நீதிமன்றத் தலையீடு, அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாட்டை எவ்வாறு வடிவமைக்கிறது? - திலீப் பி சந்திரன்

 சபரிமலை மறுஆய்வு வழக்கின் பின்னணியில், சிக்கலான அரசியலமைப்பு கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (Essential Religious Practices (ERP)) என்ன சொல்கிறது? இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25(1)-ன்கீழ் 'அறநெறி'  என்பதன் வரம்பு என்ன? 


சபரிமலை வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று (மே 6) பன்னிரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், பல முக்கியமான கேள்விகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு  (ERP), மத விவகாரங்களைத் தீர்மானிப்பதில் நீதிமன்றத்தின் பங்கு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(1)-ன்கீழ் 'நெறிமுறை' என்பதன் அர்த்தம் போன்ற முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.


சபரிமலை கோயில் உட்பட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடு குறித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தின் எல்லை குறித்தும் இந்த வழக்கு விவரிக்கிறது.


செவ்வாய்க்கிழமை (மே 5) நடைபெற்ற விசாரணையின் போது, சில குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்கி வைப்பதற்கு மத நடைமுறைகளை ஒரு காரணமாகக் கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. "இது மதம் அல்ல, மதரீதியான நடைமுறையும் கிடையாது" என்று இந்த வழக்கை விசாரிக்கும் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதியரசர் பி.வி. நாகரத்னா கூறினார். இதனைத் தொடர்ந்து, அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (ERP) இந்த நடைமுறை குறித்து குறிப்பிடுவது என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.


அத்தியாவசிய மத நடைமுறைகள்


ஷிரூர் மடம் வழக்கில் (Commissioner, Hindu Religious Endowments, Madras vs Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt), முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தியாவசிய மத நடைமுறைகள் கோட்பாடு (ERP), இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின்கீழ் எந்தெந்த மதச் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படும் ஒரு நீதித்துறை அளவுகோலாகக் கருதப்படுகிறது.


பொதுவாக, அத்தியாவசிய மத நடைமுறைகள் (ERP) என்பது ஒரு மதம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளதோ, அந்த முக்கிய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(2)(a)-இல் "மத நடைமுறை" என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும், "அத்தியாவசியமான" (Essential) என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு 'அத்தியாவசியம்' என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இல்லை, அதற்கான விளக்கத்தையும் அளிக்கவில்லை.


மதராஸ் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் vs ஷிரூர் மடத்தின் ஸ்ரீ லக்ஷ்மிந்திர தீர்த்த சுவாமியார் (Commissioner, Hindu Religious Endowments, Madras v Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt) வழக்கின் தீர்ப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26-பி-ன்கீழ், ஒரு மதப்பிரிவு அல்லது அமைப்பு தனது மதத்தின் 'அத்தியாவசியமான' பகுதி எது என்பதைத் தீர்மானிக்க "முழுமையான தன்னாட்சி" அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


இருப்பினும், ஸ்ரீ வெங்கடரமண தேவரு vs மைசூர் மாநிலம் (Sri Venkataramana Devaru vs State of Mysore) வழக்கில், நீதிமன்றம் மத அமைப்புகளுக்கான "முழுமையான தன்னாட்சி" என்ற கருத்திலிருந்து விலகிச் சென்றது. அத்துடன், ஒரு மதத்தின் "அத்தியாவசியமான" நடைமுறை எது என்பதைத் தீர்மானிப்பதில் நீதிமன்றத்திற்கும் பங்கு உண்டு என்பதைத் தெளிபடுத்தியுள்ளது.


மதத்தின் அத்தியாவசிய நடைமுறைகள் மற்றும் அதன் அடிப்படைத் தன்மை


அஜ்மீர் தர்கா குழு vs சையத் ஹுசைன் அலி (Durgah Committee, Ajmer v Syed Hussain Ali) வழக்கின் தீர்ப்பில், இந்திய உச்சநீதிமன்றம் உண்மையான மத நடைமுறைகளையும், மூடநம்பிக்கைகளையும் பிரித்தறிய முயற்சித்தது. ஒரு மதத்தின் அடிப்படை சாராம்சம் அல்லாத, காலப்போக்கில் சேர்ந்த மூடநம்பிக்கைகள் அல்லது புறம்பான சேர்க்கைகள் ஆகிய நடைமுறைகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


சர்தார் சையத்னா தாஹர் சைஃபுதீன் சாஹேப் vs பம்பாய் மாநில அரசு (Sardar Syedna Taher Saiffuddin Saheb vs State of Bombay) வழக்கின் தீர்ப்பில், ஒரு மதத்தின் அத்தியாவசிய மத நடைமுறைகள் அந்த மதத்தின் புனித நூல்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-25 என்பது ஒரு மதத்தையே முழுமையாக அழிக்கும் வகையில் "சீர்திருத்தம்" செய்ய சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


காவல்துறை ஆணையர் vs ஆச்சார்யா ஜெகதீஸ்வரானந்த அவதூதா (Commissioner of Police vs Acharya Jagadisharananda Avadhuta) வழக்கிலும் இதேபோல, ஒரு மதத்தின் அத்தியாவசிய மத நடைமுறைகளை (ERP) தீர்மானிக்க உச்சநீதிமன்றம் ஒரு சோதனையை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நடைமுறை அல்லது சடங்கு இல்லாத பட்சத்தில், அந்த மதத்தின் அடிப்படைத் தன்மையே மாறிவிடுமா என்று கேள்வி எழுப்புவதன் மூலம் அந்த நடைமுறையின் முக்கியத்துவத்தை இந்தச் சோதனையின் மூலம் நீதிமன்றம் தீர்மானிக்கிறது.


முக்கியத்துவம் வாய்ந்த ஷயாரா பானு (Shayara Bano) வழக்கின் தீர்ப்பில், இந்த அத்தியாவசிய நடைமுறை சோதனையைப் பயன்படுத்தி, 'முத்தலாக்' (Triple Talaq) என்பது இஸ்லாமிய மதத்தின் ஒரு அத்தியாவசியமான நடைமுறை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், இந்த நடைமுறை இல்லாவிட்டாலும் இஸ்லாம் மதத்தின் அடிப்படைத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


நீதிமன்றம் ஒரு மதக்கோட்பாட்டு நடுவராகச் செயல்பட முடியுமா?


நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய மத நடைமுறைகள்  கோட்பாடானது, ஒரு மதத்திற்கு எவை மிகவும் அவசியமான மற்றும் பிரிக்க முடியாத சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்று நிரூபிக்கப்படுகிறதோ, அவை மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 25 மற்றும் 26-ன்கீழ் பாதுகாப்பு பெறுகின்றன என்பதை விளக்குகிறது. அதேவேளையில், மதச்சார்பற்ற நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம் மற்றும் சமூகநலன் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவதற்கு அரசியலமைப்பின் பிரிவு 25(2) அனுமதி அளிக்கிறது.


இருப்பினும், ஒரு மதத்தின் அத்தியாவசியமான நடைமுறைகள் மற்றும் அத்தியாவசியமற்ற நடைமுறைகள், மதச்சார்பற்ற மற்றும் மதரீதியான செயல்பாடுகள், மற்றும் உண்மையான நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடையிலான எல்லையைத் தீர்மானிப்பதில் நீதித்துறையின் பங்கு விவாதத்திற்குரியதாகவே உள்ளது. மேலும், நீதிமன்றங்கள் மதக் கோட்பாடுகளைத் தீர்மானிக்கும் நீதிபதிகளாகச் செயல்பட முடியுமா என்ற கேள்வி சபரிமலை மறுஆய்வு வழக்கிலும் ஆராயப்பட்டு வருகிறது.


இந்த விசாரணையின்போது, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், ஒரு மத நடைமுறையை வெறும் 'மூடநம்பிக்கை' என்று ஒரு மதச்சார்பற்ற நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது; ஏனெனில் அத்தகைய ஆன்மீக விஷயங்களை ஆராய்வதற்கான கல்விசார் புலமை நீதிமன்றத்திற்கு இல்லை, என்று குறிப்பிட்டார். மேலும், நாகாலாந்து மாநில மக்களுக்கு மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம், எனக்கு முற்றிலும் மூடநம்பிக்கையாகத் தோன்றலாம் என்றும் கூறினார்.


எனவே, மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் எந்த அளவிற்குத் தலையிட முடியும் என்பதுதான் இங்கு முதன்மையான கேள்வியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-(2)-ன் வாசகங்களின் அடிப்படையில், ஒரு நடைமுறை மதச்சார்ந்ததா அல்லது அது ஒரு மூடநம்பிக்கையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உள்ளது என்று வாதிடப்படுகிறது.


மேலும், ஒரு நடைமுறை மதச்சார்புடையது என்று அங்கீகரிக்கப்பட்டால், பொது அமைதி, அறநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அரசு அதில் தலையிட முடியும். இதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-1, பாதுகாக்கப்பட்ட மத நடைமுறைகளுக்கும்கூட சில குறிப்பிட்ட வரம்புகளை விதிக்கிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-பி) -ன்கீழ் 'ஒழுக்கநெறியின் எல்லை'


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(1) என்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மனசாட்சிப்படி செயல்படவும், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், அதன்படி நடக்கவும் மற்றும் அதனைப் பரப்பவும் உரிமை உண்டு என்று கூறுகிறது. இருப்பினும், இந்த உரிமையானது பொது அமைதி, அறநெறி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு உட்பட்டதாகும். மதரீதியான செயல்பாடுகளையும், மதம் சாராத இதர செயல்பாடுகளையும் தெளிவுபடுத்திப் பிரிப்பதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தத் தடையை இணைத்துள்ளனர்.


அரசியலமைப்புச் சபையின் வரைவு சட்டப்பிரிவு-19 (இதுவே பின்னர் சட்டப்பிரிவு-25 ஆக மாறியது) குறித்த அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் போது இது தெளிவாகத் தெரிந்தது. டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு, கே. சந்தானம் கூறியதாவது, முன்பெல்லாம், இந்த நாட்டில் மதம் என்ற பெயரில் செய்யப்படும் எதற்கும், கட்டுப்பாடற்ற முறையில் கடைப்பிடிக்கவும் மற்றும் பரப்பவும் உரிமை இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால், புதிய அரசியலமைப்பில், இந்த உரிமையானது பொது அமைதி, அறநெறி மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கட்டுப்பாடுகளின் உண்மையான அர்த்தமானது இந்திய மக்களின் சமூக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த மனசாட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப காலப்போக்கில் விரிவடையும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


பொது அமைதி மற்றும் சுகாதாரத்திற்கு மாறாக, ஒழுக்கநெறி என்ற கருத்துரு இயங்குத்தன்மை கொண்டது, எனவே பெரும்பாலும் அகநிலை விளக்கங்களுக்கு ஆட்படக்கூடியது. பிரிவு 25(1)-இல் உள்ள ஒழுக்கநெறி என்ற சொல், அரசியலமைப்பு ஒழுக்கநெறிக்கு ஒத்ததாகப் பொருத்தமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.


இருப்பினும், பொது அமைதி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் போலல்லாமல், அறநெறி என்பது ஒரு நெகிழ்வான கருத்தாகும்.  இது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது அல்லது வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு விதமாக விளக்கப்படக்கூடியது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-(1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'அறநெறி' என்ற சொல்லை, 'அரசியலமைப்பு அறநெறி' என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.


மத சுதந்திரத்தின் எல்லைகள்


எனவே, மத விவகாரங்களில் நீதிமன்றம் ஒரு முடிவெடுக்கும் அதிகார அமைப்பாக செயல்படுகிறதோ என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைக்கோரும் மத நடைமுறைகள் உண்மையானவைதானா என்பதைத் தீர்மானிப்பதில் நீதித்துறை தலையீடு முக்கியப் பங்கு வகித்துள்ளது.


இருப்பினும், அறநெறி, அத்தியாவசிய மத நடைமுறைகள் (ERP) மற்றும் மதப்பிரிவு போன்ற கருத்துக்கள் ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடக்கூடியவை மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டவை ஆகும். எனவே, இவை பெரும்பாலும் ஒவ்வொரு வழக்கின் சூழலுக்கும் ஏற்ப புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்திய மக்களின் சமூக மற்றும் தார்மீக விழுமியங்கள் காலப்போக்கில் மாறும்போது, இந்தக் கருத்துகளின் அர்த்தமும் விளக்கமும் அதற்கேற்ப பரிணாம வளர்ச்சியடையும் என்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்தனர்.


இந்த அணுகுமுறை, மாறிவரும் சமூக விழுமியங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்ட விளக்கங்கள் அமைந்திருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. அதேநேரத்தில், மத சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் பிற முக்கிய கடப்பாடுகளுக்கு இடையே ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்தவும் முயல்கிறது.


(திலீப் பி. சந்திரன், கேரளா மாநிலம் சாலக்குடியில் உள்ள பனம்பிள்ளி நினைவு அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.)


Original article :  How judicial intervention shapes the doctrine of Essential Religious Practices. -Dileep P Chandran

Share: