மேற்கு வங்க சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்ற மாநிலங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இதன் தாக்கம் என்ன? -தாமினி நாத்

 செயல்முறையிலிருந்து இறுதி முடிவு வரை, மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு வேறுபட்டது மற்றும் அது ஏன் சர்ச்சையை உருவாக்கியது என்பதற்கான ஒரு பார்வை குறித்து கீழே குறிப்பிட்டுள்ளது.


வங்காள சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்திகள்: மேற்கு வங்காளத்தில் நான்கு மாதகால சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு, பிப்ரவரி 28 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, ​​மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8% அல்லது சுமார் 61 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இந்த இறுதி வாக்காளர் பட்டியலானது இறுதியானது அல்ல என்பதையும் அது குறிப்பிட்ட்டிருந்தது.


உண்மையில், மாநிலத்தில் 61.06 லட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் கண்டனர். ஆனால் அவர்களின் பெயர்கள் "தீர்ப்புக்கு உட்பட்டவை" என்று குறிக்கப்பட்டன. இதன் பொருள், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் இருந்தன, ஆனால் அவர்களின் நிலை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்கள் வழக்குகளை மதிப்பாய்வு செய்து, அடுத்தடுத்த துணைப் பட்டியல்களில் அவர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்யும் வரை, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாது.


சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன் விளைவாக, அவர்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை சிறப்பு தீவிர திருத்தத்தை(SIR) முடித்த 9 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பிரதேசங்களில் இந்த நிலைமை ஏற்படவில்லை.


மேற்கு வங்காளத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு வேறுபட்டது மற்றும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு இதன் பொருள் என்ன என்பதைக் கீழே குறிப்பிட்டுள்ளது.


கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறை என்ன?


ஜூன் 24, 2025 அன்று, நாட்டின் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்துவதற்கான திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 20 ஆண்டுகளாக, தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் முன்பும் புதிதாகத் தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதன் மூலமும், இறந்த மற்றும் பிற தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதன் மூலமும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து வருகிறது.


இருப்பினும், ஜூன் 24-ம் தேதி வெளியான சிறப்பு தீவிர திருத்த (SIR) உத்தரவு, முந்தைய திருத்தங்களிலிருந்து வேறுபட்டு ஒரு புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய செயல்முறையின் கீழ், வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் ஒரு மாதக் கணக்கெடுப்பு நிலையில், தங்கள் உள்ளூர் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் (Booth Level Officer (BLO)) அல்லது இணையவழியில் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


2000-களின் முற்பகுதியில் மாநிலங்கள் முழுவதும் நடந்த கடைசி தீவிர திருத்தத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்ட அனைவரும், தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது உட்பட, தங்கள் தகுதியை நிறுவ தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட 11 ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முதன்முதலில் பீகாரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. ஏனெனில், இந்த ஆண்டு இறுதியில் மாநிலம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருந்தது.


அக்டோபர் 27, 2025 அன்று, ஒன்பது மாநிலங்களில் (சத்தீஸ்கர், இராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம்) மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி) சிறப்பு தீவிர திருத்தத்திற்கான (SIR) மாற்றியமைக்கப்பட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தரபிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்.


அக்டோபரில் அறிவிக்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) இரண்டாம் நிலை கட்டத்திற்கு, தேர்தல் ஆணையம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சிறிது மாற்றியுள்ளது. இப்போது, ​​அனைத்து வாக்காளர்களும் எந்தவொரு மாநிலத்திலோ அல்லது ஒன்றியப் பிரதேசத்திலோ கடைசி தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலுடன் தங்களை "இணைக்க" (map) வேண்டியிருந்தது. வாக்காளர்கள் அந்த முந்தைய பட்டியலில் உள்ள தங்கள் சொந்தப் பெயர் மூலமாகவோ அல்லது அந்தப் பட்டியலில் பட்டியலிடப்பட்ட உறவினரின் பெயர் மூலமாகவோ தங்களை இணைத்துக் கொள்ளலாம். அவர்கள் அல்லது ஒரு உறவினர் பதிவு செய்யப்பட்ட வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க முடியாத அனைவருக்கும், பின்னர் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவர்களின் தகுதியை உறுதிப்படுத்த ஆவணங்களை வழங்குமாறு கேட்கப்படும்.


மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எவ்வாறு வேறுபட்டது?


9 மாநிலங்களிலும் 3 ஒன்றியப் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை ஒரே மாதிரியாகத் தொடங்கியது. ஒரு மாத கணக்கெடுப்பு நிலையானது நவம்பர் 4, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் 27-ம் தேதிக்குள் பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை முதலில் விநியோகிக்க வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க வேண்டும். பின்னர், அவர்கள் பிரத்யேக வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) செயலியைப் பயன்படுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) மையப்படுத்தப்பட்ட ECINET தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


ஒரு படிவங்களை திருப்பி அனுப்பப்படாதவர்கள் அல்லது வாக்குச்சாவடி நிலை அதிகாரியால் (BLO) இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள், மாற்றப்பட்டவர்கள்/இல்லாதவர்கள் அல்லது வேறு இடங்களில் சேர்க்கப்பட்டவர்கள் என அனைவரும் அவ்வாறு குறிக்கப்பட்டு, டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 58 லட்சமாக இருந்தது. இதனால், வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.08 கோடியாகக் குறைந்தது.


மேற்கு வங்காளத்தில் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பெயர் தெரியாத நிலையில் குறிப்பிட்டதாவது, இந்தக் கணக்கெடுப்பு நிலையில் படிவங்களுடன் எந்த ஆவணங்களையும் சேகரிக்க வேண்டாம் என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) தெளிவாக அறிவுறுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். வாக்காளர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் மட்டுமே கணக்கெடுப்பு படிவத்தில் தங்களை "இணைக்க" வேண்டும் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.


மற்ற மாநிலங்களில் நிலைமை இப்படி இல்லை. உதாரணமாக, உத்திர பிரதேசத்தில், வாக்காளர்களுக்கு விசாரணைக்கான அறிவிப்பு வழங்கப்பட்டால், ஆதாரமாக பதிவேற்றுவதற்காக, முதல் கட்டத்திலேயே வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) ஆவணங்களைச் சேகரித்தனர். கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்பட்ட பீகாரில், முந்தைய பட்டியலில் இருந்த மாமாக்கள் மற்றும் அத்தைகள் உட்பட எந்த வயது வந்த உறவினருடனும் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.


அக்டோபரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இரண்டாம் கட்டத்தை அறிவிக்கும் போது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்கள் எந்த வயது வந்த உறவினருடனும் தங்களை இணைக்கலாம் என்று கூறியிருந்தார். கணக்கெடுப்பு படிவம் ஒரு "உறவினரின்" விவரங்களையும் கேட்டது. இதில் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு மட்டும் இந்த விதிமுறை கட்டுப்படுத்தப்படவில்லை.


டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வரைவுப் பட்டியல்கள் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதும் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட வாக்காளர் பதிவு அதிகாரிகள் (Electoral Registration Officers (EROs)), "இணைக்கப்படாத" (unmapped) வாக்காளர்களுக்கு அறிவிப்புகளை வழங்கவும், விசாரணைகளை நடத்தவும், ஆவணங்களை சேகரிக்கவும், ஒவ்வொரு வழக்கிலும் நியாயமான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.


பெயர்களில் எழுத்துப்பிழை முரண்பாடுகள், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகக் காட்டப்பட்ட நிகழ்வுகளும், குறிப்படப்பட்ட ஒரு வாக்காளருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையிலான வயது இடைவெளி 15 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 50 வயதுக்கு மேலாக இருப்பது உள்ளிட்ட "தர்க்கரீதியான முரண்பாடுகளை" (logical discrepancies) குறிக்க தேர்தல் ஆணையம் அதன் மையப்படுத்தப்பட்ட மென்பொருளை ERONET தரவுத்தளம் மூலம் பயன்படுத்தியது. இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளிலும், தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைகளுக்காக தேர்தல் பதிவு அதிகாரிகள் (Electoral Registration Officers (ERO)) முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


மேற்கு வங்காளத்தில் செயல்முறை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு அறிவிப்பு காலம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு, விசாரணை நிலையில் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளைக் கண்காணிக்க "நுண் பார்வையாளர்களை" (micro-observers) நியமித்து டிசம்பர் 19, 2025 அன்று தேர்தல் ஆணையம் மேற்கு வங்காள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியது.


பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்களான மொத்தம் 8,100 நுண் பார்வையாளர்கள், விசாரணைகளின் போது வாக்காளர்களால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களைச் சரிபார்க்க நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக நுண் பார்வையாளர்களை நியமிப்பது தேர்தல் ஆணையத்திற்கு முதன்முறையாக மட்டுமல்லாமல், மேற்கு வங்காளத்தில் மட்டுமே ஆணையம் அவ்வாறு செய்தது.


இதன் விளைவாக, மேற்கு வங்காளத்திற்கு எதிரான தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும், சட்டப்பூர்வ அதிகாரமான தேர்தல் பதிவு அதிகாரிகளின் (ERO) பணியில் குறுக்கிடுவதாகவும் மாநில ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 இன் (Representation of the People Act) படி, ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்க தேர்தல் பதிவு அதிகாரிகளால் (ERO) தான் முடியும். தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) பொதுவாக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் பதவியில் உள்ள ஒரு மாநில அரசு பணியாளராக இருப்பார். அவர் மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகிறார்.


தனது பங்கிற்கு, மேற்கு வங்காள அரசு தேர்தல் பதிவு அதிகாரிகளாக (ERO) நியமிக்க போதுமான எண்ணிக்கையிலான துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் (SDM) தரவரிசை அதிகாரிகளை வழங்கத் தவறிவிட்டதாகவும், இதனால் நுண் பார்வையாளர்களை நியமித்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.


மேற்கு வங்காளத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) செயல்படுவதால் நுண் பார்வையாளர்களை நியமிக்க வேண்டிய அவசியம் உணரப்படுவதாகக் கூறினர். தகுதியற்ற வாக்காளர்களை வாக்காளர் பதிவு அதிகாரிகள் நீக்கவில்லை என்றும், போலி ஆவணங்கள் உட்பட அனைத்து வகையான ஆவணங்களையும் ஆதாரமாக பதிவேற்றுகிறார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


விசாரணைகளுக்கான கடைசி தேதி, பிப்ரவரி 14 நெருங்கி வருவதால், தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு இடையே மோதல் தீவிரமடைந்தது. இதற்கான காலக்கெடு நெருங்க வரும்போது பதட்டங்கள் மேலும் அதிகரித்தன. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான "நம்பிக்கை பற்றாக்குறையை" (trust deficit) குறிப்பிட்டது. பிப்ரவரி 20 அன்று, முழுமையான நீதிக்காக ஒரு ஆணை அல்லது உத்தரவை பிறப்பிக்கும் அரசியலமைப்பின் பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவு செய்ய நீதித்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவும் மேற்கு வங்காளத்திற்கு மட்டுமே பொருந்தும்.


பிப்ரவரி 28 அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது "தீர்ப்புக்கு உட்பட்டது" (under adjudication) என்று வைக்கப்பட்ட 60.06 லட்சம் வழக்குகள் இவை. சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் தகுதி குறித்து நீதித்துறை அதிகாரி முடிவு செய்யும் போது, ​​துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தப் பட்டியல்கள் இறுதிப் பட்டியலின் ஒரு பகுதியாகக் கருதப்படும். ஆனால், தீர்ப்பு வழங்குவதற்கும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படுவதற்கும் நீதிமன்றம் எந்த காலக்கெடுவையும் விதிக்காததால், சரியான நேரத்தில் அனுமதி பெறாதவர்கள் இந்த வாக்கெடுப்புகளில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.


நாட்டின் பிற மாநிலங்களுக்கு இதன் பொருள் என்ன?


வாக்காளர்களின் தகுதியை தீர்மானிக்க நுண் பார்வையாளர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளை நியமிப்பது, 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (RP) வழங்கப்பட்டுள்ள தேர்தல் பதிவு அதிகாரிகளின் (ERO) அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்துள்ளது என்பதை மேற்கு வங்காளத்தில் உள்ள தேர்தல் ஆணையம் (EC) அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், மாநில அரசு தேர்தல் ஆணையத்துடன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக, தவறு செய்யும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) மற்றும் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரத்துவம் விரும்பவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.


மார்ச் 1 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (TMC) தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மாநிலத்தை நியாயமற்ற முறையில் குறிவைப்பதாக தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கண்டித்தார். விசாரணைகள் முடிந்ததும் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO) மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் (AEROs) 14 லட்சம் வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. ஆனால், இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்பின்கீழ் வைக்கப்பட்டன என்று குறிப்பிட்டார். இந்த 60 லட்சம் பெயர்களில், தீர்ப்பின்கீழ் உள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் அதிக சிறுபான்மை மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாவட்டங்களில் முர்ஷிதாபாத் மாவட்டம், மால்டா மாவட்டம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஆகியவை அடங்கும். இந்த செயல்முறையை பானர்ஜி கேள்வி எழுப்பினார். எந்த வாக்காளர்கள் தீர்ப்பின்கீழ் வைக்கப்படுவார்கள் என்று யார் முடிவு செய்தார்கள் என்று அவர் கேட்டார்.


Original article : How West Bengal SIR played out differently from other states, what it means for rest of country?. -Damini Nath

Share: