கடந்த வியாழக்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை (திருத்த) விதிகள், 2026-ஐ (Citizenship (Amendment) Rules, 2026) அறிவித்தது. இதன் மூலம் மின்னணு வெளிநாட்டுவாழ் இந்தியக் குடிமக்கள் (Electronic Overseas Citizen of India (e-OCI)) அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பங்கள் அனைத்தையும் முழுமையாக இணையவழியில் சமர்ப்பிக்கும் முறை மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கான இரண்டு நாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
• மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் புதிய விதிகள் வெளிநாட்டு வாழ் இந்திய மக்களுக்கான குடியுரிமை (Overseas Citizen of India (OCI)) முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் என்று தெரிவித்தார். விண்ணப்பங்கள், ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்கள் அனைத்தும் இனி இணையவழியாகவே நிர்வகிக்கப்படும் என்றும் இதனால் ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் காகித நடைமுறைகள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார். புதிய விதிமுறையின்படி, மின்னணு அட்டை (e-OCI) மற்றும் நேரடி அட்டைகள் என இரண்டுமே அனுமதிக்கப்படும், இது வெளிநாட்டு இந்தியர்களுக்கான அடையாளச் சான்றுகளை காகிதமில்லா முறையாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் உயிரியளவுகளை (Biometrics) பகிர்ந்துகொள்ள சம்மதிக்க வேண்டும். இதன் மூலம் 'விரைவான குடியேற்றத் திட்டங்களுடன்' (Fast-track immigration programmes) இந்த விவரங்கள் இணைக்கப்படும் என்றும் இது வருங்காலத்தில் தானியங்கி பதிவு முறைக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
• புதிய விதிகளின் நோக்கம் நடைமுறைகளை எளிமையாக்குவதும், காகித வேலைகளைக் குறைப்பதும், மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்களின் குடியுரிமை (OCI) அங்கீகாரத்தைப் பதிவு செய்தல் மற்றும் ரத்து செய்தல் போன்ற செயல்பாடுகளைத் தெளிவுபடுத்துவதும் ஆகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்கு முன்னதாக, வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை (OCI) தொடர்பான நடைமுறைகளில் இணையவழி விண்ணப்பம் மற்றும் நேரடிச் சமர்ப்பிப்பு ஆகிய இரண்டுமே தேவைப்பட்டன. இதனால் ஒரே மாதிரியான காகித வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருந்தது. தற்போது, நடைமுறையில் இருந்த விதிகளில் முறையாகக் குறிப்பிடப்படாத சில செயல்பாடுகளும், இந்தப் புதிய விதிகளில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
• விதி 3-ல் சேர்க்கப்பட்டுள்ள புதிய திருத்தத்தின்படி, இந்தியக் கடவுச்சீட்டு (Passport) வைத்துள்ள 18 வயதிற்குட்பட்டவர்கள், அதே நேரத்தில் மற்றொரு நாட்டின் கடவுச்சீட்டையும் வைத்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்த முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றாலும் அவர்களுக்கு வழங்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை அந்தஸ்து என்பது முழுமையான குடியுரிமை உரிமைகளை வழங்காது என்பதையும் இந்த விதியானது தெளிவுபடுத்துகிறது.
• இந்த விதிகள், குடியுரிமை (திருத்த) விதிகள், 2026 (Citizenship Amendment Rules, 2026) என்று அழைக்கப்படும். இவை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குடியுரிமை விதிகள், 2009-ன் விதி 3-ல் ஒரு புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: இந்தியக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் 18 வயதுக்குட்பட்டோர், அதே நேரத்தில் வேறு எந்த நாட்டின் கடவுச்சீட்டையும் வைத்திருக்க முடியாது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
• அரசாங்க அறிவிப்பின்படி, பிரிவு 7A-ன்கீழ் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை (OCI) அட்டைதாரராகப் பதிவு செய்ய விரும்புவோர், படிவம் XXVIII-ஐ (Form XXVIII) இணையதளம் வழியாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும். பிரிவு 7A-ன்கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமையைப் பதிவுசெய்வதற்கு, இனி நியமிக்கப்பட்ட இணையதளத்தில் படிவம் XXVIII-ல் மின்னணு முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காகித வடிவிலான நகல்களை சமர்ப்பிக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது (விதி 29). மேலும், விதி 33 மாற்றியமைக்கப்பட்டு, படிவம் XXIX-ல் காகித வடிவிலான வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை அட்டைகள் அல்லது மின்-பதிவு (e-OCI) சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கான பதிவுகள் படிவம் XXX-ல் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
• இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை (OCI) அட்டை வைத்திருப்பவர்களுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட மின்னணுப் பதிவேட்டை உருவாக்குகின்றன. மேலும், இந்த அட்டையை ரத்து செய்தல் அல்லது தாமாக முன்வந்து துறத்தல் போன்ற நடைமுறைகளை வலுப்படுத்துகின்றன. இதில், குறிப்பிட்ட விதிமீறல்களுக்காக தானாகவே ரத்து செய்யப்படுதல் மற்றும் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக முறையாக மேல்முறையீடு செய்வது தொடர்பான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
• வெளிநாடுவாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை (Overseas Citizenship of India - OCI) என்பது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நிரந்தர வசிப்பிட உரிமையாகும். இது அவர்கள் இந்தியாவில் காலவரையறை இன்றி தங்கி பணிபுரிய அனுமதிக்கிறது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லலாம். அத்துடன், இந்தியாவில் நிலம் அல்லது சொத்துக்களை வாங்குவது மற்றும் இதர முதலீடுகளைச் செய்வது போன்ற சலுகைகளையும் இதன் மூலம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
• இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டு முக்கிய அடையாளங்கள் 'வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை' (OCI) மற்றும் 'இந்திய வம்சாவளி நபர்' (Person of Indian Origin (PIO)) ஆகும். இதில் இந்திய வம்சாவளி நபர் (PIO) அட்டைத் திட்டம் 2015-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக அதிக சலுகைகள் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்களுக்கான குடியுரிமை (OCI) அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமக்கள் குடியுரிமை அட்டைதாரர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியாவிற்கு வந்து செல்ல நுழைவு அனுமதி சீட்டு தேவையில்லை என்பதோடு, இங்கு நிரந்தரமாகத் தங்கும் உரிமையையும் பெறுகிறார்கள். மேலும், ஓட்டுரிமை மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் போன்ற சில அரசியல் உரிமைகளைத் தவிர, மற்ற அனைத்துப் பொருளாதார மற்றும் கல்வித் துறைகளிலும் அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு (Non-Resident Indian (NRI)) இணையான உரிமைகளைப் பெறுகின்றனர்.
Original article : What is the rationality behind Citizenship (Amendment) Rules, 2026?