மக்களவை சபாநாயகர் சிறப்புரிமைக் குழுவிற்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்கிறார் -மானஸ் ஸ்ரீவஸ்தவா

 தற்போதைய செய்தி


18-வது மக்களவை அமைக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா செவ்வாயன்று சிறப்புரிமைக் குழுவிற்கு 15 உறுப்பினர்களை பரிந்துரை செய்தார். இந்தக் குழு சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் வழக்குகளை ஆராயும். பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் இந்தக் குழு செயல்படும்.


முக்கிய அம்சங்கள்: நாடாளுமன்ற சிறப்புரிமை, சிறப்புரிமை மீறல் மற்றும் சிறப்புரிமைக் குழுக்கள் பற்றி…


நாடாளுமன்ற சிறப்புரிமை (Parliamentary privilege) என்பது நாடாளுமன்றம் ஒரு அமைப்பாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் விதிவிலக்குகளைக் குறிக்கிறது. சிறப்புரிமை இல்லாமல் அரசியலமைப்பால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்ற முடியாது.


அரசியலமைப்பு சட்டத்தின் படி, நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் நாடாளுமன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.


இந்திய அரசியலமைப்பின்படி, பிரிவுகள் 105 மற்றும் 122 நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளைக் (privileges of Parliament) பற்றி குறிப்பிடுகினற்ன. அதே, நேரத்தில் பிரிவுகள் 194 மற்றும் 212 மாநில அரசாங்கங்களின் சலுகைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 105-ன் படி, நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலோ அல்லது குழுவிலும் ஒரு உறுப்பினர் கூறிய எந்தக் கருத்துக்கும் அல்லது அவர் அளித்த வாக்கு தொடர்பாக, அந்த உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 122-ன் படி: நாடாளுமன்றத்தில் நடந்த எந்த நடவடிக்கையையும், நடைமுறை தவறு நடந்தது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


பிரிவு 194 மற்றும் பிரிவு 212 ஆகியவை மாநில சட்டமன்றம் (state legislature) தொடர்புடைய பிரிவுகளாகும்.


சிறப்புரிமை மீறல் (breach of privilege) என்பது நாடாளுமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் உரிமைகளை மீறும் செயலாகும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றம் அல்லது அதன் குழுக்கள் குறித்து குறை கூறுவதும் அல்லது அவற்றின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும், அது சிறப்புரிமை மீறல் ஆக கருதப்படலாம். சிறப்புரிமை மீறலில், செய்தித்தாள்/பத்திரிகை/தொலைக்காட்சி நேர்காணல்கள் அல்லது பொது உரைகளில் வெளியிடப்பட்ட செய்திகள், தலையங்கங்கள் அல்லது அறிக்கைகளை வெளியிடுவதும் அடங்கும்.


சிறப்புரிமைக் குழு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள், சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளை மீறுவது தொடர்பான அனைத்து கேள்விகளையும் இந்தக்  குழு ஆராய்கிறது. இது ஒரு நிலைக்குழு (Standing Committee) ஆகும். இது சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வழக்குகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள  பரிந்துரை செய்கிறது. மக்களவை குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரத்தில் மாநிலங்களவை குழுவில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.


சிறப்புரிமை குழு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்: குழுவின் பணி, அத்தகைய வழக்குகளை ஆராய்ந்து தேவை என்று கருதக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதாகும். குழு தனது ஆய்வை முடித்த பிறகு ஒரு அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். குழு அதற்கான எந்த நேரத்தையும் நிர்ணயிக்கவில்லை என்றால், குழுவைப் பற்றி குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


அறிக்கையை பரிசீலிப்பதற்காக ஒரு தீர்மானம் (motion) நிறைவேற்றப்பட வேண்டும். அதில் திருத்தங்களை பரிந்துரை செய்யலாம். தலைவர் அல்லது குழுவின் எந்த உறுப்பினரும் அல்லது வேறு எந்த உறுப்பினரும், அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை சபை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் இருக்கலாம் அல்லது திருத்தங்களுடன் ஏற்கலாம் என்று முன்மொழியலாம்.


அதிக எண்ணிக்கையிலான தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஒரு சில சூழல்களில் மட்டுமே தண்டனை நடவடிக்கை பரிந்துரைக்கப்படுகிறது.


மிக முக்கியமான வழக்கு 1978-ல் சிக்மகளூரில் இருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட வழக்காகும். அவசரநிலையின் போது நடந்த அத்துமீறல்களை விசாரித்த நீதிபதி ஷா  குழு தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, அப்போதைய உள்துறை அமைச்சர் சரண் சிங், அவருக்கு எதிராக சிறப்புரிமை மீறல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.


முக்கியத் தீர்மானம் (Substantive Motion)


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் "அனைத்து நெறிமுறையற்ற நடத்தைகளையும் ஆராய விசாரணையைத்" தொடங்கிய பின்னர், அவரை மக்களவையில் இருந்து "உடனடியாக வெளியேற்ற" கோரி பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துபே கொண்டு வந்த முக்கிய தீர்மானத்தை சிறப்புரிமைக் குழு விசாரிக்க வாய்ப்பில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. மார்ச் 9-ஆம் தேதி தொடங்கும் நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின்போது சபாநாயகர் துபேயின் தீர்மானத்தை எடுத்துக் கொண்டால், மக்களவை அதை நேரடியாக விவாதிக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


முக்கிய தீர்மானம் என்பது சட்டமன்றத்தில் விவாதம் மற்றும் முடிவு ஏற்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். "சட்டப்பூர்வ தீர்மானம் என்பது சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, சபையின் முடிவை வெளிப்படுத்தும் வகையில் வரைவு செய்யப்பட்ட ஒரு தனி அதிகாரம் கொண்ட தன்னிச்சையான முன்மொழிவாகும் என்று எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தர் ஆகியோர் தங்கள் அதிகாரப்பூர்வ புத்தகமான நாடாளுமன்ற நடைமுறை மற்றும் நடைமுறைகளில் கூறுகின்றனர். இது பல்வேறு வகையான சடப்பூர்வ தீர்மானங்களை விரிவாக விளக்குகிறது.


"சபநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள், குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானங்கள், பொதுநலன் சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை எழுப்புவதற்கான தீர்மானங்கள், அமைச்சர்கள் குழுவின் மீதான நம்பிக்கை/நம்பிக்கையில்லா தீர்மானங்கள், சபாநாயகர்/துணை சபாநாயகரை நீக்குவதற்கான தீர்மானம், ஒரு உறுப்பினரின் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கும் தீர்மானம் மற்றும் சபையால் விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாத இடங்களில், மக்களவையில் கொண்டு வரப்படும் சடப்பூர்வ தீர்மானங்களுக்கு எடுத்துக்காட்டுகள்" என்று அவர்கள் எழுதுகிறார்கள்.


முக்கியத் தீர்மானங்கள் சபையின் முடிவை வெளிப்படுத்தும் வகையில் வாக்கெடுப்புக்கு விடப்படுகின்றன.


உயர் அதிகாரத்தில் உள்ள நபர்களின் நடத்தை ஒரு சடப்பூர்வ தீர்மானத்தில் மட்டுமே விவாதிக்க முடியும் என்று எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தர்  போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவரை பதவிநீக்கம் செய்வதற்கான குறிப்பிட்ட நடைமுறையை அரசியலமைப்பு வகுக்கிறது. மேலும், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் தணிக்கையாளர் அல்லது தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையும் குடியரசுத்தலைவரூக்கு உரையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தீர்மானங்கள் மூலம் பதவி நீக்கம் செய்வதற்கான பிரிவுகள் அரசியலமைப்பில் உள்ளன.


முக்கியத் தீர்மானம் (Substantive Motion) முன்வைக்கும்போது, முன் அறிவிப்பு (notice) கொடுக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பை வழங்கிய உறுப்பினரால் மட்டுமே அது முன்வைக்கப்படலாம். ஒரு அமைச்சரின் பெயரில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை மற்றொரு அமைச்சர் முன்மொழியலாம் என்ற ஒரு விதிவிலக்கு உள்ளது. ஆனால், அதை முன்மொழிபவர் மற்ற அமைச்சரின் சார்பாக தான் முன்மொழிகிறேன் என்பதைக் குறிப்பிட வேண்டும்.


இந்த வழக்கில், துபே ஒரு அமைச்சர் அல்ல என்பதால், தலைவர் அனுமதிக்கும்போது அவர் அதை முன்மொழிய வேண்டும். முக்கியமாக, சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானங்கள் மற்றும் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தவிர, எந்தவொரு நிலையான தீர்மானமும் வழிமொழியப்பட வேண்டிய அவசியமில்லை.


Original article : Lok Sabha Speaker nominates members to Privilege Committee: -Manas Srivastava

Share: