கடந்த மாதம், கர்நாடக சட்டமன்றத்தின் கூட்ட தொடரின்போது, மாநில அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட வழக்கமான உரையில் சில வரிகளை மட்டும் படித்த பிறகு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவையிலிருந்து வெளியேறினார். ஆளுநர் தனது அரசியலமைப்பு கடமையை மீறிவிட்டதாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார். இதேபோன்ற நிகழ்வுகள் மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் நடந்தன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் தமிழ்நாட்டில், ஆளுநர் R.N. ரவி தனது தொடக்க உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆளும் கேரளாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். மாநில சட்டமன்றங்களில் ஆளுநர்கள் உரையாற்றும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமா? ஆரத்ரிகா பௌமிக் நெறிப்படுத்திய ஒரு கலந்துரையாடலில், P.D.T. ஆச்சாரி மற்றும் அலோக் பிரசன்னா குமார் ஆகியோர் இந்தக் கேள்வியைப் பற்றி விவாதிக்கின்றனர். திருத்தப்பட்ட உரையாடல் பகுதிகள் இங்கே:
அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட தொடக்க உரையைப் படிக்க ஆளுநர் மறுப்பது அரசியலமைப்பை மீறுவதாகுமா?
P.D.T. ஆச்சாரி: அரசியலமைப்பின் பிரிவு 176-ன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் மாநில சட்டமன்றத்தில் உரையாற்றுவது (mandated to address the State legislature) ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டரீதியான கடமையாகும். இந்த உரை, அரசாங்கத்தின் சட்டமியற்றும் கொள்கையை எடுத்துரைக்கிறது; மேலும், நடைபெறும் கூட்டத்தொடரிலும் வரவிருக்கும் ஆண்டிலும் அரசாங்கம் செயல்படுத்த உத்தேசித்துள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்த உரை மாநில அமைச்சரவையால் தயாரிக்கப்படுகிறது. மேலும், ஒரு அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர் என்ற முறையில், ஆளுநர் இந்த உரையில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே வாசிக்க வேண்டும். சட்டமன்றத்தில் உரையாற்ற மறுக்கும் ஆளுநரோ அல்லது உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை மட்டும் வாசிப்பதன் மூலம் பெயரளவிற்குப் வருகை தரும் ஆளுநரோ, அரசியலமைப்பின் பிரிவு 176-ன் கீழ் செயல்படுவதாகக் கூறமுடியாது.
அலோக் பிரசன்னா குமார்: இது போன்ற செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் (integral part of the State legislature) என்பதை அரசியலமைப்பின் 168-வது பிரிவு அங்கீகரிக்ககிறது. சட்டமன்றம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளை மட்டுமே உள்ளடக்கியது என்று மக்கள் பொதுவாகக் கருதுவதால், இது போன்ற கூற்று புறக்கணிக்கப்படுகிறது. இந்த அமைப்புக்குள் ஒரு அரசியலமைப்புத் தலைவராக, ஆளுநர் சட்டமன்றத்தின் செயல்பாட்டிற்குத் தடையாக இல்லாமல், அதை எளிதாக செய்வதற்கு உதவுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய உரையை மாற்றுவதற்கு ஆளுநர் தனது விருப்புரிமையைப் (discretion) பயன்படுத்த முடியுமா?
அலோக் பிரசன்னா குமார்: முடியாது. 2016-ஆம் ஆண்டு நபாம் ரேபியா vs துணை சபாநாயகர் (Nabam Rebia v. Deputy Speaker) வழக்கில், உச்சநீதிமன்றம், அவையில் ஆளுநர் ஆற்றும் உரை என்பது, அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செய்யப்படும் ஒரு நிர்வாகச் செயல்பாடு என்பதைத் தெளிவுபடுத்தியது. அரசியலமைப்பு நடைமுறைகளிலிருந்து இந்தத் தொடர்ச்சியான மீறல்கள், இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தின் காரணமாகவே நிகழ்கின்றன. மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படக்கூடிய குடியரசுத் தலைவரைப் போல் இல்லாமல், ஆளுநர் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரிலேயே, அல்லது நடைமுறையில் ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரிலேயே பதவியில் நீடிக்கிறார். இதன் விளைவாக, குடியரசுத் தலைவர் அமைபுரீதியாக நாடாளுமன்றத்திற்குக் கடமைப்பட்டவராக இருக்கும் நிலையில், ஆளுநரின் பதவிக் காலம், அவர் செயல்படும் சட்டமன்றத்தை விட, ஒன்றிய அரசாங்கத்தின் நம்பிக்கையையே சார்ந்துள்ளது.
P.D.T. ஆச்சாரி: நான் ஒப்புக்கொள்கிறேன். மாநில அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் மாற்ற முடியாது. மேலும், அதை அவையில் வாசிப்பது மட்டுமே அவரது கடமையாகும். அதன் உள்ளடக்கங்களுக்கு ஆளுநர் எந்தப் பொறுப்பையும் ஏற்க வேண்டியதில்லை. மேலும், அதில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை. நம்மைப் போன்ற ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் (representative democracy), நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆளுநர் ஒரு இணையான அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது மாநில அமைச்சரவையின் உதவியும் ஆலோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுப்பதற்கு அரசியலமைப்பு எந்தவிதமான அனுமதியையும் வழங்கவில்லை.
உரையின் உள்ளடக்கம் குறித்து உண்மையான ஆட்சேபனைகள் இருந்தால், ஒரு ஆளுநருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன?
அலோக் பிரசன்னா குமார்: அரசாங்கத்தின் கொள்கைகள் விரும்பத்தக்கவையா அல்லது அரசியலமைப்புக்கு உகந்தவையா என்பது குறித்து ஆளுநர் தன்னிச்சையாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. ஒரு ஆளுநர் தனது தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டியதில்லை. ஆனால், அவை மாநில அமைச்சரவையுடன் நேர்மையாகவும் தனிப்பட்ட முறையிலும் பகிரப்பட வேண்டும். பதவி ஏற்றபிறகு, தனிப்பட்ட கருத்துக்கள் அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆளுநர் ஆலோசனை வழங்கலாம். தனது பதவியின் வரம்புகளை அவர் மதிக்க வேண்டும்.
அதே நேரத்தில், முதலமைச்சரும் அமைச்சரவையும் ஆளுநருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், அவர் கொண்டிருக்கும் மாற்று கருத்துக்களைப் கேட்பதும் ஒரு ஆரோக்கியமான எடுத்துக்காட்டாகும். பரஸ்பர மரியாதையும் நல்ல தொடர்பும் இருக்கும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆளுநரின் ஆலோசனையைப் புறக்கணிப்பதற்கு வாய்ப்பில்லை.
இந்த உரை கைவிடப்பட வேண்டிய ஒரு காலனித்துவ தொடர்ச்சியா ?
அலோக் பிரசன்னா குமார்: இந்த நடைமுறை பெரும்பாலும் அடையாளப்பூர்வமானதாகவும், பெரிய அளவில் செயல்பாட்டுப் பயனற்றதாகவும் இருந்தாலும், அது தக்கவைக்கப்பட வேண்டும். இந்த மரபை முழுமையாகக் கைவிடுவதைவிட, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டு நிகழ்வுகளைக் கையாள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த உரை, ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதை அங்கீகரிக்கிறதுடன், இந்தியா தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையைப் (Westminster system) பின்பற்றி வருகிறது என்பதையும் காட்டுகிறது.
P.D.T. ஆச்சாரி: இந்த நடைமுறையில் புனிதமானதாகக் (sacrosanct) கருதப்பட வேண்டிய எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாநில சட்டமன்றத்தின் மற்ற இரண்டு கூட்டத்தொடர்கள் ஆளுநரின் உரை இல்லாமல் தொடங்குகின்றன. இது, சட்டமன்றத்தின் செயல்பாடு இந்த சம்பிரதாயமான சடங்கைச் சாராமல் இயல்பாகவே நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. மேலும், அரசியலமைப்பின் 175-வது பிரிவு, ஆளுநர் அவையில் உரையாற்றவும் அல்லது நிலுவையில் உள்ள சட்டங்கள் குறித்து செய்திகளை அனுப்பவும் அனுமதிக்கிறது. எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒருதலைபட்சமாகச் செயல்படுவது போன்ற நிகழ்வுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியமனதாகிறது.
மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சியும் அரசியலமைப்பு சட்டதிற்கு ஏற்ப நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டிய கடமையை பிரிவு 355 ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 176-ன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட உரையை ஆளுநர் வாசிக்க மறுக்கும்போது, அந்த அரசியலமைப்புச் சட்டக் கடமை பயனுள்ள வகையில் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கவலைகள் எழுகின்றன. ஆளுநரின் உரை இல்லாத நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரை முறையாகத் தொடங்க முடியாததால், இதுபோன்ற சூழ்நிலைகள் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
ஆளுநர்கள் தங்கள் அரசியலமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தவறும்போது, குடியரசுத் தலைவரின் தலையீடு அவசியமா?
P.D.T. ஆச்சாரி: ஆம். ஆளுநர்கள் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு, தங்கள் அரசியலமைப்புச் சட்டக் கடமைகளைச் செய்யத் தவறும்போது, குடியரசுத் தலைவர் தலையிட்டு, ஆளுநர் கடமைகளைச் செய்யும்படி அல்லது பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட வேண்டும். அரசியலமைப்பின் 160-வது பிரிவு, ஒரு ஆளுநரின் பணிகளைச் செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் (directions for the discharge of a Governor’s functions) அளிக்கிறது. குறிப்பாக, அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத தற்செயல் நிகழ்வுகளைச் சமாளிக்க இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளுநர்களின் நடத்தை மாநிலங்களில் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, குடியரசுத் தலைவர்கள் இதுபோன்ற அதிகாரங்களைப் பயன்படுத்திய சம்பவங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்ததில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த உரையை நீக்குவதற்காக அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தனது கருத்தை கூறியுள்ளார். அத்தகைய ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியமானது?
P.D.T. ஆச்சாரி: அத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஒன்றிய அரசு இதற்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை. மேலும், இது நிறைவேற நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும். ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையும், அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் தேவைப்படும். அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பரந்த ஒருமித்த கருத்து இல்லாமல், இதை சட்டமாக நிறைவேற்றுவது கடினமான ஒன்றாகும். மேலும், தற்போதைய அமைப்பு வெளிப்படையாக அரசியல்ரீதியான நன்மைகளை வழங்கும் போது, அதை மாற்றுவதற்குப் பெரிய காரணம் எதுவும் இல்லை.
அலோக் பிரசன்னா குமார்: அத்தகைய திருத்தம் பயனற்றதாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், ஆளுநர்கள் நியமிக்கப்படும் மற்றும் நீக்கப்படும் முறையை மறுபரிசீலனை செய்வதே பயனுள்ள சீர்திருத்தமாக இருக்கும். அத்தகைய சீர்திருத்தம், ஆளுநர்கள் தங்கள் விசுவாசம் ஒன்றிய அரசுக்கு அல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே என்பதை நினைவில் கொள்ளவும், இந்த நிலையிலிருந்து எந்த விலகலுக்கும் அவர்கள் பதவியில் நீடிப்பதில் விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவும் உதவும். குடியரசுத் தலைவர்கள் பொதுவாக எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். ஆனால், ஆளுநர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதையும் இது விளக்குகிறது. குடியரசுத் தலைவர் மறைமுகத் தேர்தல் மற்றும் பதவி நீக்க வாய்ப்பு காரணமாக அமைப்புரீதியாக நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்கிறார்.
இருப்பினும், ஆச்சாரி சுட்டிக்காட்டியது போல, இதற்கும் அரசியல் ஒருமித்த கருத்து தேவைப்படும், அதைப் பெறுவது கடினமாக இருக்கலாம். இருந்த போதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியலமைப்பு ஆட்சி படிப்படியாகப் பலவீனமடைவதைத் தடுக்க, இத்தகைய சீர்திருத்தங்கள் குறித்த ஒரு தீவிரமான விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
P.D.T. ஆச்சாரி, மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர்; அலோக் பிரசன்னா குமார், விதி சட்டக் கொள்கை மையத்தின் இணை நிறுவனர்.