்து நாட்டின் மிகக்குறைந்த விகிதங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், டிப்தீரியா (தொண்டை அடைப்பான்), டெட்டனஸ் (ரணஜன்னி), மற்றும் பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்) ஆகியவற்றுக்கான தடுப்பூசி, போலியோ மற்றும் காசநோய்க்கான (Bacillus Calmette-Guérin (BCG)) போன்ற முக்கிய தடுப்பூசி செலுத்துதலில் தமிழ்நாடு தொடர்ந்து 90% முதல் 95% வரை உயர் இலக்கை அடைந்து சாதனை படைத்து வருகிறது. இதுதவிர, 2008-ஆம் ஆண்டு முதல் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.


தாய் மற்றும் சேய் நலத்துறையில் (Maternal and Child Health (MCH)), தமிழ்நாடு தற்போது ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்பதை தரவுகள் மிகத்தெளிவாக உணர்த்துகின்றன; இந்த மகத்தான சாதனை எவ்வாறு சாத்தியமானது?




பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துதல்


தமிழகத்தின் சுகாதாரத் துறையின் வெற்றிக்கு முக்கியக் காரணம், மாநிலம் முழுவதும் பரவியுள்ள வலிமையான பொது சுகாதார அமைப்பாகும். இது ஆரம்ப சுகாதார நிலையங்களின் (PHC) விரிவான வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பிற்குத் தாராளமாகப் பங்காற்றும் சமூகச் சுகாதாரப் பணியாளர்கள், தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் முதல்நிலை சிகிச்சை அளித்தல், நோய்த்தடுப்பு ஊசிகளை உறுதி செய்தல் மற்றும் நோய்த் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகளைச் செய்கின்றனர். இந்த முறையானது, மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் இயக்குநரகத்தின்கீழ் (Directorate of Public Health (DPH)) இயங்கும் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக பொதுச் சுகாதாரப் பிரிவால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. அடிமட்ட அளவிலான இந்த வலையமைப்பு, தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உயர்தர சிகிச்சை சேவைகளை மக்களுக்கு வழங்குகிறது.


1939-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பொது சுகாதாரச் சட்டம் (Public Health Act (PHA)) என்பது ஒட்டுமொத்த பொது சுகாதாரக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வலுவான அடித்தளமாகும் என்று 'உடல்நல உரிமை ஆதாரக் கூட்டமைப்பு' (Right to Health Resources Collective) இணையதள உரையாடலில் பொது சுகாதார நிபுணர் டி. சுந்தரராமன் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் தொடக்கத்தில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளாவின் மலபார் பகுதி உள்ளிட்ட ஒட்டுமொத்த மதராஸ் மாகாணத்தையும்  உள்ளடக்கியதாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு, இது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டமாக (Tamil Nadu Public Health Act (TNPHA)) தொடர்ந்து நீடித்தது என்றும் இந்தியாவில் தற்சமயம் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் மட்டுமே இத்தகைய பிரத்யேக பொது சுகாதாரச் சட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவை அனைத்துமே தமிழ்நாடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான் என்று பேராசிரியர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.


பொது சுகாதாரச் சட்டம் என்பது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமைகளை அடைவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், இது முழுமையாகச் செயல்பட வேண்டுமானால், பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமை மற்றும் குறைதீர்க்கும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரராமன் தெரிவித்தார். இது குறித்து விரிவாக விளக்கிய ஓய்வுபெற்ற பொது சுகாதாரத் துணை இயக்குனர் கே. மதிவாணன், இந்தச் சட்டம் முக்கியமாகத் தூய்மை மற்றும் நோய்த் தடுப்பு ஆகிய இரண்டு துறைகளை உள்ளடக்கியது என்றும், அதனுடன் கூடுதல் கவனமாகத் தாய்-சேய் நலன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். 


ஆர். பார்த்தசாரதி மற்றும் எஸ்.பி. சின்ஹா ஆகியோர் 2016-ஆம் ஆண்டில் இந்திய சமூக மருத்துவ இதழில் (Indian Journal of Community Medicine) எழுதிய “சிறந்த சுகாதார வழங்கல் முறையை நோக்கி: தமிழ்நாடு மாதிரி” என்ற கட்டுரையில், தமிழ்நாடு 1980-களுக்குப் பிறகே உண்மையான முற்போக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 1980-களின் இறுதியிலும் 1990-களிலும், மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்நோக்கு பணியாளர்கள் திட்டத்தை தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்தியது. இத்திட்டம் ஒவ்வொரு 5,000 கிராமப்புற மக்களுக்கும் ஒரு பல்நோக்கு சுகாதாரப் பணியாளரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டில் இப்பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் (Village Health Nurses (VHNs)) என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் முக்கியப் பணி, வீடுகளுக்குத் தவறாமல் சென்று மகப்பேறு மற்றும் குழந்தை நலச் சேவைகளை வழங்குவதும், மகப்பேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி குறித்த ஆலோசனைகளை வழங்குவதும் ஆகும். மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களையும் பதிவு செய்து கண்காணிப்பதோடு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்றினர். ஆயிரக்கணக்கான கிராம சுகாதார செவிலியர்கள் (VHNs) பயிற்சி அளிக்கப்பட்டு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாட்டினால் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு, மருத்துவமனை பிரசவங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசியுடன் கூடிய வலுவான தாய்-சேய் நலத் திட்டம் எவ்வளவு அவசியம் என்பதை தெளிவுபடுத்துகிறது.


டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு


தமிழ்நாட்டில் ஏற்கனவே பொது சுகாதாரச் சட்டத்தின்கீழ் பல அடுக்கு கண்காணிப்பு முறை நடைமுறையில் இருந்தபோதிலும், 2004-ஆம் ஆண்டு உலக வங்கியின் ஆதரவுடன் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தை (Integrated Disease Surveillance Programme (IDSP)) ஏற்றுக்கொண்டதன் மூலம் மாநிலம் தனது கண்காணிப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தியது. தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்துடன் (TNHSP) இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி, டிஜிட்டல் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (Health Management Information System (HMIS)) மற்றும் இ-ஹெல்த் (e-health) மீதான வளர்ந்துவரும் நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு, கொள்ளை நோய்களைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை நோக்கிய மாற்றத்தையும் குறித்தது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்த அமைப்பு புதிய தொற்றுநோய்களையும், நோய்ப் பரவலின் ஆரம்ப அறிகுறிகளையும் கண்டறிந்து, மேற்கொண்டு பரவாமல் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க உதவும் ஒரு முன்னணி பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு தொலைதூர மருத்துவச் சேவையை முன்கூட்டியே நடைமுறைப்படுத்திய மாநிலங்களில் ஒன்றாகும். நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களுக்குச் சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளைக் கொண்டு சென்றதோடு, நகர்ப்புற நிபுணர்கள் கிராமப்புற நோயாளிகளுக்குத் திரையின் வழியே ஆலோசனை வழங்கவும் இது வழிவகை செய்தது. இன்று, தமிழ்நாட்டின் இந்த பொது சுகாதார மாதிரி, மற்ற பல மாநிலங்கள் பின்பற்ற முயற்சிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.


மையப்படுத்தப்பட்ட மருந்து கொள்முதல்


தமிழ்நாட்டின் மேம்பட்ட சுகாதாரக் கட்டமைப்பிற்கு மற்றொரு வலுவான சான்று, தரமான மருந்துகளைக் கொள்முதல் செய்து விநியோகிப்பதில் மாநிலம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பாகும். அரசு சுகாதார நிலையங்கள் அனைத்திற்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் தரமான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் கிடைப்பதை முறைப்படுத்த, 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation (TNMSC)) இயங்கி வருகிறது. தரமான மருத்துவப் பொருட்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும், செலவுகளைக் குறைக்கவும், செயற்கையான மருந்துத் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மத்திய காசநோய் பிரிவு மருந்துகளை வழங்கத் தவறியதால் நாடு முழுவதும் காசநோய் (TB) மற்றும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய்க்கான (Drug-resistant TB) முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) விரைவாகச் செயல்பட்டு உள்நாட்டிலேயே மருந்துகளைக் கொள்முதல் செய்தது; இதன் மூலம் மற்ற மாநிலங்கள் எதிர்கொண்ட கடுமையான சூழல் தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட்டது.


தொற்று அல்லாத நோய்கள்


சமீபத்திய ஆண்டுகளில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases (NCDs)) அதிகரித்து வருவதாலும், அவற்றால் ஏற்படும் இறப்புகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், ஒரு முறையான கட்டமைக்கப்பட்ட தீர்வின் அவசியத்தை தமிழக அரசு உணர்ந்துள்ளது. இதற்காக 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்ற மருத்துவக் குழுக்கள் நேரடியாக வீடுகளுக்கேச் சென்று ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைப் பரிசோதிப்பதுடன், குறிப்பிட்ட வயதினருக்குப் புற்றுநோய் பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றனர். மேலும், நடமாட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு வலி நிவாரணச் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் மருந்துப் பொருட்களை வீட்டிலேயே வழங்குகின்றனர். டிஜிட்டல் முறையிலான 'மக்கள் நல்வாழ்வுப் பதிவேட்டுடன்' (Population Health Registry) இணைக்கப்பட்டுள்ள இந்த இல்லம் தேடி வரும் மருத்துவ முறை, நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதோடு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளையும் தடுக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. 




நிதி மேலாண்மை முறை


தமிழகத்தின் சுகாதாரச் சேவைகள் மற்றும் அவற்றிற்கான நிதி உதவி குறித்துப் பேசுவது இந்தச் சூழலில் மிகவும் அவசியமானது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, 2000-ஆம் ஆண்டில் 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' எனத் தொடங்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS)) விளங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடுமையான நோய்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையை வழங்குவதே இதன் தொடக்ககால நோக்கமாக இருந்தது. இன்று, இத்திட்டம் தேசிய காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு, முன்பைவிட மிகவும் மேம்பட்ட ஒரு திட்டமாக உருவெடுத்துள்ளது. இதில் பல்வேறு மருத்துவ முறைகள், பரிசோதனைகள், புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான வாழ்நாள் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான செலவுகள் எனப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல குடும்பங்களுக்கு, சாதாரண நிலையில் கட்டுப்படியாகாத அறுவை சிகிச்சைகளையும் மருத்துவ வசதிகளையும் பெறுவதற்கு இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (CMCHIS) அட்டை பெரும் உதவியாக உள்ளது. இருப்பினும், தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிகிச்சைக்கான தொகுப்பு கட்டணங்கள் குறித்துப் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, அரசு இத்திட்டத்தின்மீது தற்போது செலுத்திவரும் கவனத்தைவிடக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.


முதல்வர் மருந்தகம் (Muthalvar Marunthagam) என்பது மானிய விலையில் மருந்துகளை வழங்கும் ஒரு மருந்தகக் கூட்டமைப்பாகும். சமீபத்திய ஆய்வுகளின்படி, அனைத்து வருமானப் பிரிவினரும் இதனைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள், மத்திய அரசின் ஜன் அவ்ஷதி (Jan Aushadhi) மருந்தகங்களைவிடக் குறைவான விலையில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் ஜன் அவ்ஷதி கடைகளில் அதிகப்படியான மருந்து வகைகள் கிடைக்கின்றன. இந்தத் திட்டம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation (TNMSC)) மற்றும் தனியார் மருந்தகங்கள் இணைந்து செயல்படும் ஒரு பொது-தனியார் கூட்டாண்மை (public–private partnership (PPP)) முறையில் இயங்குகிறது. அதேபோல, தமிழக அரசின் இலவசச் சேவையான 108 அவசர ஊர்தி சேவை, தற்பொழுது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது. இந்த மருத்துவ வசதியானது மாநிலம் முழுவதும் பரவலாகக் கிடைப்பதுடன், அவசர மருத்துவக் காலங்களில் விரைவான சிகிச்சையைப் பெறவும் வழிவகுக்கிறது.


நலன் மற்றும் நல்வாழ்வு


தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடுகள் மேம்பட்டதற்கு வெறும் மருத்துவத் திட்டங்கள் மட்டுமே காரணமல்ல என்றும் சமூக நலத்திட்டங்கள் மூலம் ஒரு சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற திராவிட இயக்க அர்ப்பணிப்பும் மிக முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. விமர்சகர்கள் பெரும்பாலும் இத்தகைய நலத்திட்டங்களை வெறும் கவர்ச்சிகரமான "பண உதவி" திட்டங்கள் என்று ஒதுக்கித் தள்ளினாலும், உண்மையில் இவை தனிநபர்களுக்குப் பெரும் பலனைத் தந்து நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், காமராஜரால் தொடங்கப்பட்டு, பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட பல முதலமைச்சர்களால் விரிவுபடுத்தி முன்னுரிமை அளிக்கப்பட்ட மதிய உணவுத் திட்டமாகும். 2022-ஆம் ஆண்டில், மு. க. ஸ்டாலின் அவர்கள் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' அறிமுகப்படுத்தி, குழந்தைப் பருவ வளர்ச்சியில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். மற்றொரு முக்கியமான திட்டம் 'முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்' (Muthulakshmi Reddy Maternity Assistance Scheme (MRMBS)) ஆகும். இத்திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியானது முறையான பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 'குழந்தை திருமணத் தடுப்புத் திட்டம்' (Child Marriage Prevention Programme (CMPP)) வெற்றிகரமாகச் செயல்படுவதால், இளம் பெண்களுக்கு நேரிடக்கூடிய கட்டாயத் திருமணங்கள் தடுக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் சுகாதார முன்னேற்றங்களில் சிறந்த அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று எனவும் தமிழ்நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்திய அந்த வலுவான அரசியல் உறுதி மட்டும் இல்லையென்றால், இன்று மாநிலம் அடைந்துள்ள இத்தகைய சிறப்பான சுகாதார விளைவுகளைப் பெற்றிருக்கவோ அல்லது அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவோ முடிந்திருக்காது என்றும் பார்த்தசாரதி மற்றும் சின்ஹா ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


வளர்ந்துவரும் தனியார் துறை பராமரிப்புச் சேவைகள் 


தனியார் சுகாதாரத்துறையின் வளர்ச்சியானது சில வழிகளில் அரசால் ஊக்குவிக்கப்பட்டது. இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக, நாட்டின் முதல் பெருநிறுவன மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனை (Apollo Hospitals) திகழ்ந்தது. 1990-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, பல தனியார் நிறுவனங்கள் மருத்துவத் துறையில் தடம் பதித்தன. காலப்போக்கில், மேம்பட்ட நோய் கண்டறியும் வசதிகள், நவீன உபகரணங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட உயர்தர தனியார் மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. இது தமிழகத்திற்குப் பெரும் நன்மைகளைத் தந்ததுடன், சென்னையை இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலைநகராக (Medical Tourism Capital of India) மாற்றவும் உறுதுணையாக இருந்தது என்கின்றனர்.


தனியார்துறை மருத்துவமனைகளின் வருகையால் சேவைகள் மேம்பட்டாலும், இதில் அதிக செலவு என்ற ஒரு பின்னடைவு உள்ளது. தனியார் துறை சுகாதாரப் பராமரிப்பு இயல்பாகவே அதிக செலவுமிக்கது. தற்போது மருத்துவச் சேவைகள் முன்னெப்போதையும் விட அதிகமாகவும், 24 மணி நேரமும் கிடைக்கின்ற போதிலும், மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்யும் நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் ஆயுள் காப்பீடு (Life Insurance) பரவலாக அறியப்பட்டிருப்பதைப் போல, மருத்துவக் காப்பீடு இன்னும் மக்களிடையே முழுமையான வரவேற்பைப் பெறவில்லை. ஒவ்வொரு தனிநபரும் மருத்துவ அவசர காலங்களுக்காகக் காப்பீடு செய்திருப்பதை உறுதிசெய்ய அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதே நேரத்தில், காப்பீட்டுத் திட்டங்கள் அனைவரும் ஏற்கும் வகையில் மலிவான விலையில் கிடைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 



எதிர்கால சவால்கள்


இன்று சுகாதாரத் துறையில் தமிழ்நாடு சந்தித்து வரும் கடுமையான சிக்கல்களில் ஒன்று, அதன் சுகாதாரச் சேவைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையாகும். கடந்த சில ஆண்டுகளில், மாநிலத்தின் சுகாதாரக் உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்து, 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC), 8,713 துணை சுகாதார நிலையங்கள் (Health Sub-Centres (HSC)), 372 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 11,000-க்கும் மேற்பட்ட அரசு சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக மருத்துவ வசதிகளைப் பெறும் வகையில் புதிய பன்நோக்கு மற்றும் சிறப்பு மருத்துவமனைகளும், பல சுகாதாரத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், உள்கட்டமைப்பை மேம்படுத்திய அதே வேகத்தில் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அரசு கவனம் செலுத்தியதா என்ற கேள்வி எழுகிறது. காலிப் பணியிடங்களே இல்லாத நிலையை (Zero Vacancies) உருவாக்குவதே நோக்கம் என்று தற்போதைய சுகாதார அமைச்சகம் கூறினாலும், தற்போதைய நிலைமை அதற்கு நேர்மாறாகவே உள்ளது. சிறந்த ஊதியம் மற்றும் முறையான வேலை நேரத்திற்கான கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, நிலவும் பணியாளர் பற்றாக்குறையானது மாநிலத்தின் சுகாதார அமைப்பின் உறுதித்தன்மைக்கே ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.


மாநில திட்டக் குழுவின் (State Planning Commission) உறுப்பினரான ஜே. அமலோற்பவநாதன், நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கு இடையிலும் நான்கு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே தொடர்ந்து காணப்படும் இரத்த சோகை (Anaemia) பாதிப்பு, மற்றும் குழந்தைகளிடையே நிலவும் குள்ளத்தன்மை (Stunting) மற்றும் உடல் மெலிவு (Wasting) ஆகிய சத்துணவு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். 


தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 (National Family Health Survey-5 (NFHS-5)) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில் மாறுபட்ட போக்குகள் காணப்படுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதல் (Stunting) குறைந்துவரும் வேளையில், உடல் மெலிவு (Wasting) மற்றும் தீவிர உடல் மெலிவு போன்றவை இன்னும் அதிக அளவிலேயே நீடிக்கின்றன. குறைந்த சமூக-பொருளாதார நிலை, பாலினம், தாய்ப்பால் புகட்டுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பெற்றோரின் கல்வி அறிவு போன்ற காரணிகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. 2019 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஐந்து வயதிற்குட்பட்ட 7,60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் மெலிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.


மருத்துவர் அமலோற்பவநாதன், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் மற்றும் பதின்ம வயது கர்ப்பங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தின் சுகாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமானால், அரசு இந்தத் தீவிரமான பிரச்சினைகளை உடனடியாகக் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


தொற்றுநோயல்லாத நோய்கள், சமூக ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என்பதால், அவை வருங்காலத்தில் மாநிலத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என்று எச்சரிக்கின்றனர். இதனை எதிர்கொள்ளச் சிறந்த வழி தடுப்பு முறைகளில் தீவிர கவனம் செலுத்துவதாகும். அதாவது, கருவிலேயே தொடங்கும் 'தொடக்கநிலைத் தடுப்பு' (Primordial) மற்றும் நோய் வராமல் தடுக்கும் 'முதன்மை நிலைத் தடுப்பு' (Primary) முறைகளில் தொடங்கி, நோயைக் கண்டறிந்து குணப்படுத்தும் 'இரண்டாம் நிலைத் தடுப்பு' (Secondary) வரை செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்கள் தீவிரமான சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதும் அவசியமாகிறது. 


தமிழ்நாடு தனது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப (Demographic changes), புதிய தொழில் திறன்களை வளர்ப்பதன் மூலமும், முதியோர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தமிழகம் இளைஞர் சக்தியால் பயனடைந்தாலும், எதிர்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, முதியோர்களுக்குத் தேவையான உடல், மன மற்றும் உணர்வுப்பூர்வமான பராமரிப்பை வழங்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களை அரசு வடிவமைக்க வேண்டும். அதேவேளையில், அவர்கள் பொருளாதாரரீதியாகச் சுதந்திரமாக வாழ்வதற்கு உதவும் வகையில் பிரத்யேகத் திட்டங்களையும் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி மற்ற மாநிலங்களைவிடக் குறைவாக இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் சுகாதாரச் சேவைகள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள உயர்நிலைச் சிகிச்சை மையங்கள் மக்கள் கூட்டத்தால் நெரிசலாகக் காணப்படுகின்றன; அதே வேளையில், பல புறநகர் அல்லது ஆரம்பச் சுகாதார மையங்களில் நோயறிதல் கருவிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் போதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.


மேலும், தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் இதற்கு முன்பு கவனிக்கப்படாமல் விடப்பட்ட பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக, சுகாதாரத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஒரே இடத்தில் அல்லது மையப்படுத்தப்பட்ட அமைப்பின்கீழ் கொண்டு வரப்படுகிறதா? அவ்வாறு அதிகாரம் மையப்படுத்தப்பட்டால், ஒரு மாநிலத்தில் அவசர கால நெருக்கடிகள் ஏற்படும்போது, அவை தீவிரமடைவதற்கு முன்பே அந்த மாநில அரசு விரைந்து செயல்பட்டு அதற்கு எதிர்வினையாற்றும் திறனை இது குறைத்துவிடுமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. 


தமிழ்நாட்டின் தற்போதைய சவாலானது, வலுவான ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறந்த தாய்-சேய் நலம், புதுமையான மருத்துவச் சேவைகள் மற்றும் சமூக அக்கறையுள்ள வளர்ச்சி ஆகியவற்றில் தான் அடைந்துள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதாகும். அதே வேளையில், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சேவையின் தரத்தில் அதிக முதலீடு செய்வதுடன், பொறுப்புணர்வையும் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்தச் சுகாதாரக் கட்டமைப்பைத் துரிதமாகச் செயல்படுத்துவதே மாநிலத்தின் முதன்மை நோக்கமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இந்தக் கட்டுரை தி இந்து மின் புத்தகத்தின் ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றம்: சமூக சமத்துவத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி.


Original article : Ahead in health, but a new set of challenges awaits Tamil Nadu -Ramya Kannan

Share: