ஒரு புதிய சமூக இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு, அறிக்கை சமர்ப்பித்தல், சரிபார்த்தல் (Monitoring, Reporting and Verification (MRV)) அமைப்பு, உண்மையான நேரத்தில் கிராம அளவில் சேகரிக்கப்படும் சுற்றுச்சூழல் தரவுகளை தமிழ்நாட்டின் காலநிலை ஆளுகை முறைக்குள் கொண்டு வருகிறது.
உலக அளவில், கண்காணித்தல், அறிக்கையிடல் மற்றும் சரிபார்த்தல் (MRV) முறைகள் காலநிலை வெளிப்படைத்தன்மைக்கு மிகவும் இன்றியமையாதவை. பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, நாடுகள் தங்கள் தேசிய பங்களிப்புகள் (NDCs) இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தைக் வெளிக்காட்ட, கார்பன் வெளியேற்றங்கள், தகவமைத்தலில் முன்னேற்றம் மற்றும் காலநிலை நிதி ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. காலநிலை மாற்ற ஒப்பந்தத்தின் 30-வது உலக மாநாடு (Conference of the Parties (COP30)) இதை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதன்படி, உலகளாவிய செயலாக்க முடுக்கி (Global Implementation Accelerator/Tracker), 1.5°C இலக்குக்கான பெலேம் நோக்கம் (Belém Mission to 1.5°C), மற்றும் தகவமைத்தலுக்கான உலகளாவிய இலக்குக்கு (Global Goal on Adaptation) தன்னார்வ குறியீடுகளை (voluntary indicators) அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது. வெளிப்படைத்தன்மைக்கும், காலநிலை நிதியைப் பெறுவதற்கும் வலுவான உள்நாட்டு கண்காணிப்பு, அறிக்கை மற்றும் சரிபார்ப்பு (MRV) அமைப்பு தேவை என்று அது வலியுறுத்துகிறது. அதேசமயம், இத்தகைய அமைப்புகளை உருவாக்க வளரும் நாடுகளுக்கு அதிக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி தேவை என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. மேலும், காலநிலை நிதி அளவை அதிகரிப்பது மட்டுமல்ல, பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் போன்ற சமூகங்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த சமூகங்கள் தான் காலநிலை மாற்றத்தை தினசரி எதிர்கொண்டு அதன் பாதிப்புகளைத் தாங்குகின்றன. எனவே, அவர்களே கண்காணிப்பு முயற்சிகளுக்கு தலைமை ஏற்க வேண்டும், நிதிகளை நிர்வகிக்க வேண்டும், உள்ளூர் தகவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு தேவையான வளங்களைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், கண்காணிப்பு, அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் சரிபார்ப்பு முறைகள் இப்போதும் தொலை உணர்தல், அரசுத்தரவுகள் மற்றும் வெளிநிபுணர்களையே அதிகம் நம்பியுள்ளன. இதனால் சமூகத்தால் உருவாக்கப்படும் நுண்ணறிவுகளுக்கு மிகக்குறைந்த இடமே கிடைக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் சரிபார்ப்பு (Community-based Monitoring, Reporting and Verification (CbMRV)) திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இது சமூகத்தால் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் தகவல்களைக் காலநிலை மேலாண்மையின் ஒரு முறையான பகுதியாக மாற்றுகிறது.
சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கை சமர்பித்தல் மற்றும் சரிபார்த்தல் ((CbMRV) மாதிரி
தமிழ்நாடு முழுவதும் காலநிலை மாற்றம் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. ஈரோட்டில் விவசாயிகள், மழை குறைவாகவும் திடீரென கனமழையாகவும் பெய்கிறது என்றும், வெப்பம் அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர். கடலூரில் உப்புநீர் உள்நோக்கி வருகிறது; மாறும் கடல் அலைகள் மீன்பிடித் தொழிலைப் பாதிக்கின்றன. நீலகிரியில் பழங்குடி மக்கள், காடுகளின் ஈரப்பதம் குறைந்து வருவதாகவும், பூக்கள் பூக்கும் காலம் சீரற்று இருப்பதாகவும் கூறுகின்றனர். இத்தகைய மாற்றங்கள் முதலில் உள்ளூர் அளவில் சிறிய சூழல்களிலேயே தெரியத் தொடங்குகின்றன. ஆனால், கொள்கை வகுப்பவர்கள் பெரிய அளவிலான தரவுகளையே நம்புகின்றனர். ஏனெனில், உள்ளூர் காலநிலை குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.
கிராமங்களில் அறிவியல் அடிப்படையிலான, நம்பகமான சுற்றுச்சூழல் தரவுகளை உருவாக்க உதவுவது போன்ற காரணங்களுக்காகவே சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கை சமர்பித்தல் மற்றும் சரிபார்த்தல் ((CbMRV) மாதிரி உருவாக்கப்பட்டது. இது பாரம்பரிய சூழலியல் அறிவை, மழை, வெப்பநிலை, மண்-நீர் நிலை, பல்லுயிர், மீன்பிடி, விவசாயம், வாழ்வாதாரம், கார்பன் இருப்பு மற்றும் உமிழ்வு போன்றவற்றின் நேரடி களக் கண்காணிப்புடன்
இணைக்கிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் ஒரு டிஜிட்டல் தளங்களில் சேகரிக்கப்பட்டு, கிராமம், மாவட்டம், மாநில அளவில் முடிவுகள் எடுக்க உதவுகின்றன. இதன் மூலம் சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கை சமர்பித்தல் மற்றும் சரிபார்த்தல் ((CbMRV) மாதிரியானது, நிர்வாகத்தை மேலிருந்துகீழ் நோக்கிய அணுகுமுறையாக இல்லாமல், சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுமுயற்சியாக மாற்றுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த முன்முயற்சி 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் – வேகமான காலநிலை மாற்ற முயற்சிகளுக்கான கூட்டாண்மை (United Kingdom Partnering for Accelerated Climate Transitions (UK-PACT)) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் நியாயமான மாற்ற இலக்குகளை ஆதரிக்கும் வகையில், சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கை மற்றும் சரிபார்ப்பு (CbMRV) அமைப்பை முன்னோட்டமாக அமல்படுத்த உதவியது என்கின்றனர். நீலகிரியில் அரக்கோடு (மலைக்காடுகள்), ஈரோட்டில் வெள்ளோடு (விவசாயம் மற்றும் ஈரநிலங்கள்), கடலூரில் கில்லை (மாங்குரோவ் காடுகள் மற்றும் கடலோர மீன்பிடி) என கீஸ்டோன் அறக்கட்டளை மற்றும் பிற அறிவியல் கூட்டமைப்புகளுடன் இணைந்து, சூழலியல் ரீதியாக வேறுபட்ட மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்களில் வாழும் மக்கள், தலைமுறைகளாகக் கொண்டிருந்த தங்கள் பாரம்பரிய அறிவைப் பகிர்ந்துகொண்டனர். அதைப் பயன்படுத்தி, சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கை சமர்பித்தல் மற்றும் சரிபார்த்தல் மாதிரிக்கான குறியீடுகள், கண்காணிப்பு முறைகள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் உருவாக்கப்பட்டன என்கின்றனர்.
சமூக காலநிலை பாதுகாவலர்கள்
இந்த முன்முயற்சியின் முக்கிய சாதனையாக, 35 முதன்மை சமூகப் பங்குதாரர்கள் (Key Community Stakeholders (KCS)) உருவாக்கப்பட்டனர். இவர்கள் விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பழங்குடி அறிவு கொண்டவர்கள் ஆவர். இவர்கள் இப்போது சமூக காலநிலைப் பாதுகாவலர்களாக (climate stewards) செயல்படுகின்றனர். அவர்கள் சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்கிறார்கள், அவற்றை விளக்குகிறார்கள், போக்குகளை அடையாளம் காண்கிறார்கள். மேலும், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, எதிர்காலத்தில் அந்தத் தகவல்களை அன்றாட முடிவுகளாக மாற்றி செயல்படுத்த உதவுகிறார்கள்.
சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் சரிபார்த்தல் அமைப்பானது (CbMRV) ஆளுகையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறையை மாற்றுகிறது. ஊரகப் பகுதிகளின் நிலையில், இது பாதிப்பு மதிப்பீடுகள், பயிர் பல்வகைப்படுத்தல் முடிவுகள் மற்றும் இயற்கை வள மேலாண்மையை மேம்படுத்தி, கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்கள் (Gram Panchayat Development Plan (GPDP)) மற்றும் காலநிலை-உறுதியான ஊரகப் பகுதி போன்ற திட்டங்களுக்கு உதவுகிறது. வட்டாரம் மற்றும் மாவட்ட நிலைகளில், ஊரகப் பகுதிகளில் சேகரிக்கப்படும் தரவுகள் நீர்ப்பிடிப்பு மேம்பாடு, வேளாண்மை ஆலோசனைகள் மற்றும் பேரிடர் தயார்நிலைக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. மாநில நிலையில், சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் சரிபார்த்தல் (CbMRV) அமைப்பானது தமிழ்நாடு காலநிலை கண்காணிப்பு, மாநில காலநிலை மாற்ற செயல் திட்டம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், கடற்கரை தகவமைப்புத் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் காலநிலை முதலீட்டுத் திட்டங்களுக்கு தேவையான அடிப்படைத் தரவுகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக இந்த அமைப்பை நிறுவன ரீதியில் வலுப்படுத்துவதும், நிரந்தர பசுமைப் பணியாளர்கள் (green workforce) குழுவை உருவாக்குவதும் முக்கிய இலக்காகும். சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் சரிபார்த்தல் (CbMRV) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட பயிற்சி தொகுதிகள், செயலிகள், கள நெறிமுறைகள் மற்றும் இணையதள பக்கங்கள் ஆகியவற்றை சமூகக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், வனவியல் மற்றும் வேளாண் நிறுவனங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்கள், மாநில திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆதரவு அளித்தால், சமூக கண்காணிப்பாளர்கள் நீண்ட கால சுற்றுச்சூழல் அடிப்படை தரவுகளைப் பராமரிக்க முடியும். இறுதியில், இந்த முறையை பெரிய புவியியல் பகுதிகளுக்கு விரிவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவியல் கருவிகள் எல்லாத் தரப்பினரிடமும் பரவலாகப் பகிரப்படும்போதும், நிர்வாகம் அடிமட்டத்திலிருந்து (grassroots) உருவாகும்போதும், காலநிலை நடவடிக்கை அதிக ஜனநாயகமானதாகவும் வலுவானதாகவும் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
சுப்ரியா சாஹு, கூடுதல் தலைமைச் செயலாளர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) தமிழ்நாடு அரசு;
பிதீம் ராய், (கீஸ்டோன் அறக்கட்டளையின் இணை நிறுவனர்) மற்றும் (கிராமப்புற மேம்பாட்டு நிபுணர் மற்றும் சூழலியலாளர்);
தபிந்தா பஷீர், ஆலோசகர், (காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி - வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்), இங்கிலாந்து அரசு.
Original link: