கர்நாடகா வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் (தடுப்பு) மசோதா, 2025-ன் நோக்கம், 'வெறுப்புப் பேச்சைப் பரப்புவது, வெளியிடுவது அல்லது ஊக்குவிப்பதைத் தடுத்து நிறுத்துவது' என்று கூறுகிறது.
கடந்த புதன்கிழமை, கர்நாடக அரசு மாநில சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தது. இது முதல்முறையாக வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதற்கான சட்டம் என்று கூறப்படுகிறது. கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதாவானது, 2025 (The Karnataka Hate Speech and Hate Crimes (Prevention) Bill, 2025), "வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புதல், வெளியிடுதல் அல்லது ஊக்குவிப்பதைக் கட்டுப்படுத்துவதும், தடுப்பதும்" மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான இழப்பீட்டை வழங்குவதும் இதன் நோக்கங்களாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த மசோதா, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உட்படக் கடுமையான அபராதங்களை முன்மொழிகிறது. மேலும், இது வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சாகக் கருதப்படும் இணையதளப் பதிவுகளைத் தடுக்கவோ அல்லது அகற்றவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இது சட்டத்தின் வரையறைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இது பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் ஒரு கடுமையான சட்டமாக இருப்பதால் கவலை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகாவின் வெறுப்புப் பேச்சுச் சட்டம், மாநில அரசை வெறுப்புப் பேச்சுக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த இது வழிவகை செய்கிறது.
விரிவான வரையறை
இந்த மசோதாவின்படி, வெறுப்புக் குற்றம் என்பது "வெறுப்புப் பேச்சின் தகவல் தொடர்பு" என வரையறுக்கப்படுகிறது. இது, ஒரு தனிநபர் (வாழ்பவர் அல்லது இறந்தவர்) அல்லது ஒரு குழுவிற்கு எதிராகவோ, அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராகவோ, ஏதேனும் ஒரு பாரபட்சமான நலன்களின் அடிப்படையில், தீங்கு, நல்லிணக்கமின்மை அல்லது வெறுப்பு, பகைமை அல்லது விரோத உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொதுவில் வெளிப்படுத்தப்படும் வாய்மொழி, எழுத்து, காட்சி அல்லது மின்னணு வடிவத்திலான எந்தவொரு வெளிப்பாட்டையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது.
இந்தச் சட்டம், "இடையூறு நலன்" (prejudicial interest) என்றால் என்ன என்பதை விரிவாக வரையறுக்கிறது. அதில் மதம், இனம், சாதி, சமூகம், பாலினம், பால் அடையாளம், பாலியல் நாட்டம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, குறைபாடு அல்லது பழங்குடி ஆகிய காரணங்களால் ஏற்படும் பாரபட்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான கலைப் படைப்புகள், செயல்திறன்கள் அல்லது பிற வெளிப்பாடுகள்; கல்வி அல்லது அறிவியல் விசாரணைகள்; நியாயமான மற்றும் துல்லியமான அறிக்கைகள் அல்லது கருத்துகள்; மதமாற்றம் (proselytization) ஆகியவை இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
வெறுப்புப் பேச்சு கட்டுப்பாடுகளுக்கென்று தனியாக ஒரு சட்டம் இல்லை. ஆனால், அதைக் கையாள பெரும்பாலும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) சில பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய வரையறை, தற்போது பயன்படுத்தப்படும் இந்தப் பிரிவுகளைவிட மிகவும் விரிவானதாகவும் பரந்ததாகவும் உள்ளது. பிரிவு 299: மத உணர்வுகளைக் கோபப்படுத்தும் வகையில் பேசுதல் அல்லது செயல், பிரிவு 298: வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்துதல் அல்லது அசுத்தப்படுத்துதல், பிரிவு 300: மதக் கூட்டங்களை குழப்பும் வகையில் செயல்படுதல், பிரிவு 301: சமாதி அல்லது புதைக்கும் இடத்தில் அத்துமீறுதல், பிரிவு 302: ஒருவரின் மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்கில் சொற்களைப் பயன்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவுகள்
பெரும்பாலும் மதம் சம்பந்தப்பட்ட வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதற்கே பயன்படுகின்றன.
அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களில் உள்ள அதிகமான விரிவும் தெளிவின்மையும் கொண்ட வரையறைகள், பெரும்பாலும் அந்தச் சட்டத்தை தன்னிச்சையாகவோ தவறாகவோ பயன்படுத்த வழிவகுக்கும் என்கின்றனர். இதுபோன்ற சட்டங்களை முதன்மையாக அமல்படுத்தும் காவல்துறையினர், சட்டத்தை பாகுபாடு இன்றி நடைமுறைப்படுத்தவும், செல்லுபடியான பேச்சுரிமையை சட்டவிரோத செயல்களிலிருந்து சரியாக வேறுபடுத்திப் பார்க்கவும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற தெளிவில்லாத வரையறைகள் “குளிரூட்டும் விளைவை” (Chilling Effect) உண்டாக்குகின்றன. அதாவது, மக்கள் சட்டவிரோதமான செயல்களிலிருந்து பயந்து, அவற்றிலிருந்து மிகத் தொலைவில் இருக்க முயல்கிறார்கள். 2015-ஆம் ஆண்டு வந்த முக்கியமான ஷ்ரேயா சிங்கால் vs இந்திய ஒன்றியம் வழக்குத் தீர்ப்பில், ஒரு குற்றவியல் சட்டம் குற்றத்தை போதுமான அளவு துல்லியமாக வரையறுக்கத் தவறினால், அது தெளிவின்மை காரணமாக செல்லாது (void for vagueness) என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
அரசாங்கத்தின் நீக்குதல் அதிகாரங்கள்
இந்த மசோதா, வெறுப்புக் குற்றப் பதிவுகளைத் (hate crime materials) தடுக்கவோ அகற்றவோ மாநில அரசுக்கு புதிய அதிகாரங்களை வழங்குகிறது. மாநில அரசு நியமிக்கும் ஒரு அதிகாரிக்கு, மின்னணு ஊடகங்கள் உட்பட எந்த சேவை வழங்குநர், இடைத்தரகர், நபர் அல்லது நிறுவனத்திடமும், அவர்களது தளத்தில் இருந்து வெறுப்புக் குற்றப் பதிவுகளைத் தடுக்கவோ அகற்றவோ உத்தரவிடும் அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்தகைய தடை உத்தரவுகளை எதிர்க்கும் செயல்முறை அலுவலக ரீதியானது மற்றும் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். பொதுவாக, 2009-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பம் (தகவலுக்கான பொதுமக்கள் அணுகலைத் தடுப்பதற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்பு) விதிகள் ("தடுப்பு விதிகள்") அரசாங்கம் உள்ளடக்கத்தைத் தடை செய்ய முடிவெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
நிறுவன ரீதியான குற்றவாளிகள்
முக்கியமாக, இந்த மசோதா வெறுப்புக் குற்றங்களுக்காக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் தண்டிக்க முயல்கிறது என்கின்றனர். இதில் “நிறுவனங்கள்” என்பது பதிவு செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, “நபர்களின் கூட்டமைப்பு” என்று மிகத் தளர்வாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி ஒரு குற்றம் செய்யும் நபர் அமைப்பு அல்லது நிறுவனமாக இருந்தால், குற்றம் நடந்த நேரத்தில் அந்த அமைப்பின் வணிகத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர்களும், அந்த அமைப்பும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு ஒரு முக்கியமான விலக்கைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு நபர், அந்த குற்றம் தனக்குத் தெரியாமல் செய்யப்பட்டது என்பதையோ, அல்லது அக்குற்றம் இழைக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான அனைத்து உரிய விழிப்புடன் (due diligence) செயல்பட்டதற்கான ஆதாரத்தை நிரூபித்தால், அவர் தண்டிக்கப்பட மாட்டார். ஒருவர் வெறும் தொடர்பின்மூலம் குற்றவாளியாகக் கருதப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதில் இந்த விலக்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய சுமை (onus) குற்றஞ்சாட்டப்பட்டவர் பக்கமே உள்ளது. குற்றவியல் வழக்கின் இயந்திரம் ஒருமுறை இயங்கத் தொடங்கிவிட்டால், அந்தச் செயல்முறைதான் பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையாக மாறிவிடுகிறது.
தண்டனை
கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, வெறுப்புக் குற்றத்திற்கு (hate crime) குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை கட்டாயம் விதிக்கப்படும், இது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், மேலும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். அடுத்தடுத்த அல்லது மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றங்களுக்கு, தண்டனை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும், இது ரூ.1,00,000 அபராதத்துடன் பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) விதிகளில் வெறுப்புப் பேச்சுக் குற்றங்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை உள்ள குற்றங்களுக்கு “சிறை இல்லை, பிணைதான்” என்பதை உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. இதனால், கர்நாடக மசோதாவில் வெறுப்புப் பேச்சுக்கு அதிகரிக்கப்பட்ட தண்டனையை குறிப்பிடத்தக்கதாகக் கருதலாம். இந்த “சிறைக்குப் பதில் பிணை” என்ற தாராளக் கொள்கையை நடைமுறையில் பாதுகாக்க வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்கள் என அழைக்கப்படுகின்றன.
மற்ற மாநிலங்களும் வெறுப்புப் பேச்சு வழக்குகளில் தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி, அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்களை மீற முயன்றுள்ளன என்று சுட்டிக் காட்டப்படுகிறது. உதாரணமாக, அசாம் அரசு பழைய இந்திய தண்டனைச் சட்டத்தில் (Indian Penal Code (IPC)) இருந்த தேசத்துரோகப் பிரிவுக்கு இணையான புதிய பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152-ஐ (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள்) மேற்கோள் காட்டி, வெறுப்புப் பேச்சு என்று கூறப்படும் கருத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒடுக்குமுறையில், அசாம் போலீஸ் இரண்டு மாதங்களில் குறைந்தது 97 பேரைக் கைது செய்தது. பாகிஸ்தானை ஆதரிப்பதாகவோ, இந்துக்களுக்கு எதிராகவோ கருதப்பட்ட கருத்துகள், இடுகைகள் மற்றும் தாக்குதல்கள், தேர்தலுடன் தொடர்புடைய “சதி” என்று கூறும் பதிவுகளுக்காகவே பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் சட்டம்
இந்த முன்மொழியப்பட்ட சட்டம் "தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு எந்த சட்டத்தின் விதிகளுக்கும் கூடுதலாக இருக்கும், அவற்றை இழிவுபடுத்தாது" என்று கர்நாடக மசோதா தெளிவுபடுத்துகிறது. இதன் பொருள் பாரதிய நியாய சம்ஹிதாவின் (BNS) உள்ள விதிகளுக்கு மாறாக அல்லாமல், இந்தப் புதிய செயலும் தனியாக ஒரு குற்றமாகச் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
வெறுப்புப் பேச்சைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவந்தால் அது பயனுள்ளதாக இருக்குமா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் செய்த தலையீடுகள் பெரும்பாலும் வழக்குகளைத் தொடங்குவதிலேயே கவனம் செலுத்தின. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் அமர்வு, “நாட்டில் வெறுப்பு சூழல் நிலவுகிறது” என்று கூறி, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில காவல்துறையினருக்கு, புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லாமல், தாங்களாகவே (suo motu) வெறுப்புப் பேச்சு வழக்குகளில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினை என்னவென்றால், இருக்கும் சட்டங்கள் போதாது என்பதல்ல; மாறாக, குறிப்பிட்ட வழக்குகளில் சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் பாரபட்சமாக நடந்துகொண்டதா என்பதே ஆகும்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு தயக்கம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. பின்னர், இந்த வழிகாட்டுதல் ஏப்ரல் மாதம் 2023-ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
Original link:
Why Karnataka’s new hate speech law is being criticised.