12 குறைமின்கடத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் : இந்தியாவின் சிப் தயாரிப்பு திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? -சௌம்யரேந்திர பாரிக்

 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 1.0 (India Semiconductor Mission 1.0 (ISM 1.0)), சிப் (சில்லு) தயாரிப்பு, பேக்கேஜிங், வடிவமைப்பு மற்றும் திரை உற்பத்தி (Display production) உள்ளிட்ட முழுமையான குறைமின்கடத்தி உற்பத்திச் சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகத் திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0 (ISM 2.0) திட்டத்தை அறிவித்தார். இந்த இரண்டாம் கட்டத் திட்டம், இந்தியா குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யவும், முழுமையான இந்திய சிப் (சில்லு) அறிவுசார் சொத்துரிமையை (Chip Intellectual Property) உருவாக்கவும் மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5), இந்திய அமைச்சரவை நாட்டில் இரண்டு புதிய குறைமின்கடத்தி (Semiconductor) தொழிற்சாலைகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்தியாவின் முதல் திரை உற்பத்திப் பிரிவாகக் (Display fabrication unit) கருதப்படும் ஒரு பிரிவும் அடங்கும்; இது இந்தியாவின் சிப் (Chip - சில்லு) தயாரிப்பு இலக்குகளுக்கு ஒரு முக்கிய உந்துதலை வழங்கும். இதன் மூலம், இந்தியா குறைமின்கடத்தித்  திட்டத்தின் (ISM) முதல் கட்டத்தின்கீழ் அரசு இப்போது மொத்தம் 12 சிப் ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் திறன்பேசி உதிரிபாகங்கள் ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக விரிவுபடுத்திய பிறகு, இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தியைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு 76,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியா, குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் துறையில் தடம்பதிப்பது, உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியின் ஒரு அங்கமாக மாறுவதற்கும், மின்னணுத் துறையில் உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய உத்திசார் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ரொட்டி வாட்டும் இயந்திரங்கள் (Toasters) முதல் போர் விமானங்கள் (Fighter jets) வரை அனைத்துப் பொருட்களையும் இயக்கும் ஆற்றல் கொண்ட இந்தச் சிப்கள், சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக மிகவும் முக்கியமான ஒரு தொழில்நுட்ப வளமாக உருவெடுத்துள்ளன.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் 1.0 (ISM 1.0), சுமார் 1.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தை 2.0 (ISM 2.0) அறிவித்தார். இந்தத் திட்டம் குறைமின்கடத்தி உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களின் உற்பத்தியை ஆதரிப்பதையும், முழுமையான இந்திய சிப் அறிவுசார் சொத்துரிமையை (Chip Intellectual Property) உருவாக்குவதையும், மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியாவின் சிப் தயாரிப்பு ஆலைகளுக்கான  திட்டவரைவு


இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 12 சிப் உற்பத்தி ஆலைகள் குஜராத், அசாம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு முழு அளவிலான வணிக ரீதியான குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை மற்றும் பல சிப் பொருத்துதல் மற்றும் சோதனை செய்யும் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.


டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி உற்பத்தி ஆலை (Tata Electronics Semiconductor Foundry (Gujarat): டாடா நிறுவனம் தைவானின் ‘Powerchip Semiconductor Manufacturing Corporation’ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் வணிகரீதியான சிப் தயாரிப்பு ஆலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்கிறது. சுமார் 91,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த ஆலைக்கு ‘Powerchip Semiconductor Manufacturing Corporation’ தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இங்கு 28nm (நானோமீட்டர்) முதல் 110nm வரையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாதம் 50,000 தட்டுகள் (Wafers) உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மைக்ரான் தொழில்நுட்பம் (குஜராத்): ஒன்றிய அரசு உதிரிபாகங்கள் பொருத்துதல் மற்றும் சோதனை ஆலைகளுக்கான ஊக்கத்தொகையை 30%-லிருந்து 50%-ஆக உயர்த்திய பிறகு, 2023-ஆம் ஆண்டில் இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட முதல் திட்டம் இதுவாகும். அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் உலக அளவில் நினைவக சிப்களைத் (Memory chips) தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். இதன் வருகை இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய உந்துதலாகக் கருதப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் வணிகரீதியிலான உற்பத்தி தொடங்கியதாகக் கூறப்படுகிறது.


டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு ஆலை (அசாம்): ‘Tata Electronics’ நிறுவனம் அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஜாகிரோட் பகுதியில், 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலையை உருவாக்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வாகனத் துறை, மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்காக தினமும் 4.8 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


HCL-Foxconn (உத்தரப் பிரதேசம்): ‘HCL’ மற்றும் ‘Foxconn’ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் (Jewar) பகுதியில் 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையின் செயல்பாடுகள் 2028-ஆம் ஆண்டிற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலையில், கணினி, திறன்பேசி திரைகளில் படங்கள் தெரிவதைக் கட்டுப்படுத்தும் சிறிய சிப்கள் (Display driver chips) தயாரிக்கப்பட உள்ளன. மேலும், இங்கு மாதம் ஒன்றுக்கு 20,000 சிலிக்கான் தட்டுகள் (Wafers) உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கெய்ன்ஸ் செமிகான் (குஜராத்): குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலை, சுமார் 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் பரிசோதனை ஆலை ஆகும். இதனைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2026-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலை ஒரு நாளைக்கு 60 லட்சம் சிப்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு முக்கியமாக மின்சார வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்கான 'மின் தொகுதிகள்' (Power modules) தயாரிக்கப்படுகின்றன. இதன் வணிகரீதியான செயல்பாடுகள் மார்ச் மாதத்திலேயே தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


CG Semi (குஜராத்): முருகுப்பா குழுமத்தைச் சேர்ந்த ‘CG Power’ நிறுவனம், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் ஒரு குறைமின்கடத்தி பொருத்துதல் மற்றும் சோதனை ஆலையை நிறுவி வருகிறது. இந்தத் திட்டம் ‘Renesas Electronics’ மற்றும் ‘Stars Microelectronics’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 7,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.


SiCSem (ஒடிசா): ‘SiCSem Pvt Ltd’ நிறுவனம் 2,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை நிறுவுகிறது. இந்த ஆலை சிலிக்கான் கார்பைடு (Silicon Carbide) சார்ந்த டையோட்கள் (Diodes) மற்றும் மாஸ்பெட்கள் (Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor (MOSFETs)) ஆகியவற்றை உற்பத்தி செய்யவுள்ளது.


Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor (MOSFET) என்பது மின்சாரத்தை மிக உயர்ந்த வேகத்தில் இயக்கவும், நிறுத்தவும் பயன்படும் ஒரு மின்னணு விசை (switch) ஆகும். இது மின்னோட்டத்தை "புலம்" (Electric Field) மூலம் கட்டுப்படுத்துகிறது.


3D Glass Solutions (ஒடிசா): இது இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட 3D சிப் பேக்கேஜிங் பிரிவாகும். இந்தத் திட்டம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘3D Glass Solutions Inc’ நிறுவனத்தால், அதன் முழு உரிமையுடைய இந்திய துணை நிறுவனமான ‘Heterogeneous Integration Packaging Solutions Pvt Ltd’ மூலம் அமைக்கப்படுகிறது. இதற்கு ‘Intel’ உள்ளிட்ட பிற நிறுவனங்கள் நிதி உதவி வழங்குகின்றன.


Advanced System in Package Technologies (ஆந்திரப் பிரதேசம்): இந்த நிறுவனம் தென்கொரியாவின் ‘APACT Co. Ltd’ நிறுவனத்துடன் இணைந்து, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 9.6 கோடி யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continental Device (பஞ்சாப்): இந்த நிறுவனம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனது குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த உள்ளது. இந்த புதிய ஆலையில் சிலிக்கான் (Silicon) மற்றும் சிலிக்கான் கார்பைடு (Silicon Carbide) ஆகிய இரண்டையும் பயன்படுத்தி, MOSFETs, IGBTs, Schottky Bypass Diodes மற்றும் transistors (மின்மாற்றிகள்) போன்ற உயர்-சக்தி குறைமின்கடத்தி சாதனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


MOSFET (Metal-Oxide-Semiconductor Field-Effect Transistor): மின்னணு சமிக்ஞைகளை மாற்றவும் பெருக்கவும் பயன்படும் ஒரு வகை மின்மாற்றி.


IGBT (Insulated-Gate Bipolar Transistor): அதிக செயல்திறன் மற்றும் வேகமான விசைத் திறன் கொண்ட ஒரு அரைக்கடத்தி சாதனம்.


Schottky Bypass Diodes: சோலார் பேனல்கள் மற்றும் மின்சுற்றுகளில் மின்சாரம் தவறான திசையில் பாய்வதைத் தடுக்கப் பயன்படும் ஒரு வகை மின்னணு கருவி.


Silicon Carbide (SiC): இது சாதாரண சிலிக்கானைவிட அதிக வெப்பம் மற்றும் மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு மேம்பட்ட பொருள்.


Crystal Matrix Ltd. (குஜராத்): செவ்வாய்க்கிழமை அன்று, காலியம் நைட்ரைடு (Gallium Nitride (GaN)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Mini/Micro-LED திரைத் தொகுப்புகளைத் தயாரிப்பதற்கான 3,068 கோடி ரூபாய் மதிப்பிலான குறைமின்கடத்தி புனையமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், இது இந்தியாவின் திரை உதிரிபாகங்களை இணைக்கும் வசதி கொண்ட முதல் ஆலையாக மாறும் என்கின்றனர். இதுவரை, இந்தத் தொழில்முறை முக்கியமாக ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் மட்டுமே குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Suchi Semicon (குஜராத்): இந்த நிறுவனம் குஜராத் மாநிலம் சூரத் நகரில், 868 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஒருங்கிணைந்த குறைமின்கடத்தி தொகுப்பு மற்றும் சோதனை ஆலையை அமைக்க உள்ளது. இந்த மையத்தில் தனிப்பட்ட குறைமின்கடத்தி கூறுகள் (Discrete Semiconductors) உற்பத்தி செய்யப்பட உள்ளன.


அடுத்த கட்ட நடவடிக்கை: இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின்படி, இந்திய அரசாங்கம் தனது அடுத்தகட்டத் திட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 11 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 92,000 கோடி ரூபாய்) மதிப்பிலான புதிய திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படலாம். இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மாற வாய்ப்புள்ளது. குறைமின்கடத்தித் திட்டத்தின் முதற்கட்டமான இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின் (ISM 1.0) முக்கியமாக சிப் தயாரிக்கும் உள்கட்டமைப்பை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது. ஆனால், அதன் அடுத்தகட்டமான இந்திய குறைமின்கடத்தித் திட்டம் 2.0 (India Semiconductor Mission 2.0), சிப் தயாரிப்பிற்குத் தேவையான வாயுக்கள், ரசாயனங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அதனுடன் தொடர்புடைய துணைத் தொழில்களுக்கு அதிக ஆதரவை வழங்க வாய்ப்புள்ளது.


இந்திய குறைமின்கடத்தித் திட்டத்தின்கீழ் 2.0, சிப் பொருத்துதல் மற்றும் சோதனை செய்யும் ஆலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மூலதனச் செலவு மானியத்தை அரசாங்கம் குறைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், புதிய திட்டமானது இத்தகைய ஆலைகளுக்குத் தேவையான இயந்திர தளவாடங்கள் மற்றும் வாயுக்கள், ரசாயனங்கள், மூலப்பொருட்கள் போன்ற பிற சுற்றுச்சூழல் தேவைகளுக்கும் ஆதரவை வழங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டமானது, சிப் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்றும் நிறுவனங்கள் சந்தையிலிருந்து திரட்டும் மூலதனத்தின் அளவைப் பொறுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அரசாங்கம் இந்த முறையில் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Original article :  12 semiconductor plants approved: Where India’s chip manufacturing mission stands, what’s next. -Soumyarendra Barik

Share: