நடைபெற்று வரும் பணி: குடும்ப சமூக நுகர்வு (சுகாதாரம்) கணக்கெடுப்பின்படி, அரசு மருத்துவமனைகளின் திறனை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.

பொதுத்துறை மருத்துவமனைகளின் திறனை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.


தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) நடத்திய சமீபத்திய 80-வது சுகாதார ஆய்வு, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகும், பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட பிறகும் நடத்தப்பட்ட முதல் விரிவான ஆய்வாகும். இதற்கு முந்தைய ஆய்வுகள் பெரும்பாலான இந்தியர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்பதைக் காட்டின. ஆனால், 2018-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (PMJAY) தொடங்கப்பட்டதிலிருந்து, காப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதுடன், மருத்துவமனைச் செலவுகளில் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் விகிதம் இன்னும் 2014-ஆம் ஆண்டு நிலைக்குத் திரும்பவில்லை. இதன் பொருள், காப்பீடு இருப்பது மட்டுமே மருத்துவமனை வசதியை உறுதி செய்துவிடாது என்பதாகும். மறைமுகக் கூடுதல் செலவுகள் இன்னும் மக்களை நிதிச் சுமைக்கு ஆளாக்குகின்றன. பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (PMJAY) மற்றும் மாநிலக் காப்பீட்டுத் திட்டங்கள் சந்தை விலையைவிடக் குறைவாகவே மருத்துவமனைகளுக்குப் பணம் செலுத்துவதால், தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் பரிசோதனைகள் மற்றும் பிற சேவைகளுக்கு நோயாளிகளிடம் தனியாகக் கட்டணம் வசூலிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்க நிதியுதவி பெறும் காப்பீட்டுத் திட்டங்கள் தனியார் மருத்துவமனைகள் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளைச் சென்றடைய உதவுகின்றனவே தவிர, மருத்துவ சிகிச்சை விலைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. அதே நேரத்தில், மக்களுக்கு ஒருவித நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது, காப்பீடு மருத்துவமனைச் செலவுகளுக்கு உதவுகிறது, மேலும் பொதுச் சுகாதார சேவைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஆதரவளிக்கின்றன. கூடுதலாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகப் புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தொற்று நோய்கள் (Infectious diseases) குறைந்திருந்தாலும், தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases) அதிகரித்துள்ளன. அதிகமான மக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை நாடி வருவதாகவும், இதன் மூலம் அவர்கள் சுகாதார அமைப்பின் நேரடிப் பார்வைக்கு வருவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.


முந்தைய ஆய்வுகள், மக்கள் தங்களின் சொந்தப் பணத்தைச் செலவழித்துச் சிகிச்சை பெறுவது (Out-of-Pocket Expenditure (OOPE)) வறுமைக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்ததைச் சுட்டிக்காட்டின. தற்போது 80-வது சுற்று ஆய்வில், சராசரி மருத்துவச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்திருந்தாலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான இடைநிலைச் செலவு ₹11,285-ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக, அரசு வெளிநோயாளிப் பிரிவில் சிகிச்சைச் செலவு ஏறக்குறைய முற்றிலும் இல்லையென்கிற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மருத்துவச் செலவுகள் என்பது அதிகப்படியான குறைந்த விலை சிகிச்சைகளையும், ஒரு சில மிக விலையுயர்ந்த அறுவை சிகிச்சைகளையும் உள்ளடக்கியதாகும். பொதுத்துறை நிறுவனங்கள் அடிப்படைச் சிகிச்சைகளை வழங்குவதால், ஒட்டுமொத்தமாகச் சுகாதாரம் எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளது. இருப்பினும், சில நேரங்களில் இது கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் உள்ள (Ayushman Arogya Mandir (AAM)) அமைப்புகள், இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகளை வழங்கினாலும், நாள்பட்ட நோய்களுக்கான நிதியுதவி இன்னும் போதுமானதாக இல்லை என்கின்றனர். இதனால், ஏழை மக்களுக்கு பெயரளவில் மருத்துவக் காப்பீடு இருந்தாலும், நடைமுறையில் அவர்களுக்கான முழுப்பலன் கிடைப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். விலையுயர்ந்த சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அடுத்தகட்டச் சீர்திருத்தங்களில், அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்துவதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக உயர்தரச் சிகிச்சைகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன.

Original article :  Work in progress: On the Household social consumption (health) survey India must strengthen public sector hospital capacity

Share: