இந்தியாவின் மொத்த சாலை நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் 2 சதவீதம் மட்டுமே உள்ளன. ஆனால், சாலை விபத்து உயிரிழப்புகளில் ஏறக்குறைய 30 சதவீதத்திற்கு இவை காரணமாக இருக்கின்றன என்ற தரவை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், நிர்வாகத் தவறுகள் அல்லது உள்கட்டமைப்பு குறைபாடுகளால் அதிவேகச் சாலைகள் "ஆபத்து நிறைந்த பாதையாக" மாறிவிடக் கூடாது என்று கூறியது. மேலும், ஒரு பாதுகாப்பான பயணச் சூழல் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு அங்கமாகும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
முக்கிய அம்சங்கள்:
1. நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 34-பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. சாலை விபத்துகளைத் தடுக்க, ஒன்றிய மற்றும் மாநில சாலைத் துறைகளுக்கு 13 அம்சங்கள் கொண்ட முக்கிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு, ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. அந்த உரிமையில் சாலைப் பயணிகளின் பாதுகாப்பும் அடங்கும் என்பதை இந்தச் சட்டப்பிரிவு அங்கீகரித்துள்ளது.
3. சட்டவிரோத வாகன நிறுத்தம் அல்லது விபத்து அதிகம் நடக்கும் இடங்கள் போன்ற தவிர்க்கக்கூடிய ஆபத்துகளால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டாலும்கூட, அது குடிமக்களைப் பாதுகாக்கும் அரசின் கடமையில் ஏற்பட்ட தோல்வியையே குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள 'வாழும் உரிமை' என்பது, சட்டவிரோதமாக ஒருவரின் உயிரைப் பறிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல; மனித உயிர் மதிக்கப்படும் மற்றும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கட்டாயக் கடமை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. எனவே, பயணிகளின் பாதுகாப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள 'கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையின்' ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரிக்க வேண்டியது அரசின் கடமையாகும். பொதுநலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினையின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பது அவசியமானது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
5. அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, இதற்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
13 அம்ச பாதுகாப்பு செயல் திட்டம்: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்
1. தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்துப் பாதையிலோ அல்லது சாலை ஓரங்களில் உள்ள நடைபாதையிலோ, கனரக அல்லது வணிகரீதியிலான வாகனங்களை நிறுத்தவோ அல்லது நிறுத்தி வைக்கவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக நிறுத்துமிடங்கள், சாலையோர ஓய்விடங்கள் அல்லது வழிநெடுகிலும் உள்ள பொது வசதி மையங்களில் மட்டுமே இந்த வாகனங்களை நிறுத்த அனுமதி உண்டு என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிபிட்டுள்ளது.
2. விதிகளை மீறும் வாகனங்களைக் கண்காணிக்க மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (Advanced Traffic Management System (ATMS)) அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த அமைப்பின் மூலம், வாகனங்கள் இருக்குமிடம் (Global positioning system (GPS)) மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட புகைப்பட ஆதாரங்களுடன் காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்ப வேண்டும் என்றும், இந்தத் தரவுகளை மின்னணு அபராதம் செலுத்தும் முறையுடன் (e-Challan) இணைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
3. உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் இந்த அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், எந்தவொரு தேசிய நெடுஞ்சாலையின் 'வழி உரிமை' (Right of Way) பகுதிக்குள்ளும் புதிய தாபாக்கள், உணவகங்கள் அல்லது வணிகக் கட்டமைப்புகளை உருவாக்கவும், இயக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
4. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, புதிதாகக் கட்டப்பட்ட மற்றும் ஏற்கனவே உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதக் கட்டடங்களையும் இடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாநில அரசுகள் 60 நாட்களுக்குள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்படி, எந்தவொரு தேசிய நெடுஞ்சாலையின் மையப் புள்ளியிலிருந்தும் 40 மீட்டர் தொலைவிற்குள் குடியிருப்புப் பயன்பாட்டிற்காகவும், 75 மீட்டர் தொலைவிற்குள் வணிகப் பயன்பாட்டிற்காகவும் நிலத்தின் தன்மையை மாற்றுவதற்குத் தடைவிதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
5. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)) போன்ற போக்குவரத்துத் துறை பணியாளர்களைக் கொண்ட சிறப்பு நெடுஞ்சாலை கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் அனைத்திலும் தனது மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் (Traffic Management Control Centre Cameras (TMCC)), வாகனங்களின் வேகத்தைக் கண்டறியும் கருவிகள் (Vehicle Speed Detection System (VSDS)), வாகனங்களை அடையாளம் காணும் கேமராக்கள் (Video Incident Detection System (VIDS)), போக்குவரத்துத் தகவல்களைத் தெரிவிக்கும் மின்னணு பலகைகள் (Variable Message Sign Boards (VMS)) மற்றும் அவசரகால அழைப்புப் பெட்டிகள் ஆகியவற்றை அமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
7. விபத்து ஏற்படும்போது விரைவாகச் செயல்படுவதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)) ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையிலும் 75 கிலோமீட்டருக்கு மிகாத இடைவெளியில், சுங்கச்சாவடிகள், வழித்தட வசதிகள் அல்லது இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அடிப்படை உயிர் காக்கும் அவசர ஊர்திகள் மற்றும் மீட்பு இயந்திரங்களை (Recovery Cranes) தயார் நிலையில் நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழ்வதற்கான உரிமை
1. இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு, வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமையை வழங்குகிறது. இது ஒரு நபரின் வாழ்வையோ அல்லது சுதந்திரத்தையோ தன்னிச்சையான முறையில் பறிப்பதிலிருந்து தகுந்த பாதுகாப்பை உறுதி செய்கிறது. மிக முக்கியமாக, இந்த உரிமை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கும் (குடிமகன் அல்லாதவர்களுக்கும்) பொருந்தும்.
2. வாழ்வுரிமை என்பது வெறுமனே உயிர் வாழ்வதை மட்டும் குறிக்காமல், கண்ணியமான வாழ்க்கை, வாழ்வாதாரம், தனியுரிமை, இருப்பிடம் மற்றும் ஆரோக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு, மாதவிடாய் சுகாதாரம் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் உரிமை என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு-14 என்பது என்ன?
1. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு-142 இந்திய உச்சநீதிமன்றத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. சில நேரங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களோ அல்லது விதிகளோ ஒரு பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்காதபோது, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு "முழுமையான நீதியை" வழங்குவதற்காக இந்த அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு வழக்கின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நீதிமன்றம் தனது அதிகார வரம்பை விரிவுபடுத்தித் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் வகையில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அசாதாரணமான தன்மை கொண்டவை என்றாலும், உச்சநீதிமன்றம், காலப்போக்கில் தனது தீர்ப்புகளின் வாயிலாக இந்த அதிகாரத்தின் வரம்பு மற்றும் விரிவு ஆகியவற்றைத் தெளிவுபடுத்தி வரையறுத்துள்ளது.
Original article : SC Links Road Safety to Right to Life: What it means for citizens and state -Roshni Yadav