பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கியத் திருத்தத்துடன் தமிழ்நாட்டிற்கு உள்ள தொடர்பு -T. ராமகிருஷ்ணன்

1950ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி, இடதுசாரிச் சார்புடைய 'Cross Roads' என்ற பத்திரிகைக்கு சென்னை அரசாங்கம் தடை விதித்தது. ஒரு மாதம் கழித்து, உச்சநீதிமன்றத்தின் அனைத்து  நீதிபதிகளை கொண்ட முதன்மை அமர்வு, ஐந்துக்கு ஒன்று என்ற பெரும்பான்மை வாக்குகளால் அந்தத் தடையை ரத்து செய்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. நாடாளுமன்றத்தில் 246 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 14 பேர் எதிராகவும் வாக்களித்து, அந்தத் திருத்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அரசியலமைப்பின் முதல் திருத்தத்துடனான தமிழ்நாட்டின் தொடர்பு, நாட்டின் இந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். ஏனெனில், இந்தத் திருத்தம் மற்றவற்றுடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை உருவாக்க உதவியது. ஆனால், பொது விவாதங்களில் அதிகம் இடம்பெறாத மற்றொரு விவகாரம் என்னவென்றால், அந்தத் திருத்தத்துடன் மாநிலத்திற்கு உள்ள மற்றொரு தொடர்புதான். அது பொதுவாக கருத்துச் சுதந்திரம் (freedom of expression) மற்றும் பத்திரிகை சுதந்திரம் (freedom of the press) என்ற கருத்துடன் தொடர்புடையது தான். 'Cross Roads' வழக்கு என்றும் அழைக்கப்படும் ரமேஷ் தப்பர் vs மெட்ராஸ் மாநிலம் (Romesh Thappar [sic] vs State of Madras) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. மேலும், அந்தத் தீர்ப்பை ஒரு செய்தியாக வெளியிட்ட மே 27, 1950 அன்று, 'The Hindu' நாளிதழ், இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டதாகக் கூறப்பட்ட முதல் வழக்கு இதுவே" என்று குறிப்பிட்டிருந்தது.


இந்த வழக்கு மும்பையிலிருந்து வெளிவந்த 'Cross Roads' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் நுழைவு மற்றும் புழக்கத்திற்கு மாநில அரசு விதித்த தடையை நேரடியாகக் கையாண்டாலும், அந்தப் பத்திரிகைக்கான சிக்கல் 1949 ஜூலை மாதம் அப்போதைய பம்பாய் என அழைக்கப்பட்ட மகாராஷ்டிர அரசாங்கத்தின் முடிவில் தொடங்கியது. பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ், அதன் ஆசிரியர் Romesh Thapar மூன்று மாதங்களுக்குப் பத்திரிகையை வெளியிடுவதற்கு மகாராஷ்டிர அரசாங்கம் தடை விதித்தது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அச்சட்டத்தின் பிரிவு 9, ஒரு செய்தித்தாள் அல்லது பருவ இதழின் செயல்பாடுகள் பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பராமரித்தல் அல்லது மாநிலத்தின் அமைதிக்குத் தீங்கு விளைவிப்பதாக அரசாங்கம் கருதினால், அதன் வெளியீட்டைத் தடைசெய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது என்று இந்தச் செய்தித்தாள் ஆகஸ்ட் 19, 1949 அன்று செய்தி வெளியிட்டது.


பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது


இந்த உத்தரவு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி என்.எச்.சி. கோயாஜி, "வழக்கின் சூழ்நிலையில் ஒரே சோதனை அரசாங்கத்தின் கருத்து மட்டுமே என்றும், சட்டத்தின் தொடர்புடைய பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்புற செயல்முறையான "அரசாங்கத்தின் திருப்தி" தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தார் என்று அந்தச் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு, 1949-ஆம் ஆண்டு மெட்ராஸ் பொது ஒழுங்கு பராமரிப்பு மசோதா (Madras Maintenance of Public Order Bill) குறித்து மெட்ராஸ் சட்டமன்றத்திலும் சட்ட மேலவையிலும் விவாதம் நடைபெற்றபோது, ​​கம்யூனிஸ்டுகளின் "வன்முறைச் செயல்களை" அரசாங்கம் இந்த மசோதாவிற்கான நியாயமாகச் சுட்டிக்காட்டியதால், சில உறுப்பினர்கள் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்தனர். எதிர்க்கட்சியில் இருந்த ஏ. லட்சுமணசாமி முதலியார், பொதுமக்களின் ஆதரவைப் பெற்ற சட்டங்களை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.


மார்ச் 1, 1950 அன்று, இடதுசாரி சார்பு கொண்ட பத்திரிகையாகக் கருதப்படும் Cross Roads மீதான சென்னை அரசாங்கத்தின் தடை வந்தது. ஏப்ரல் 21 அன்று, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் அனைத்து  நீதிபதிகளைக் கொண்ட முதன்மை அமர்வுமுன் வந்தது. மனுதாரரின் சார்பாக வாதிட்ட சி.ஆர். பட்டாபி ராமன், பத்திரிகை மீதான தடை சட்டவிரோதமானது என்றும், ஏனெனில் அது அரசியலமைப்பின் பிரிவு 19-ன் கீழ் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை (right to freedom of speech and expression) மீறுவதாகும் என்று தனது வாதத்தை முன் வைத்தார். மெட்ராஸின் அட்வகேட் ஜெனரல் K. ராஜா ஐயர், மனுதாரரின் கருத்துச் சுதந்திர உரிமை கட்டுப்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால், மெட்ராஸ் மாகாணம் மனுதாரரின் கருத்து மெட்ராஸை எட்டுவதை மட்டுமே தடை செய்திருந்தது. அந்த வார இதழுக்கு மெட்ராஸில் விதிக்கப்பட்ட தடையின் செல்லுபடியை நிரூபிப்பதற்காக, K. ராஜா ஐயர், 'மாநிலத்தின் பாதுகாப்பு' (security of State), 'பொதுப் பாதுகாப்பு' (public safety) மற்றும் 'பொது ஒழுங்கு' (public order) ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று வாதிட்டார். ஆனால், நீதிமன்றம் அவரது கருத்தை ஏற்க மறுத்துவிட்டது" என்று ஏப்ரல் 22, 1950 அன்று 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஏப்ரல் 24 அன்று நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தபோது, ​​ஒரு அரிதான நிகழ்வாக, முதலமைச்சர் P.S. குமாரசாமி ராஜா நீதிமன்ற அறையில் உடனிருந்தார்.


ஒரு மாதம் கழித்து, உச்சநீதிமன்றத்தின் அனைத்து  நீதிபதிகளை கொண்ட முதன்மை அமர்வு, 5: 1 என்ற பெரும்பான்மையுடன், மாநில அரசின் தடையை ரத்து செய்தது. சர்ச்சைக்குரிய அந்த விதிமுறை — மெட்ராஸ் பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 9 — அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டது. மனுவை அனுமதித்த இந்தத் தீர்ப்பை நீதிபதி M. பதஞ்சலி சாஸ்திரி வழங்கினார். அவருடன் இந்தியத் தலைமை நீதிபதி ஹிராலால் J. கனியா, நீதிபதி சுதி ரஞ்சன் தாஸ், நீதிபதி B.K. முகர்ஜி மற்றும் நீதிபதி மெஹர் சந்த் மகாஜன் ஆகியோர் உடன்பட்டனர். அதே, சமயம் நீதிபதி சையத் ஃபசல் அலி மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.


‘தேசத்துரோகம்’ என்ற குற்றப்பிரிவை நீக்குதல்


அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுப் பதிப்பின் 13(2)-ஆவது பிரிவில் இடம்பெற்றிருந்த ‘தேசத்துரோகம்’ என்ற சொல், இறுதிப் பதிப்பிலிருந்து, “அரசாங்கத்தின் மீதான விமர்சனம், அதன் மீது அதிருப்தியையோ அல்லது தவறான உணர்வுகளையோ தூண்டினாலும், அது அரசின் பாதுகாப்பைக் குலைப்பதாகவோ அல்லது அரசைத் தூக்கியெறிய முற்படுவதாகவோ இல்லாத வரையில், அத்தகைய விமர்சனமானது பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நியாயமான காரணமாகக் கருதப்படக்கூடாது என்பதை என்று நீதிபதி குறிப்பிட்டார். அவர் ஒரு சட்டம் நாட்டின் பாதுகாப்பைப் பிரத்தியேகமாகப் பாதுகாத்தாலோ அல்லது அதன் கவிழ்ப்பைத் தடுத்தாலோ மட்டுமே அது பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக மட்டும் இயற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பின் 19(2) பிரிவின்கீழ் தகுதி பெறாது. மாநிலச் சட்டத்தின் பிரிவு 9, அரசியலமைப்பின் 19 (2)-ஆவது பிரிவின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று நீதிபதி முடிவு செய்தார். ஆனால், நீதிபதி ஃபசல் அலி, அந்தப் பிரிவின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட அரசியலமைப்புப் பிரிவிற்கு உட்பட்டவையே என்று தீர்ப்பளித்தார்.


ஓராண்டுக்குப் பிறகு, 1951ஆம் ஆண்டு மே 16 அன்று அரசியலமைப்புத் திருத்த மசோதாவை ஒரு தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, 75 நிமிடங்கள் உரையாற்றினார். அடிப்படை உரிமைகள் தொடர்பான எந்தவொரு விவகாரமும் (சரத்து 19(2) போன்றவை) மிகவும் முக்கியமாவை என்று கூறினார். தனது அரசாங்கம் இந்த மசோதாவை அவசர அவசரமாகவோ அல்லது அவசரத்துடனும் கொண்டுவரவில்லை, மாறாக, இந்தப் பிரச்சினை குறித்து மிகவும் கவனமாகச் சிந்தித்து, ஆராய்ந்த பின்னரே கொண்டுவந்துள்ளது என்று ஜவஹர்லால் நேரு விளக்கமளித்தார்.


குடிமக்களின் அல்லது பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகத் தன் அரசாங்கத்தின்மீது எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த நேரு, “இந்த மசோதா நாடாளுமன்றத்தின் அதிகாரம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது என்றும்  நாங்கள் எந்தவிதமான கட்டுப்பாடு அல்லது தடையையும் விதிக்கவில்லை. நாடாளுமன்றம் விரும்பினால், சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு ஏதுவாக, நாங்கள் சில சந்தேகங்களை நீக்குகிறோம்”  என்று விளக்கமளித்தார்.

 

ஒரு ஜனநாயகச் சமூகத்தில் பத்திரிகைகளின் பங்கு குறித்து நேரு, ஒருவர் நவீன உலகத்தையும், அதன் நல்ல மற்றும் கெட்ட அம்சங்களையும் எதிர்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, விரும்பத்தகாத கருத்துக்களைச் சகித்துக்கொள்வதாக இருந்தாலும், அவற்றை அடக்குவதைவிட, கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதே சிறந்தது. ஆனால், இதற்கு வரம்புகள் உண்டு. நாட்டிற்கு கடுமையான ஆபத்து ஏற்படும் காலங்களில், கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன என்று விரிவாக எடுத்துரைத்தார். பத்து நாட்களுக்குப் பிறகு, சிறப்புக் குழு முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்த தனது அறிக்கையை முடித்து, 'கட்டுப்பாடுகள்' (restrictions) என்ற சொல்லுடன் 'நியாயமான' (reasonable) என்ற வார்த்தையையும் பயன்படுத்தத் தொடங்கியது. 


ராஜாஜியின் பார்வை


அந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஷ்பந்து குப்தா, அந்தத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று நேருவிடம் கேட்டுக்கொண்டார். உள்துறை அமைச்சர் சி. ராஜகோபாலாச்சாரி (CR or Rajaji), கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை என்பது "இயற்கையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு இயல்பான உரிமை" என்று வாதிட்டார் என இந்த நாளிதழ் ஜூன் 1, 1951 அன்று செய்தி வெளியிட்டது. "முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மையுடன்", நாடாளுமன்றம் அந்த மசோதாவை நிறைவேற்றியது; 246 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 14 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஜே.பி. கிருபளானி, சுசேதா கிருபளானி, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் கே.டி. ஷா ஆகியோர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.


கருத்துச் சுதந்திரம் (freedom of expression) தொடர்பான பிரச்சினையில் அரசியலமைப்பை திருத்தியதற்காக நேருவை சமகால வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுகிறது. அத்தகைய கட்டுப்பாடுகள் "நியாயமானவை" (reasonable) என்று கருதப்படுமா என்பதன் அடிப்படையில் தீர்ப்பு "இன்னும் அதிகாரப்பூர்வமானது" (still authoritative) என்று அவர்கள் கருதுகின்றனர்.

 Original Article : Tamil Nadu’s link to a key amendment to the Constitution on freedom of press, expression -T. Ramakrishnan

Share: