மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஒரு ஆளுநரால் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா? சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தவுடன் என்ன நடக்கும்? தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடர எது போன்ற சட்ட விதிகள் உள்ளன?
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக-விடம் தோல்வியடைந்த அடுத்தநாள், அந்தக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்தார். இந்தத்தேர்தல் தீர்ப்பானது மக்களின் முடிவைவிட, ஒரு "சதித் திட்டத்தின்" விளைவே என்று அவர் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி , இந்தத்தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று கூறினார். மேலும், வாக்குச்சாவடிகளை "வன்முறையாகக் கைப்பற்றவும்" தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றவும் பாஜக மத்தியப் படைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்தத்தேர்தல் முடிவுகளைத் தங்கள் கட்சி சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் என்றும், தங்கள் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு ஆளுநரால் முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க முடியுமா?
அரசியலமைப்பின் 164(1) பிரிவின்படி, முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவார். மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மேலும், அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பப்படி பதவியில் இருப்பார்கள். எனவே, இந்த விதியை படிக்கும்போது, ஒரு முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அத்தகைய ஒரு விதி, ஆளுநரின் தன்னிச்சையான விருப்புரிமைப் பயன்பாட்டிற்கு வழிவகுக்கக்கூடும் என்று அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் எச்சரித்திருந்தனர்.
அரசியலமைப்புச் சபை உறுப்பினர் முகமது இஸ்மாயில் கான், அப்போதைய அரசியலமைப்பு வரைவின் 144-வது பிரிவில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அதில், “விருப்பத்தின் பேரில்” (during the pleasure) என்ற பயன்படுத்துவதற்குப் பதிலாக “மாநில சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை” என்ற சொற்களைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார். அரசியலமைப்புத் திட்டமானது ஆளுநரைக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் கருதியதால், அமைச்சரவையானது ஆளுநரின் விருப்பத்தின் பேரில் அல்லாமல், சட்டமன்றத்தின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை மட்டுமே பதவியில் இருக்கும் என்பதை அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
இந்தக் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அமைச்சரவையானது பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிக்கும் என்று உறுதிப்படுத்தினார். நாடாளுமன்ற அரசாங்க முறையை வகுக்கும் எந்தவொரு அரசியலமைப்பிலும், அந்தப் பாணியிலோ அல்லது அந்த வார்த்தைகளிலோ இது வெளிப்படையாகக் கூறப்படாததே, நாங்கள் அதை இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடாததற்குக் முக்கிய காரணம் என்று அம்பேத்கர் விளக்கினார்.
பல ஆண்டுகளாக, ஆளுநரின் அதிகாரங்கள் முதன்மையாக அமைச்சரவையின் "உதவி மற்றும் ஆலோசனையிலிருந்து" (aid and advice) உருவாகின்றன என்று உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஏ.ஜி. பேரறிவாளன் vs காவல் கண்காணிப்பாளர் (A.G. Perarivalan v. State Through Superintendent of Police) வழக்கில், "ஆளுநர்" என்பவர் "மாநில அரசைக் குறிக்கும் ஒரு சுருக்கமான சொல் மட்டுமே" என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. ஆளுநரை “முறையான தலைவராகவும், நிர்வாக அதிகாரத்தின் ஒரே நபகராகவும்” அங்கீகரித்த அதே வேளையில், அந்தப்பதவியானது பொதுவாக மாநில அமைச்சரவையின் உதவியும் ஆலோசனையும் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது தேவைப்படுகிறது?
சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில், ஒரு ஆளுநர் முதலமைச்சரைப் பதவி விலகுமாறு கேட்டு, அந்தப்பதவிக்கு மற்றொரு நபரை அழைத்தால், அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது, நிர்வாகம் சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அரசியலமைப்பு வழிமுறையாகும். இந்த நடைமுறையின் கீழ், முதலமைச்சர் அவையில் பெரும்பான்மை ஆதரவை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் ஆதரவை அவையில் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில், முதலமைச்சர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படும்.
எந்த ஒரு கட்சியாலோ அல்லது கூட்டணியாலோ ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், இறுதி முயற்சியாக சட்டப்பிரிவின் 356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்.
சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்த பிறகு என்ன நடக்கும்?
அரசியலமைப்பின் 172-வது பிரிவு, ஒரு மாநில சட்டமன்றத்தின் கால அளவைக் பற்றி விளக்குகிறது. அதன்படி, “முன்னதாகக் கலைக்கப்படாவிட்டால்”, ஒரு சட்டமன்றம் “அதன் முதல் கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தொடரும். அதற்கு மேல் நீடிக்காது. மேலும், அந்த ஐந்து ஆண்டு காலம் முடிவடைவது சட்டமன்றம் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்” என்று குறிப்பிடுகிறது.
தேர்தல் ஆணையத்தின்படி, தற்போதைய மேற்கு வங்க சட்டமன்றம் 2021 மே 8 அன்று தனது பதவிக்காலத்தைத் தொடங்கி, மே 7 அன்று முடிவடைய உள்ளது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் ஒரு புதிய சட்டமன்றத்தை அமைப்பதற்கான நடைமுறையைத் தொடங்க வேண்டும். பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று, ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.
அடுத்து என்ன நடக்கும்?
முன்னாள் மக்களவை பொதுச்செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி கருத்துப்படி, மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து முறைப்படி பதவி விலகுவது என்பது ஒரு மரபு சார்ந்த விஷயமாகும். பானர்ஜி பதவி விலகாவிட்டாலும், அதனால் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அது கலைக்கப்படுவதால், அவர் தானாகவே முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிடும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 100, ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வெற்றியை சவாலுக்கு உட்படுத்தி, அதைச் செல்லாததாக அறிவிக்கக் கோருவதற்கான காரணங்களை பட்டியலிடுகிறது. இந்தக்காரணங்களில், வேட்பாளரால் மேற்கொள்ளப்படும் ஊழல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் அதிகாரியால் சட்டரீதியான விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலை உள்ளிட்ட பிற காரணங்களும் அடங்கும்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (Special Intensive Revision (SIR)) போது, வாக்காளர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட, தேர்தல் செயல்முறையின் நேர்மைக்கே சவால் விடப்படும் பட்சத்தில், ஒரு நீதி பேராணை மனு தாக்கல் செய்யப்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். ஒரு தேர்தலில் வாக்காளர்களைப் அதிக அளவில் நீக்குவது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எனவே, அதை ஒரு நீதி பேராணை மனு மூலம் சவால் செய்யலாம் என்று அவர் கூறினார்.
Original article : What happens if a Chief Minister refuses to relinquish office after electoral defeat? -Aaratrika Bhaumik