வெறுப்புப் பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை சோதித்து வருகிறது. இந்தியாவிற்கு தெளிவான விதிகள் தேவை, உரத்த சொற்கள் அல்ல. -அடீல் அகமது

 பொது விவாதங்களில் பிளவுபடுத்தும், வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய ஒரு தருணத்தில் உள்ளது. சுதந்திரமான கருத்துரிமையை கண்ணியம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதே நேரத்தில் அது கண்ணியம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் உறுதி செய்கிறது. இந்த உரிமைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, ​​அவற்றைச் சமரசம் செய்யும் பணி வெறும் சொல்லாக அல்லாமல், சட்டத்தின் மூலமே சாத்தியமாகிறது. இன்று, வெறுப்புப் பேச்சு (hate speech) என்பது அந்த அரசியலமைப்புச் சமநிலைக்கு ஏற்படும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக, பொதுப் பதவிகளில் அதிகாரிகளிடமிருந்து வெளிவரும் கடுமையான, பிளவுபடுத்தும் பேச்சு அரிதான ஒன்றாக இல்லாமல், அன்றாட நிகழ்வாகிவிட்டது. மத, மொழி அல்லது பிராந்தியக் குழுக்களைத் தாக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் "அரசியல் பேச்சு," "கடுமையான உண்மைகள்" அல்லது "கலாச்சார வெளிப்பாடு" என்று கூறி நியாயப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் ஒட்டுமொத்த விளைவு சீரழிவை ஏற்படுத்தும்: அவை பாரபட்சத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கின்றன, சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துகின்றன மற்றும் புறக்கணிப்பை படிப்படியாக இயல்பாக்குகின்றன.


வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்துப் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றமன்றத்திடம் இப்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணம், முன்னொரு காலத்திய ஒரு முக்கிய அரசியலமைப்புத் திருப்புமுனையை நினைவூட்டுகிறது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்டம் இல்லாத நிலையில், நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, நீதிமன்றமே தலையிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க விஷாகா தீர்ப்பின் (Vishaka judgment) மூலம் கட்டாய வழிகாட்டுதல்களை வகுத்தது. வெறுப்புப் பேச்சு இன்று அதே போன்ற ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.


ஒரு பிளவுப்பட்ட சட்ட பதில்


இந்தியாவில் வெறுப்புப் பேச்சு தொடர்பான சட்டங்கள் இல்லை. வகுப்புவாத அல்லது எரிச்சலூட்டும் பேச்சைக் கையாளும் விதிகள் தண்டனைச் சட்டம், தேர்தல் சட்டம், ஊடக விதிமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளில் பிளவுப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வரம்புகள், நடைமுறைகள் மற்றும் அமலாக்க வழிமுறைகளுடன் செயல்படுகின்றன. இதன் விளைவாக நியாயமற்ற சட்ட அமலாக்கம், நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் எந்த ஒரு தண்டனை இல்லாத நிலையும் ஏற்படுகிறது.


உச்சநீதிமன்றமே இந்த வரம்புகளை ஒப்புக்கொண்டுள்ளது. பிரவாசி பலை சங்கதன் வழக்கில், தற்போதுள்ள சட்டங்கள் வெறுப்புப் பேச்சை வரையறுத்துத் தண்டிப்பதை கடினமாக்குகின்றன என்று உச்சநீதிமன்றம் கூறியது. அமீஷ் தேவ்கன் வழக்கில், 'வன்முறையைத் தூண்டுவது' தண்டனைக்குரியது (incitement to violence) என்றாலும், கண்ணியம் மற்றும் சமூக சமத்துவத்திற்கு ஏற்படும் பாதிப்பும் முக்கியமானது. பேசுபவர் செல்வாக்கு மிக்கவராக இருக்கும்போது சட்டம்  பொருந்தும் என்று அது குறிப்பிட்டது.


இருப்பினும், சட்டத்தை செயல்படுத்துவதில் இன்னும் சீரற்றத் தன்மை நிலவுகிறது. உடனடி வன்முறையைத் தூண்டாத தீங்கு விளைவிக்கும் பேச்சுகளைக் கையாள்வதில் குற்றவியல் சட்டம் மெதுவாகவோ அல்லது கடுமையாகவோ இருக்கிறது. ஆனால், சட்டங்களை மிகவும் பரந்த அளவில் உருவாக்குவது மக்களின் சுதந்திரமான பேச்சுரிமையையும் தடுக்கக்கூடும். இந்தியாவுக்குக் கடுமையான சட்டங்கள் மட்டுமல்லாமல், தீங்கு வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதற்கான புத்திசாலித்தனமான வழிகளும் தேவைப்படுகின்றன.


நோக்கம் மட்டுமே ஒரே அளவுகோல் அல்ல என்பதற்கான காரணம்


வன்முறையை நேரடியாகத் தூண்டும் பேச்சு மட்டுமே ஒழுங்குமுறைக்கு தகுதியானது என்பது பொது விவாதத்தில் தொடர்ந்து நிலவும் ஒரு கட்டுக்கதை உள்ளது. இந்தக் கருத்து தற்போது ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டம், பாகுபாடு அல்லது விரோதத்திற்கு வழிவகுக்கும் வெறுப்பை ஆதரிப்பது தீங்கு விளைவிக்கும் என்பதை அங்கீகரிக்கிறது. உடனடி வன்முறை இல்லாவிட்டாலும், வெறுப்புப் பேச்சு சமூகங்களை சீர்குலைக்கிறது. ஜனநாயக பங்கேற்பை அரிக்கிறது மற்றும் பொது விவாதத்தை சீர்குலைக்கிறது என்பதை கனேடிய மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் பல்வேறு காலங்களில் ஒப்புக் கொண்டுள்ளன.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த யோசனையை ஆதரிக்கிறது. அரசியலமைப்பின் 19(2) பிரிவின்கீழ் பேச்சுரிமை மீதான வரம்புகள் வன்முறையை மட்டுமல்லாமல், பொது ஒழுங்கு, கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தையும் (public order, decency and morality) உள்ளடக்கியுள்ளன. கண்ணியத்தைப் (Dignity) பாதுகாப்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு மதிப்பு (constitutional value) என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


கடுமையான தண்டனை அல்ல, படிப்படியான நடவடிக்கை


ஒற்றைப் பரிமாண குற்றவியல் மாதிரியிலிருந்து விலகி, படிப்படியான நடவடிக்கைக்கான ஒரு கட்டமைப்புக்கு மாறுவதில்தான் நிரந்தர தீர்வு உள்ளது.


தீங்கு விளைவிக்கும் அனைத்துப் பேச்சுகளுக்கும் வழக்குத் தொடரத் தேவையில்லை. முதல் முறை அல்லது குறைந்த தீவிரத்தன்மை கொண்ட சம்பவங்களை நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் கையாள முடியும்: முறையான எச்சரிக்கைகள், ஆலோசனை வழங்குதல் அல்லது கட்டாய உணர்திறன் பயிற்சி - அரசு அதிகாரிகளுக்கு தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் தண்டனைக்குரியவை அல்ல, மாறாகத் திருத்தம் செய்யக்கூடியவை. மேலும், நிலைமை மோசமடைவதைத் தடுக்கின்றன.


தீங்கு தொடரும்போது, ​​குடிமை  சட்டத் தீர்வுகள் உதவக்கூடும். துல்லியமாக வடிவமைக்கப்பட்ட தடை உத்தரவுகள் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்கலாம். வெறுப்புப் பேச்சு வெளியான அதே தளத்தில் வழங்கப்படும் பொது மன்னிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கலாம். சமூக நிதிகளுக்கு வழங்கப்படும் அபராதங்கள் அல்லது இழப்பீடுகள், வெறுப்புப் பேச்சு ஒரு தனி நபரை மட்டுமல்லாமல் முழு சமூகத்தையும் பாதிக்கிறது என்பதை அங்கீகரிக்கின்றன.


குற்றவியல் தண்டனைகள் (Criminal sanctions) நடைமுறையில் இருக்க வேண்டும். ஆனால், அதுவே கடைசி வழியாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் செய்யப்படும் அல்லது தீவிரமான வெறுப்புப் பேச்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களால் செய்யப்படும்போது, ​​கடுமையான தண்டனைகள் தேவைப்படுகின்றன. பொது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது பொறுப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள சகோதரத்துவத்தைச் சீர்குலைப்பவர்கள், தங்கள் பேச்சு வன்முறையைத் தூண்டவில்லை என்பதற்காக மட்டும் பொறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது.


தேர்தல் பொறுப்புக்கூறல் முக்கியமானது.


தேர்தல் காலங்களில் வெறுப்புப் பேச்சு மிகவும் ஆபத்தானது. பிளவுபடுத்துதல் (Polarization) ஒரு பிரச்சார உத்தியாக மாறுகிறது. மேலும், சமூகங்கள் வாக்கு வங்கிகளாகவோ அல்லது இலக்குகளாகவோ கருதப்படுகின்றன. தேர்தல் சட்டங்கள் ஊழலைக் கையாளுகின்றன வெறுப்புப் பேச்சு ஒரு தீவிரமான வரம்பை எட்டாதவரை, அதை ஒரு கடுமையான தேர்தல் குற்றமாகக் கருதுவதில்லை.


வெறுப்புப் பேச்சை தகுதி நீக்கத்திற்கான ஒரு காரணமாக வெளிப்படையாக அங்கீகரிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைத் (Representation of the People Act) திருத்துவது ஒரு தெளிவான செய்தியாக இருக்கும். ஆரோக்கியமான ஜனநாயகம் சமூகத்தைப் பிளவுபடுத்துவதன் அடிப்படையில் அமைய முடியாது. சமூகங்களைத் தாக்கி வாக்குகளைப் பெற முயற்சிப்பது அரசியலமைப்பு விழுமியங்களுக்கு எதிரானது.




நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்


நீதிமன்றங்களால் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தடுப்பு, கண்காணிப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அமைப்பு ரீதியான வழிமுறைகள் இந்தியாவுக்குத் தேவை. ஒரு சுதந்திரமான தேசிய அமைப்பு வெறுப்புப் பேச்சுப் போக்குகளை ஆவணப்படுத்தலாம், ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் தரவுகளின் மூலம் நீதிமன்றங்களுக்கு உதவலாம். உள்ளூர் அளவில், சமூக நல்லிணக்கக் குழுக்கள் பதட்டங்கள் மோதலாக மாறுவதற்கு முன்பே அவற்றைத் தணிக்க முடியும்.


ஊடகங்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. பரபரப்பான தலைப்புகளும், சரிபார்க்கப்படாத வகுப்புவாதக் கதைகளும் பாதிப்பை அதிகரிக்கின்றன. பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் பொறுப்பான பத்திரிகைச் செய்திகளை உறுதிசெய்ய, தணிக்கை அல்லாத, கட்டுப்படுத்தும் தொழில்முறை வழிகாட்டுதல்கள் மிகவும் முக்கியமானவை.


நீதித்துறை வழிகாட்டுதல்கள் ஏன் நியாயமானவை


கொள்கை சார்ந்த விவாகரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று சிலர் கூறலாம். ஆனால், அரசியலமைப்பு வரலாறு வேறுவிதமாகக் கூறுகிறது. விசாகா, பிரகாஷ் சிங் மற்றும் பிற வழக்குகளில், அடிப்படை உரிமைகள் ஆபத்தில் இருந்த இடங்களில் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. மேலும், சட்டமன்ற அமைதி நிலவியது. சரத்துகள் 141 மற்றும் 142 போன்ற சட்டப்பிரிவுகள், நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, நிரந்தரமாக அல்லாமல், முழுமையான நீதியை வழங்குவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் (Court to do complete justice — not permanently) அளிக்கின்றன.


வெறுப்புப் பேச்சு இன்று சமத்துவம், கண்ணியம் மற்றும் சகோதரத்துவத்திற்கு முறையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது மட்டும் சட்டத்தை அமல்படுத்துவது, தீங்கு விளைவிக்கும் நடத்தையை இயல்பானதாகத் தோன்றும் வகையில் செய்துவிடும்.


ஒரு அரசியலமைப்புத் தருணம் (constitutional moment)


இந்தியா ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமா என்பது கேள்வி அல்ல அது கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். வெறுப்புணர்வு கட்டுப்படுத்தப்படாமல் விடப்படும்போது, ​​சுதந்திரமும் கண்ணியமும் எப்படி பாதுக்கப்படும்  என்ற கேள்வி எழுகிறது.

தெளிவான விதிகள், நிதானமான பதில்கள் மற்றும் வலுவான நிறுவனப் பொறுப்புக்கூறல் ஆகியவை பேச்சு சுதந்திரத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும். அரசியலமைப்புச் சட்டம் அதையேதான் கோருகிறது.


கட்டுரையாளர் இந்திய உச்சநீதிமன்றத்தின் பதிவுபெற்ற வழக்கறிஞர் ஆவார்.




Share: